ஈரோட்டுப் பாதை சரியா ? – 3

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ப.ஜீவானந்தம்


பகுத்தறிவு இயக்கம்:

சுயமரியாதை இயக்கத்தில் ‘பகுத்தறிவு ‘ முதலிடம் பெற்று கிளர்ச்சி நடைபெற்றது. இந்து மதத்தோடு நிற்காமல் கிறிஸ்துவ, மகம்மதிய மதங்களிலும் பகுத்தறிவு ஆராய்ச்சி நுழைந்தது. இந்தக் காலத்தில் முனுசாமி நாயுடு ஜஸ்டிஸ் கட்சித் தலைவராகவும், முதன் மந்திரியாகவும் இருந்தார். ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதை கட்சிக்கும் அதிகம் தொடர்பில்லை. ஏற உதவிய ஏணியை எட்டி மிதித்துவிட்டதாக ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைப் பற்றி சுயமரியாதைக்காரர்கள் நொந்து கூறி மூக்கால் அழுத காலம் இது. சுயமரியாதை இயக்கத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு போதை ஊட்டுவதுபோல், உணர்ச்சி வேகம் ஊட்டவும், புதிய மக்கள் பகுதியை இழுக்கவும், பகுத்தறிவு கண்ணோட்டத்தை பல துறைகளிலும், ஈ.வெ.ரா.வும், சுயமரியாதைக்காரர்களும் செலுத்தினார்கள்.

பகத்சிங்கின் தூக்கைப் பற்றி பயங்கரமான தலையங்கம் எழுதிற்று ‘குடியரசு ‘. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் பகத்சிங்கைப் பின்பற்ற வேண்டும் என்று சண்டப்பிரசண்டம் அடித்தார் ஈ.வெ.ரா. அதேபொழுது பகத்சிங்கின் தியாகத்தை ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பேசி தனது ரத்தத்தில் ஊறிய காந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கைக்கு புரட்சி உணர்ச்சி கொண்ட வாலிப உள்ளங்களின் ஆதரவைத் தேடினார். இந்தக் காலத்தில்தான் கதர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பில் சுயமரியாதை இயக்கம் முனைந்தது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள புரட்சிக்காரர்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தீவிர வாலிபர்களுக்கும், தொழிற்சங்க இயக்கத்தார்களுக்கும் காந்தீயத்தையும், காங்கிரஸையும் பிரித்து வெவ்வேறாகக் காண முடிந்தது. ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கண்ணில் காந்தியும், காங்கிரஸீம் ஒன்றாகவே தென்பட்டனர்.

விருதுநகர் மகாநாடு:

மகாநாடு ஆரம்பிக்க மூன்றிரண்டு நாட்களிருக்கும்பொழுது உள்ளூர் காங்கிரஸ் வாலிபர்களுக்கும், சுயமரியாதை வாலிபர்களுக்கும் தகராறு, கைகலப்பு. அரசியலில் கலப்பதில்லை என்றும், அரசியல் அயோக்கியரகளின் புகலிடமென்றும் உதட்டளவில் சொல்லி வந்த சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் எதிர்ப்பை பாலூட்டி வளர்க்காமல் ஒரு நிமிஷம்கூடக் கழித்ததில்லை. தகராறு வைதீகர்களோடல்ல; காங்கிரஸ் வாலிபர்களோடு.

இந்த மகாநாட்டின் முக்கிய அம்சம், எல்லா மதங்களும் ஒழிய வேண்டுமென்ற தீர்மானம். இங்கும் கண்டனக் கோடாலி காந்திஜியின் மீதும், கராச்சித் திட்டத்தில் மத நடுநிலைமை தீர்மானம் கண்ட காங்கிரஸ் மீதுமே வீசப்பட்டது. மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு, கதர் எதிர்ப்புத் தீர்மானங்கள், பகுத்தறிவு இயக்கத்தின் பலன்கள் என்று கூறப்பட்டபோதிலும், காங்கிரஸ் எதிர்ப்பு நோக்கம் கொண்ட அரசியல் தீர்மானங்களே.

சமதர்ம நாஸ்திக இயக்கம்:

சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் நாளடைவில் சமதர்ம நாஸ்திக பிரசாரத்திலும் இறங்கியது.

