உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

ஜடாயு


மகர சங்க்ராந்தி என்ற பெயரில் பாரத நாடு முழுதும் கொண்டாடும் திருநாள் பொங்கல். பருவ மாற்றத்தை சூரியதேவனின் வடக்கு முகப் பயணபாக உருவகித்த நம் முன்னோர் இந்த இயற்கைத் திருவிழாவைப் பெரும் களிப்புடன் கொண்டாடும் மரபை உருவாக்கினர். தமிழகமும், ஆந்திரமும், கர்நாடகமும் அறுவடைத் திருநாள் கொண்டாடும் இதே நாளில் தான் பஞ்சாபிய உழவர்களும் “லோஹ்ரி” என்ற தங்கள் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். வட மாநிலங்கள் முழுவதும் மக்கள் நதிகளில் நீராடி ஞாயிறு போற்றுவதைப் பார்க்கலாம். உலகம் முழுதும் வாழ்ந்த பாகன் (pagan) மதங்கள் ஒரு காலத்தில் கொண்டாடி வந்த சூரியத் திருநாளின் மரபுகளோடு இயைவதால் உலகின் ஆதித் திருநாளாகவும் ஆகிறது.

தமிழகத்தில் வெல்லம், பால், புத்தரிசி என்றால் மகாராஷ்டிரத்தில் எள்ளும், வெல்லமும் (Til-Gul), கர்னாடகத்தில் எள்ளு, பெல்லா. எல்லா இடங்களிலும் கரும்பு உண்டு. எல்லாமே இனிப்பானவை தான். இப்படிப் பலவிதமான கொண்டாடும் முறைகள் வானவில் திருவிழாவாக இதைக் கொண்டாடினாலும் பண்டிகையின் கருப் பொருள் ஒன்றே தான்.

கதிரோனின் கவின் ஒளி கண்டு
கண் கூசி நின்றிடவில்லை
காயத்ரி மந்திரம் சொல்லிற்று நம் வேதம்.

காவிரி நாடனின் திகிரியைக்
கதிரோனின் பரிதிச் சக்கரமாகக் கண்டு
ஞாயிறு போற்றிற்று நம் காவியம்.

பெற்று வளர்த்த பூமித் தாயை
நிலமென்னும் நல்லாள் என்று
போற்றி வணங்கியது நம் தெய்வீக மரபு.

இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம்
இறைமையை உணர்த்திற்று
நம் சமயம், கலாசாரம்.

பிரபஞ்சம் முழுவதும், இயற்கை முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியை வியந்து போற்றி அதன் உணர்வில் ஒன்று படுதல் என்பது தான் பொங்கல் பண்டிகையின் கருப் பொருள் . அதன் தத்துவ, கலாசாரப் பின்னணி இந்து ஆன்மிக, ஞான, பக்தி மரபில் தான் உள்ளது.

சகோதரர் திரு. ஜோ கத்தோலிக்கர்கள் பொங்கல் கொண்டாடுவதைப் பற்றி (http://cdjm.blogspot.com/2007/01/blog-post.html) எழுதியிருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. .. தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால் இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் வாதிடுகிறார்.. மதம் வேறு, கலாசாரம் வேறு என்று அவர் கூறுவதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது. இரண்டுக்கும் நடுவில் உள்ள எல்லை மிகவும் நெகிழ்ச்சித் தன்மை உடையது. மதம் மாறிவிட்டாலும், அவரது கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலாசாரக் கூறுகளை விடாமல் கடைப் பிடிப்பது மிகவும் பாரட்டுக்குரிய விஷயம். இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் இந்த கலாசாரப் போக்கு வரவேற்கத் தக்கது.

இந்து பண்டிகை என்பதற்காக அல்ல “தமிழர் திருநாள்” என்பதற்காக பொங்கல் கொண்டாட வேண்டும் என்று ஒரு கருத்து போகிறது. வங்காளத்தில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்களும் துர்கா பூஜாவை இதே போல் கொண்டாடுகின்றனர், மகாராஷ்டிர விநாயக சதிர்த்தி, ஆந்திர உகாதியும் இப்படியே.. பல மாநிலங்களில் தீபாவளி, ஹோலி, தசராவையும் அந்த மண்ணின் திருவிழாக்கள் என்று அங்கங்கே உள்ள இந்துக்கள் அல்லாதவர்களும் கொண்டாடுகின்றனர்.. எனவே, இது பொங்கல் பண்டிகைக்கு மட்டும் உரியதான தனித்தன்மை அல்ல. அப்படியானால் இவை எதுவுமே இந்துப் பண்டிகைகள் அல்ல என்று ஆகி விடுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சகோதரர் திரு. நல்லடியார் எழுதியிருப்பது (http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html) இதற்கு நேர்மாறானது. மிக இறுக்கமான, சில இஸ்லாமியக் கருத்துக்களை முன்வைத்து ஏன் முஸ்லீம்கள் பொங்கல் கொண்டாடக் கூடாது என்று ரொம்ப மெனக்கெட்டு வாதிடுகிறார். இதே சிந்தனைப் போக்கில் போனால் முஸ்லீம்கள் ஏன் திருக்குறள் படிக்கக் கூடாது, ஏன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடக் கூடாது, ஏன் “சத்யமேவ ஜயதே” என்று பொறித்த இந்திய தேசியச் சின்னத்தை மதிக்கக் கூடாது என்றெல்லாம் மிக எளிதாக கருத்துக்கள் எடுத்து வைக்கலாம். (எனது பழைய வந்தே மாதரம் பதிவில் இவை பற்றி விரிவாக – http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html). முஸ்லீம்கள் மத்தியில் இத்தகைய போக்கு பரவுவது மிகவும் கவலைக்குரியது. கண்டிக்கப் பட வேண்டியது.

