இஸ்லாமிய நவீனத்துவமும் திருக்குர்ஆனும்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அல்லா நபிமுகம்மதுவுக்கு ஏற்படுத்திய உள்மனத்தூண்டலால் உருவாகிய சிந்தனைகளின் தொகுப்பு தான் திருக்குர்ஆன் என்பதை இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
1400 ஆண்டுகளுக்கு மேலாக திருக்குர்ஆன் ஒரு புள்ளிகூட மாறாமல் இருக்கிறது என்கிற கூற்றானது புனைவாகவும், யதார்த்தத்திற்கு மாறுபட்டு உள்ளதாகவும் இவர்களால் கருதப்படுகிறது. இந்நிலையில் திருக்குர்ஆனின் தோற்றுவாய் திருக்குர்ஆனின் தொகுப்பு நிலைகளில் ஏற்பட்ட சில பிரச்சினைகளையும் வரலாற்றுபூர்வமாக ஆய்விட வேண்டியுள்ளது.

1. இஸ்லாமிய நம்பிக்கைபடி திருக்குர்ஆன் அல்லாவிடமிருந்து ஜிப்ரயீல் தேவ தூதர் வழியாக ஒலி வடிவில் மட்டுமே பெறப்பட்டது. பிறகே இது எழுத்து வடிவத்தில் பேரீச்ச மரப்பட்டைகளிலும் ஒட்டகை உள்ளிட்ட பிராணிகளின் எலும்புகளிலும், தோல்களிலும் எழுதப்பட்டது. இது திருக்குர்ஆனின் வடிவமாற்றம் சம்பந்தப்பட்டது.
அரபுமொழியின் ஒலி வடிவம் வரிவடிவ வளர்ச்சியைப் பெறும்போது குறிப்பீட்டாக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. மரம் என்பதில் ம-ர-ம் ஒலிக்குறிப்புகள் (குறிப்பான்) மரம் என்ற பொதுக் கருத்துருவாக்கத்தை (குறிப்பீடு) உருவாக்குகிறது. இவையிரண்டிற்கும் இடையிலான உறவுநிலை ‘குறி’ யாகிறது. இங்கே ‘மரம்’ கருத்துருவாக்கம் தெளிவற்ற ஒன்று. ஏனெனில் மரம் என்ற ஒன்று இல்லை. அது புளிய மரம், வேப்பமரம், தென்னைமரம் என்ற தனித்தனி அடையாளங்க§·ளாடு தான் இயங்குகிறது. இவ்வகையில் ஒலிக்குறிப்புகள் கருத்தைப் புலப்படுத்துவதில் கூட ஒற்றைத்தன்மையாய் வெளிப்படுவதில்லை. திருக்குர்ஆனின் வசன ஒலிக்குறிப்புகள் எழுதப்பட்ட வசனங்களாகும் போதும் இந்த கருத்து மாற்றங்களுக்கே உட்படுகிறது. அல்லா என்ற சொல் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான கருத்தியல் புலப்பாட்டை உருவாக்குகிறது என்பது சிக்கல் தன்மை கொண்டத’கவே உள்ளது. உருவமற்ற அல்லா என்ற கருத்தாக்கம் இடத்துக்கும் காலத்துக்கும், மொழிக்கும், பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ப மாறுபாடடையவே செய்கிறது. இதன் வெளிப்பாடு தான் தமிழில் அல்லா ஆண் தன்மையோடு அர்த்தப்படுகிறது. அல்லா சொல்கிறான், அருளுகிறான், என குறிப்பிடும் அனைத்து சொல்லாடல்களும் அல்லாவை ஆணாகவே மொழியியல் அடிப்படையில் குறிப்பிடுகிறது. எனவே ஒலி வடிவம் – எழுத்து வடிவமாகும்போது கருத்தியல் மாற்றம் நிகழ்கிறது.

