உயிர்த்தெழும் ஔரங்கசீப்

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

அருணகிரிஔரங்கசீப்பின் ஆட்சியில் இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மத பயங்கரவாத வரலாற்றை பிரதிபலிக்கும் வரலாற்றுக்கண்காட்சியை FACT (Foundation Against Continuing Terrorism) அமைப்பின் ஃபிரான்ஸுவே கோத்தியே இந்தியாவெங்கும் நடத்தி வருகிறார். பிரான்சுவா கோத்தியே 19 வயதில் இந்தியாவுக்கு வந்தவர். காஷ்மீர் பயங்கரவாதத்தையும் வட கிழக்கு மாகாணங்களின் பிரச்சனைகளையும் நேரில் கண்டு விரிவாக எழுதிய பத்திரிகையாளர். இந்திய அரசியல், ஆன்மீகம், வரலாறு குறித்து பல புத்தகங்கள் எழுதிய இவர், சிறந்த பத்திரிகையாளருக்கான “நசிகேதா” விருது பெற்றவர். இந்த விருதுப் பணத்தை வைத்து இவர் தொட்ங்கிய FACT அமைப்பு காஷ்மீர், பங்களாதேஷ் போன்ற இடங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் பயங்கரவாதத்தின் கோரங்களை வரலாற்றுக் கண்காட்சியாக மக்களிடையே எடுத்துச் சென்று வெளிச்சம் போட்டு வருகிறது.

டெல்லியிலும், பூனாவிலும், பெங்களூரிலும் பெரும் வரவேற்பு பெற்று அமைதியாய் நடந்து முடிந்த இவரது ஔரங்கசீப் ஆட்சி குறித்த வரலாற்றுக் கண்காட்சி சென்னையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் மிரட்டப்பட்டு போலீஸ் துணையுடன் வல்லடியாக மூடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இடம் பெற்ற சித்திரங்கள் ஔரங்கசீப்பின் இஸ்லாமிய அறிஞர்களே பதிவு செய்திருக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் ஆனவை. இதில் ஔரங்கசீப் ஆட்சியில் மதுராவின் கேசவராய் கோவிலும், சோமநாத் கோவிலும் இடிக்கப்பட்டதும் , தெய்வச்சிலைகள் உடைக்கப்பட்டதும் காட்சிகளாய் வரையப்பட்டிருந்தன. தமுமுக, மனித நீதிப் பாசறை (கருத்துரிமையைக்கூட மதிக்காத ஒரு அமைப்பு தன் பெயரில் மனித நீதி என்ற பெயரைக் கொண்டிருப்பது கொடிய நகை முரண்) போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநியாயங்களை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் கருணாநிதி அரசின் போலீஸ் துறை கேவலமான அடக்குமுறையை கண்காட்சி நடத்துபவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. நிகழ்ச்சி நடத்துனர்களை வயதான பெண்கள் என்றும் பாராது (மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களின் கைதுக்கு உள்ள தடையை மீறி சட்டவிரோதமாக) போலீஸ் துறை கைது செய்தது. ஆற்காட்டு நவாப் என்ற தோரணையில் இன்றும் வலம் வரும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியின் மிரட்டல் அழுத்தத்தின் பின்னணியில் இந்த அநீதி நடந்தேறியுள்ளது.