சமதர்ம நாஸ்திகப் பிரசாரம் செய்ய சோவியத் யூனியனின் சமூகவாழ்வு எடுத்துக்காட்டாக இருந்தது சுயமரியாதைக்காரர்களுக்கு. அங்கு மதமற்ற சமூக வாழ்வைக் கண்டனர். எனவே, ரஷ்யக்காதல் பிறந்தது. ஈ.வெ.ரா. ரஷ்யாவுக்குப் போக விரும்பினார். சோவியத் இலக்கியங்களையும் கம்யூனிஸ்ட் நூற்களையும் படித்துக் கொண்டிருந்த எஸ்.ராமநாதனின் கூட்டுறவும் யோசனையும் ஐரோப்பியப் பிரயாணமாக மலர்ந்தது.

இந்தக் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுகளை சம்பந்தப்படுத்திய மீரத் சதிவழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு பட்டாளத்தின் சரித்திரமும், டில்லி வெடிகுண்டு வழக்கு, லாகூர் சதிவழக்கு விவரங்களும் வாலிப உலகத்தின் உள்ளத்தில் புயல் வீசிக் கொண்டிருந்தன. உப்புச் சத்தியாக்கிரகத்தில் சிறைசென்ற ராஜாஜிகூட, பக்லாரி சிறையில் சோஷலிஸத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். இந்தச் சூழ்நிலை சுயமரியாதை இயக்கத்திலும் எதிரொலிக்காதா ?

ஈ.வெ.ரா. ஐரோப்பா சென்றிருந்த காலத்தில் தோழர் சிங்காரவேலுவின் தொடர்பு சமதர்ம இயக்கத்திற்குக் கிடைத்தது. சிங்காரவேலு குடியரசுப் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் சமதர்மம், நாஸ்திகம் ஆகியவைகளைப் பற்றிய புத்தொளியையும், புதிய பார்வையையும் சுயமரியாதை இயக்கத்தாருக்கு அளித்தன. பலப்பல மகாநாடுகளில் சிங்காரவேலு முக்கிய பங்கெடுத்து, சுயமரியாதை இயக்கத்தை சமதர்மத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

ஈ.வெ.ரா. இந்தியாவுக்கு திரும்பினார். ஈ.வெ.ரா.வின் இலங்கைப் பிரசங்கம் சோவியத் யூனியனைப் பார்த்ததின் பலனையும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களோடு பழகியதன் காரணமாகவும் சமதர்மப் பாதையில் செல்வதாக இருந்தது.

ஈ.வெ.ரா. சோவியத் யூனியனிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றபோது பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். காலஞ்சென்ற தோழர் சக்லத்வாலாவைக் கண்டு அவரோடு உரையாடி பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார். இங்கிலாந்தில் மேம்ஸ்பரோலேக் பார்க்கில் ஒரு தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஒரு சொற்பொழிவாற்றினார். லாண்ட்ஸ்பரிக்கு விடைகூறும் முறையில் ஈ.வெ.ரா.வுக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈ.வெ.ரா. படித்தார். அதில் இரண்டொரு கருத்தைக் கீழே தருகிறோம்.

‘இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க சமூகமாகக் காண்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய சுரங்கங்களில் 10 மணிநேர வேலை கொடுக்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் 15 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது ?

அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியா தனது – இந்திய அரசர்களூம், ஜமீந்தார்களும், முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும் தொழிலாளிகளுக்கும், பணக்காரர்களுக்குமே பாத்யமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் நிர்வாகம் கிடைக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள்.

ஆதலால் யார்க்ஷயர் தொழிலாளர்களே! நீங்கள் இந்தப் போலி கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள் ‘

கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவோடு சேர்ந்தபோது ஈ.வெ.ரா. பார்ப்பன ஆதிக்கத்தையும், பனியா சுரண்டலையும் மறந்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் 1932 அக்டோபரில் தஞ்சையில் தங்கள் கட்சி மகாநாடு நடைபெற்றது. கண்டோர், கேட்டோர் எள்ளி நகையாடும்படி மகாநாடு குழப்பத்தில் முடிந்தது. முனுசாமி நாயுடு மந்திரி பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார். அவருக்குப் பின் பொப்பிலி அரசர் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகி முதன்மந்திரியானார். இந்த முயற்சியில் சுயமரியாதைக்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு. தஞ்சையில் நடந்த மகாநாட்டில் சுயமரியாதைக்காரர்கள் அத்தனை பேரும் பொப்பிலி அரசரையே ஆதரித்தார்கள். காரணம் முனுசாமி நாயுடு காங்கிரஸில் அனுதாபமுடையவர் என்பதைப் பல வழிகளில் காட்டிக் கொண்டதேயாகும்.

