இலை போட்டாச்சு – 12 -கதம்பக் கறி

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

பாரதி மகேந்திரன்


கதம்பக் கறி

தேவையானவை

சாம்பார் வெங்காயம் கால் கிலோ
முருங்கைக் காய் 5 அல்லது 6
கத்திரிக்காய் கால் கிலோ
அவரைக்காய் கால் கிலோ
உருளைக் கிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் கால் கிலோ
சேப்பங் கிழங்கு கால் கிலோ
எண்ணெய் 100 கிராம்
மசாலா அல்லது சாம்பார்ப் பொடி 2 மேசைக் கரண்டி
மிளகுப் பொடி 1 மே. க.
நெய் 1 தேக் கரண்டி
பெருங்காயப் பொடி 1 தே.க.
வெந்தயம் 1 தே. க.
கடுகு 1 / 2 தே.க.
உப்பு தேவைப்படி
பச்சை மிளகாய் 3 அல்லது 4
கறிவேப்பிலை 3 அல்லது 4 ஆர்க்கு
நறுக்கிய கொத்துமல்லி 1 முடி
புளி 1 பெரிய எலுமிச்சையளவு

சேப்பங்கிழங்கை மட்டும் சமைப்பானில் வேக வைத்து உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகைப் போட்டு, அது முக்கால்வாசி வெடித்ததும் வெந்தயத்தைப் போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலைத் தழை, நீளவாட்டத்தில் கீறிய பச்சைமிளகாய் ஆகியவற்றைப் போடவும். அதன் பின்னர் உரித்த வெங்காயத்தைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறியவாறே வதக்கவும். பிறகு இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கிய முருங்கைக்காய், சற்றே பெரிய துண்டங்களாய் நறுக்கிய உருளைக்கிழங்கு, நீளவாட்டத்தில் நறுக்கிய கத்திரிக்காய், ஓரங்கள் ஆய்ந்த அவரைக்காய், கொத்தவரைக்காய் ஆகியவற்றை வரிசையாய்ப் போட்டுவிட்டு, கெட்டியாய்க் கரைத்த புளிச்சாற்றை ஊற்றவும். தேவையான உப்பு, மசாலா அல்லது சாம்பார்ப் பொடி, மிளகுப்பொடி ஆகியவற்றைப் போட்டு மூடி மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு கிளறிவிடவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறியபடியே தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் ஊற்றவும். இல்லாவிடில், கறி கூட்டாகிவிடும். எல்லாம் நன்கு வதங்கி வெந்ததும் கடைசியாகப் பெருங்காயப் பொடியையும் சேப்பாங்கிழங்கையும் சேர்த்துக் கிளறவும்.

இந்தக் கறி செய்கிற நாளில் ரசமோ, குழம்போ தேவை இல்லை. தொட்டுக்கொள்ள அப்பளம் போதும். இத்தனை காய்கள் வேண்டாமென்று நினைத்தால் குறைத்துக்கொள்ளலாம். ஆனால், வெங்காயம், முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை மிக முக்கியம்.

இவற்றை மட்டுமே போட்டும் செய்யலாம். மற்றவை அவரவர் விருப்பம்.

– பாரதி மகேந்திரன்
mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்