ஊரு வச்ச பேரு

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவரிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஏமாற்று சமுதாயத்தில் எங்க ஊரு பாஷாவும் ஒருவன்.

இந்த உலகத்தில் சோறு தண்ணியை விட எது முக்கியம் ? என்று ஒன்றாம் வகுப்பில் வாத்தியார் காற்றை பற்றி கேட்டதற்கு சோறு தண்ணியை விட முக்கியம் காசு பணம் என்று உடனடியாக பதில் சொன்னவன் தான் இந்த பாஷா.

பாஷாவின் தாயார் ஜுனைதா, ‘பாஷா பக்கத்து தெருவுல சல்மா லாத்தா காசு தர்ரேண்டாஹா நான் வர்ரதுக்குள்ள போய் வாங்கிட்டு வந்து வச்சுடு.. ‘ என்று சொல்லி விட்டு துப்பட்டியை போட்டுக் கொண்டு கிளம்பி வெளியே போனார்.

பாஷா, ‘நான் போவலைம்மா.. வந்தவொடனே நீயே போயி வாங்கிட்டு வந்துடு ‘ என்றான்.

ஜுனைதா, ‘நான் வர்ரதுக்கு லேட்டாயிடும்டா.. பனங்கொட்டாங்குடி வரைக்கும் போறேன்.. சோறாக்கி கொடுக்க.. ‘ என்றார்.

பாஷா, ‘எவ்வளவு காசு கொடுப்பாஹா ? ‘ என்று கேட்டான்.

ஜுனைதா, ‘அதெல்லாம் நீ பிரிச்சு பாக்க வேணாம்.. தாள்ள மடிச்சு தான் கொடுப்பாஹா.. நீ பாட்டுக்கு பிரிக்காம வாங்கிட்டு வந்து அலுமாரில வச்சுடு ‘ என்று கூறி விட்டு வேகமாக நடந்து மறைந்து போனார்.

—-

சல்மா லாத்தா வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது.

உள்ளிருந்து ‘யாரது ? ‘ என்று குரல் கேட்டது.

‘ஏன் நான் தான் பாஷா.. ‘ என்றான்.

‘உள்ளே வாப்பா ‘ என்றார் சல்மா லாத்தா.

பாஷா உள்ளே நுழைந்தான். உள்ளே சல்மா லாத்தா தொட்டியில் உட்கார்ந்து இருந்தார். மின்சார தடை ஏற்பட்டிருந்ததால் ஒரு பெண்மணி விசிறியை கைகளை மாற்றி மாற்றி பிடித்து விசிறிக் கொண்டிருந்தாள்.

பாஷா உள்ளே நுழைந்ததும் அந்த பெண்மணியை ஓரக் கண்ணால் பார்த்து சிரித்து கண் சிமிட்டினான். அந்த வேலைக்கார பெண்ணுக்கு வெட்கம் வந்தது ஆனால் பொய்யாக கோபமாக இருப்பது போல், ‘சொல்லி கொடுக்கவா.. ‘ என்பது போல் கையை தூக்கி காட்டினாள்.

பாஷா அதை பொருட்படுத்தாதவன் போல், ‘இங்க தாங்க புள்ள.. நான் வீசுறேன்.. ‘ என்று விசிறியை வாங்கும் போது அந்த பெண்மணியின் விரல்களை பாரதிராஜா படத்தில் வருவது போல் மெலிதாக வருடினான்.

அந்த பெண்ணுக்கு இன்னும் கொஞ்ச நேரம் அவனை கையை பிடிக்க சொல்ல வேண்டும் என்பது போல் இருந்தது.

சல்மா லாத்தா, ‘நீ ஒருத்தன் தாண்டா யாருன்னு கேட்டா பாஷான்னு பேர சொல்றவன்.. மத்தஹல்வோ எல்லாம் ஏன்.. நான் தான்.. ஏன் நான் தாங்குறது.. ‘ என்றார்.

பாஷாவிற்கு பெருமை வந்தது அந்த பெண்ணை பார்த்து அசிங்கமாக சிரித்தான், ‘ம்மா காசு வாங்கிட்டு வர சொன்னிச்சு.. ‘ என்றான்

சல்மா லாத்தா, ‘ஏன் ம்மா வரல.. எப்பவும் ம்மா தானே வருவாஹா.. ஏம்பா ‘ என்றார்.

பாஷா, ‘இல்ல.. ம்மா தான் என்னய வாங்கிட்டு வர சொன்னிச்சு.. ம்மா வெளியே போயிருக்கு.. ‘ என்றான்.

சல்மா லாத்தா, ‘வெளியேவா.. எங்கே போயிருக்கு ? ‘ என்றார்.

பாஷா, ‘ம்மா மைத்தாங் கொல்லைக்கு போயிருக்கு.. சாயங்காலம் தான் வரும்.. ‘ என்றான்.

சல்மா லாத்தா, ‘என்னது மைத்தாங் கொல்லைக்கா..(அடக்கஸ்தலம்) ? ‘ என்று கேட்டு சிரித்து விட்டு ‘அங்க போனா திரும்பி வர முடியாதேப்பா.. நீ என்ன சாயங்காலம் திரும்பி வந்துடுவாஹாங்குறே.. ‘ என்றார்.

பாஷா, ‘அப்ப ம்மாவயே வந்து சாயங்காலம் வாங்கிக்க சொல்றேன்.. ‘ என்று பாஷா சொன்னவுடன், ‘அட இரிப்பா செத்த.. ‘ என்று கூறி மல்லிக பொட்டிசு தாவணியின் ஓரத்தில் முடித்து போட்டு வைத்திருந்த காசை எடுத்து பாஷாவின் கையில் கொடுத்து, ‘பத்தரம்.. ம்மா கையில தான் கொடுக்கணும் யார் கையிலயும் கொடுக்க கூடாது.. தெரியுதா ? ‘ என்றார்.

அந்த பணம் தான் பாஷா முதன் முதலில் களவாண்ட பணம். தனது தாயார் பிரிக்க கூடாது என்று சொல்லி இருந்தும் காசு மடித்து வைத்திருந்த தாளை பிரித்தான்.

மந்திர சக்தி படைத்த அந்த சில நூறு ரூபாய் நோட்டுக்கள் அவனை மயக்கியது அவனை மதியிழக்கச் செய்தது.

ஜுனைதா திரும்பி வந்ததும், ‘பாஷா சல்மா லாத்தாட்ட காசு போய் கேக்க சொன்னேனே.. போய் கேட்டியா ? ‘ என்றார்.

திருட்டும் பொய்யும் இரட்டை சகோதரர்கள். பாஷா, ‘இல்லம்மா நான் போவல.. நீயே போய் வாங்கிட்டு வந்துடு.. ‘என்றான்.

‘ஒரு வேலக்கு அசையாதே நீ.. புள்ளயா இது.. ? ‘ என்று திட்டினார் ஜுனைதா.

—-

ஜவாஹிரா கதவை திறந்து விட்டு, ‘ம்மா.. ஜுனைதா மாமி வந்திருக்காஹா ‘ என்றாள்.

சல்மா லாத்தா, ‘வாங்க புள்ள.. ‘ என்று வரவேற்றார் ஜுனைதாவை.

ஜுனைதா, ‘வர்ரேன்மா.. ‘ என்றார்.

சல்மா லாத்தா, ‘ஜவாஹிரா.. ஜுனைதா லாத்தா வந்திருக்காஹா.. தேத்தணி போட்டு எடுத்துட்டு வாம்மா.. ‘ என்றார்.

ஜுனைதா, ‘இருக்கட்டும்மா.. இப்ப தான் குடுச்சுட்டு வந்தேன்.. ‘ என்றார்.

சல்மா லாத்தா, ‘ஏன் புள்ள.. நேத்து பாஷா காசு வாங்க வரும் போது மைத்தாங் கொல்லைக்கு போயிருக்கிறதா சொன்னானே ? ‘ என்று சிரித்தார்

ஜுனைதா, ‘என்ன சொல்றீங்க லாத்தா.. பாஷா வந்தானா ? ‘ என்றார்.

சல்மா லாத்தா, ‘ஆமா.. புள்ள அவண்ட தானே காச கொடுத்து வுட்டேன் ‘ என்றதும்.

ஜுனைதா, ‘இல்ல லாத்தா அவன் காசு வாங்கி இருந்தாத்தான் எங்கிட்டே சொல்லியிருப்பானே லாத்தா.. ‘ என்றார் பதட்டமாக

சல்மா லாத்தாவிற்கு கோபம், ‘என்ன புள்ள லாஹரி பண்றீங்களா(விளையாடறீங்களா) ? அவன் வந்து சொல்லாம நீங்க மைத்தாங் கொல்லைக்கு போனது எனக்கு எப்படி தெரியும்.. ‘ என்றார்.

ஜுனைதா, ‘யாரு லாத்தா விளையாடறா.. நான் நெரவி பக்கத்துல பனங்கொட்டாங்குடி வரைக்கும்ல சோறாக்கி குடுக்க போனேன்.. ‘ என்றார்.

பெரிய விசாரணை கமிஷனே நடந்தது. இந்த விசாரணையில் குறிப்பிடப்படக் கூடிய அம்சம் அந்த வேலைக்கார பெண்ணான ஜவாஹிரா பொய் சாட்சி சொன்னது தான்.

ஜவாஹிராவை சின்ன வயதில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து குரான் ஓத கற்றுக் கொடுத்து, தொழுவது எப்படி ? என்று சொல்லிக் கொடுத்து வளர்த்து நல்லது கெட்டது என அனைத்தையுமே கவனித்து வந்தவர் தான் சல்மா லாத்தா.

பொய் சாட்சி சொன்னதற்கு பிறகு ஜவாஹிராவை விரட்டி விட்டார், ‘இனிமே என் கண்ணுலேயே முழிக்க கூடாது என் மய்யித்த கூட பார்க்க கூடாது ‘ என்று.

ஆனால் அதற்காக கொஞ்சம் கூட கவலைப் படாதவளாக சல்மா லாத்தா வீட்டை விட்டு வெளியேறிய ஜவாஹிரா பாஷா வீட்டில் உள்ளே சென்றாள் பாஷாவின் மனைவியாக.

ஜவாஹிரா, சல்மா லாத்தா வீட்டில் இருந்த போது அவர் வீட்டிற்கு வரும் சில பணக்கார பெண்மணிகளுடன் பழக்கம் இருந்தது. அவர்களது வீட்டிற்கு சென்று ‘நான் சின்ன வயசுலேந்து அங்கே புள்ள மாதிரி வேல பார்த்தேன்.. என் மேல பழிய போட்டு வெளிய அனுப்பிட்டாஹா.. ஆனா நான் அஹல ம்மாவா தான் இன்னய வரைக்கும் நெனைக்கிறேன்.. ‘ என்று பொய்யான வார்த்தைகளையும் உண்மையான விஷத்தையும் தெளித்து விட்டு வந்தாள்.

பாஷா ஊரில் உள்ள ஒரு ஏமாளி பெரியவரிடம், ‘எனக்கு லாட்டரி சீட்டுல லட்ச ரூபா விழுந்திருக்கு.. நாளைக்கு தான் பணம் எடுக்க முடியும்.. இப்ப எனக்கு உடனே பத்தாயிருவா தேவைப்படுது.. கொடுத்தீங்கன்னா நாளைக்கு பேங்குல எடுத்து தந்துடுவேன் ‘ என்று பழைய பேப்பரையும் பழைய லாட்டரியையும் காட்டி பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கி விட்டான்.

அடுத்த நாள் அந்த ஏமாளி பெரியவர் திரும்ப கேட்ட போது, ‘நான் எப்ப உங்கள்ட்ட வாங்குனேன்.. வாங்கவே இல்லையே.. ‘ என்று அடித்து கூறி விட்டான்.

இப்படியாக அவன் பணம் வாங்கி ஏமாற்றியது ஒன்று இரண்டு பேரை அல்ல கிட்டத்தட்ட ஊரையே ஏமாற்றி இருந்தான். அவனது பேச்சை கேட்டார்கள் என்றால் ‘இவனிடம் நாம கூட ஒரு முறை ஏமாறலாம் போலிருக்கிறது ‘ என்று தோன்றும். அவ்வளவு இனிமையாக பேசுவான். எந்த ஹல்வா கடையில் கற்றுக் கொண்டானோ அப்படி பேச என்று எனக்கு உள்பட யாருக்கும் தெரியவில்லை.

பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப காசு கேட்டு வரும் போது ஜவாஹிரா தான் பதில் கொடுப்பாள்.

‘என்ன மஹரி(சூரியன் அஸ்தமித்த உடன்) நேரத்துல வந்திருக்கீங்க.. போய்ட்டு அப்பறமா காலைல வாங்க ‘

காலையில், ‘இப்ப எஹ வீட்ல இல்ல.. நாளைக்கு வாங்க ‘

இது போன்ற பதில்கள் தான் பெரும்பாலும் கிடைக்கும்.

கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதை ‘தொந்தரவு தாங்க முடியல நீங்க எங்கேயாவது வெளியூர்ல போய் தங்கிடுங்க நான் நெலம சரியான வொடனே தகவல் சொல்றேன் திரும்ப வந்துடுங்க ‘ என்ற ஜவாஹிராவின் அயோக்கியத்தனத்தின் பேரில் ஊரை விட்டே ஓடி தலைமறைவாக இருந்தான் பாஷா.

ஜவாஹிரா ஏமாற்றி சேர்த்திருந்த பணத்தை எளியவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு வட்டிக்கு விட்டு சம்பாதித்தாள். காசு சேர்ந்தது.

செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்தாள் ‘திரும்பி வர வேண்டும் குடும்பம் ரொம்பவும் கஷ்டமாக உள்ளது ‘ என்று.

பாஷா ஒரு வாரத்தில் முன்பே பேசி வைத்திருந்த படி ஆளே அடையாளம் தெரியாமல் போய் தாடி வைத்து பஞ்சத்தில் அடிபட்டவன் போல் வந்து சேர்ந்தான்.

—-

பாஷா குடியிருந்த முஹல்லா பள்ளிவாசலிற்கு தப்லீக் ஜமாத் வந்தது. தொழுகைக்கு அழைத்து அந்த முஹல்லா வாசிகளிடம் வந்த போது அவர்களுடன் வந்த ஒரு பையன் பாஷாவை காட்டி ‘இவர் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார். பள்ளிக்கு ஒரு நாள் கூட வரமாட்டேங்குறாரு. ‘ என்றான்.

தப்லீக் ஜமாத்துடன் வந்த ஒருவர் பாஷாவிடம் நெருங்கி, ‘அஸ்ஸலாமு அலைக்கும்.. ‘ என்றார்.

பாஷா, ‘அலைக்கும் ஸலாம் ‘ என்றான்.

‘தொழுகைக்கு பள்ளி வாசலுக்கு வருவீங்களா ? ‘ என்றார்.

‘வருவேனே. ‘ என்றான்.

‘எப்ப ? ‘ என்றார்.

‘பெருநாளைக்கி ‘ என்றான்.

‘இங்க பாருங்க.. தொழுகை ரொம்ப முக்கியம்.. நம்ம மெளத் எப்பன்னு நமக்கு தெரியுமா ? ‘ என்றார்.

‘அது எப்படிங்க தெரியும்.. அது தெரிஞ்சாத்தான் அவனவன் நான் தான் அல்லாண்டுடுவானே ‘ என்றான்.

‘அஸ்தக்பிருல்லாஹ்.. ‘ என்றார் தப்லீகின் அமீர். இருகரம் ஏந்தி அந்த இடத்திலேயே நின்று ‘யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் என்ற நேர்வழியை காட்டு ‘ என்று உள்ளம் உருக உண்மையாகவே பிரார்த்தித்தார்.

பாஷா ஜவாஹிரா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. தமீம் என்று பெயரிட்டார்கள். தமீமை மதரஸாவிற்கு ஓத அனுப்பினார்கள். அங்கே ஹிதயதுல்லாஹ் என்ற இமாமிடம் குரான், ஹதீஸ், சூபியாக்கள்(ஞானிகள்) வரலாறு என்று அனைத்து பாடமும் கற்று வந்தான்.

வீட்டின் வாசற் படியில் ஒரு வங்கியின் பற்று வரவுக் கைச்சாத்தையும்(Bank Passbook) வேறு சில காகிதத்தையும் கையில் வைத்து உட்கார்ந்து கொண்டிருந்த தமீமை பார்த்து பாஷா இப்படி கேட்டார், ‘டேய்.. கைல என்னா பேங்க் பாஸ் புக்கா ? ஏதிது ? யார்ட ? ‘ என்று

தமீம், ‘இது பக்கத்து தெருல துபாய் காரஹ வீட்ல இருக்காஹல்ல ஹபீப் முஹம்மது நானா அஹல்ட.. எய்த்த வீட்டுக்கு போயிருக்காஹா என்னய செத்த வச்சுக்க சொன்னாஹா.. ‘ என்றான்.

பாஷா ஒன்றும் பதில் பேசாமல் உள்ளே சென்றான். சாப்பாடு எடுத்த வர சொன்னான். ஜவாஹிரா இடியாப்பம் எடுத்து வந்து வைத்தாள். பாஷா சாப்பிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த தமீமிடம் ஜவாஹிரா, ‘தமீம்.. அந்த ஹபீப் ஒண்ட்ட பேசிக்கிட்டு இருந்தாரே.. என்ன சொன்னாரு ? ‘ என்றாள்.

தமீம், ‘இல்லம்மா பேங்க் பாஸ் புக்க கொடுத்து வச்சுக்க சொன்னாரு.. எய்த்த வூட்டுக்கு ஜாமான் கொடுக்க வந்தாரு ‘ என்றான்.

ஜவாஹிரா, ‘பேங்க் பாஸ் புக்கா ? ‘ வாயை பிளந்து ‘அதுல எவ்வளவு காசு இருந்துச்சு ? ‘ கேட்டே விட்டாள்.

தமீம், ‘நான் பிரிச்சு பார்க்கலேயேம்மா.. ‘ என்றான்.

சாப்பிட்டுக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்த பாஷாவிற்கு பிறை ஏறியது.

ஜவாஹிரா பாஷாவிடம், ‘தண்ணி குடிங்க ‘ என்று கூறி விட்டு தமீமிடம், ‘ஏன் பிரிச்சு பார்த்தா என்ன ? ‘ என்றாள்.

தமீம், ‘நான் ஏன் பாக்கணும்.. அது என்ன என் காசா ? ‘ என்று கேட்டான்.

தமீமின் இந்த இடி போன்ற வார்த்தைகளை கேட்டதும் பாஷாவிற்கு அதற்கு மேல் இடியாப்பம் சாப்பிட மனம் வரவில்லை. அது அவனது சாப்பாடா அல்லது அடுத்தவரின் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுகிறோமா என்ற கவலை முதன் முறையாக வந்தது.

—-

மய்யித் ஆகும் வரை பள்ளிவாசலுக்கு செல்ல கூடாது என்று பிடிவாதமாக இருந்தவனை அவனது கால்கள் அந்த வெள்ளிக் கிழமையன்று பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றது.

இமாம் கலீல் சாஹிப் தனது இஸ்லாமிய உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்..

‘பெருமானார் அவர்கள் அவர்களது தோழர்களுடன் இருக்கும் போது அந்த வழியாக ஒரு மய்யித் சென்றது. அப்போது அன்னாரது தோழர்கள் அந்த இறந்த நபரை குறித்து நல்ல விதமாக எடுத்து சொல்கிறார்கள். உடனே பெருமானார் அவர்கள் ‘வஜபத்(கடமை) ‘ என்றார்கள். அதே போல் இன்னொரு மய்யித் எடுத்து செல்லப் படும் போது அவரை குறித்து அதிருப்தியுடன் ‘இவர் சரியில்லை ‘ எனும் விதமாக கூறுகிறார்கள். அதற்கும் பெருமானார் அவர்கள், ‘வஜபத் ‘ என்றார்கள்.

அதாவது பெருமானார் அவர்களது வார்த்தையை சற்று சிந்தித்தோமானால் மக்கள் நம்மை பற்றி நாம் இறந்த பிறகு எப்படி பேச போகிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.

மரணம் ஒரு நாள் நிச்சயம் சமீபிக்கும். அதன் பிறகு மக்கள் நம்மை பற்றி எப்படி அடையாளம் காட்டப் போகிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். உதாரணமாக, ஒரு ஊரில் வெளிநாட்டிற்கு சென்ற ஒருவர் அங்கே திருடி சம்பாதித்து வந்து சேர்த்ததாக ஊரார் நம்பினர். ஆகையினால், அந்த வெளிநாட்டு சபராளி இறந்து போய் இரண்டு தலைமுறையாகியும் அவரது வீட்டை ‘கள்ள ஹாஜிவாப்பா வீடு ‘ என்று தான் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது மார்க்கப் படி தவறு என்றாலும்.. ‘

இப்படியாக இமாம் கலீல் சாஹிப் அவர்கள் பேசிய பேச்சை கேட்ட பிறகு அவனுக்கு ஒரு சிந்தனை பிறந்தது.. ‘நம்மை பற்றி நாம் இறந்த பிறகு மக்கள் எப்படி பேசுவார்கள். ‘ என்று..

மஜீத் தேநீர் கடையின் உள்ளே ஒரு மூலையில் நேற்று கேட்ட ஹதீஸ்களை பற்றிய யோசனையுடன் அமர்ந்திருந்தான் பாஷா.

கடையில் ‘ஹம் கிஸிஸே கம் நஹி ‘ என்ற படத்தில் வரும் ‘கியா ஹு வா.. தேரா வாதா.. ‘ என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

‘அருமையான பாட்டுப்பா.. ‘ என்று சொல்லிக் கொண்டே ஒரு இள வட்டம் உள்ளே நுழைந்தது.

ஒருவர், ‘இது யார் பாடுறது ? ‘ என்றார்.

மற்றொருவர், ‘முஹம்மது ரஃபி ‘ என்றார்.

அந்த ஒருவர், ‘முஹம்மது ரஃபி இப்ப உயிரோடு இருக்கிறார்ல.. ‘ என்றார்.

மற்றொருவர், ‘இல்லையே அப்பவே வஃபாத் ஆயிட்டாரே.. ஆனா நான் அவர பத்தி ஒரு சேதி சொன்னா நீ ஆச்சர்யப்படுவே.. அவர் ஒரு படம் கூட பார்த்ததில்ல தெரியுமா ? ‘ என்றார்.

ஒருவர், ‘என்னங்கனி சொல்றீயும்.. நெசமாவா.. ‘ என்றார்.

மற்றொருவர், ‘நீம்பர் வேற.. அவர்ட குரலுக்கு நடிகர்ங்க எப்படி வாய அசைப்பாங்கன்னு கூட அவருக்கு தெரியாதாம்.. ‘ என்றார்

ஒருவர், ‘அல்லா வச்சு காப்பாத்த.. நெசமாவா.. ‘ ஆச்சர்யப்பட்டார்.

மற்றொருவர், ‘மறுவ.. பொய்யா சொல்றாஹா.. அதுமட்டுமில்லங்கனி.. அவர் நாலு தடவ ஹஜ் செஞ்சிருக்கார்.. தெரியுமா ? ‘ என்றான்.

அந்த இளவட்டத்தில் ஒருவன், ‘அங்கே பாரு யார் போறான்னு.. ‘ என்றான்.

அனைவரும் திரும்பி பார்த்தனர். தூரத்தில் தமீம் போய்க் கொண்டிருந்தான்.

ஒருவன், ‘யாரது.. வட்டிபாஷா மவன் தமீம் தானே.. ‘ என்றான்.

பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த பாஷாவிற்கு குற்ற எண்ணங்கள் ஆழ்கடலின் அலையை போல் மனதில் திரண்டு வந்து அலைகழித்தது.

வீட்டிற்கு வந்தவனுக்கு அவனது வீட்டில் உள்ள எந்த பொருளை பார்த்தாலும் அதில் வேறு ஒருவரது பெயர் எழுதியிருப்பதை அவன் கண்களால் பார்த்தான்.அன்று முதல் அவனால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை.

கடைசியில் படுத்த படுக்கையாகி விட்டான். மரணம் சமீபித்து விட்டது என்று உணர்ந்த அவன் தனது மகனை அழைத்தான், ‘தமீம்.. ‘ என்று.

தமீம், ‘வாப்பா.. ‘ என்றான்.

பாஷா, ‘தமீம்.. தமீம்.. ‘ என்று அவனது மகனின் பெயரையே மந்திரம் போல்

உச்சரித்தான்.

ஜவாஹிரா கட்டிலின் ஓரத்தில் நின்று அழுதுக் கொண்டிருந்தாள்.

தமீம், ‘நான் இங்கே தான் வாப்பா இருக்கேன் ‘ என்றான்.

பாஷா, ‘என்னய மன்னிச்சிடு ‘ என்றான்.

தமீம், ‘என்ன வாப்பா சொல்றீங்க ? ‘ என்றான்.

பாஷா இறுதி வார்த்தைகளை பேச ஆரம்பித்தான்.

பாஷா, ‘என் மெளத்துக்கு அப்புறம் கூட வட்டி பாஷா மவன்னு தான்

உன்னய கூப்டுவாஹல்வோ அதுக்கு காரணம் நான் தான்.. நான் செஞ்ச பாவம்

தான்.. ‘ என்று அழுதான்.

தமீம், ‘வாப்பா அழுவாதீங்க வாப்பா.. அல்லாட்ட துவா கேளுங்க

வாப்பா.. ‘ என்றான்.

பாஷா, ‘மனுஷங்களுக்கு துரோகம் செஞ்சதுக்கு அவங்க மன்னிக்காம

அல்லா மன்னிக்க மாட்டான் ‘ என்றார் பாஷா.

ஜவாஹிரா, ‘என்னய மன்னிச்சுடுங்க.. எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் ‘

என்றார்.

பாஷா ஜவாஹிராவிடம், ‘எனக்காக ஒரு காரியம் செய்வியா ? ‘ என்றார்.

ஜவாஹிரா, ‘என்ன சொல்லுங்க.. எனக்கு அத விட வேற என்ன ? ‘ என்றார்.

பாஷா, ‘சல்மா லாத்தாவ நான் பார்க்கணும்.. கால்ல விழுந்து கதறணும் ‘

என்றான்.

—-

சில நாட்கள் கழித்து..

சல்மா லாத்தா வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது.

உள்ளிருந்து ‘யாரது ? ‘ என்று குரல் கேட்டது.

‘ஏன் நான் தான் பாஷா மவன் தமீம்.. ‘ என்றான்.

‘உள்ளே வாப்பா ‘ என்றார் சல்மா லாத்தா.

தமீம் உள்ளே நுழைந்தான். உள்ளே வயதான சல்மா லாத்தா

தொட்டியில் உட்கார்ந்து இருந்தார், ‘ம்மா அடுப்பாங்கரைல இருக்கு.. ‘

என்றவர் ‘ஜவாஹிரா.. தமீம் வந்திருக்கான்.. சாப்பாடு எடுத்து வச்சு சாப்ட

சொல்லு ‘ என்றார்.

ஜவாஹிரா, ‘தமீம்.. சாப்டறீயா ? ‘ என்றார்.

தமீம், ‘இல்லம்மா.. நான் தொழுதுட்டு வந்துடறேன் ‘ என்றார்.

ஜவாஹிரா, ‘அப்ப செத்த போய்.. கடைல முட்டை வாங்கி கொடுத்துட்டு

போயிடறீயா ? ‘ என்றார்.

தமீம், ‘சரிம்மா ‘ என்றான்.

ஜவாஹிரா பத்து ரூபாயை கையில் கொடுத்து, ‘எவ்வளவு இருக்கு ? ‘ என்று

கேட்டார்.

தமீம் வேறு ஏதும் காசு ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று தேய்த்து பார்த்து

விட்டு, ‘பத்து ரூவா.. ‘ என்றான்.

ஜவாஹிரா, ‘முட்டய வாங்கிட்டு எவ்வளவு காசுன்னு எழுதி வாங்கிட்டு வந்துடு ‘

என்றார்.

தமீம் கடைக்கு புறப்பட்டான்.

தமீம் கடைக்கு போயிட்டு வர்ர நேரத்துக்குள்ள நான் முக்கியமான ஒரு

செய்தியை சொல்லிடறேன்.. இறைவன் குடியிருக்கும் இதயம்

வைத்திக்கும் சல்மா லாத்தாவ பத்தித்தான்… அவங்கள்ட

மனசு யாருக்கும் வராது.. ஏன் சொல்றேன்னா.. பாஷாட மய்யித்த அவங்க

செலவுல தான் எடுத்தாங்க.. அது மட்டுமா ? ஜவாஹிராவ மன்னிச்சு தன்

வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பழைய படி புள்ள மாதிரி வச்சிருக்காங்க..

இதோ தமீம் வந்துட்டான்..

பள்ளிவாசல்..

என்னிடம் ஒருவர், ‘வக்து வந்துடுச்சே.. பாங்கு சொல்லுங்களேன்.. ‘ என்றார்.

நான், ‘நான் எங்கேர்ந்து சொல்றது அதான் இந்த ஆலிம்ஷா வந்துட்டாரே.. ‘

என்றேன்.

பின்குறிப்பு:

1. தமீம் சிறிய வயதிலேயே இஸ்லாமிய மார்க்கத்தில் ஈடுபாடும் நேர்மையான நடவடிக்கையும் கொண்டிருந்ததால் அவனது தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயரையே மாற்றி விட்டான்.

2. தமீமை வட்டி பாஷா மவன் என்று அழைக்காமல் ஆலிம்ஷா என்று ஊர் இன்றைக்கு அழைத்து வருகிறது. ஆலிம்ஷா என்றால் அறிஞர் என்று அர்த்தம். தொழுகையில் பேணுதலாக இருப்பவர்களை இப்படி தான் அழைப்பார்கள்.

துவா

ஸலாமுடன்

அ.முஹம்மது இஸ்மாயில்

Series Navigation