உயிரின் இசை

This entry is part 4 of 4 in the series 19991217_Issue

பாவண்ணன்திரிகூட மலையின்
திசையெங்கும் வழிகிறது உன் நாதம்.
குழைந்து வருடும் இசைவரியில்
மயங்கிய பாம்பாக நிற்கிறது என் மனம்

ஆனந்த வெறியேறி
அகண்ட விண்ணேறி
அலையும் முகில்தாண்டி
ஆகாயம் நோக்கிப் பாய்கிறது என் உடல்

நகர இரைச்சல் நிரம்பிய குடமாக
இதயத்தைச் சுமந்து அலுத்துக் களைத்தவன் நான்
என் நரம்புகளை நீ மீட்டி முறுக்கேற்ற
இதோ இதோ நெருங்கி வருகிறேன்
உயர்ந்தெழும் உன் வாமனக் கால் பதிய
சிரமென அமிழ்கிறது என் இதயம்
ஐயோ ஐயோ என
ஆனந்த வலியில் அரற்றுவது கேட்கிறதா ?

அதிர்ந்து பதறாதே-உன்
ஆட்டத்தை நிறுத்தாதே
ஆயிரம் கல்தாண்டி ஓடோடி வந்தவனை
புறக்கணித்துப் போகாதே

என் உடலில் ஒவ்வொரு கணு வழியாகவும்
உட்புகுந்து பரவட்டும் ஈரம்
என் எலும்பும் நரம்பும் கயிறாக
அசையட்டும் உனது ஊஞ்சல்

திறவாத கண்முன் விரியும் நீலத்தில்
கரைந்து போகிறது வானம்
அது என்ன கதிரா ?
இது என்ன நிலவா ?
கையருகே புரள்கின்றன பூவாக
இன்னும் மேல்நோக்கிய பயணத்தில்
மின்மினிப்பூச்சிகளாய்க் கண்சிமிட்டும் விண்மீன்கள்

நீ எனக்குள் ஏற்றிக் கொண்டிருக்கும் விசையில்
உடல் முழுக்க முளைத்து விட்டன இறகுகள்
நூறு சுற்றுக் கோட்டை
கொடிமரங்களில் தொங்கும் மேகங்கள்
அகழிகளில் வாய்பிளந்த முதலைகள

வெள்ளப் பெருக்காகப் பொங்கும் உன்இசை
அகழி முதலைகளை அழித்துப் போகிறது
மோதும் அலைகளின் வேகத்தால்
சுக்குநூறாக உடைபடுகிறது கோட்டை
விட்டு விடுதலையாகிக் கரைந்தன மேகங்கள்

ஏதோ ஒரு பருத்த கை குறுக்கிட்டு மறித்து
தள்ளிவிட்டுப் போகிறது
இன்னும் இன்னும் எனத் திளைத்த தருணத்தில்

ஒதுக்கப்பட்ட சிறகாக
ஓரமாக நகர்த்தப்பட்டுவிட்டேன் நான்
பெருத்த நிதி வேண்டாம்
பேர்வேண்டாம் ஊர்வேண்டாம்
நாள்கணக்கே மறந்தொழிய
நனையவிடு அதுபோதும்

கோரிக்கையை முன்வைக்கத் தெரியாத
என்குரல் கேட்கிறதா
ஆற்றாமையில் ஒதுங்கித் தவிதவிக்கும்
என் முகம் புரிகிறதா ?

