உள்ளுக்குள் ஒலிக்கின்ற கோஷம் எது?

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

மலர் மன்னன்


பாமரராயினும், படித்தவராயினும், இலக்கியம் கைவரப்பெற்றவராயினும் ஜனரஞ்சக வாசகராயினும், அனைவரும் பேசிவைத்துக்கொண்டாற்போல் ஒரே மாதிரி எதிர்வினை செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், சிறுபான்மையினரான நமதுமுகமதிய சகோதரர்கள், சமயம் சார்ந்த விவகாரம் என்று வருகிறபோது.

கண் எதிரே தென்படுகிற நிஜத்தை ஒப்புக்கொள்ளும் நெஞ்சுரம் இருப்பதில்லை. இன்றளவும் உனது மனப்போக்கும் அதனை ஒட்டிக் கிளர்ந்தெழும் அநாகரிக நடத்தைகளும் மாறவில்லையே என்று ஆதாரத்துடன் மட்டுமின்றி வருத்தத்தோடும் எடுத்துக் காட்டினால் கூட அதனை ஒப்புக்கொள்கிற மனோ தைரியம் இல்லை. மாறாக, நீ மட்டும் ஒழுங்கா என்று அரைகுறை அறிவுடன் கடந்த காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிற எதையாவது சொல்லித் தர்க்கம் செய்கிற சமாளிப்புதான் இருக்கிறது.

பவுத்தம் மகா சமுத்திரமான ஹிந்து சமயத்தால் உள்வாங்கிக்கொள்ளப்பட்ட உண்மை தெரியாமல் அது ஏதோ ஹிந்துஸ்தானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதுபோன்று ஒரு அபாண்டக் குற்றச்சாட்டு! அப்படியே விரட்டியடிக்கப்பட்திருந்தால்கூட அன்றைய காலகட்டத்திற்கும் நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தர் சிலைகள் நொறுக்கப்பட்டமைக்கும் உள்ள வித்தியாசம்கூடவா புரியாமல்போக வேண்டும்?

எண்ணாயிரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த சமணப் படுகைகளில் இருந்த ஏழெட்டு துறவியர் அக்கால வழமைப்படி வாதத்தில் தோற்றால் இவ்வாறான தண்டனையை ஏற்போம் எனத் தமது தோல்விக்குத் தண்டனையாகத் தாமாகவே கழுவில் ஏறினால் அந்தப் பழியை இப்போதா எம் தலையில் போடுவது? திருவிழா நடக்கிறதாம், சமணர் கழுவேறியதைக் கொண்டாட. திருக் கலியாண உத்சவம்கூடத்தான் நடக்கிறது அப்பனுக்கும் அம்மைக்கும் எமது திருக் கோயில்களில். அதனை மட்டும் ஏன் ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை?

ஹிந்துஸ்தானத்தில் பவுத்த கலாசாரமும் சமண கலாசாரமும் உயிர்த் துடிப்போடு இருந்துகொண்டுதான் உள்ளன, இன்றளவும். மாயமாய் மறைந்துவிடவில்லை அவை! ஆனால் முகமதியம் கால் பதித்த இடங்களில்தான் அவ்விடத்து கலாசாரங்கள் புதையுண்டு போயின! பாரதம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அதனால்தானோ என்னவோ முகமதியத்திற்கு ஹிந்து சமய, கலாசாரங்கள் மீது அத்தனை துவேஷம்!

வெறும் வாசகனாயிருந்த நான் ஓர் எழுத்துக்காரனாகவும் திண்ணைக்கு வர நேர்ந்தது எதனால்? இவ்வளவுக்கும் 2001லிருந்தே திண்ணை எனக்குப் பரிச்சயப்பட்ட இடந்தான். விரும்பியிருந்தால் அப்போதே கச்சேரியை ஆரம்பித்திருக்க முடியாதா? என்ன இருந்தாலும் பெயர் தெரிந்த எழுத்தாளனே யல்லவா நானும்? கற்றுக்குட்டிகளுக்கும் நிதானம் தவறி எழுதுபவர்களுக்குங்கூட இடமளிக்கிற பெருந்தன்மை வாய்ந்த திண்ணை எனக்கு ஓர் ஓரத்திலேனும் இடந் தராமலா போய்விடும்? பிறகு ஏன் எழுத முற்படவில்லை? 2005 இறுதிவரை ஒதுங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன?

எழுதுவதைக் காட்டிலும் செயலில் இறங்க வேண்டிய வேறு பல முக்கிய பணிகளை மேற்கொண்டிருந்ததைத் தவிர வேறு காரணம் ஏதுமில்லை. பணிகள் எனது சொந்தக் குடும்பக் காரியங்கள் அன்று; வேறு யாவை என விளக்கத் தேவையில்லை! பத்து நாட்களுக்குமுன் கூட மங்களூருக்குப் போய் வந்தேன்; அது மாதிரியான காரியங்கள்தாம். பத்திரிகை படிக்கிறவர்களுக்குப் புரியும்!

