இரவில் கனவில் வானவில் – 9 ,10

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


9
தனிமை என்றால் இது வேறு தனிமை. நிலச்சரிவில், பூகம்பத்தில், அடியில் சிக்கி கொண்ட தனிமை.
தான் ஒதுங்கிக் கொண்டு பத்மநாபன் அவளை விடைகொடுத்தனுப்பினான். “அப்பாவை நாங்களேகூட இனி பாத்துக்குவோம்….” என்று அவன் தயக்கமாய்ச் சொன்னபோது அவள் சற்று அவசரமாய் மறுத்தாள்.
“இல்லை இன்று ஓரிரவு. நாளை காலை நான் இந்த உலகத்தைச் சந்திக்கத் தயாராகி விடுவேன்…” என்றாள். அதன் அடியில் ஓர் உசுப்பப் பட்ட சோக ஆவேசம் இருந்தது. அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
சட்டென, முழுக்க அவளே – அவள் மாத்திரமேயான உலகுக்குள் வந்து விழுந்தாப் போல.
”அப்ப ஒரு நிமிஷம்… கார்…”
”வேணாம். நான் பஸ்சிலேயே போய்க்கறேன்…”
”ரைட்” என்றான் பத்மநாபன் எளிமையாய்.
வீடுவரை வருமுன் இருட்டு திரண்டு, உள்ளே அலைகொந்தளிக்க ஆரம்பித்து விட்டது. அமாவாசைக் கடல்.
அறிவு இருக்கட்டும்…. மனசின் தாளலயம் வேறுதான்.
அடிப்பெண்ணே, யாருக்கும் நிகழாத துக்கம் உன் வாழ்வில் நேர்ந்தது. நிகழ்ச்சிகள் வருந்தத் தக்கதே… எனினும்… அதைமீறி நீ அந்தச் சம்பவத்தை எதிர்கொண்டிருக்க வேண்டாமா? பாஸ்கருக்கு இறுதி மரியாதை செலுத்தி யிருக்க வேண்டாமா?
இப்படி ஒளிந்து கொள்ளல் நியாயமா?
எங்கே எப்படி எவ்வளவு காலம் ஓடி ஒளிய முடியும்?
மனசின் சூறாவளி. தள்ளாட்டியது ஆளை. ஜுரம் அடிக்கிறதோ?
அந்த முகத்தைக் கடைசி தரம்… துக்கத்தையும் மீறி, மனசில் பதிந்து கொண்டிருக்கலாம்…
ஓவென்று கரைந்து அழவேண்டும் போலிருந்தது. ஐயோ, இது தெருடி, என அடக்ଭக்ଭகிக் கொண்டாள்.
தூண்டிலில் எகிறும் மீனாய் மனம்.
அவள் வீட்டுக்கு வருவாள் என யாருமே எதிர்பார்க்கவேயில்லை.
கீதா வந்து கதவைத் திறந்தாள்.
அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. மூக்கு குத்திக் கொண்ட கீதா. இந்தக் கல்யாணத்தை அவள்தான் எத்தனை ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தாள்….
அடுத்தது அவள்முறை எனக் கனவு விரித்திருக்கலாம், பாவம். அவரவர் திசைகள் அவரவர்க்கு.
“வா இப்டி” என்று அருகே அழைத்து அவள் கீதாவைப் பார்த்தாள்
மூக்குத்தி அம்மாவுடையது. சட்டென்று திரும்பி உள்ளே நிற்கிற அம்மாவைப் பார்த்தாள்…. மூக்குத்தி இல்லாமல் அம்மாவைப் பார்க்கவும் சங்கடமாய்த்தான் இருக்கிறது.
கீதாவின் கனவுகளை போஷிக்கிற கடமைகள் அவளுக்கு – அம்மாவுக்கு இருந்தன. எத்தனை சோகங்களை இப்படி அம்மா இழந்திருப்பாள். மகத்தான தியாகங்கள்….
தனக்குள்ளே தன் துயரங்களை சகித்துக் கொண்டிருப்பாள்….
அவரவருள் துயரக் கடல்கள் உருண்டு புரண்டு கொண்டுதான் இருக்கின்றன.
எதற்கும் ஆசைப்பட இந்த அம்மாக்களுக்கு அனுமதியே இல்லை…. அவளுக்கு அம்மாமீது அளப்பரிய இரக்கம் சுரந்தது.
ஒருவேளை பாஸ்கரோடு எனக்குக் கல்யாணம் குதிர்ந்திருந்தால், இந்த மூக்குத்தி – கீதாவின் மூக்கில் இப்போது அமர்ந்திருப்பது…. எனக்கு வந்துவிடும்.