நீவந்து மீட்டும் நாள்வரைக்கும்-என்
நின்ற கோலம் மாறாது தெரிந்துகொள்
***

மலைச்சரிவில் பெருகும் இசைகேட்டுத்
தலையசைக்கும் மரங்கள் நிறைந்த
காட்டு வழிநடுவே
காதல் வெறிதூண்ட
பெருகும் இசையின் ஊற்றுக்கண் தேடித்
தொட்டுச் சிலிர்க்கும் ஆசையில்
எங்கும் நிற்காமல் தொடர்கிறது
என் உன்மத்தப் பயணம்

கொடி நரம்பின் இசைக்கீற்று-நீ
தொட்டுச் சென்ற அடையாளம்
இலைசிதறும் பனிச்சாரல்-நீ
முத்துக் கொடுத்த அடையாளம்
என் மனத்தில் அரும்பிய மொக்கு உடைந்து
ரத்தத்தில் பரவுகிறது வேகம்
ஒவ்வொரு முலையிலிருந்தும்
வெளிப்படும் உன் இசைத்துணுக்குகள்
சருகில் அதிரும் ஓசையென்றெழ
மனவெளியில் புயல்அதிர
எங்கே நீ எங்கே நீ என்று
பெருமுச்சு வாங்க ஓடி வருகிறேன்

நெடிதுயர்ந்த பாறையின் இடுக்கில்
மதர்ப்புடன் திணறுகிறது ஒருமரம்
களைப்பில் தலைசாய்ந்து நிற்க
கண்ணெதிரில் கூசுகிறது வானம்
கைவிரித்து அலையுமொரு மேகம்
நானோ அது எனத்தோன்றும் பித்து
களைப்பில் கண்முடி
கவனம் சிதைந்த கணமொன்றில்
கள்ள நடைநடந்து
காதுமடல் தீண்டி
மின்சாரம் போல இசையைப் பாய்ச்சிவிட்டு
எங்கோ ஓடி ஒளிகிறாய்

உன் தீண்டலால் எழுந்த
ஆயிரமாயிரம் அதிர்வலைகள் நடுவே
தத்தளித்துத் திணறும் என் கண்முன்
துண்டுச் சித்திரங்களாய்
மோதிச் சிதறுகிறது உன்முகம்
அதுஎன்ன அதுஎன்ன
பார்க்க விரியும் கண்ணின் மடல்களை
பட்டென்று முடிப் பரவுகிறது
உன் இசை
***

இழுத்து இழுத்து வந்து உன்முன் நிறுத்துகிறது
இசைமீது ஏறிவட்ட வெறி
இரவுப் பேருந்தில் ஏறி
காலையில்தான் ஊர்போய்ச் சேர்ந்தேன்

இறங்கிக் கால்வைத்த கணமே
உன்னைக் காணாமல் உயிர்தரிக்காது
என்பதுபோல் ஒரு வேகம் ஆட்டிப் படைக்க
மறுவண்டி பிடித்து வந்துவிட்டேன்

இசையுடன் பெருகும் உனது தோற்றம்
நெஞ்சம் முழுக்கப் பரவி நிறைய
கனவில் திளைப்பது எளிதாகி விட்டது

முதல்கணம் உன்முகம் தெரியும்
மறுகணம் தழுவுவது போல் நீளும் உன் கைகள்
உன்விரல் அளைய இடம்தந்து
இழுக்கும் திசையெல்லாம் உடல்புரட்டி
தணியாத உன் ஆசைக்கு உடல்தந்து
தழுவலில் சுகித்திருப்பேன்

மெள்ள
காற்றில் கலந்து ஒளியில் கலந்து
ககனம் முழுக்கக் கலக்கும் உன் முச்சு
பரவசமாய்ப் படரும் உன் இசையை
பட்டாம் பூச்சிகள் பயிலத் தொடங்கும்
பட்டாம் பூச்சிகளிடமிருந்து பறவைகள் பயிலும்
பறவைகளிடமிருந்து மரங்கள் பயிலும்
எங்கும் பரவிய இசையின் வெள்ளம்
என் இதயத்தையும் நிரப்பிவிடும்
கனவுக்குப் பஞ்சமற்ற வாழ்வென்றாலும்
நனவில் இசைமழையில் நனைந்திருக்க
துயரங்கள் என்னும் கல்லெறிந்து கொல்லும்
துஷடர்கள் நிறைந்த ஊர்தாண்டி வருகிறேன்