திண்ணையில் சு ரா வுடனான கலந்துரையாடல் பதிவுகள் வெளிவந்த தருணம், அவர் காலமாகிவிட்டிருந்த சமயமாகவும் இருந்ததால் எனது அனுபவங்களின் அடிப்படையில்
சு ராவின் நண்பன் என்பதாலும் எனக்குத் தெரிந்திருந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முற்பட்டேன். அவற்றில் ஹிந்துத்துவம் பற்றியோ, சர்வ தேச முகமதிய பயங்கர வாதம் பற்றியோ குறிப்பிடுவதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லை. அவை குறித்துப் பேசுவதற்கான மேடை ஏதும் கிடைக்குமாவென நான் காத்திருக்கவும் இல்லை. நான் தெரிவித்திருந்த விவரங்களைப் படித்துவிட்டுத்தான், பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்குத் தெரியவந்த பல விவரங்களின் அடிப்படையில் எனது காலத்தைப் பதிவு செய்தால் பல விஷயங்கள் ஆவணப்படுத்தப்படும் என்றும் அது பல வகைகளில் பயன் தருவதாக இருக்கும் என்றும் வெங்கட் சாமிநாதன், கோபால் ராஜாராம் உள்ளிட்ட பலரும் விருப்பம் தெரிவித்தார்கள். தமிழில் அடிப்பது எளிதுதான் முயற்சி செய்தால் சீக்கிரமே சாத்தியமாகிவிடும் என்று தைரியம் சொன்னார், ராஜாராம். அச்சமயம் ஹிந்துத்துவம் பற்றியோ, முகமதிய பயங்கரவாதம் பற்றியோ என் கருத்தாகத் திண்ணையில் எதுவுமே வந்திருக்கவில்லை. ஆனால் திண்ணையில் ஹிந்துத்துவம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் எழுதுவதை நிறுத்தவேண்டாம் என்று வெங்கட் சாமிநாதன் என்னிடம் கேட்டுக்கொண்டதாக ஒருவர் தானாகக் கற்பித்துக்கொண்டு எழுதுகிறார், வெ சா மீது குறை கூற வேண்டும் என்பதற்காக! முகமதியத்தின் குறைபாட்டை வெ சா சுட்டிக்காட்டிவிட்டார், அல்லவா? பதிலுக்குத் தாமும் அவர் மீது குறை காண வேண்டுமே என்கிறதவிப்புதான், வேறென்ன?

நான் தெரிவிக்கும் தகவல்கள் குறித்து எவருக்கேனும் சந்தேகம் ஏதேனும் இருக்குமானால் முறைப்படி அவை குறித்துக் கேள்வி எழுப்பிக் கூடுதல் விவரம் கேட்பதுதான் குறைந்த பட்ச நாகரிகம். ஆனால் அவ்வாறான அடிப்படை நாகரிகம்கூடத் தெரியாத வாசகர் ஒருவர் நான் பொய் சொல்வதாகவும், கதை அளப்பதாகவும் எழுதி, திண்ணையிலும் அது வெளியாயிற்று. இத்தகைய விவாதச் சூழல் படிப்படியாக அநாகரிகத்தின் உச்சத்திற்கே கொண்டுபோய் விடும் என்பதால் இனி எழுதப்போவதில்லை என நான் அறிவிக்க வேண்டியதாயிற்று. அப்போது பலரும் எழுதுவதை நிறுத்த வேண்டாம் என அஞ்சல் அனுப்பினர் என்றாலும் அவர்களில் பெரும்பாலானோர் திண்ணை வாசகர்கள்தாம். சில எழுத்தாளர்களும் உண்டு; ஆனால் நிச்சயமாக வெ சா அவ்வாறு எனக்கு எழுதவில்லை. எழுதுவதை நிறுத்தவேண்டாம் என அவர் அச்சமயத்தில் வலியுறுத்தியதாக நான் குறிப்பிடவும் இல்லை. பிறகு ஏன் அப்படியொரு பழி அவர் மீது? திண்ணையில் ஹிந்துத்துவக் குரல் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே வெ சா என்னைத் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார் என்பதாக? துவேஷம் இவர்களின் கண்களை மூடி மறைத்துவிடுகிறது என்கிறோமே அது இதனால்தான்.

திண்ணையில் இதுகாறும் வெளிவந்த எனது கட்டுரைகளை கவனித்தால் எதிர்வினைகள்தாம் என்னை ஹிந்துத்துவக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லவும், முகமதிய பயங்கர வாதத்தைக் கண்டிக்கவும் தூண்டி வந்துள்ளனவேயன்றி நானாக எதுவும் ஆரம்பிக்கவில்லை என்பது தெரியவரும். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நான் பிரசாரகன் அல்ல. காரியம் செய்கிறவன். காரியங்களின் மூலமாகவே ஹிந்துத்துவத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதும், முகமதிய பயங்கர வாதத்தை உணர்த்துவதும்தான் எனது வழி. திண்ணை போன்ற இணைய தள இதழ் இதற்கான வாகனம் அல்ல, எனக்கு. ஆனால் எனக்கு முத்திரை குத்திச் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டால் அந்த ஆசையை இயன்ற வரை நிறைவு செய்வது என் கடமை. சீண்டுகிறவர்களும் வாசகர்களேயல்லவா? அவர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்தல் அவசியம்தானே?