2. கி.பி. 610-632 காலகட்டத்தில் அல்லாஹ் அருளிய திருக்குர்ஆனின் அரபு மொழியை தோற்றுவித்ததில் கி.பி. 500 காலம் சார்ந்த ஸைத் இப்னுஹம்மாதின் மகன் கவிஞன் அதீ மற்றும் முராமீர், உள்ளிட்டவர்களே முக்கிய மானவர்களாகும். நபி முகம்மதுக்கு முன்பே தனிநபர்களான மொழியியல் அறிஞர்கள் உருவாக்கிய அரபு மொழியில், ‘அல்ல” திருக்குர்ஆனை இறக்கினான் என்று கூறுவது அல்லாஹ்வின் ஆளுமையை சிதைக்க கூடியதென்பதை உணராமலேயே மார்க்க அறிஞர்கள் குழம்பியுள்ளனர்.

3. ஸாமி இன மக்களின் மூலமொழிகும் அரபு. பாபிலோனியா, சிரியா, பாலஸ்தீன், எகிப்து, எத்தியோப்பியா நாடுகளுக்கு இவர்கள் பெயர்ந்து சென்று வாழ்ந்தனர். பிற ஸாமிய மொழிகளான இப்ரானி, சுர்யானீக்கும் அடிப்படை அரபு மொழி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் அல்லாவின் வேதங்களான கூறப்பட்ட மூசா நபியின் தெளராத் இப்ரானி மொழியிலும் தாவூத் நபியின் சபூர், யுனானி மொழியிலும், ஈசா நபியின் இஞ்சில் சூர்யானி மொழியிலும் அருளப்பட்டதென்றால் அல்லாவின் பழைய மொழியும் கருத்துமே வழக்கிழந்து போய்விட்டது என்பதை அரபு மொழியில் இறக்கப்பட்ட திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது.
இஸ்லாம், பாரசீகம், துருக்கி, இந்தியா, ஆப்பிரிக்கா, மலேயா உள்ளிட்ட நாடுகளில் பரவியபோது அரபுமொழி அந்தந்த நாட்டு குறிப்பாக பார்சி, துருக்கி, இந்தி, சுவாஹிலி, மலாய் மொழிகளை செழுமைப்படுத்தியது. துருக்கி மொழியைப் பொறுத்தமட்டில் அது பாதியளவு அரபு, பார்சி சொற்களால் கட்டமைக்கப்பட்டது. பிற்காலத்தில் உருவான உர்தூ மொழியில் பாதி அளவு அரபு, பார்சி மொழிச் சொற்களும் பாதி அளவு இந்தி, சமஸ்கிருதம் மொழிச் சொற்களுமே கலப்புத்தன்மை பெற்றிருக்கின்றன. அரபு மொழியில் பார்சி, எத்தியோப்பியா, சுர்யானி, இப்ரானி சொற்களும் உள்ளன.
திருக்குர்ஆன் அரபு முஆத் கிளையினரும், முனார் கிளையினரும் பேசிய அரபா அல்லது குறைஷிகள் பேசிய அரபா அல்லது பல்வேறு வசனங்கள் வெவ்வேறு கிளையினரின் அரபா என்று வரலாற்று ரீதியான எந்த குறிப்பும் இல்லை. மேலும் பிரதேசம் சார்ந்து அல்லாவின் மொழி ஹிஜாஸின் அரபு மொழியா அல்லது நஜ்தின் அரபு மொழியா என்ற வேறுபாடும் முன்வைக்கப்படுகிறது.
4. திருக்குர்ஆன் வசனங்களில் உயிர்க்குறிகளான சேரு, சபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா பிற்காலத்திலேயே சேர்க்கப்பட்டது. இந்த உயிர்க்குறிகளை ஹஜ்ஜாஜ் பின் யூசுப் காலத்திற்கு முன்பும் பின்பும் யஹ்யா இப்னு ய·மர், ஹசன் பசரி, அல் கலீல்அதில் அபுல்அஸ்வத் அத்துஅலி உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் உயிர்க்குறிகளை உருவாக்கி திருக்குர்ஆனில் அடையாளமிட்டனர். அக்காலத்தில் மாலிகி மார்க்கச் சட்டப்பள்ளியினர் இத்தகைய அடையாளக்குறிகளிட்ட திருக்குர்ஆன்களை பள்ளிவாசல்களில் வைப்பது பித்அத் என பத்வா வழங்கினர். ஆனால் காலப்போக்கில் இக்கருத்து நிராகரிக்கப்பட்டு விட்டது.
சபர், சேர், பேஷ் குறிகள் இல்லாமலும் குர்ஆன் ஓதலாம் என்று கூறினாலும் கூட இக்குறிகள் மாறுபட்டால் அர்த்தமே தலைகீழாகி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதிரிக்கு அன்அம்ந்த – என்ற சொல்லுக்கு நீ அருள்புரிந்தாய் என்பது பொருள். இதனை அன் அம்ந்து என்று சொன்னாலோ எழுதினாலோ – நான் அருள் புரிந்தேன் என்பதான எதிர்மறை பொருள் உருவாகிவிடுகிறது. எனவே அருளிய திருமறைவசனம் மொழியியல் அறிஞர்களின் பங்களிப்பினால் சமகாலத்தில் அர்த்தம் பெற்றுள்ளது. அரபு மொழியியல் வரலாற்றில் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மொழியை பழமை அரபு (Classical Arabic) என்றும், தற்காலத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி, ஊடகங்களில் பயன்படும் மொழி நவீன தரமுயர் அரபு (Modern Standard Arabic) என்பதாக குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.

