ஈசன் தந்த வீசா.

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

பாரதிராமன்


காலம் முற்றிப் போச்சு.

காலெடுத்து வைக்கும் முன்னே பேச்சு.
கையெடுத்து உண்ணும் முன்னே பள்ளி
கண் தொடுத்துப் பார்க்கும் முன்னே கலவி ஞானம்

ஓட்டுாிமை பெற்றதும்
ஒட்டிக்கொள்ள ஒரு வேலை
ஒட்டாத உறவாய் ஒரு கல்யாணமும்
ஒடுங்காது பெருகிவிடும் குடும்பம்
குடும்பத்தோடு கூட வரும் குழப்பங்கள்.

முப்பதில் நரை
நாற்பதில் திரை
ஐம்பதில் ஆவோம் தாத்தா-பாட்டி
அப்புறம் போவோம் ஆசுபத்திாி
அறுபதில் அடங்கிவிடும் ஆட்டம்

ஐயா ஈசா,
அரும்புவியில்
ஆருக்கு வேண்டும்
நூறு வருட வீசா ?
அறுபதுக்குமேல் வேண்டாம்,
வேண்டவே வேண்டாம்!

இதுவுமது:

ஐயோ, அவசரப்பட்டுவிட்டேன்
எங்கள் தலைவர்களின் வருகைக்காகக்
கூட்டத்தில் காத்திருக்க நேரும் காலத்தைக்
கணக்கில் விட்டேன்
நுகர்பொருள் கடைகளின்
நுழைவாயிலை நெருங்கப்
பயணிக்கும் நேரத்தையும்
கருதாது விட்டேன்
இன்னும்
‘ கட்- அவுட்டுகள், போஸ்டர் ‘களைக் கவனிக்க,
‘பந்தா ‘ களில் முடங்கிக் கிடக்க,
ஊர்வலங்களின்போது ஊரைச் சுற்றிப்போக
என்று கணக்கில் விட்ட காலங்களையும் சேர்த்தால்
ஐயா ஈசா,
ஐயாறு வருடம் இன்னும்
அதிகாிக்க வேண்டும் வீசா!

Series Navigation