எங்கிருந்து என்று தெரியாத கே ஆர் மணி, திருப்பூரிலிருந்து மாணிக்கம், பி எஸ் நரேந்திரன் எனப் பல வாசகர்கள் தமிழ் நாட்டின் அரசியல் சமூகச் சீரழிவைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஒரு சிந்தனையோட்டத்தைத் தூண்ட வேண்டும் எனவும், எனது பத்திரிகைத் துறை அனுபவங்களின் அடிப்படையில் இதனைச் செய்வது எளிது எனவும் அவ்வப்போது அஞ்சல் அனுப்பி வந்தனர். இவர்களை நான் இந்தக் கணம் வரை நேரில் அறிந்திலேன். திண்ணையில் வெளிவரும் எனது கட்டுரைகளைப் படித்துவிட்டே என்னைப் பற்றி ஓர் எண்ணத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். இவர்களின் விருப்பந்தான் தொடக்கத்திலிருந்தே எனது விருப்பமும். அது இப்போதுதான் சிறிது சிறிதாக நிறைவேறத் தொடங்கியுள்ளது. திண்ணையில் சமீபத்தில் நான் எழுதிய திராவிட இயக்கம் பற்றிய கட்டுரையும் அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் தேசிய நோக்கிலான அரசு அமைவதற்கான சாத்தியக்கூறு பற்றிய கட்டுரையும் அந்தத் திசைவழி செல்பவைதாம்.

மேலும் நான் அறிந்த பத்திரிகை ஆசிரியர்கள், சக எழுத்தாளர்கள் பற்றியும் எழுதும் உத்தேசம் இருந்தது. தி ஜ ர பற்றிய எனது கட்டுரை ஓரளவு அத்தகையதுதான். இவ்வாறான கட்டுரைகள்தாம் திண்ணை போன்ற இதழ்கள் மூலம் பலன் தரக்கூடும். வெற்று சச்சரவுகள் ஒரு பொழுதுபோக்கின் பலனைத்தான் தரும்.

ப சிங்காரம், ஜி. நாகராஜன், கு அழகிரிசாமி, ஆதவன் எனப் பல எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் விஷயங்கள் உள்ளன. ஆத்மாநாம், ப்ரமிள் எனப் பல கவிஞர்கள் உள்ளனர். நா. பா, பகீரதன், மணியன், சாவி போன்ற பத்திரிகை ஆசிரியர்களைப் பற்றிக் கூடப்பேசலாம். இவை ஒரு கால கட்டத்தின் தமிழ் சமூகச் சூழல் குறித்து அனுமானங்கள் செய்வதற்கு உதவியாகவே இருக்கும். ஆனால் அதற்குள் எத்தனை குறுக்கீடுகள்!

சவுகரியமாக வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டும், வியாபரம் செய்துகொண்டும் இயங்குபவனாக நான் இல்லை. எனக்குச் சரியென்று படும் காரியங்களைச் செய்வதற்குத் தடையில்லாத பணிகளையே நான் தேர்ந்துகொள்கிறேன். எனது குடும்பத்திற்குத் தேவையான பொருளீட்டுவதற்கு உகந்த பணியை நான் தேர்வு செய்வதில்லை. எனது பணியில் எனக்கென்று பொருள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்குமானால் அதில் ஒரு பகுதியை என் குடும்பத்திற்கும் எனக்குமாக ஒதுக்கிக் கொள்கிறேன்.

ஹிந்துத்துவ உணர்வை மக்கள் மனதில் ஊன்றுவதும், பிற சமயத்தாரின் மத மாற்றம் மற்றும் மத ஊடுருவல் நடவடிக்கைகளைத் தடுப்பதும் நான் மேற்கொண்டுள்ள தலையாய பணிகளாகும். இவற்றுக்கு இடையூறாக வேறு பணியேதும் அமையுமானால் அதனைத் தூக்கியெறிந்துவிட்டு எனது தலையாய பணிகளை கவனிப்பதே எனது வழிமுறையாக இருந்து வருகிறது.