5. அல்லா தூய அரபுமொழியில்தான் திருக்குர்ஆனை இறக்கினான் என்று சொல்லப்படுகிறது. அப்படி எனில் திருக்குர்ஆனில் சுர்யானி, இப்ரானி சிரியாஜ் உள்ளிட்ட பிற மொழிக் சொற்கள் எப்படி வந்தது. இஸ்லாமிய மார்க்க மொழியறிஞர்களின் ஆய்வுப்படி ஏறத்தாழா 114-க்கும் மேற்பட்ட பிறமொழி கலப்புச் சொற்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்று உள்ளன. மாதிரிக்கு ஜிப்ரீல், சூரா, ஜப்பார் முதலியவை ஹீப்ரு மொழிச் சொற்களாகும் இது அல்லாவின் தூய அரபு மொழி ஆளுமையை குறைவுபடுத்திப் பார்க்கவும் வழி வகை செய்கிறது.

6. திருக்குர்ஆனின் வசனங்களை ஒலிவடிவில் வெளிப்படுத்தியபோது ஒரு தலைப்பின் கீழோ அல்லது அத்தியாயத்தின் கீழோ சொல்லப்படவில்லை. இதை நடைமுறைவசதிக்காக நபிமுகம்மதும் பிற்காலத்தில் தொகுப்பாளர்களும் திருக்குர்ஆன் வடிவமைப்பை உருவாக்கிக் கொண்டனர். ஏழு மன்ஸில்கள் முப்பது ஜுஸ்வுகள் 114 அத்தியாயங்கள் என பகுக்கப்பட்டும் தர்தீபே நுஜுலி என்பதான அருளப்பெற்ற வரிசை மாறுபட்டும் உள்ளன. அல்லா இறக்கிய வசனங்கள் கால அடிப்படையில் வரிசைக் கிரமமாக இல்லை. நபிமுகம்மதுவுக்கு முதன் முதலில் அருளப்பட்ட ஓதுவீராக (இக்ரஹ¤) வசனம் தற்போது திருக்குர்ஆனில் முதல் வசனமாக இல்லை மாறாக ஸ¤ரத்துல் அலக் – 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களாக அவை உள்ளன. அதுபோல் கடைசியாக அருளப்பட்ட வசனங்கள் ஸ¤ரத்துகவ்பா 9-ம் அத்தியாயத்தின் 129 வசனமாகவும் நான்காவது அத்யாயமான ஸ¤ரத்துன்நிஸா ‘கலாலா’ பற்றிய வசனங்களாகவும் இடைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

