இலங்கை தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

என்.கே.மகாலிங்கம்


மணிக்கொடி பரம்பரை எழுத்தாளர் ஒருவர் இலங்கையில் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, மூத்த இலக்கியவாதி திரு கே.கணேஷ் அவர்கள்தான். புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி, மெளனி போன்றவர்கள் வரிசையில் அன்றே இலக்கியம் படைத்து பெருமை சேர்த்த மலையக எழுத்தாளர் இவர். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் இந்த வருடம் இவருக்கு இயல் விருது அளித்து கெளரவிக்கிறது. இது ஒருவர் தன் வாழ்நாளில் ஆற்றிய இலக்கிய சேவைக்காக வருடாவருடம் அளிக்கப்படுவது. இம்முறை திரு கே. கணேஷ் அவர்களுக்கு இயல் விருதும், பணமுடிப்பு C$ 1500 ம் வழங்கப்படும்.

இடதுசாரி கொள்கையுடையவரான திரு கே. கணேஷ் ஒரு கவிஞராகவே எழுத்துலகில் பிரவேசித்தார். பன்னிரண்டு வயதிலே சென்னையில் வெளியான லோகசக்தி இதழில் இவருடைய முதல் கவிதை பிரசுரமானது. தமிழ் நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிப்பதில் உறுதுணையாக இருந்த இவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த நாள் விழாவுக்காக நடந்த அகில உலக கவிதைப் போட்டியில் பரிசு பெற்று ஜப்பான் நாட்டுக்கு அழைப்பு பெற்று கெளரவிக்கப்பட்டார். இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கி அதன் முதல் இணை செயலாளராக பணி புரிந்தவர் ‘பாரதி ‘ என்ற சஞ்சிகையையும் வெளியிட்டார். நவசக்தி, தேசாபிமானி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் இவர் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க, உலக மொழிகளின் பல அருமையான படைப்புகளை தமிழிலே தந்தார். இவர் முயற்சியில் வெளிவந்த இருபதுக்கும் மேலான மொழிபெயர்ப்புகளில் முக்கியமானவை முல்க்ராஜ் ஆனந்தின் தீண்டத்தகாதவனும் ( Untouchables) சீனாவின் சிறுகதைச் சிற்பி லூசினின் சிறுகதை தொகுதிகளும் என்று சொல்லலாம். இவை தவிர வியத்நாம், பல்கேரியா, ஹங்கேரி, உக்கிரேய்ன், சோவியத் நாட்டு படைப்புகளும் இவர் மொழிபெயர்ப்பில் அடங்கும். இவருடைய வியத்நாமிய சிறுகதை நூலுக்கும், உக்கிரேனிய கவிதை மொழிபெயர்ப்புக்கும் விருதுகள் கிடைத்தன. இலக்கியச் செம்மல் (1991) கலாபூஷணம் (1995)ஆகிய அரசு இலக்கிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலக்கிய எழுத்து, எழுத்தாளர்கள், எழுத்தாளர் அமைப்புகள், சஞ்சிகைகள், மொழிபெயர்ப்பு என்று சகல துறைகளிலும் இலக்கியத்துடன் தன்னை அர்ப்பணித்து இறுக்கமாகப் பிணைத்துக்கொண்ட இவருக்கு இப்பொழுது எண்பதாவது பிராயம் நிறைந்திருக்கிறது. இவர் அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் தொண்டு செய்து வருகிறார். இன்றைய தருணத்தில் இந்த விருது கிடைப்பது மிகவும் பொருத்தமானது; இது இவருக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகத்தை சார்ந்த ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் மரியாதை ஆகும்.

பரிசளிப்பு விழா வருகிற ஜனவரி இரண்டாம் தேதி கொழும்பில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சந்திரசேகரம் போன்றவர்கள் கலந்து உரையாற்றி சிறப்பிப்பார்கள். ரொறொன்ரோ பல்கலைக் கழக பேராசிரியர் செல்வா கனகநாயகம் தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக இயல் விருதும், பணமுடிப்பும் வழங்குவார்.

என்.கே.மகாலிங்கம்

***

muttu@earthlink.net

Series Navigation

என்.கே. மகாலிங்கம்

என்.கே. மகாலிங்கம்