இன்னுங்கூட பாரதத்தில் முகமதியர் சிறுபான்மையினராகவே இருந்து வருகிறார்களே என்கிற ஏக்கம் சிலருக்கு இருப்பதாகத் தெரிகிறது. பாரதத்தில் பெரும்பான்மை யாராவதற்கான முயற்சிகளில் அவர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். இவர்களுக்கு ஒரு சமாசாரத்தை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய பாரத தேசத்தில் பிரிவினை தேவையா என்பது குறித்து முகமதியரிடையே கருத்துக் கேட்கப்பட்டபோது, அப்படியொரு பிரிவினை நிகழ்ந்து, பாகிஸ்தான் என்கிற தேசம் உருவானாலும், தலைமுறை தலைமுறையாக
வாழ்ந்துவரும் இடத்தைவிட்டுத் தங்களுக்கு முற்றிலும் புதியதான பாகிஸ்தானில் குடியேறும் உத்தேசமே இல்லாத முகமதியர்கூட, மத ஒற்றுமையின் அடிப்படையில் பிரிவினை அவசியம் என்று கருத்தறிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அறிவித்த கருத்திற்கேற்ப பிரிவினை நிகழ்ந்தபின், பாகிஸ்தானுக்குப் போகாமல் ஏதும் நடவாததுபோல் இங்கேயே தங்கிக் கொண்டார்கள். ஹிந்துக்களும் அதைப் பொருட்படுத்தவில்லை; மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிவினை வேண்டும் என்று கேட்டுவிட்டு இங்கேயே தங்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர்களிடம் கேட்கவில்லை. சிலர் போனார்கள், கேரளத்திலிருந்தும் வேறு சில பகுதிகளிலிருந்தும்; ஆனால் உடனேயே திரும்பிவந்துவிட்டார்கள், அவமானப்பட்டும் தாக்குப் பிடிக்கமுடியாமலும்! சீச்சீ , உர்துகூடப் பேசத் தெரியாத நீங்கள் எல்லாம் முகமதியரா எனக் கேட்டு அவர்களை ஒதுக்கித் தள்ளினார்கள், மேற்குப் பஞ்சாபிய முகமதியர், பாகிஸ்தானின் உயர்குடி மக்கள் எனும் பெருமையில்! பிஹாரிலிருந்து சென்ற முகமதியர்கூட இன்றளவும் அங்கு உரிய அங்கீகாரம் கேட்டுப் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள். பஞ்சாப் பகுதியில் அவர்களுக்கு இடமில்லை. சிந்துவில்தான் கிடக்கிறார்கள். அங்கேயே பிறந்து வளர்ந்த ஷியா பிரிவு முகமதியருக்கே மரியாதை இல்லாதபோது இவர்களுக்கு என்ன கவுரவம் கிடைக்கும்?

சரி, அன்று பெரும்பான்மை முகமதியர் என்ன காரணம் சொல்லித் தனிநாடு கேட்டனர், தமக்கென?

நாங்கள் ஆங்கிலேயரான நீங்கள் ஆக்கிரமிக்குமுன் ஹிந்துஸ்தானத்தை ஆண்ட பரம்பரையினராவோம். நீங்கள் இப்படியே விட்டுச் சென்றால் பெரும்பான்மையினரான ஹிந்துக்களுடைய அட்சியின் கீழ்தான் நாங்கள் இருக்கவேண்டியதாகும். அந்த கவுரவக்
குறைவை எங்களால் சகித்துக் கொள்ள இயலாது. ஆகவே எமக்கென ஒரு தேசம் தேவை என்று தர்க்கித்தார்கள். இவ்வாறு பிரிவினைக்கு வழிசெய்துவிட்டு அதன்பின் பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் ஆட்சியில்தான் இருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிட்டு இங்கேயே தங்கிக் கொண்டவர்கள் தார்மீக ரீதியாக இங்கு தங்கிவிடுவதற்கான உரிமையினை இழந்து விட்டவர்களாவார்கள் என்பதை உறைக்கச் செய்வதும் எனது பணியாகும். இந்த விஷயத்தை முகமதிய சகோதரர்களிடம் தன்மையாக எடுத்துச் சொல்லி, அவர்களிடையே வேரூன்றியுள்ள மதாபிமானத்தின் தீவிரத்தைக் குறைப்பதிலும்,தேசிய நீரோட்டத்தில் இணைந்து செல்லுமாறு அவர்களை வேண்டுவதிலும் முனைந்துள்ளேன். விளம்பரம் இல்லாமலும், உரத்த குரலில் வாக்கு வாதங்களிலிறங்கிப் பொழுதை விரையம் செய்யாமலும் இயங்கிவருவது சிறிய அளவில்தான் என்றாலும் மிகுந்த பயன் தந்து மன நிறைவையும் அளிக்கிறது. இவ்வாறாக இயங்கி வருவதால்தான் தமிழில் எனது எழுத்துப் பணியைக் கடந்த பல வருடங்களாகக் கைவிட்டிருந்தேன், எனக்கென்று இலக்கிய அங்கீகாரமோ அந்தஸ்தோ ஏதும் இல்லாத போதிலும்! உன் எழுத்திற்கு விருது எதுவும் இதுவரை கிடைக்காததே உனக்குக் கிடைத்திருக்கிற இலக்கிய அங்கீகாரம்; தமிழ்ச் சூழலைப் பொருத்தவரை இதுதான் நிலைமை என்று அஞ்சல் செய்கிறார் ஒரு வாசகர்!

பாகிஸ்தானில் இன்று எஞ்சியுள்ள ஹிந்துக்களின் நிலையையும் பாரதத்தில் பிரிவினைக்குப் பிறகு எஞ்சியுள்ள முகமதியரின் நிலையையும் நமது முகமதிய சகோதரர்கள் தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமின்றிஎண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். இங்குள்ள நமது முகமதிய சகோதரர்கள் என்னதான் அந்நிய கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் தமதாக வரித்துக் கொண்டிருப்பினும் அவர்களின் முன்னோர் ஹிந்துக்களேயல்லவா? அதன் பொருட்டேனும் அவர்கள் தமது மனச்சாட்சியின்படி நடக்கவேண்டும் என ஹிந்துக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லையே! இதில் எவர் மனதையும் காயப்படுத்தாமல் எழுதுவதாகத் தனக்குத்தானே முதுகில் தட்டிக்கொள்ளல் வேறு! இவர்கள் நோக்கில் காயப்படுத்தாத எழுத்திற்கே இதுதான் லட்சணம் என்றால் காயப்படுத்தவேண்டும் என்கிற உத்தேசத்துடன் எழுதப்படுவது எப்படியிருக்கும் என யூகித்துக்கொள்ள முடிகிறது!