7. அன்னை ஹப்சாவிடமிருந்த திருக்குர்ஆன் பிரதியின் அடிப்படையிலும், பல பகுதிகளிலிருந்து திரப்பட்ட பிரதிகளிலிருந்தும் காரீக்களின் நினைவுப்பிரதிகளிலிருந்தும் இறுதியாக திருக்குர்ஆன் பிரதி தயாரிக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவினூடே மற்றொரு தகவலும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியுள்ளது. நபிமுகமதுவின் மகளுமான, இமாம் அலியின் மனைவியுமான பாத்துமா நாயகியிடமும் திருக்குர்ஆன் பிரதி ஒன்று இருந்தது. அது தற்கால திருக்குர்ஆனை விட மூன்று மடங்கு பெரியதான அளவில் இருந்தது என்பது மற்றுமொரு செய்தியாகும்.
நபிமுகம்மதுவுக்கு திருக்குர்ஆன் கி.பி. 610/632 காலகட்டத்தில் அருளப்பட்டது. நபிமும்மதுவின் மறைவிற்குப் பிறகு முதல் கலீபா அபூபக்கர் காலத்தில் தொகுப்புப்பணி துவங்கப்பட்டதென்ற கருத்து மறுக்கப்பட்டு இப்பணியை நபிமுகம்மதுவின் மருமகனார் அலியே துவக்கினார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
கலீபா ஆவதற்கு முன்பே இமாம் அலி தன் கைவசம் வைத்திருந்த திருக்குர்ஆன் பிரதியும், தப்சீரும் கலீபா உதுமானால் மறுக்கப்பட்டது. பின்னர் உதுமானின் ஆளுமைபப்டி தொகுக்கப்பட்டதே இன்றைய வடிவிலான திருக்குர்ஆன் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஒலிப்பிரதிகள் நினைவுப் பிரதிகள், எழுத்துப் பிரதிகளாய் மாறுகையில் ஏற்படுகிற பிரச்சினைகளாக இவற்றை தொகுத்துப் பார்க்கலாம்.

8. திருக்குர்ஆனை தொகுத்து எழுதும்போது பல்வேறு அரபு வட்டார மொழிகளில் அவை இருந்துள்ளன. இவற்றில் குறிப்பாக குறைஷி, ஹ¤தைல், தைமூர் ரபாப், அல் அஸ்த், ரபீஆ, ஹவாஸின், சஅத்பின் பக்ர் என இவற்றை வரிசைப்படுத்தலாம். அப்போதுதான் எந்த மொழி வழக்கில் தொகுக்கப்பட்ட திருக்குர்ஆனை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. கலிபா உதுமான் அதற்கு குறைஷி மொழி வழக்கை பயன்படுத்தவே ஆணையிட்டார். ஏனெனில் குறைஷி குலமே அராபிய இன நிர்வாகம், செயல்பாடு ஆகியவற்றில் அதிகாரம் வய்ந்ததாக இருந்தது.
காதிபெ-வஹி என்னும் இப்னுதாபித் உள்ளிட்ட இறைவசனம் எழுதும் திருக்குர்ஆன் நிபுணர் குழுவால் ஒன்று திரட்டப்பட்டு குறைஷி மொழியின் ஒற்றை வடிவத்தில் தயாரித்து முடித்தபோது பிற வழக்கில் உள்ள திருக்குர்ஆன் பிரதிகள் அனைத்தையும் எரித்து விட ஆணையிடப்பட்டது. திருக்குர்ஆன் பிரதிகள் அழித்தொழிக்கப்பட்டன. கலிபா உதுமானால் அங்கீகரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திருக்குர்ஆனே அனைத்து மாகாணங்களும் அனுப்பப்பட்டு பின்பற்ற ஆணையிடப்பட்டது.

