ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

ஹெச்.ஜி.ரசூல்1
வனாந்திரத்தின் பெருவெளியில் பயணம்
எருசேலமின் வீதிகளிலும்
அரண்மனை பீடங்களிலும் தென்படாத மெளனம்
மேய்ப்பனைத் தேடித் தவித்தது.
ஆசாரியர்களும்
அரசர்களும் ஏமாந்து போனார்கள்.
அந்த வெளிச்சப் புதையல்
மந்தைகளை மேய்க்கும்
இடையர் குலத்தின் மடியில் கிடந்தது.

2
உன் சகோதரன் கண்ணில் தெரியும்
துரும்பை பற்றி அதிகம் பேசுகிறாய்
உன் கண்ணில் இருக்கிறது உத்திரம்
எதை பற்றியும் பேசலாம்
எதுவுமற்று நீ இருந்தால்

3
நான் உடுத்தியிருக்கும் வேட்டி வேண்டுமென
தினந்தினமும் வழக்காடி
தகராறு செய்யும் உனக்கு
வேட்டியை மட்டுமல்ல
சட்டையையும் கழற்றிக் கொடுக்கச் சொன்ன
அந்த கருணைக்கு
எனது நிர்வாணத்தால் மட்டுமே
பதில் சொல்ல முடிகிறது.

4
ஒரு மைல் தூரம் வர
பலவந்தம் செய்கிற உன்னோடு
ரெண்டு மைல் தூரம் பயணம் போக
எப்படி சாத்தியமாகும்
ஒரு பெண்ணாகி எல்லாவற்றையும்
துயரத்தோடு இழந்து செல்வதற்கு.

5
குழந்தை இயேசுவை கொல்ல ஆணை
ஆணாக பிறப்பு தரித்த
பெத்லேகமின் பச்சை மதலைகளை
வெட்டிக் கொன்று நிகழ்ந்த ரத்தப் பலி
ரத்தம் குடிக்க இன்னும் அலையும்
எரோது ராஜாவின் கொலைவாள்
யார் யாரின் கைகளிலோ
6
யோசேப்பின் இதயத்தில் இடம் பிடித்த
தீராத வலியொன்று முதலில்
கண்விழித்துப் பிறந்த இயேசு
பெயர் சொல்லி அழைப்பதற்கு
இன்றுவரை ஒரு தகப்பனில்லை
எல்லோருக்கும் தகப்பனானவர்க்கு…


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்