பாகிஸ்தானில் இன்று சிந்து மாகாணத்தில் மட்டுமே ஹிந்துக்களைக் காண இயலும். வட மேற்குப் பிரதேசங்களில் சிறு சிறு குழுக்களகச் சிதறி வாழ்வோரும் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையும் வெகு குறைவே.

பாகிஸ்தானில் இன்று மொத்தமுள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டாது. 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு அதிகரப் பூர்வமாக அறிவித்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அங்குள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடியே 23 1/2 லட்சம். இவர்களில் 96.28 சதம் முகமதியர். உயர் சாதி ஹிந்துக்கள் 1.60 சதம்.
ஹிந்துக்களான தலித்துகள் 0.25 சதம்.

பிரிவினைக்கு முன்பு பாகிஸ்தான் எனப் பின்னர் பெயர் சூட்டப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்களின் சதவீதம் அங்கிருந்த மொத்த மக்கள் தொகையில் 26 சதம். பிரிவினையின்போது அது 15 சதமாக வீழ்ச்சியடைந்தது. பிரிவினையின்போது கிழக்கு வங்கமும் பாகிஸ்தானாக இருந்ததால் அன்றைய மொத்த பாகிஸ்தானின் மக்கள் தொகையும் ஏறத்தாழ 13 கோடி அளவில்தான் இருந்தது. இன்றைக்கு எஞ்சியுள்ள மேற்கு பாகிஸ்தானில் அன்றைக்கு இருந்த மக்கள் தொகையில் ஹிந்துக்கள் குறைந்த பட்சம் 15 சதமாகவாவது இருந்திருப்பார்கள். அன்றைக்கு மேற்கு பாகிஸ்தானின் மக்கள் தொகை 9 கோடியாகவேனும் இருந்திருக்கும் (1951 ல் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய பங்களாதேஷின் மொத்த மக்கள் தொகை 4 கோடி. எனவே மேற்கு பாகிஸ்தானின் அன்றைய மக்கள் தொகை 9 கோடி என யூகிக்கலாம்). அதில் 15 சதம் ஹிந்துக்கள் எனில் அன்றைய மேற்கு பாகிஸ்தானும் இன்றைய மொத்த பாகிஸ்தானுமாகிய தேசத்தில் எஞ்சியிருந்த ஹிந்துக்கள் ஒரு கோடிக்கும் சிறிது அதிகம். இந்த எண்ணிக்கைதான் இன்று வெறும் 25 லட்சமாகக் குறைந்து விட்டிருக்கிறது. இந்த 25 லட்சத்தில் தாழ்த்தப்பட்ட தலித் ஹிந்துக்களையும் அடக்கிக்கொள்ளலாம்.

சிந்து மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாகப் பெரும் நிலச்சுவான்தாரர்களாக இருந்த ஹிந்துக்கள்தான் நிலபுலன்களை இழக்க மனமின்றி, என்ன ஆனாலும் சரி என்று பிரிவினைக்குப் பிறகும் அங்கேயே தங்கிவிட்டவர்கள். இதேபோல் முகமதிய, ஹிந்து நிலப் பிரபுக்களிடம் விவசாயக் கூலிகளாகவும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களாகவும் நசுக்கப்பட்ட தலித்துகளும் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களுக்குப் போக்கிடம் இல்லை. ஹிந்து நிலச்சுவான்தார்களில் சிலருக்கோ, பரம்பரை பூமியைவிட்டு வரமனமில்லை. ஒரு கோடிக்கும் கூடுதலாக இருந்த இந்த ஹிந்துக்களின் சந்ததியார்தான் கடந்த அறுபது ஆண்டுகளில் வெறும் 25 லட்சமாகக் குறைந்துவிட்டிருக்கின்றனர். பாகிஸ்தானில் எஞ்சியுள்ள இந்த 25 லட்சம் மக்களில் இன்று வெளியே பெயர் தெரிகிற மாதிரி ஹிந்து தொழிலதிபரோ, வணிகப் பிரமுகரோ, அரசியல் சமூகத் தலைவரோ, இலக்கியப் படைப்பாளியோ, கலைஞரோ கல்வியாளரோ விஞ்ஞானியோ ஒருவரேனும் உண்டென்று கூற முடியுமா?

