உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

நட்சத்திரவாசி


விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில்
பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு
அதன் நிழலில் நீர் பருகிடவும்
ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள்
காத்திருக்கின்றனர்
மணி மண்டபத்தில் அரசாளும்
கட்டளைகளுக்கு தம்மையே அர்பணித்த
விழிகளின் திரையில்
போதை ஊற்றுக்கள் பீறிட்டெழுகின்றன
உடல் வாதைகளை கழற்றி வைத்து
சொப்ன ரூபங்களில் மிதந்தலைகிறார்கள்
அரளிப் பூக்களைப் போல
எரியும் நடு நிசியிலோ மெல்ல
தீமூட்டி அதன் தழல்களில்
உலர வைக்கின்றனர் நெடுநாள் ஆசைகளை
குளிர்காய்ந்து பெய்மறந்து உலாவுகையில்
எனது காமம் உலகங்களுக்கு அப்பால்
பயணிக்க எத்தனிக்கின்றன
யாகம் செய்தோ,மோன தவம் செய்தோ
மீட்டெடுக்கின்றனர் எனதுடலை
அதன் யவ்வன திரட்சி மாறாமலே
நறுமணங்களையும்,தூபங்களையும்
சுழலவிட மெல்ல அசைந்து
உச்சத்தையெட்டுகிறது
மீண்டும் அவர்கள் வருகிறார்கள்
நிர்வாணத்தை நனைத்து உயர
பருந்தென பறந்து போகையில்
கூழாங்கற்களென உருண்டு போகிறது
என் நெடுநாள் குறிகள் யாவும்

mujeeb.h

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>