உடல் தீர்ந்து போன உலகு

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

திலகபாமா


சுழலும் வாழ்க்கையை

சூட்சுமமாய் உணர்த்திடும்

சந்திப்புகள்

ஈரத் தலை உணர

விரிசடையோடு குஞ்சலம் ஆட

இழுத்துச் செருகிய தாவணியோடு

நீ தவமிருந்த தெருமுக்குகள்

ஆடிப் போகின்றன

நீயும் நானும்

பேசாமல் தொலைத்த மனப் பூட்டு சாவிகள்

திறக்க முடியாது இருந்தும்

துளைக்கும் வாசங்கள்

உன்னை நானும்

என்னை நீயும்

அடையாளம் கண்டு விட முடியாமல்

மாறியிருந்த போதும்

எதேதோ நிலவரங்கள்

பேசிப் பொழுது போன பின்பும்

பேசாத உண்மைக்கள்

கூட்டை தகர்த்தபடி

சிறகு விரிக்கும் வண்ணத்துப் பூச்சியாய்

சொல்லாமல் போன வார்த்தைகள்

ஊர் சுற்றி உலகு சுற்றி

எனை உற்று நோக்கியபடியிருக்க

பூக்கள் மாறி

நிறம் உதறி

ஓட்டுக்குள் விதையாய்

ஒடுங்கியிருந்த போதும்

இந்த விதை

இந்த பூவினது

அடையாளம் காட்டத் தேவையில்லாது

உணர முடிந்த அந்த தருணங்கள்

உணர்த்தியது காதலா நேசமா

மொத்தத்தில் “சந்தோசம்” எனும்

ஒற்ரை வார்த்தை

நிச்சலன உறக்கத்தில்

கனவாய் வரும் உணர்வு நிஜங்கள்

உடல்கள் தீர்ந்து போன

உலகமொன்றில்

பயணப்படத் துவங்கியிருக்கிறது

—-
mathibama@yahoo.com

Series Navigation