ஈரோட்டு வேலைத்திட்டம்:

இதுவரை சுயமரியாதை இயக்கம் வெறும் சமுதாயச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்தது. மாஸ்கோ வழியை நேரில் கண்டறிந்து வந்த ஈ.வெ.ரா., அதை மாற்றி அரசியல் கொள்கையுடைய இயக்கமாக்க எண்ணினார். தோழர் சிங்காரவேலுவோடு கலந்து ஒரு திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதில் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும், சட்டசபை, சமதர்ம வேலைத் திட்டமும் இடம் பெற்றிருந்தன.

சவுந்திரப் பாண்டியன், வி.வி.ராமசாமி போன்ற சுயமரியாதைப் பணக்காரர்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை. சுயமரியாதைச் சங்கத்தின் தலைவராயிருந்த ஆர்.கே.ஷண்முகம், ஈ.வெ.ரா.வின் போக்கை எதிர்த்துக் கடிதம் எழுதினார். சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலவாத வெறும் சமூகச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக்கொண்டே ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் தேடிவந்த சுயமரியாதை பிரமுகர்கள் பலர், முகத்தைச் சுழித்தார்கள். ஆனால் சமதர்ம பிரசாரமும், கிளர்ச்சியும் இவற்றைச் சட்டை செய்யாமல் முன்னேறிக் கொண்டிருந்தன.

ஈரோட்டு வேலைத்திட்டக் கூட்டம் 1932 டிசம்பர் 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று, சுயமரியாதைத் தொண்டர்களில் தலைசிறந்தவராயிருந்த தோழர் பொன்னம்பலனார் மூலம் ஈ.வெ.ரா. எனக்கு செய்தி தெரிவித்தார்.

1926வது வருஷத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்தின் சமுதாயச் சீர்திருத்த கொள்கைகளைப் பரிபூரணமாக ஆதரித்து வந்தேன். அதேபொழுதில் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியலை விடாமல் எதிர்த்து வந்தேன். அரசியலில் காங்கிரஸ்காரன் நான். ஆனால் தீவிரவாதி. செங்கற்பட்டு, ஈரோடு, விருதுநகர் மாகாண சுயமரியாதை மகாநாடுகளில் பங்கெடுத்துக் கொண்டேன். அதேபோல், சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்கும், பின்னர் 1931ல் ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு நவ ஜவான் மகாநாட்டுக்கும் பிரதிநிதியாகச் சென்றேன். சுயமரியாதை இயக்கம், அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அதன் அரசியல் ஜஸ்டிஸ் கட்சி அரசியலாக இருக்கக்கூடாது என்றும், ஈரோடு, விருதுநகர் மகாநாடுகளில் போராடினேன். நான் சுயமரியாதைக்காரர்களிடையேயும் சரி, காங்கிரஸ்காரர்களிடையேயும் சரி, தீவிரவாதியாகவே விளங்கினேன். 1932ம் போராட்டத்தில் ஜனவரி ஆரம்பத்தில் சிறை சென்று நவம்பர் இறுதியில் வெளிவந்தேன். பகத்சிங்கின் தோழர்களோடும், வங்கப் புரட்சி தலைவர்களோடும், சிறைச்சாலைகளில் விவாதித்தும், மார்க்ஸிய நூற்களைக் கற்றும் உறுதியான கம்யூனிஸ்ட் அபிப்பிராயத்தோடு சிறையிலிருந்து வெளிவந்தேன். இப்படி வெளிவந்த சந்தர்ப்பத்தில்தான் ஈரோட்டு வேலைத்திட்ட கூட்டத்தின் அழைப்பு, ஈ.வெ.ரா.விடமிருந்து கிடைத்தது.