வரலாற்று அநியாயங்களை வன்முறையாக இருட்டடிப்பு செய்வது புண்ணை காற்றுப்புகாமல் மூடி வைத்து புரையோடச்செய்வது போன்றதுதான். கேரளாவின் ஜாதிக்கொடுமைகளைக் கண்டு பித்தர் கூட்டம் என வர்ணித்தார் விவேகானந்தர். ஜாதிக்கொடுமைகள் வெளிப்படையாகப் பேசப்பட்டதுதான் அதனை எதிர்த்த சட்ட திருத்தங்களுக்கும் சமூக மாறுதல்களுக்கும் வழி வகுத்தது. நாகஸாகி, ஹிரோஷிமா மீதான அணுகுண்டு வீச்சை ஜப்பான் வரலாற்று சின்னங்களையும், அமைதிப்பூங்காக்களையும் எழுப்பி அணுஆயுத அழிவை உலகுக்கு உணர்த்தும் அமைதி நாளாக நினைவு கூர்கிறது. அறுபது லட்சம் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட ஹோலோகோஸ்ட் நினைவுச்சின்னங்களை ஜெர்மனி இன்றும் அழியாமல் காக்கிறது. செவ்விந்தியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையை அமெரிக்கப் பாட நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. ஒவ்வொரு செவ்விந்தியக்குழுவும் அழிக்கப்பட்ட வரலாற்றினையும் கண்காட்சிகளாய், புத்தகங்களாய், பாடங்களாய் நவீன அமெரிக்கா பதிவாக்குகிறது. கறுப்பர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற வரலாறு அமெரிக்காவில் குழந்தைகளுக்கும் சொல்லித் தரப்படுகிறது. வரலாற்று அநீதிகள் மறக்கடிக்கப்படாமல் இருப்பதும், அந்த வரலாறு புதிய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தப்படுவதும் பழைய அநியாயங்களும் வெறுப்பியல் மனநோய்களும் மீண்டும் உயிர்த்தெழாமல் தடுக்கும் தடுப்பூசிகள்.

செவ்விந்தியப் படுகொலைகளைப் பாடமாக்கும் அமெரிக்க ப்ராட்டஸ்டண்ட் சமூகமும் , யூத இனப்படுகொலையை வரலாறாக்கும் ஜெர்மனியின் கிறித்துவ சமூகமும் , இந்து பழைமைவாத எதிர்ப்புக்குரல்களைப் பாடங்களில் பதிவு செய்யும் இந்திய இந்து சமூகமும் பழைமை அநீதிகளிலிருந்து சுய விமர்சனம் மூலம் தம்மை புதுப்பித்துக்கொள்ள விழையும் முற்போக்கு சமூக முனைப்புக்கு எடுத்துக்காட்டாகின்றன.

இவ்வகையில் சுயவிமர்சனத்தின் முலம் நிகழும் சமுதாய புதுப்பித்தலும் நவீனமாக்கலும் இஸ்லாமிய சமூகங்களில் இன்னும் நிகழாமலேயே இருக்கிறது. இதற்குக்காரணமாகும் விஷப்பயிர்களைத் தம்முள் இனங்கண்டு களைவதே முற்போக்கு இஸ்லாமிய சமூகத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். மாறாக, இஸ்லாமிய பழைமைவாதத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டு, பயங்கரவாத கோரங்களுக்கு மதப் புனித சாயம் ஏற்றப்பட்டு மதராஸாக்களிலும், மசூதிகளிலும், அரசியலிலும் , உலகளாவிய உம்மா என்ற பெயரில் எல்லை தாண்டிய மதவாதமும் தேச விரோதமும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தாலிபான்களால் தகர்க்கப்பட்ட பாமியான் புத்த சிலைகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தங்கள் நிலத்திலிருந்து அழித்து விரட்டப்பட்டு டெல்லியில் அகதி வாழ்க்கை வாழும் காஷ்மீர் இந்துக்களும், பங்களாதேஷிலும் மலேஷியாவிலும் அழித்தொழிக்கப்படும் இந்து கலாசார சின்னங்களும் பழைமைவாத வெறுப்பியலின் புதிய கோர முகங்களாக இஸ்லாம் ஆகிவருவதையே வெளிப்படுத்துகின்றன. தனது சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையை சாகும் வரை சிறையில் அடைத்து வைத்திருந்த கடும் இஸ்லாமிய அடிப்படைவாதியான அவுரங்கசீப் மொகலாய மன்னர்களிலேயே உன்னதமான முன்மாதிரியாக பாகிஸ்தான் பாட நூல்களில் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மது, லஷ்கர்-இ-ஜாங்வி, ஹர்கட்-அல்-இஸ்லாமி ஆகிய அமைப்புகள் ஔரங்கசீப்பை ஆதர்சமாகவும் ஔரங்கசீப் ஆட்சியை மொகலாய இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலமாகவும் முன்னிறுத்தி, அதுபோன்ற ஆட்சியை மீண்டும் இந்தியாவில் நிறுவுவதையே தங்கள் லட்சியமாக விவரிக்கின்றன.* எனவே இப்படிப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் வெறுப்பியல் மனநிலையையும், இந்திய எதிர்ப்பையும், எதிர்காலத் திட்டத்தையும் அறிந்து கொள்ள ஔரங்கசீப்பின் வரலாற்றை ஆராய்வது அவசியமான ஒன்று. ஆகவே, இது போன்ற ஜிஹாதிகளின் ஆதர்ச அரசனான ஔரங்கசீப்பினால் முன்பொரு முறை ஏற்பட்ட பாதிப்புகளை மக்களுக்கு நினைவுறுத்துவதும் வரலாற்றுப் பதிவாக அவற்றை வெளிச்சம் போடுவதும் சமூக மேம்பாட்டில் அக்கறைகொண்ட ஒவ்வொரு முற்போக்கு சிந்தனையாளனும் – அவன் இஸ்லாமியனோ, இந்துவோ, வலதோ, இடதோ, வடக்கோ, தெற்கோ- அவசியமாக உடனடியாகச் செய்ய வேண்டிய பணியாக ஆகிறது.

