‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை

This entry is part [part not set] of 8 in the series 20001217_Issue

கோபால் ராஜாராம்


சியாமளனின் ‘Unbreakable ‘ படம் பார்த்தேன். இந்தப் படம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். டேவிட் டன் (நடிப்பவர் : ப்ரூஸ் வில்லிஸ்) என்ற ஒருவன் ரயில் பிரயானத்தின் போது, ரயில் ஒரு பெரும் விபத்துக்குள்ளாகிறது. அவனுடைய பெட்டியில் இருந்தவர்களில் ஒருவர் கூடத் தப்பிக்கவில்லை. இருந்தும் கூட டேவிட் டன் தப்பி விடுகிறான். ஒரு கீறல் கூட அவன் மீது விழவில்லை. இது அவனுக்குக் குற்ற உணர்ச்சியையும், ஒரு வித விசித்திரமான வித்தியாசமானவனாய் இருக்கிற உணர்வுகளையும் அளிக்கிறது. அவன் அந்த ரயில் பயணத்தில் இறந்தோருக்கான பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கு பெற்றுத் திரும்பும் போது அவன் காரில் ஒரு சீட்டு வைக்கப் பட்டுள்ளது : அந்தச் சீட்டில் ஒரு கேள்வி : ‘ நீ எப்போதாவது நோய்வாய்ப் பட்டிருக்கிறாயா ? ‘

அந்தச் சீட்டை அனுப்பியன் யார் என்று பின்னால் தெரிய வருகிறது. அவன் பெயர் எலைஜா ப்ரைஸ்( நடிப்பவர் : சாமுவேல் எல் ஜாக்ஸன் ) .அவன் ஒரு காமிக்ஸ் கடை ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான். காமிக்ஸ் என்ற சித்திரக் கதைகளில் வரும் சூப்பர் மேன் , ஸ்பைடர்மேன் போன்றவர்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல காமிக்ஸ் பின்னால் மனிதகுலத்திற்கு ஒரு மறைவான செய்தி உள்ளது என்றும் நம்புகிறான். அவன் பிறந்ததிலிருந்தே ஒரு விசித்திரமான வியாதியால் பாதிக்கப் பட்டவன். அவனுடைய எலும்புகள் வலுவற்றவை. சுலபமாக நொறுங்கக் கூடியவை. இதனால் அவன் எப்போதும் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவன். அவன் சிறு குழந்தையாய் இருந்த போது, தன் நோயினால் அச்சமுற்று வெளிப் பழக்கங்களை நிறுத்தி, வீட்டுக்குள் அடைந்து கிடக்க நேர்கிறது. இது அவன் அம்மாவிற்குப் பிடிக்க வில்லை. அவன் முடிந்த அளவு மற்ற குழந்தைகளைப் போல விளையாடி வெளியே செல்ல வேண்டும் என்று முயல்கிறாள். அதனால் அவன் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் ஒரு காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் என்று சொல்லி, அவனை ஊக்குவிக்கிறாள். காமிக்ஸ் படிப்பதில் அப்படி ஏற்பட்ட பழக்கம் அவனை காமிக்ஸ் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவனாய் மாற்றி விடுகிறது.

அவன் டேவிட் டன்னுக்கு அனுப்பிய சீட்டுடன் ஒரு விசித்திரமான சொல்லாடலில் திரைப்படம் திரும்புகிறது. எலைஜா ப்ரைஸ், டேவிட் டன்னுடன் பேசி அவன் கிட்டத் தட்ட ஒரு சூப்பர் மேன் என்று நம்ப வைக்க முயல்கிறான். அதை டேவிட் டன் நம்புவதில்லை. ஆனால், மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து , ஒவ்வொரு வாதமாய் டேவிட் முன்பு வைத்து, எலைஜா ப்ரைஸ் அவனைத் தன் கருத்தின் பக்கம் திரும்புகிறான்.

டேவிட் டன் ஒரு முக்கியமான ஃபுட்பால் (இது உதைபந்து அல்ல – அமெரிக்க ஃபுட்பால் – ரக்பி போன்றது) ஆட்டக் காரனாய் ஆகியிருக்க வேண்டியவன். ஆனால் ஒரு கார் விபத்து காரணமாய் ஃபுட்பால் விளையாடும் வாய்ப்பை இழக்கிறான். இந்தச் சம்பவத்தையும் எலைஜா ப்ரைஸிடம் சொல்லுகிறான் டேவிட் டன்.இந்தச் சம்பவமே கூட எலைஜா ப்ரைஸின் கோட்பாடிற்கு எதிரானது என்கிறான். தான் சூப்பர் மேனாய் இருந்தால் எப்படி விபத்தின் காரணமாக ஃபுட் பால் விளையாடும் வாய்ப்பை இழந்திருக்க முடியும் ? இதற்கும் ஒரு காரணம் கண்டு பிடிக்கிறான் எலைஜா ப்ரைஸ். டேவிட் டன் திருமண வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து விட்டு, ஃபுட்பால் விளையாட்டை ஒதுக்கியதற்கு விபத்து ஒரு சாக்குத் தானே தவிர உண்மையில் விபத்தினால் டேவிட்டிற்கு ஒரு ஆபத்தும் விளையவில்லை என்கிறான்.