அருவியின் நீர்ப்பரப்பில்
தாளமிட்டு நகரும் உன் சுவடு கண்டு
மெளனமுடன் கண்முட
ஒற்றை ஆளின் தவம்பலிக்க
ஓங்காரமாய் உருவெடுத்து
ஆயிரம் வீணைகளின் நரம்பதிர
அருவியின் இசை பொங்கத் தொடங்கியது
**

என் உடலைத் தொட்டுக் கிழித்து
ரத்தத்தில் கலக்கும் உன் இசை
இறகாக மாறி
இதயத்தை வருடுகிறது

தீண்டும் இன்பத்தில் திளைத்தபடி
சிலையாகப் பலகாலம் கிடந்து
ஆசைக் கண்திறந்து
ஆனந்தக் களிப்பில் படபடக்க
இறகுகள் உதிரும் உடல்சிலிர்த்து

இறகென உதிர்ந்த இதயம்
காற்றுவெளியில் கலந்து பறக்கும்

இதயத்திலிருந்து வழியும்
இசையின் அழைப்பில்
உறக்கம் கலைந்து உலகம் புரளும்

என் இசை உலகின் நாவில் படிய
அவர்கள் உதடுபிரித்து உதிரும்
ஒவ்வொரு சொல்லிலும் வழிகிறது உன் இசை

பகலை இருளாக்குகிறது அந்த இசை
இருளைப் பகலாக்குகிறது அந்த இசை
உலகம் அறிந்து வைத்திருக்கும்
ஞானத்தையெல்லாம் தலைகீழாக்குகிறது

அத்தனைச் சங்கிலிகளையும்
துண்டு துண்டாக உடைத்தெறிகிறது
உலகே ஒரு பெரிய இசைக் கூடமென
தேன் குழைத்த வண்டாக மயங்கிய மக்கள்
இசையைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிறார்கள்

மேட்டைக் கரைத்து ஆழத்தில் நிறைந்து
உலகின் ரகசிய பூட்டுகளையெல்லாம்
உடைத்துப் போடுகிறது இசை

காலமெல்லாம் வரைய முயன்று தோற்றபடி இருந்த
இன்பக் கோலங்கள் கூடிவருகின்றன
புத்தம் புதுவானில் வண்ணத்துப் பூச்சிகள்
புதிய கீதங்கள் பாடி வருகின்றன

ஒன்றோடொன்று கலந்து முயங்கி
உருமாறிக் கேட்கும் இசைநடுவே
தன் இசையைத் தவறவிட்டு
எங்கெங்கோ தேடி அலைகிறது இதயம்

எங்கே எங்கே என
எனது கால்கள் தேடித் தேடி ஓடின
காட்டித் தருகிறேன் வாவென்றழைத்த
பெயர்தெரியாத மிருகங்கள் பின்னால் அலைந்தன

எண்ணற்ற ஆண்டுகள் உருண்டோட
இளைத்துத் துரும்பாகி
தடுமாறி விழுந்த பள்ளங்களிலிருந்து மீண்டு
கண்டேன் என் காட்டருவியை
வணங்கிக் குனிகிறது என் சிரம்
இதோ என் மீது வந்துவிழும்
அருவியின் கைவிரல்களை ஆசையுடன் பற்றுகிறேன்
மாறிமாறி நீ தரும் முத்தங்கள்
மயக்கம் கொடுக்கிறது
இனிமையின் விரல்கள் தீண்டி
இதயத்தின் நரம்புகள் அதிர்கின்றன

ஆயிரம் ஆண்டுகளுக்கப்புறம்
அருவிக் கரையில்
மீண்டும் ஒலிக்கிறது உயிரின் இசை Thinnai 1999 December 17

திண்ணை

Series Navigation<< ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்

பாவண்ணன்

பாவண்ணன்