ஈரோட்டு வேலைத்திட்டக் கூட்டத்துக்கு சுயமரியாதைத் தொண்டர்கள் அனைவரும் வந்திருந்தனர். திட்டத்தின் கருத்தைப் பற்றித் தோழர் சிங்காரவேலு விளக்கிக் கூறினார். ஈ.வெ.ரா.வும், நானும் ஆதரித்தோம். சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கைகள் வேண்டாம் என்கின்ற பழைய பல்லவியைப் பாடி சிலர் திட்டத்தை எதிர்த்தனர். எந்தச் சீர்திருத்தத்தையும் நிறைவேற்ற அரசியல் அதிகாரம் வேண்டுமென்றும், அரசியலில் நுழைய விரும்புவோருக்கு நமது இயக்கத்தில் இடமிருக்க வேண்டுமென்றும், சுயமரியாதை இயக்கம் எப்பொழுதும்போல் சமூக இயக்கமாக இருக்கலாமென்றும், அரசியலுக்காக அதற்குள் சமதர்மக் கட்சி என்ற ஒரு தனிப்பிரிவை அமைத்துக் கொள்ளலா மென்றும் விளக்கி எதிர்த்தவர்களுக்கு விடையளிக்கப்பட்டது. எதிர்த்தவர்களும் புதிய திட்டத்தை ஒப்புக் கொண்டனர்.

இதுவரை அரசியல் கூடாது என்று ஜஸ்டிஸ் கட்சி அரசியலை ஆதரித்து வந்த சுயமரியாதை இயக்கம் இப்பொழுது அரசியல் வேண்டுமென்றும், அந்த அரசியலைத் தாங்கி நிற்கும் கட்சி ஜஸ்டிஸ் கட்சி அல்லவென்றும், சுயமரியதை இயக்கத்திற்கேற்ற சமதர்மக் கட்சிதான் என்றும் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கது. இது காலவேகத்தின் அறிகுறி.

1933, 34-வது வருஷங்களில் சமதர்மப் பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவிற்று. அதேகாலத்தில், காங்கிரஸ் வாலிபர்களிடையிலும் சோஷலிஸ்டுக் கொள்கை தலைதூக்க ஆரம்பித்தது. 1930, 32 தேசீயப் போராட்டங்களின் தோல்வியைக் கண்டு காந்தீயத் தலைமையில் நம்பிக்கை இழந்தனர் தேசீய வாலிபர்கள். தகுந்த புதிய தலைமையைத் தேடினர். மார்க்ஸீயத் தலைமைதான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு ஏற்ற தலைமை எனக் கண்டனர். 1932ல் சிறைசென்ற வாலிபர்களில் தீவிர நோக்கமுடையவர்கள் இந்தியாவில் எந்தெந்த சிறைச்சாலைகளில் இருந்தார்களோ, அங்கெல்லாம் போராட்டமும், தலைமையும் என்ற பிரச்சனையைக் கிளப்பி விவாதித்து இதே முடிவுக்கு வந்தனர். சிறைச்சாலைகளிலேயே பல வாலிபர்கள் மார்க்ஸியவாதிகள் ஆயினர். மீரத் சதிவழக்கும், அதன் முடிவும் இந்த முடிவுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தன. நாஸிக் ஜெயிலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி பிறந்தது. திருச்சி, சென்னை, பெல்லாரி, அலிப்புரம், வேலூர், கண்ணனூர், கோவை முதலிய ஜெயில்களிலிருந்து பல காங்கிரஸ் வாலிபர்கள் சோஷலிஸ்டுகளாக வெளிவந்தனர். சமதர்மக் கருத்துக்களுக்கு, மக்களிடையில் பேராதரவு ஏற்பட்டது. இந்த கற்றுணர்ச்சியில் சுயமரியாதைக்காரர்களின் சமதர்மப் பிரசாரத்தைக் கேட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

பிற்போக்கு அரசியல்வாதிகள் ஈரோட்டுத் திட்டத்தைக் கண்டு நடுங்கினர். சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாக மாறிவிட்டதென்று கூச்சலிட்டனர். பழைய சுயமரியாதைக்காரர்களில் பலர் கட்சியின் போக்கு பிடிக்கவில்லையென்று ஒதுங்கினர். சிலர் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாவோம் என்று, அஞ்சி மறைந்தனர். ஆனால் புதியவர்கள் பலர் இயக்கத்தில் சேர்ந்து கொண்டே இருந்தனர். அந்த நாளில் காங்கிரஸைவிட சமதர்ம இயக்கத்திற்கு, தமிழ் மக்களிடம் அமோகமான ஆதரவு இருந்தது. அந்தக் காலத்திலும்கூட ஈ.வெ.ரா தனது காங்கிரஸ் எதிர்ப்புத் திருப்பணியை சமதர்ம பிரசார போர்வைக்குள் நின்றும் நடத்தி வந்தார். ஒரு உதாரணம்:

‘பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும் ? ஒரு சமூகத்துக்குப் பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா ? அல்லவா ? நீங்கள் இரண்டையும் விட்டுவிட்டுச் செய்யும் முற்போக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக – வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசிக்காலம் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்துபோவதே மேலான காரியம் என்று சொல்வேன்.