அதில்லாமல் ஒரு ஃபுட் பால் ஸ்டேடியத்தில் காவல் துறைப் பணி (Security Guard) யில் டேவிட் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறான். மற்றவர்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு வேலைஅயை ஏன் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் ? உலகில் ஆயிரம் வேலைகள் இருக்கின்றனவே. இது தற்செயலானதல்ல. உலகத்தைக் காப்பாற்றவே அவன் அவதாரம் எடுத்திருக்கிறான் என்பதாய் அவனை எலைஜா ப்ரைஸ் நம்ப வைக்க முயல்கிறான்.

இந்த நம்பிக்கை முதலில் வேரூன்றுவது டேவிட் டன்னின் மகனிடம் தான். பொதுவாகவே குழந்தைகளுக்குத் தன் அப்பா ஹீரோ தான். அதில்லாமல் ஒரு மூன்றாம் மனிதனால் இந்தக் கருத்து உறுதிப் பட்டவுடன் அந்தச் சிறுவன் முழுதுமே இதனை நம்பி விடுகிறான். இந்தப் படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று இந்தச் சிறுவன் தன் நம்பிக்கையை நிரூபிக்கத் துப்பாக்கி ஏந்தித் தன் அப்பாவைச் சுடமுயல்கிற காட்சி. துப்பாக்கித் தோட்டா தன் அப்பாவை ஒன்றும் செய்யாது என்பது அவன் திடமான நம்பிக்கை.

இந்த நம்பிக்கை எப்படி டேவிட்டையும் பற்றுகிறது என்பதும் அதன் பின் விளைவுகளும் தான் மிச்சக் கதை . ஆனால் இதன் சஸ்பென்ஸைச் சொல்வது என் நோக்கம் அல்ல. நல்லதொரு உச்சகட்டம் இந்தப் படத்தில் உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்த சஸ்பென்ஸைக் காட்டிலும் எனக்கு மிகச் சிந்தனையைத் தூண்டிய விஷயம் , எப்படி நம்பிக்கைகள் தனிமனிதர்களிடம் வேரூன்றுகின்றன என்பது பற்றியது.

நம்பிக்கை என்பது நம் பழக்க வழக்கங்களினால், நம் சிந்தனையினால் , நம் சுய அலசல்களினால், பலதரப் பட்ட அக புறக் காரணிகளால் உருவாக்கப் படுகிறது. ஸ்திரப் படுகிறது. கண்ணதாசன் ஒரு முறை கூறினார். ‘எல்லா நம்பிக்கைகளுமே மூட நம்பிக்கைகள் தாம் ‘ ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கருத்து தடாலடியான ஒரு கருத்தாகத் தெரியும். என் நம்பிக்கைகள் ‘விஞ்ஞான பூர்வமானவையாக்கும் ‘ என்று சிலர் கோபித்துக் கொள்ளவும் கூடும். நம் நம்பிக்கைகள் பலதரப் பட்டவை. சோதிடம், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு, வாஸ்து சாஸ்திரம்,சாய் பாபா, ஏசு மீண்டும் வருவார், நாம் செத்த பின்பு நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குப் போகிறோம் – என்று பலதரப் பட்ட நம்பிக்கைகள் பரவலாய்க் கிடக்கின்றன. சாய் பாபா நம்பிக்கை உள்ளவர்களோ , ஏசுவின் மீது நம்பிக்கை உள்ளவர்களோ, பங்காரு அடிகளை நம்புபவர்களோ, இந்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப் படாத தருணங்களிலும், இடங்களிலும் சாதாரண மனிதர்களே. அறிவு பூர்வமாகவும், சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் தம் கடமையைச் செய்யக் கூடிய பொறுப்புள்ள குடிமகன்களே. இந்த நம்பிக்கைகளுக்காக உயிரை விடவும், உயிர்க் கொலை செய்யவும் பலர் தயாராய் இருக்கிறார்கள். எப்படி இந்த நம்பிக்கை ஏற்படுகிறது ? இந்த நம்பிக்கையை ஏற்படுத்துபவர்கள் எப்படிச் செயல் படுகிறார்கள் ?