ஔரங்கசீப்பின் பழைமைவாதத்தில் தோய்ந்த சமயப்பொறுமையற்ற அரசாட்சி மொகலாயப் பேரரசுக்கு சாவு மணி அடித்தது. அதன் எதிரொலி ஆங்கிலேயக் காலனியாதிக்கமாக இந்திய சமுதாயத்தை வந்தடைந்தது. இஸ்லாமிய பழைமைவாதமும் பயங்கரவாதமும் இணைந்து வரும் ஆபத்தை இந்தியா மீண்டும் இன்று எதிர்கொள்ள வேண்டி வரும் இந்த காலகட்டத்தில் இந்துக்கள் மட்டுமல்ல- ஒவ்வொரு இந்தியனும் இதே போன்ற நிலை உருவான முற்காலம் ஒன்றில் தற்காலத்தை உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு செய்வது, விளைவுகளை எதிர்நோக்கவும், அவற்றிலிருந்து காக்கும் தற்காப்பு சாத்தியங்களை எடைபோடவும் உதவும். எனவே “அன்று நடந்தது பற்றி இப்போது என்ன பேச்சு” என்பதனை அரைகுறைகளின் ஆபத்தான உளறல் என்றோ அல்லது தெரிந்தே செய்யப்பட்டும் திருட்டு வாதம் என்றோதான் கொள்ள வேண்டும்.

இவற்றையும் தாண்டி, தமிழகத்தின் சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் ஆற்காட்டு நவாப் போன்ற இஸ்லாமிய ஆதிக்கவாதிகளும் ஔரங்கசீப்பின் அநியாயங்களை வெளிச்சம் போடுவதை எதிர்க்க, காரணம் என்னவாக இருக்க முடியும்?

ஔரங்கசீப்பின் ஆட்சிக்கொடுமைகளை நினைவுறுத்துவது இப்போதுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் மேல் பகையை வளர்த்து விடலாம் என்பது காரணமாக சொல்லப்படுகிறது. இது எப்போது உண்மையாகும்? இப்போதுள்ள முஸ்லீம் சமூகத்தினர் அனைவரும் ஔரங்கசீப்பின் அடிப்படைவாதத்தையே தமது ஆதர்சமாகக் கொண்டுள்ளார்கள் என்று ஒப்புக்கொண்டால்தான் இந்தக் கருத்து உண்மை என்று ஆகும். இது உண்மை அல்ல என்பது என் நம்பிக்கை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் பிரச்சனை ஏதும் இன்றி இந்த கண்காட்சி நடந்து முடிந்திருப்பதை இந்த நம்பிக்கைக்கு ஆதரவான ஒன்றாக நான் காண்கிறேன்.