9. திருக்குர்ஆனில் இடம் பெறும் வசனங்கள் 6666 என்பது ஒரு பொதுக்கருத்தே தவிர எத்தனை வசனங்கள் தற்போது திருக்குர்ஆனில் இருக்கின்றன என்பது மாறுபாட்டுக்குரியதாகவே இருக்கிறது. திருக்குர்ஆனுக்கு 6236 வசனங்கள் உள்ளன என்பதும் 6247 வசனங்கள் மட்டுமே என்றதொரு கருத்துக்கும், ‘பிஸ்மில்லா’வை சேர்த்து 6360 வசனங்கள் என்றும் பலமாதிரியாக இக்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆயிஷா நாயகி கருத்துப்படி 6666, ஷாம்வாசிகள் 6250, கூபாவாசிகள் 6236, இப்னு மஸ்ஊத் 6218, பஸ்ராவாசிகள் 6216, இஸ்மாயில் இப்னு ஜஅல்பகிரமதனீ 6214, ஈராக் வாசிகள் 6214, மக்கா வாசிகள் 6212 வசனங்கள் எனவும் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். இந்திய தமிழ் குர்ஆன்களில் 6236 வசனங்களே உள்ளன. ஒரே வசனத்தை இரண்டாகவோ, இரண்டு வசனத்தை ஒன்றாகவோ கணக்கிடுவதால் ஏற்படும் குழப்பம் என இதனை எளிமைப்படுத்தி சாதாரணமாக எடுத்துக் -காள்ள முடியாது.

10. ஹதீது புகாரியில், அப்துல்லாஹ் இப்னு மஸ¤த் நபித்தோழரின் கூற்றுப்படி திருக்குர்ஆனில் கடைசி இரண்டு அத்யாயங்களை அவர் சேர்க்கவில்லை.

11. ஹதீது புகாரியில் நபித்தோழர் உபை இப்னு கஅப் கூற்றுப்படி, சூரா அல்ஹ·பத், சூரா அல்கால் என இரண்டு அதிக அத்தியாயங்கள் குர்ஆனில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதும் இப்போதும் ஹனபிகளால் வித்ரு தொழுகையில் இவ்வசனங்கள் ஓதப்படுகின்றன என்றதொரு குறிப்பும் உண்டு.

12. சன்னிமுஸ்லிம்கள் முப்பது அத்தியாயங்களாக கருதும் திருக்குர்ஆனை ஷியா முஸ்லிம்கள் இமாம் அலிக்கு அல்லா வஹியின் மூலம் அருளியது என்று இரு அத்தியாயங்களையும் இணைத்துள்ளார்கள். இது பற்றிய விவாதங்களில் இரு புதிய அத்தியாயங்களாக அல்நூர்யான் (Alnurayan) மற்றும் அல்விலாயா (Alwilaya) என்பவை இடம் பெற்றுள்ளதான தகவல் குறிப்பும் குறிப்பிடத்தக்கது.

13. விக்கிரக ஆராதனைக்காக தண்டனை தொடர்பான வசனம் குறித்து இப்னு மாஜாவும், இப்னு ஹன்பலும் தங்களது ஹதீது தொகுப்பில் தெரிவிக்கிறார்கள். விக்கிரக ஆராதனை செய்த அராபியர்கள் இருவரை நபி முகம்மது கல்லெறிந்து கொன்ற சம்பவத்தின் அடிப்படையில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை முறை இருந்தது. நபிமுகம்மது இறந்த பின் ஒரு ஆடு ஆயிஷாவின் வீட்டிலிருந்து அந்த வசனம் எழுதப்பட்ட பகுதியை தின்றது. எனவே அவ்வசனம் திருக்குர்ஆனில் இணைக்கப்படவில்லை என்பதாகவும் அதில் கூறப்படுகிறது.