‘வருணாச்சிரமம் இருக்க வேண்டும். ஜாதி இருக்க வேண்டும். ராஜாக்கள் இருக்க வேண்டும். முதலாளிகள் இருக்க வேண்டும். மதம் இருக்க வேண்டும். வேதம், புராணம், இதிகாசம் இருக்க வேண்டும். இன்றைக்கு இருக்கிறவைகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, இவைகளை எல்லாம் பலப்படுத்த – நிலைக்க வைக்க வேண்டி – ‘வெள்ளைக்காரன் மாத்திரம் போக வேண்டும் ‘ என்கிற காங்கிரஸோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, காந்தீயமோ, சுயமரியாதை இயக்கத்துக்கு வைரியேயாகும். ஆகையால் சுயமரியாதை இயக்கத்தாரால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்தக் காங்கிரஸீம், காந்தீயமும் முதன்மை யானவைகளாகும். ‘ ( ’33-ல் திருப்பத்தூர் மகாநாட்டில் பேசிய பேச்சு)

மேற்படி பேச்சில் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூகப் போக்கு எப்படி ஏற்படுமென்று கேட்டு, அரசியல் மதிப்பைக் குறைத்துப் பேசிய சென்ற காலத்தவர்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். புராண முட்டாள்தனத்தையும் பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங்கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கமென்றால், அது அழிந்து போவதே மேலென்று ஆணித்தரமாக எடுத்துக்காட்டி சமதர்மக் கருத்தைப் பெருமைப்படுத்துகிறார். ஆனால், அதே பேச்சின் பிற்பகுதியில், ‘பழைய கருப்பன் கருப்பன் ‘, ‘பழைய மண் கிண்ணி மண் கிண்ணி ‘, ‘பழைய ஈ.வெ.ரா. ஈ.வெ.ரா., பழைய காங்கிரஸ் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ‘ என்றே பேசியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். காங்கிரஸைக் குறை கூறுவது சமதர்மக் கண்ணோட்டத்தில் தவறில்லை. குறை கூறுவது தேசீய இயக்கத்தை வளப்படுத்தி முன்னேற்றுவதற்காக இருக்க வேண்டும். தேசீய இயக்கத்தை உருக்குலைப்பதாக இருக்கக் கூடாது. ஆனால், ஈ.வெ.ரா.வோ ‘முதன்முதலில் அழிக்கப்பட வேண்டியது காங்கிரஸ்தான் ‘ என்கிறார் சொற்பொழிவில்.

இந்தக் காலத்தில், சமதர்ம இலக்கியமாக சின்னஞ்சிறு நூற்கள் வெளியிடப்பட்டன. ‘சோஷலிஸம் ‘, ‘உழைப்பாளிகளுக்கு ஏன் உலகமில்லை ? ‘ போன்ற நூற்கள் ‘குடியரசு ‘ப் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தன. ஈ.வெ.ரா.வின் இன்றைய பாஷையில் இந்த நூற்களின் ஆசிரியர்கள் இருவரும் ஆரியர்கள். இருவரும் இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். ‘சோஷலிஸம் ‘ எழுதியவர் நரசிம்மன் ஏ.ஏ. அடுத்த புத்தகத்தை எழுதியவர் கே.ஜி.சிவசாமி. நரசிம்மனின் கட்டுரைகள் ‘குடியரசிலும் ‘, ‘புரட்சி ‘யிலும் அடிக்கடி வெளிவந்தன. எனக்குத் தெரிந்தவரையில், நரசிம்மனின் எழுத்துக்களில் ஆரியச் சூழ்ச்சி பொதிந்து கிடக்கிறதென்று ஈ.வெ.ரா. என்றும் சொன்னதில்லை. ‘பொது உடைமைத் தத்துவங்கள் ‘ (திருச்சி ஜெயிலில் வைத்து ஒரு தீவிர காங்கிரஸ் இளைஞரால் மொழிபெயர்க்கப்பட்டது) ‘ஐந்தாண்டு திட்டம் ‘ என்ற இரண்டு நூல்களும் முறையே, ஏங்கல்ஸையும், ஐலின் என்ற ரஷ்ய ஆசிரியரையும், ஆசிரியர்களாகக் கொண்ட சிறந்த மார்க்ஸிய நூல்கள்.

ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மகாநாடு இந்தக் காலகட்டத்தில் வந்தவைகளே. இந்த மகாநாடுகளில் பொப்பிலி அரசர்களும், சர் முத்தையா செட்டியார்களும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் காலத்தில்தான் அ.இராகவன் அருமுயற்சியால் ‘பகுத்தறிவுக் கழகம் ‘ தோன்றி பகுத்தறிவு நூல்கள் பல வெளிவந்தன. சிங்காரவேலு, பிரம்மச்சாரி போன்றவர்களின் நூல்களும், இங்கர்சால், பர்டண்ட் ரஸ்ஸல், ஜீன் மெஸ்லியர் போன்ற ஆசிரியர்களின் மொழிபெயர்ப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை எழுப்பிய ‘சென்னை மாகாண பகிரங்க நாஸ்திகர் மாநாடு ‘ம் காந்தி பகிஷ்கார ஆர்ப்பாட்டங்களும் நடந்தது இந்தக் காலத்தில்தான். இவைகளுக்கும் ஈ.வெ.ரா.வுக்கும் நேரடியான சம்பந்தமில்லை. ஈ.வெ.ரா. ‘குடியரசில் ‘ எழுதிய ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் ‘ என்ற தலையங்கத்திற்காக தண்டிக்கப்பட்டார். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலும் பொப்பிலி முதலமைச்சர் பீடத்திலும் இருந்த பொழுதுதான் ஈ.வெ.ரா. தண்டிக்கப்பட்டார். ‘குடியரசு ‘ ஜாமின் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் தோன்றிய கட்சிக்கும் ரூ.2000 ஜாமீன் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ‘குருட்டு முதலாளிகளூம் செவிட்டு சர்க்காரும் ‘ என்று ‘புரட்சி ‘யில் பம்பாயில் நடந்த பொது வேலைநிறுத்தத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளுக்குத்தான் இந்த ஜாமீன்.

‘மே தின விழா ‘ கொண்டாடப்பட்டது சுயமரியாதை சமதர்மிகளால். தொழிலாளர் மகாநாடுகளும் அங்கே நடைபெற்றன. மாகாண சமதர்ம மகாநாடு மன்னார்குடியில் சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் தோழர் அமீர் ஹைதர் அலி சென்னைக்கு வந்து கம்யூனிஸ்ட்டுக் கட்சி வேலையில் ஈடுபட்டிருந்தார். சுந்தரய்யா, கம்மம்பாடி சத்திய நாராயணா, பி.ஸ்ரீனிவாச ராவ் போன்றவர்கள் அவரால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இழுக்கப்பட்டார்கள். அவர்களிடையிலும் நகரசுத்தி தொழிலாளர்களிடையிலும் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது. பின்னர் இந்தக் கோஷ்டி தொழிலார் பாதுகாப்புக் கழகமாக (Labour Protection League) வேலை செய்தது.

1934:

இந்த வருஷத்தில்தான் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமானதென்று தடை செய்யப்பட்டது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும் பிறந்தது இந்த வருஷம்தான். ஜவஹர்லால் நேரு ‘இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? ‘ என்ற காங்கிரஸ் முன்னணிப் படைக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த கட்டுரையும் இந்த வருஷத்திலேயே வெளிவந்தது. காங்கிரஸில் தீவிரவாதம் மேலோங்கிற்று. பம்பாய் காங்கிரஸீக்குப் பின் காந்திஜியும் காங்கிரஸிலிருந்து விலகினார்.

ஈ.வெ.ரா – ஜெயப்பிரகாஷ்:

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஈரோட்டில் ஈ.வெ.ரா.வைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் சமதர்ம நோக்கம் கொண்ட சுயமரியாதைக்காரர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியாக இயங்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். நீண்ட விவாதத்தின் பிறகு ஈ.வெ.ரா.வும் ஒப்புக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை காங்கரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு இணைத்து விடுவதைப் பற்றி முடிவுகட்ட சுயமரியாதை இயக்கத் தொண்டர் கூட்டம் ஒன்று கூட்டுவதாகவும் ஒப்புக் கொண்டார். இது சம்பந்தமாக ஜெயப்பிரகாஷை சந்திக்கும்படி, அப்போது ஜோலார்பேட்டையில் ‘சமதர்மம் ‘ என்ற வாரத்தாளின் ஆசிரியராக இருந்த எனக்கு தந்தியும் கொடுத்தார்.

இரண்டு தினங்களுக்குப் பின், ‘சமதர்மம் ‘ ஆரம்ப விழாவுக்கு வந்த ஈ.வெ.ரா.வோடு, சுயமரியாதைக்காரர்கள் காங்கிரஸில் சேர்வது பற்றியும், காங்கிரஸ் சமதர்மக் கட்சியில் இணைந்துவிடுவது பற்றியும் நான் கலந்து பேசிய பொழுது, ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர இணங்கினார். ஆனால் அன்றே மாலையில் நடந்த கூட்டத்தில், ‘சில வாலிபர்கள் காங்கிரஸ் ‘மேனியா ‘ பிடித்து நிற்கிறார்கள் ‘ என்றும் ‘அதற்கு சுயமரியாதை இயக்கம் ஒருநாளும் இடம் கொடாது ‘ என்றும் பேசினார். ‘க்ஷணச்சித்தம் க்ஷனப்பித்தம் ‘ ‘பெரியார் ‘களிடமும் உண்டு.

இந்தியா சட்டசபைத் தேர்தல்:

‘குடியரசை ‘ப் புரட்டிப் பாருங்கள். முதல் வாரத்தில் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் கலந்து கொள்வதைப் பற்றி மாவிலும் படாமல், மாங்காயிலும் படாமல் எழுதினார் ஈ.வெ.ரா. அடுத்த வாரத்தில் ஆர்.கே. சண்முகத்திற்கும் டாக்டர் நாயுடுவுக்கும் ஆதரவாகப் பேனாவை நாட்டினார்.

எந்த அரசியல் கட்சிக்கும் தேர்தல், குறைத்தெண்ணவோ, புறக்கணிக்கவோ தக்கதல்ல. சமதர்ம வேலைத்திட்டம் வகுத்துவிட்ட சுயமரியாதைக்காரர்களும் இந்தியச் சட்டசபை விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மகாநாட்டையோ மாகாணத் தொண்டர் கூட்டத்தையோ கூட்டி, தக்க முடிவு எடுத்திருக்க வேண்டும். சிங்காரவேலு, ஈ.வெ.ரா. போன்றவர்கள் தேர்தலில் போட்டி போட்டிருக்க வேண்டும். வெற்றி பெறாமற்போனாலும் பிரசார மதிப்பேனும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய முறையான நடவடிக்கைகள் எவையும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஈ.வெ.ரா. தானடித்த மூப்பாக (சர்வாதிகாரமாக) காங்கிரஸை எதிர்த்து, ஆர்.கே.சண்முகத்தையும் டாக்டர் நாயுடுவையும் தேர்தலில் ஆதரித்தார், பேசினார், எழுதினார். ஆர்.கே. சண்முகம் சமதர்மத் திட்டத்தை எதிர்த்தவர். டாக்டர் நாயுடு சுயமரியாதை இயக்கத்தையே பழித்தவர்.

காங்கிரஸ் எதிர்ப்பு ஈ.வெ.ரா.வை சமதர்மத் திட்டத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியச் செய்தது; சமதர்ம எதிரியைத் தாங்கி நிற்கத் தூண்டிற்று; சுயமரியாதை இயக்கத்தை அவமரியாதை செய்தவரை ஆதரிக்க வைத்தது.

இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, சுயமரியாதை மாகாண மகாநாடு கூட்ட வேண்டுமென்றும் அதில் சமதர்ம திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் பலகாலும் பலவிடத்தும் சுயமரியாதைக்காரர்கள் கோரினர். இந்தக் கோரிக்கையை ஒரு காதொடிந்த ஊசியளவு கூட மதிக்கவில்லை. ஈ.வெ.ரா. சுயமரியாதைச் சங்கத்தை ‘ரிஜிஸ்தர் ‘ செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மதித்தாரா ? தொண்டர்களின் நோக்கு, நடந்துகொண்ட விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பட்டுக்கோட்டைத் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானத்தை மதித்தாரா ? மன்னார்குடி, சுசீந்திரம் முதலிய இடங்களில் சத்யாகிரகம் செய்வது பற்றி, ஈரோட்டு மகாநாட்டில் நிறுவிய சத்யாக்கிரக கமிட்டியின் சிபாரிசை மதித்தாரா ? சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களை சுயமரியாதைக்காரர்கள் மதித்தார்களேயொழிய அவர் மதித்தாரா ? சுயமரியாதை வட்டாரத்தில் ஈ.வெ.ரா. ‘வைத்தது சட்டம், இட்டது வழக்கமாகத்தானே ‘ நடந்து வந்திருக்கிறது ?

ஆகவே. ஈ.வெ.ரா. தன்னிச்சையாக ஒரு திட்டத்தைத் தயாரித்து, (அதைத்தான் பின்னால், பொதுஉடைமை என்பது இன்னதென்று புரியாதவாக்கில் ஈ.வெ.ரா.வின் பொது உடைமைத் திட்டம் ‘ என்று பிரமாதப்படுத்தினார்கள்) அதை ராஜாஜிக்கும் பொப்பிலி அரசருக்கும் (கோவையில் நடந்த தமிழ் மாகாண மகாநாட்டுக்கும், சென்னையில் நடந்த ஜஸ்டிஸ் மாகாண மகாநாட்டுக்கும்) அனுப்பினார். அந்தத் திட்டத்தை ஒத்துக் கொள்கிறவர் கட்சியை தேர்தலில் ஆதரிப்பதாகவும் சொன்னார்.

ஜஸ்டிஸ் கட்சியினர் ஈ.வெ.ரா.வின் திட்டத்தை (ஈரோட்டுத் திட்டத்தை அல்ல) ஒப்புக் கொள்வதாக உறுதிகூறி, சென்னை மகாநாட்டில் இதற்காக ஒரு கமிட்டியையும் தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா.வும் பிரிந்திருந்த ஜஸ்டிஸ் கட்சியை மனதாரத் தழுவினார்.

பின்னர்தான், மேலே குறிப்பிட்ட இந்தியா சட்டசபைத் தேர்தல் நடந்தது. ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகர்கள் அனைவரும் போட்டியில் கோட்டை விட்டனர்.

இச்சமயத்திலும் சில சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் போக்கில் வெறுப்படைந்து, காங்கிரஸில் சேர்ந்தனர்.

ஈ.வெ.ரா. தனது பக்த கோடிகளுக்கு ‘தோல்வியிற் கலங்கேல் ‘ என்றும் ‘கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல ‘ என்றும், தேறுதல் சொன்னார். பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு புதிய தத்துவோபதேசமும் செய்தார். அதாவது: ‘வகுப்புவாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள் ‘ (18-11-1934 – பகுத்தறிவு தலையங்கம்)

மேலும்,

‘காங்கிரஸ் வாயிலாகச் சமூகச் சீர்திருத்தம் செய்ய முடியாது. அதை சமதர்ம நோக்கத்திற்காகத் திருப்ப முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் மூலமே அதை சீர்திருத்தம் செய்ய முடியும். அதைச் சமதர்மக் கட்சியாகவும் ஆக்கிவிட முடியும் ‘ என்று ஈ.வெ.ரா. அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். ( ‘தமிழர் தலைவர் ‘ – 149 பக்கம்)

காங்கிரஸை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனமாகவும் ஜஸ்டிஸ் கட்சியை ஏகாதிபத்ய அடிமைக் கும்பலாகவும் கருதிய கம்யூனிஸ்ட் பாதையில் மேற்கூறிய கருத்துக்கள் உண்மைகளாக்கப்பட முடியாது. தனக்குத் தோன்றியபடி எல்லாம் எண்ணவும், பேசவும், எழுதவும், நடக்கவும் துணிச்சலுள்ள ‘ஈரோட்டுப் பாதை ‘யில்தான் மேற்படி கருத்துக்கள் அசைக்கவியலாத உண்மைகளாகப் பட முடியும்.

(தொடரும்…)

Series Navigation