மத அடிப்படையில் முகமதியருக்குத் தனி நாடு தேவைதான், அதற்காக பாரத தேசம் துண்டாடப் படவேண்டியதுதான் என்று கருத்தறிவித்துவிட்டு, ஆனால் பிரிவினைக்குப் பிறகு சொஸ்தமாக இங்கேயே தங்கிவிட்ட முகமதியரின் மக்கள் தொகை கடந்த அறுபது ஆண்டுகளில் கூடியுள்ளதா, குறைந்துபோனதா? இப்படிக் கூடியுள்ள முகமதிய மக்கள்தொகையில் பொது வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் முன்னேறி அனைவருக்கும் சரி சமமமாக மட்டுமின்றிக் கூடுதலான சலுகைகளோடும் பிரகாசிக்க முடிந்துள்ளவர்கள் எத்தனைபேர்? கலை, இலக்கியம், அரசியல், சமூகம், கல்வி என எல்லாத் துறைகளிலும் இடம் பெற முடிந்திருப்பதோடு சமயம் வாய்க்கிற போதெல்லாம் பாரத தேசத்தின் பெரும்பான்மை மக்களுடன் மோதுவதும், சேதம் விளைவிப்பதும், உரத்துக் குரல் கொடுப்பதும், படுகொலை செய்வதும்கூடச் சாத்தியமாகியுள்ளதே! ஹிந்து அமைப்புகளான ஆர் எஸ் எஸ் , ஹிந்து முன்னணி ஆகியவற்றின் அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்க்க முடிகிறதே, இப்படியான ஒரு நிலையை பாகிஸ்தானில் அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்கள் செய்ய முடியும் எனக் கற்பனையாவது செய்துபார்க்க இயலுமா? அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பாரத தேசமாக இருந்த பகுதிதானே அது! வலிந்துபோட்ட கோட்டால் மனஉணர்வுகள் மங்கிவிடக் கூடுமா? எல்லைக் கோட்டிற்கு அப்பால் சிறுபான்மையினர் என அறியப்படுவோருக்கு உள்ள வாய்ப்புகளும் வசதிகளும் இப்பால் சிறுபான்மையினராக உள்ள நமக்கு இல்லாதது மட்டுமல்ல, இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் இழிவுபட நேர்கிறதே என்கிற ஏக்கம் அங்குள்ளவர்களுக்கு இருக்காதா?

பாகிஸ்தானில் ஹிந்துக்களின் பாதுகாப்பற்ற இரண்டாந்தரக் குடிமக்கள் நிலை குறித்து மனித உரிமை இயக்கங்களின் தகவல்கள் கட்டுக் கட்டாக உள்ளன. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப் படுவதற்கு முன்னரே எத்தனை எத்தனை ஹிந்து ஆலயங்கள் ஏதேனும் சாக்கில் இடித்துத் தகர்க்கப் பட்டன என்பதற்கும் கணக்கு இருக்கிறது. கூகிளில் தட்டினால் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிடும்! பாரத தேசத்தின் சகாயம் இன்றேல் தோன்றியே இருக்கமுடியாத பங்களாதேஷிலும் இன்று இதுதான் நிலைமை. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப் படுவதற்கு முன்னரே அங்கு இடிக்கப்பட்ட ஹிந்து ஆலயங்கள் எத்தனை என்பதற்கான பட்டியல் தஸ்லிமா நஸ்ரீனின் லஜ்ஜாவில் இருக்கிறது. 1971 ல் ஏறத் தாழ பத்து மாத காலம் கிழக்கு வங்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தாராலும், அங்கு குடியேறியிருந்த பிஹாரி முகமதியராலும் ஈவிரக்கமற்ற இன அழிப்பு தங்கு தடையின்றி நடந்தது. அழிக்கப்பட்ட 30 லட்சம் வங்காளியரில் 20 லட்சம்பேர் ஹிந்துக்கள். தோல் மரத்த பாரத அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

எத்தனையோ ஆலயங்கள் இருக்க அயோத்தியிலும் ஒரு ஆலயம் அவசியமா, இன்று நமக்குத் தேவை கழிப்பறைகளும், மருத்துவ மனைகளும் கல்விக்கூடங்களும்தான் என்று சில புத்திசாலிகள் சொல்கிறார்களாம்! இவற்றோடு அயோத்தி ஜன்மஸ்தானில் ராமபிரானுக்கு ஆலயமும் அவசியந்தான். ஏனெனில் ஹிந்து ஆலயங்கள் கலாசார கேந்திரங்களாகவும் நுண்கலைகளின் போஷகர்களாகவும் சமூக உறவாடல்களாகவும் இயங்குபவை. இந்த அறுபது ஆண்டுகளில் போதிய அளவில் கழிப்பறைகளும், மருத்துவ மனைகளும் கல்விக்கூடங்களும் கட்டுவதற்கு இடையூறாக இருந்தது அயோத்தியில் ஜன்மஸ்தானத்தில் கட்ட விரும்பும் எம் குழந்தை ஸ்ரீராமபிரானுக்கான ஆலயந்தானோ?

சமீப காலங்களில் முகமதியரும் கிறிஸ்தவரும் அந்நிய நிதி உதவியுடன் பாரதம் முழுவதும் எழுப்பியுள்ள வானளாவிய மசூதிகளும் தேவாலயங்களும் எவ்வளவு தெரியுமா? ஆலயம் எதற்கு, கழிப்பறைகள்தான் தேவை என்கிற முற்போக்கு அறிவுரை ஹிந்துக்களுக்கு மட்டுந்தானோ?

பாபர் நினைவு மண்டபத்தை மசூதி, மசூதி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்; மசூதிக்கான விதிமுறைகள் ஏதும் அதில் இருக்கவில்லை என்ற போதிலும். அங்கு ராம பிரானுக்குக் கோவில் கட்ட இயலாது என்பது புலபட்டுவிட்டது என்பதாகச் சொல்லி அவர்களால் புளகாங்கிதம் அடையவும் முடிகிறது. ஹிந்துக்களின் ஏழு புண்ணியத் தலங்களுள் ஒன்றான அயோத்தியில், ஜன்மஸ்தான் என்கிற பகுதியில், பாபர் நினைவு மண்டபம் எழுப்பப்பட்ட காலத்தில் இருந்த முகமதியரின் எண்ணிக்கை எத்தனை? தொழுகைக்காக ஒரு பிரமாண்டமான மசூதி தேவைப்படும் அளவுக்கா அயோத்தி ஜன்மஸ்தான் பகுதியில் முகமதியர் எண்ணிக்கை இருந்தது? கொல்லன் பட்டறையில் ஈக்கு என்னய்யா வேலை?

இப்ராஹிம் லோடி என்கிற ஹிந்துஸ்தனத்து முகமதிய சுல்தானை பானிப்பட் என்கிற தில்லிக்கு அருகாமையில் உள்ள இடத்தில் பாபர் என்கிற ஓர் அந்நிய முகமதியன் வெற்றிகொண்டதன் நினைவுச் சின்னம்தான் பாபர் மண்டபம். அது பானிப்பட்டில் அமையாமல் ஹிந்துக்களின் புனிதத் தலமான அயோத்தியில் எழுப்பப்பட வேண்டிய காரணம் என்ன? ஏதேனும் சாக்கில் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் ஹிந்துக்களை அவமதித்துக்கொண்டிருக்கவேண்டும் என்கிற நல்லெண்ணம்தான்! வேறென்ன?

அயோத்திக்கு ஒரு நடை போய் அங்குள்ள ஓரளவு விவரம் தெரிந்த முகமதியரிடமே விசாரியுங்கள். பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜோஹன் என்கிற கிறிஸ்தவர் அவ்வாறுதான் செய்தார்.

பாபர் மண்டபம் மசூதியல்ல, அதற்கான யோக்கியதாம்சங்கள் எதுவும் அதற்கு இல்லை. ஒரு வக்பு சொத்து என்பதற்குமேல் அதற்கு முக்கியத்துவம் இல்லை. உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியாணா போன்ற பகுதிகளில் பாபர் நினைவு மண்டபம்போல் ஏராளமான கட்டிடங்கள் பராமரிக்க முடியாமல் பாழடைந்து கிடக்கின்றன; வக்பு வாரியத்தால் அவற்றையெல்லாம் கவனிக்கமுடிவதில்லை, என்பார், விவரம் தெரிந்த அயோத்தி வட்டார முகமதியர்! சந்தேகமா? கதை அளக்கிறேன் என்று சொல்லத் தோன்றுகிறதோ? வேண்டுமானால் அந்த ஓய்வுபெற்ற பாரத ராணுவ அதிகாரியின் மின்னஞ்சல் முகவரி தருகிறேன், தனிப்பட்ட முறையில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி விவரம் வேண்டினால்!

பிறகு ஏன் அயோத்தி பாபர் மண்டபம் மீது முகமதியருக்கு அத்தனை அக்கரை? ஹிந்துக்கள் கேட்கிறார்களே, ஏன் விட்டுக்கொடுக்கவேண்டும் என்கிற வீம்புதான்! இதுவரை முகமதியர் சுமுகமான பேச்சு வார்த்தை மூலமாக எதையேனும் விட்டுக் கொடுத்ததாகச் சரித்திரம் உண்டா? இஸ்ரேலிடம் வாங்கிய பதிலுக்கு பதிலான அடி தாங்க முடியாமல்தானே பாலஸ்தீனம் பணிந்து வந்தது! ஒழித்துக்கட்டிவிடுவேன் என்கிற மிரட்டலுக்குப் பிறகுதானே தாலிபானை அடக்க பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க முன் வந்தது!

முகமதியருக்குப் புரிகிற பாஷையில் ஹிந்துக்கள் பேசினால்தான் பயன் கிட்டும் போலும்!

சமய நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்ற விசாரணைக்கு இடமில்லை என்று சுட்டிக்காட்டுவதற்குப் பதில் பெருந்தன்மை என்கிற பெருமையில் விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல ஹிந்துக்கள் அனுமதித்ததால் அல்லவா, அங்கு கோயில் கட்டுவது சாத்தியமில்லாது போய் விட்டது என்று தைரியமாய், வெளிப்படையாக வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டு, இலக்கிய அங்கீகாரமும் பெற முடிந்துள்ள ஒரு சிறுபான்மையினரால் அநாகரிகமாகக் களிப்படைய முடிகிறது! இப்படியொரு நிலையை பாகிஸ்தானின் சிறுபான்மையினரால் கனவிலேனும் நினைத்தாவது பார்க்க முடியுமா?