14. எகிப்திய அறிஞர் ரஷாத் கலீபாவின் கணிதவியல் கட்டமைப்பு ஆய்வின்படி திருக்குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் அத்தவ்பா 128-129 வசனங்கள் புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்கள் எனவே இவை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை ஆய்வு ரீதியாகவும் வெளிப்படுத்துகிறார்.

15. நபி முகம்மதுவின் மறைவுக்கு பின் கி.பி. 632க்கு பிறகு கலிபாக்கள் உமர், உதுமான் அலி படு கொலை செய்யப்படுகிறார்கள். கலிபா அலியின் மகன் ஹ¤சைனும் தோழர்களும் கர்பலாவில் படுகொலை செய்யப்படுகின்றனர். கி.பி. 684 வரை முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்சி முறை நிகழ்கிறது. சமாதானக் காலத்தில் மர்வான் இப்னு அல் ஹகம் ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்தது நபி முகம்மது கைப்பட எழுதியிருந்த திருக்குர்ஆன் பிரதியை அழித்து விட்டதாகும். ஏனெனில் உதுமான் காலத்தில் தொகுக்கப்பட்ட திருக்குர்ஆனிலிருந்து இது வேறுபட்டு இருந்ததும் இதனால் புதிய பிரச்சினைகள் எழுந்து விடும் என்பதுமாகும்.