இந்த நம்பிக்கையைப் பரப்புபவர்கள் அந்த நம்பிக்கையை முழுமையாய் ஏற்றுக் கொண்டவர்கள். அதன் தர்க்கத்தை நம்புபவர்கள். அதன் உண்மையை முழுக்க வாதிட்டு ஸ்தாபிக்க முற்படுபவர்கள். அதன் தர்க்கம் உடைபடும்போது அதற்கு உள்ள விதி விலக்குகளையும் தர்க்கத்திற்குள் கொண்டு வர முடிகிற அளவிற்கு அதை வளர்த்தெடுப்பவர்கள். தான் ஒரு முறை நீச்சல் குளத்தில் மூழ்கி மரணத் தறுவாயில் இருந்ததை, நர்ஸ் ஒருத்தி மூலமாய் அறிந்த டேவிட் டன் உடனே எலைஜா ப்ரைஸைக் கூப்பிடுகிறான். ‘பார்த்தாயா, நான் ஒன்றும் சூப்பர் மேன் அல்ல. கிட்டத்தட்ட சாவின் வாயில் இருந்து தப்பித்தவன். எனவே உன் கோட்பாடு தவறு ‘ என்கிறான். இந்த விஷயம் எலைஜா ப்ரைஸை உலுக்கி விடுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்கும் வரையில் அவனுக்குத் தூக்கம் வருவதில்லை. நிரம்ப யோசித்து, படித்தபின்பு சொல்கிறான் : ‘அது ஒரு பலவீனம். எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு பலவீனம் உண்டு. தண்ணீரில் உனக்குக் கண்டம் ‘ உடனே எனக்கு ஞாபகம் வந்தது கிருஷ்ணன் பற்றி சொல்லப் படும் கதை. கிருஷ்ணன் தான் கடவுள் ஆயிற்றே. அவர் எப்படிச் சாக முடியும் ? ஆனாலும் அவருக்கும் ஒரு பலவீனம் பாதத்தில் இருக்கிறது. சூப்பர் மேன் காமிக்ஸ் கதையில் கிரிப்டனைட் என்ற கல் அவனை மிகவும் பலவீனப் படுத்த வல்லது. அது போன்றது தான் தண்ணீர் உனக்கு என்கிறான்.

தன் கோட்பாட்டை நிரூபிக்க டேவிட் டன்னைச் சந்திக்கிற எலைஜா ப்ரைஸிடம் டேவிட் டன் சொல்கிறான் : ‘ சிலரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புலப்படும் ‘ உடனே எலைஜா ப்ரைஸ் ‘ பார்த்தாயா ? சொன்னேனே ‘ என்று கூறுகிறான். டேவிட் ஃபுட் பால் ஸ்டேடியத்தில் நின்றிருந்த ஒருவனைச் சுட்டிக் காட்டி அவனிடம் ஆயுதம் இருக்கக் கூடும் என்கிறான். ஆனால் எலைஜா ப்ரைஸ் தன் கோட்பாடை உறுதி செய்து கொள்ள வேண்டுமே. அவனைத் துரத்திப் பிடிக்க ஓடுகிறான். அவனிடம் ஆயுதம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என்றால் அவன் மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறது. எலைஜா ப்ரைஸ் அந்த ஆளைத் துரத்திச் செல்லும் காட்சி இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய காட்சி. ஹிட்ச்காக்கை நினைவுபடுத்தும் அளவு மிகத் திறமையாய்ப் படமாக்கப் பட்ட காட்சி இது.

டேவிட் டன்னை மட்டுமல்ல, படம் பார்க்கும் பார்வையாளர்களையும் தம் நம்பிக்கயின் பக்கம் திருப்புவதாய் எலைஜா ப்ரைஸின் வாதங்கள் செல்கின்றன. பார்வையாளர்கள் டேவிட் டன்னுடன் தம்மை முழுமையாய் இனங்கண்டு கொண்டு அவனுடைய சந்தேகங்களையும், வாதங்களையும் தம்முடைய வாதங்களாக உணரும் அளவு திறமையாய்ப் படம் இயக்கப் பட்டிருக்கிறது.

எப்படி இவர்கள் இதையெல்லாம் நம்புகிறார்கள் ? எப்படி இவர்கள் சோதிடத்தை,கடவுளை, வாஸ்து சாஸ்திரத்தை, நம்புகிறார்கள் என்று பலரைக் கண்டு வியந்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கையை எப்படி நியாயப் படுத்த முடியும் என்று வியந்திருக்கிறேன். ஆனால் அப்படிப் பட்ட நம்பிக்கை உள்ளவர்களும் நான் எப்படி இதனை நம்பாமல் இருக்க முடியும் என்று ஆதாரத்தை என்னிடம் விவரித்தவர்கள் தாம். நம்பிக்கை ஏற்படுவது என்பது நம்பிக்கையின் மீது இருக்கிற ஈடுபாட்டைத் தாண்டி , நம்பிக்கையை விதைத்து வளர்க்கிறவர்கள் மேல் உள்ள நம்பிக்கையின் நீட்சி என்று சொல்ல வேண்டும். போப் என்கிற மனிதரை மாமனிதராய், உலகத்தின் காவலராய் ஒரு உள்ளார்ந்த நம்பிக்கை உருவாகி விட்டால் அவருடைய மற்ற விஷயங்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி விடுகின்றன. டேவிட் டன், எலைஜா ப்ரைஸ் கூறும் கோட்பாட்டை ஒப்புக் கொள்வதன் முன்பு, எலைஜா ப்ரைஸை நம்ப வேண்டும். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எலைஜா ப்ரைஸ் தன்னை ஏதோ மோசடி செய்து பணம் பறிக்கப் பார்க்கிறான் என்று சந்தேகப் படுகிறான் டேவிட் டன்.

டேவிட் டன் , எலைஜா ப்ரைஸை நம்பிவிடுவதும், நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு செயல் படுவதும் பின்விளைவுகளும் படத்தின் மிக முக்கிய முடிச்சு என்பதால் அதை நான் இங்கே விஅவரிக்க வில்லை.

இந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றாலும் , நம்பிக்கைகள் உருவாக்கம் பற்றியும், அவற்றின் பேணுதல் பற்றியும் பல முக்கியமான உளவியல் பார்வைகளை முன் வைக்கிறது. ஆனால் இது எந்த விமர்சகர் கண்ணிலும் படாதது மிக ஆச்சரியம்.

படத்தின் விமர்சனம் என்று நான் அதிகம் ஏதும் சொல்ல வில்லை. படம் சற்று நீளத்தில் குறைந்திருந்தால் இன்னும் நன்றாக உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. டேவிட் டன்-னிற்கும், அவன் மனைவிக்கும் உள்ள முரண்பாடு சரியாகக் கையாளப் படவில்லை.

*******

கீழே உள்ள கருத்துகள் படத்தில் இல்லை. நம்பிக்கைகளின் உருவாக்கம் பற்றி படத்தில் உள்ள செய்திகளைப் பின் தொடர்ந்து சிந்தித்த போது எனக்குத் தோன்றிய கருத்துகள் இவை.

சமூகத்திற்கும், தனிமனிதனுக்கும் நம்பிக்கை ஒரு ஆதார உணர்ச்சி. எது பற்றிய நம்பிக்கை என்பதில் தான் மாறுபாடு. என் நம்பிக்கை தான் உயர்ந்தது என்று நினைக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் என் நம்பிக்கையைத் தவிர வேறு நம்பிக்கைகளுக்கு இடமில்லை என்பது மிக மிக ஆபத்தான விஷயம்.

நம்பிக்கைகள் அவற்றின் எல்லை மீறிப் போகும் போது அது சமூகத்தையும், தனி மனிதனையும் பாதிக்கிறது. தான் ‘ஆரிய தேசம் ‘ என்று நம்பிய ஒரு கூட்டம் யூதர்களையும் , யெஹோவாவின் சாட்சிகளயும், அழித்து ஒழிக்க முயன்றது. அமைதியாய்த் தன் நம்பிக்கைகளைப் பரப்பும் உரிமை , நம்பிக்கைகளை மறுக்கும் உரிமையையும் உள்ளடக்கியது. மனம் புண்படுகிறது, இழிவு படுத்தி விட்டாய் என்று நம்பிக்கைகள், நம்பிக்கை மறுப்பைச் சாட ஆரம்பிக்கும் போது தான் பிரசினை விஸ்வ ரூபம் கொள்கிறது. சீனா ஃபாலுன் காங் என்ற அமைப்பைத் தடை செய்ய முயல்வதும், நேபாளத்தில் இந்து மதம் தவிர மற்ற மதங்களுக்குப் பிரசார உரிமை தடை செய்யப் படுவதும், சில முஸ்லிம் நாடுகளில் மற்ற மதங்கள் பிரசார உரிமைகள் இல்லாமலிருப்பதும் கூட ஒரு சுய நம்பிக்கையற்ற சமூகத்தின் அடையாளங்களே. ஒரு நம்பிக்கை இன்னொரு நம்பிக்கையைக் கொல்ல முயலும் போது அல்லது அந்த நம்பிக்கைக்கான சமூக இடத்தைத் தர மறுக்கும் போது அந்தச் சமூகம் ஒரு நோய்வாய்ப் பட்ட சமூகமாய் மாறுகிறது.

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்