இந்துக் கலையான யோகா இன்று உலகம் முழுவதும் அதன் பயன்களுக்காகப் பலராலும் பயிலப் படுகிறது. இந்து மருத்துவமான ஆயுர்வேதமும் அப்படியே. இத்தாலிய/அமெரிக்க உணவான பிட்சாவை சாப்பிட்டு நான் இத்தாலியனாகவோ/அமெரிக்கனாகவோ, சீன நூடுல்சை சாப்பிட்டு சீனனாகவோ ஆகிவிட மாட்டேன். அது போலத் தான் இதுவும். ஆனால், நான் பாதுகாப்பாக உணர்வதற்காக அது சீன உணவே அல்ல என்று சொன்னால் எப்படிருக்கும்?? அது போலத் தான் பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல என்ற வாதங்கள்!

பொங்கல் இந்துப் பண்டிகை தான். அதனை அப்படி அழைத்தே கிறித்தவர்கள் கொண்டாடினால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

“இந்து” என்ற சொல்லோடு தொடர்புடைய எந்த உயர்வான விஷயமும் இருக்க முடியாது, அது மோசமானது என்று பிரிட்டிஷ் காலனிய காலங்களிலிருந்து பரப்பப் பட்டு வரும் துவேஷப் பிரசாரம் தான் இதன் பின்னணியில் உள்ளது. இந்து மதத்தின் மேலான, அற்புதமான விஷயங்களையெல்லாம் (யோகா, பாரம்பரிய இசை, பரதம் முதலான நடனங்கள், சிற்பம், இலக்கியம்) தனித்தனியாகப் பிய்த்து இவற்றையெல்லாம் அனாதையாக்கி சிறு சிறு குழுக் கலாசாரம் என்று அடையாளப் படுத்துவது.. அதே சமயம் சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், பிற்போக்குத் தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி இது தான் இந்து மதம் என்று முத்திரை குத்தித் திட்டிக் கொண்டிருப்பது! இந்தப் பிரசாரத்தினால் மூளைச் சலவை செய்யப் பட்ட மன நிலையின் வெளிப்பாடு தான் “பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல” என்பது..

பொங்கல் தமிழர் திருநாளாம். அதாவது இந்தியாவில், தென்கோடியில் வேறு எதோடும் சம்பந்தமில்லாமல் தமிழர் என்று ஒரு கூட்டம் மட்டும் அதைக் கொண்டாடுமாம்.. பக்கத்து மாநிலங்கள் கூட அதைக் கொண்டாடுவதில்லையாம் ! அது வேறு பண்டிகை சங்கராந்தியாம்.

ஆனால், கிறிஸ்துமஸ் ? அது உலகத் திருநாள்! ரம்ஜான்? அதுவும் உலகத் திருநாள் (மலேசியாவில் ஹரி ராய பூஸா என்ற பெயரில் அது கொண்டாடப் பட்டால் கூட!!) இந்து மதத்தின் கூறுகளைத் தனிமைப் படுத்தி அவற்றுக்கு சின்னத் தனம் தரும் அரசியல் இது என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா? இந்து மதம் உலக மதம். இந்துப் பண்டிகைகள் உலகப் பண்டிகைகளே.

உலகம் முழுதும் சுற்றி இந்து தர்மத்தின் ஆன்மீக ஒளியை சுடர்விடச் செய்த ஞான சூரியன் சுவாமி விவேகானந்தர் பிறந்ததும் பொங்கல் திருநாள் அன்று தான். என்ன பொருத்தம்!

“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!”

மங்கலம் நல்கும் இம்மறைமொழி கொண்டு
எங்கள் உலகோர் பொங்கிடும் பொங்கல்!

உங்கள் வீட்டிலும், எங்கள் வீட்டிலும்
பொங்குக பொங்கல்! தங்குக செல்வம்!

வறுமை ஒழிக, வான்மழை பொழிக !
பொறுமைக் குணத்தைப் புவியோர் போற்றுக!

உழவும் தொழிலும் ஓங்கி வளர்க !
கழுகுக் கரசன் கனிவுடன் வாழ்த்து.

அனைவருக்கும் இனிய உலகத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!

http://jataayu.blogspot.com/

Series Navigation

ஜடாயு

ஜடாயு