16. திருக்குர்ஆனின் உள்கட்டமைப்பு நிலையில் அல்லாவின் ஒரு வசனமே தன் இருப்பைத் துறந்து மற்றொரு சூழலில் வேறொரு வசனமாகி பழைய அர்த்தங்களை மறுக்கின்றன. திருக்குர்ஆனில் மாற்றப்பட்ட வசனங்களின் எண்ணிக்கை 21 என்பது இத்கான் நூலில் இமாம் சுயுத்தியின் கருத்து நிலை. ஷாஹ் ஒலியுல்லா தனது பவ்ஜுல் கபீர் நூலில் திருக்குர்ஆனின் அல்பகரா, அல்அன்பால், அல் அஹ்சாப், அல்முஜாதலா அத்தியாயங்களில் ஐந்து வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என கூறுகிறார்.
மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் திருக்குர்ஆனுக்கு உண்மையிலேயே எத்தனை வசனங்கள் உண்டு, சேர்க்கப்பட்ட, விலக்கப்பட்ட, காணாமல்போன வசனங்கள் என்னென்ன, தொகுப்பு முறையில் எதிர்கொண்ட பிரச்சினைகள் என பலநிலைகளை விவாதிக்கின்றன.
திருக்குர்ஆன் வசனங்கள் மேலோட்ட பார்வையில் ஒன்றாக இருந்தாலும் அதனை பொருள் கொள்வதில் மூலம் வெவ்வேறு அர்த்தப்பிரதிகள் உருவாகின்றன. ஷியா, சன்னி, சுன்னத் வல்ஜமாத், வகாபி, ஜாக், அஹ்லே குர்ஆனிகள், காதியானிகள் குதுபிகள் உள்ளிட்ட அனைத்து குழுக்களும் முழுமையாகவோ அரைகுறையாகவோ வெவ்வேறு விதமாக அர்த்தம் கொள்ளுகின்றனர். மேலும் அரபியிலிருந்து பிறமொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்படும்போதும் அது மாற்றத்திற்கு உட்படுகிறது. மாதிரிக்கு மிர்சா குலாம் பிரிவு காதியானிகள் நபி பற்றிய விவாதத்தை எடுத்து சொல்லாம். காத்தமுன் நபி சொல்லாடலை பிறர் அனைவரும் ‘இறுதிநபி’ என்ற அர்த்தமாக உருவகப்படுத்தி இறுதி நபி, நபிமுகம்மது என ஏற்றிருக்கிறார்கள். காதியானிகளோ’ ‘காத்தமுன்நபியை’ முத்திரை நபி என பொருள் கொள்கின்றனர். எனவே நபிமுகம்மதுவுக்கு பிறகும் தூதுத்துவம் உண்டு அந்த வகையில் மிர்சாகுலமும் ஒரு நபியே என கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் மட்டுமே போதும் ஹதீதுகள் தேவையில்லை என கொள்கை நிலைபாடுடைய அஹ்லெகுர்ஆனிகள் மூலவர் எகிப்து அறிஞர் டாக்டர். ரஷாத் கலீபா, திருக்குர்ஆனில் பத்தொன்பது கணிதக் கட்டமைப்பினை ஆய்வுபடுத்திக் கண்டறிந்தவர். நபி – தூதர் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். நபி என்பவர் அல்லாவின் வேதம் கொடுத்து அனுப்பப்பட்டவர்களை மட்டுமே குறிக்கும் அரபு வரலாற்றில் நபிமார்கள் மூசா, தாவூத், ஈசா, முகம்மது ஆகியோர்களை குறிப்பிடலாம். இந்த நபிமார்கள் ‘ரசூலன் நபிய்யன்’ – தூதராகிய நபி என அர்த்தம் பெறுகின்றனர்.
அதே சமயத்தில் ரசூல் – என்னும் தூதர் என்பவர் நடைமுறையிலிருக்கும் வேதத்தை மெய்ப்பிக்க அல்லாவால் தூது கொடுத்து அனுப்பப்பட்டவர். இந்நிலையில் இந்த இறைத்தூதர்களை இன்னும் துல்லியமாக குறிப்பதற்கு பஷரன் ரசூலன் – மனிதனாகிய தூதர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து தூதர்களும் நபிமார்களல்ல என்பதும் அனைத்து நபிமார்களும் தூதர்களே என்பதும் இதனிலிருந்து புலப்படுகிறது. ஒரு திருக்குர்ஆன் சொல்லாடல் இப்படியாகத்தான் அர்த்த உருவாக்கத்தில் பல திருக்குர்ஆன்களாக நுண் அளவில் செயல்படுகின்றன.
அல்லாவின் வார்த்தை ஒரு புள்ளிகூட மாறாதது பிற சமய வேதங்களெல்லாம் திரிக்கப்பட்டது, ஒன்றுக்கும் உதாவாதது என ஊடகங்களில் வகாபிகள் தொடர்ந்து கட்டமைக்கும் போலியான புனிதங்கள் மேற்சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளினாலேயே கட்டுடைக்கப்படுகிறது. நபி முகம்மதுவின் மறைவின் தருணத்திலேயே அடுத்த கலீபா யார் என்பதில் நடைபெற்ற குழப்பங்கள், குழுச் சண்டைகள், முதல் கலீபா அபுபக்கரின் ஆட்சி, மரணம், கலிபா உமரின் ஆட்சி, அவர் கொலை செய்யப்படுதல், ஆக்கிரமிப்பு போர்கள், உள்நாட்டு கலவரங்கள் என பல இதில் உண்டு. இந்நிலையில் நபிமுகம்மதுவின் மறைவிற்கு பிறகு இருபது ஆண்டுகள் கழித்தும், முதல் திருக்குர்ஆன் வசனம் வெளிப்பட்டு நாற்பது ஆண்டு கழித்துமே திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரத் தலையீடுகள் சார்பு நிலைகள், இனப்பகை முரண்பாடுகள், ஆதிக்கங்கள், மறைக்கப்பட்ட, மாற்றப்பட்ட, சேர்க்கப்பட்ட வசனங்கள் என பல்வேறு பிரச்சினைகளை திருக்குர்ஆன் எதிர்கொண்டுள்ளது. இதைப் புரிந்து கொள்ளுதலே முதல் அவசியமாகிறது. இதுவே அடிப்படைவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் மாற்றான திருக்குர்ஆன் குறித்த மறு சிந்தனையை உலகுக்கு வழங்கும்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation