இலை போட்டாச்சு 3. எரிசேரி

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

பாரதி மகேந்திரன்


சேனைக்கிழங்கு – 1 கிலோ
தேங்காய் – 1 – பெரியது
தேங்காய் என்ணெய் – 30 கிராம்
கடுகு – 1/2 தே. க.
மிளகு – ஒன்றரை தே.க.
காய்ந்த மிளகாய் – 6
சீரகம் – 1 தே. க.
உப்பு – முக்கால் மேசைக் கரண்டி
மஞ்சள் பொடி – தலைதட்டி 1 தே. க.
கறிவேப்பிலை – 2, 3 ஆர்க்கு

முன் குறிப்பு – சேனையுடன் உறுதியான வாழைக்காய் அல்லது நேந்திரங்காய் சேர்க்கலாம். வாழைக்காய் குழைந்து விடுமாதலால், சேனையுடன் வேக விடுவதற்கு நேந்திரங் காயே ஏற்றது. வாழைக்காய் சேனை யளவுக்குக் கடினமாக இல்லாவிடில். இவற்றைத் தனியாக உப்புப்போட்டு வேக வைத்தும் சேர்க்கலாம். தோல் சீவிய காய்களைச் சற்றே பெரிய துண்டங்களாக அரிந்து கொள்ளவும். மிளகாய் வற்றல், மிளகு ஆகிய இரண்டையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். மின் அம்மியைக் கழுவிய நீரையும் இத்துடன் ஓட ஓடக் கலந்து வைக்கலாம். அரைத்து எடுத்த நீருடன் இன்னும் சிறிது நீர் சேர்த்து அரிந்த துண்டங்களைக் குழையாமல் வேகவிடவும். உப்பையும் இத்துடன் போட்டுவிடலாம்.

இதற்கிடையே தேங்காயைத் துருவி வைக்கவும். (பத்தைகள் விழாது உதிரி உதிரியாய்ப் பூப்போலத் துருவுதல் நலம். எனவே இளம் தேங்காய் உதவாது. திடமான, முற்றிய தேங்காயே நல்லது. )

இவ்வாறு துருவியதில் பாதியை மட்டும் பாதி சீரகத்துடன் மசித்துக்கொள்ளவும். காய்கள் முற்றுமாய் வெந்ததன் பிறகு அரைத்துள்ள இந்தத் தேங்காய்-சீரக விழுதைச் சேர்த்து ஓரிரு கொதிகள் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு, வாணலியில் சிரிது எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகைப்போட்டு, அது வெடித்த பின் மீதமுள்ள தேங்காய்த் துருவலையும் மீதி சீரகத்தையும் அத்துடன் சேர்த்து இலேசான சிவப்பு வரும்வரை வறுத்த பின் இறக்கிவைத்துள்ளதுடன் கலந்து பின் சாப்பிடவும். (சிலர் சீரகத்தைத் தேங்கரயுடன் சேர்த்து அரைப்பதில்லை. தேங்காயுடன் வறுத்து மட்டும் போடுவார்கள். அவரவர் சுவை.)

இதை மிகவும் கெட்டியாய்ச் செய்யாமல் கூட்டு மாதிரிச் சற்றுத் தளர்ச்சியாகச் செய்தால் சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். பிசைந்து சாப்பிடுவதற்கு என்றால் உப்பும் காரமும் இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளவும். சப்பாத்திக்குக் கூடத் தொட்டுக்கொள்ளலாம்.

இது ஒரு மலையாளச் சமையல். பாலக்காட்டுக்காரர்களிடையேயும் பிரசித்தம்..

பி.கு.: கிழங்குகள் வாயுவை உற்பத்தி செய்யும் என்பார்கள். ஆனால் சேனைக் கிழங்கு வயிற்றுக்கு மிகவும் நல்லது. (பெரியதாக நம் வயிறு போலவே இருக்கும்.)


.
mahendranbhaarathi@yahoo.com

பாரதி மகேந்திரன்

Series Navigation