பாகிஸ்தானில் ஒரு முகமதிய பதிப்பாளர் ஒரு எழுத்தாளருக்குத் தமது ஹிந்து சமயம் குறித்து நூல் எழுத வாய்ப்பளித்து, கை நிறையப் பணமும் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியுமா? அதற்குப் பிரதியாக அந்தப் பதிப்பாளர் பிறகு இரட்டை முகம் உள்ளவர் என எள்ளி நகையாடப்படுவார் எனவும் எதிர்பார்க்கவியலுமா?

இதில் குஜராத் குஜராத் என்று வாய்க்கு வாய் அங்கலாய்ப்பு வேறு! கோத்ரா ரயிலடியில் முகமதியர் தொடங்கிவைத்த படுகொலையின் தொடர்ச்சிதானே அது? அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால் வாக்கு வங்கியைக் குறிவைத்து விருப்பம்போல் மறு அறிக்கை பெறுவதால் உண்மை மறைந்துவிடுமா? காந்திஜியின் மாநிலத்தில் சத்தியத்திற்கு இப்படியொரு சோதனை. கா ந்திஜியாலேயே சத்தியத்திற்கு விளைந்த சோதனையால் கிடைத்த சேதாரம்! சரி, முகமதியருக்கு குஜராத்தில் பெரும் இழப்பு என்றால் எல்லைக் கோட்டினை ஓட்டினாற்போல் உள்ள முகமதிய தேசமான பாகிஸ்தானுக்கு வெகு எளிதாக ஏராளமானவர்கள் போய்ச் சேர்ந்திருக்கலாமே, ஏன் போகவில்லை? திரும்பவும் ஹிந்துக்களே அதிகம் உள்ள மஹாராஷ்டிரத்திற்குத்தானே சில குடும்பங்கள் குடிபெயர்ந்ததாகத் தகவல்? அவர்களும் பிறகு ஊர் திரும்பி பத்திரமாக வசிக்கத் தொடங்கியாகிவிட்டதே! இன்னும் என்ன குஜராத், குஜராத்?

வீம்புக்கு வம்பு வளர்த்துவிட்டு, முடிந்தால் அடித்துப்பார் என்று ஒரு பழைய தமிழ் சினிமாவில் காமெடியன் டி எஸ் துரைராஜ் எகிறுவார். அடி விழுந்த பிறகு ஙொப்பன் மவனே சிங்கண்டா, அடிப்பியோ என அழத் தொடங்குவார்! அதுதான் நினைவுக்கு வருகிறது!

இடதுசாரியினரும், வாக்கு வங்கி அரசியல்வாதிகளும் ஹிந்துத்துவ அமைப்புகளின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியில் குஜராத் பற்றி விடும் சரடுகளை அளந்துபார்ப்பதில் நேரத்தை வீணடித்துக்கொண்டிராமல் ஒரு நடை அங்கு போய்ப் பார்த்து நடுநிலை
யாளர்களிடம் விசாரிப்பது நல்லது. அங்கு செயல்படும் சர்வோதய இயக்கத்தவரிடம் போய் கேட்பது சரியாக இருக்கும், அவர்கள் உண்மையே பேசுவர்! மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோதி பழைய நண்பர்தான், சந்தித்து நெடுங்காலம் ஆகிவிட்ட போதிலும்! அவரிடம் சொல்லி வழிச் செலவுக்கும் தங்கும் வசதிக்கும்கூட வேண்டுமானால் ஏற்பாடு செய்துதர முடியும்; கம்யூனிஸ்ட் தேசங்களில் உள்ளது போன்ற தலையீடு ஏதுமின்றி சுதந்திரமாக உண்மையைக் கண்டறிய உத்தரவாதமும் தர இயலும்! ஆனால் போய்விட்டு வந்தபின் மனச்சாட்சிக்கு விரோதமின்றி உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்; கோத்ராவுக்குப் பிறகான நிகழ்ச்சிகளில் இறந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் தெரிவிக்கவேண்டும். இத்தனைக்குப் பிறகும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது, வேறு மாநிலத்தில் விசாரணை நடக்கட்டும் என்று. குஜராத் அரசும் கட்டுப்படுகிறது அதற்கு. ஷாபானு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பிற்குக் கட்டுப்பட மாட்டோம் என்று கூச்சலிட்ட குரல்கள் இதற்கு மட்டும் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டவும் அதனை மதிக்கவேண்டும் என்று அறிவுறுத்தவும் தயங்குவதில்லை! இப்படியொரு நிலைமை பாகிஸ்தானில் சாத்தியமா என்று ஒரு கணமேனும் சிந்திக்கவேண்டும்.

அரசியல், சமூகம், கல்வி, கலை, இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் துள்ளித் திரிய முடிகிறது, இங்கே! மூத்தோரை துணிவுடன் எள்ளி நகையாடவும் முடிகிறது, கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் அதிகப் பிரசங்கித்தனமாக!

போகிற போக்கைப் பார்த்தால் ஹஸ்கே லியா பாகிஸ்தான், லட்கே லேங்கே ஹிந்துஸ்தான் என்கிற கோஷம் உள்ளுக்குள் இன்னும் ஓயவில்லைபோலத் தெரிகிறது!

+++

Series Navigation