மாறாக, தமுமுக, மநீபா போன்ற தமிழக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மிகத்தெளிவாக தங்களை ஔரங்கசீப்பின் ஆதர்சவாதிகளாகவே இன்னமும் காண்கின்றனர். இந்து வெறுப்பியல் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டில் அரசியல் செய்து வருவதால்தான் அவுரங்கசீப்பின் வரலாற்றுக்கொடுமைகளை வெளிச்சம் போட்டது அவர்களது கண்களைக் கூசச்செய்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால் மிகப்பெரும்பான்மையான முஸ்லீம்கள் மீதும் இந்த ஔரங்கசீப் ஆதர்சத்தைத் திணிக்க இவர்கள் முற்படுவதுதான். இது தமிழக முஸ்லீம்கள் அனைவருமே ஔரங்கசீப்பை முன்மாதிரியாக வரிக்கும் அடிப்படைவாதிகள் என்று காட்ட பிற்போக்கு மதவாத அமைப்புகள் செய்யும் முயற்சியே. இதனை முஸ்லீம்களில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் வெளிவந்து கண்டனம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அமைதி காப்பது தமிழக இஸ்லாமியர்கள் அவுரங்கசீப்பை விதந்தோதும் மத அடிப்படைவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் வலுப்படவே உதவும். இது பெரும்பான்மை மக்களிடமிருந்து இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்தும்.

இஸ்லாமிய ஏஜெண்டாவை மதப் பழைமைவாதிகள் கையிலும், பயங்கரவாதிகள் கையிலும் அடகு வைத்து விட்டு குண்டு வெடிப்புகளிலும் ரத்த சிதறல்களிலும் குடும்பங்களையும் குழந்தைகளையும் எதிர்காலத்தையும் பறிகொடுத்து கையைப்பிசைந்து கொண்டு நிற்கும் நாடுகள் பலவும் இன்றைய நிலையில் இஸ்லாமிய நாடுகளே. எதிர்க்க வேண்டிய நேரத்தில் மவுனம் சாதிக்கும் சமுதாயம், அந்த மவுனத்தின் எதிர்காலக் கதையை கண்ணீரிலும் , ரத்தத்திலும், அழிவிலும் எழுதவேண்டி வந்து விடும். அன்றைய மஹாபாரதம் முதல் இன்றைய அரசியல் வரை வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடம் இதுதான்.

FACT- Foundation Against Continuing Terrorism என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பின் வரலாற்றுக் கண்காட்சி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் சிலவற்றால் அதிகாரத்துணையுடன் அடாவடியாக நிறுத்தப்பட்டிருப்பது, எந்த அளவுக்கு இது போன்ற அமைப்புகளின் பணி இன்றும் அவசியமாக உள்ளது என்பதையே அடிக்கோடிடுகிறது.

தமக்குள் வளரும் பழைமைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஜனநாயக நாடுகளில் கூட வெளிப்படையாக எதிர்க்காத ஒரு சமுதாயம் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டும் வேலையைத்தான் செய்கிறது என்பதனை இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஔரங்கசீப் இறந்த காலத்தில் இருக்க வேண்டும் என்றால், இஸ்லாமியர்கள் நிகழ்காலத்தின் நவீன பிரதிநிதிகளாக இடைக்கால அரேபியாவின் இருட்டுக் காலத்திலிருந்து விடுபட்ட அடையாளத்துடன் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


* http://outlookindia.com/full.asp?fodname=20080309&fname=raman&sid=1&pn=1

சேதுபதி அருணாசலத்தின் திண்ணைக்கட்டுரை: “பழமைவாதமும் புதுமைவாதமும்: இரு கண்காட்சிகள்”: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20702153&format=html

FACT அமைப்பு குறித்த வலைத்தளங்கள்:

案外長い電話占いの歴史とメール鑑定占いについて


http://www.factusa.org/
http://factusa.blogspot.com/2008/03/press-coverage-and-controversy-around.html

Series Navigation

அருணகிரி

அருணகிரி