ஆனால் அம்மாவை விட்டுப் போனது போனதுதான்…. பாவம் அம்மா. அம்மாக்கள் பாவம்!
அம்மாவுக்கு வணக்கம். அம்மாக்களுக்கு…
எனக்கு இந்தப் பழைய சாதமும் கிழிந்த குடையும் அலுவலகமும்…. இதுவே இதுவரை வாய்த்தது.
ஹலோ என்றது குடை அவளைப் பார்த்து.
இதை எத்தனை சுலபமாய் நான் உதறி ஓடிவிட நினைத்தேன்…. வேடிக்கைதான்.
யாரிடமும் அவள் பேசவில்லை.
மனசு கனத்துக் கிடந்தது.
பரவாயில்லை. இதுவரை நடந்தது போகட்டும்…. இனி நான் உண்மைகளை அதனதன் வீர்யத்தோடு நேர்மையாய் எதிர் கொள்வேன். அப்படிப் பழகிக் கொள்வேன்..
அப்படிப் பழகியவள்தான்….
என்றாலும் அந்தக் கல்யாணமும், அதில் பாஸ்கரைச் சந்தித்ததும்…. என்னை எத்தனை சுலபமாய்ப் புரட்டிப் போட்டு விட்டன.
காலம் கேலி பேசிவிட்டது என்னை. காலம் காலைவாரி விட்டுவிட்டது.
வைரமுத்து சுதந்திரம் பற்றிச் சொன்னானே?…. சுதந்திரம் என்று ஏழை கனவு கண்டபடி, கட்டியிருந்த கோவணத்தையும் பறிகொடுத்தானாம்….
என் நிலையும் அதைப்போலவே அல்லவா ஆகிவிட்டது.
மேத்தா சொல்லவில்லையா? கனவுகள் நட்சத்திரங்களோடு, என்றாலும் என் விரல்கள் ஜன்னலோடுதான்….
பத்மநாபன் தந்த புத்தகங்கள் எத்தனை உபயோகப் பட்டு விட்டன!…
அவளில் ஓர் இகழ்ச்சிப் புன்னகை.
வீட்டிலும் அவளால் ஏனோ அழமுடியவில்லை என்று திடீரென்று உணர்ந்தாள்.
என்ன இது…. என் துக்கத்துக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காதா?
ஆ, எனக்கு யாருமே இல்லை. அதுதான் விஷயம்.
இந்த சகோதரிகள்…. எனக்கு முன்பே அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கை பற்றிக் கனவு கண்டாகிறது.
என்னைவிட இளையவர்கள். இன்னும் நுரைத்துப் பொங்கும் கனவுகள்.
எனக்காவது கனவு நிறைவேறும் சிறு பிடி கிடைத்தது. இவர்களுக்கானதோ காலூன்றாத கனவுகள்….
அம்மாவோ…. ஆ, அவள் கனவுகளை வெறுக்க ஆரம்பித்திருப்பாள் பாவம்.
உலகத்தின் அழகுகளை, மானுடத்தின் நல்லம்சங்களை தரிசித்தவள் நான்….
அந்த மருத்துவமனை… ஞானபூமி அது.
உயர்ந்த ரசனையை எனக்குக் கற்றுத் தந்த இடம் அது. எத்தனை அறிவார்ந்த வாழ்க்கை அது அறிவுறுத்தி விட்டது.
இவர்கள் கனவுகள், ஏன் என் கனவுகள், அம்மாவின் ஏமாற்றங்கள்….. எல்லாமான சுயநல வட்டங்களை எனக்கு உணர்த்தி விட்டன.
உலகமோ மிகப் பரந்து விரிந்தது. எல்லையற்றது. இதில் ‘என்’ வாழ்க்கை சார்ந்து அதைப் புரிந்து கொள்வதும், சுய சோகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்வதும், அதிதம். அபத்தம்…. எளிய நிலையே அது.
Life is too short to be spent worrying!
மொட்டை மாடியில் அடிபட்ட மிருகம்போல அவள் உலவிக் கொண்டிருக்கிறாள்.
அப்பாவுக்கு அவளைப் பார்க்க பயமாய் இருந்தது. அவளை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கிட்டே நெருங்கவும் அவருக்கு யோசனையாய் இருந்தது.
சகோதரிகளோ வெனில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபடி பேச நிறைய இருந்தும், வாயில் கட்டி வந்தாற்போல உள்ளம் வலிக்கத் தவிக்கிறார்கள்….
அப்பா ஸ்ரீவித்யாவிடம் “நீ ஒரு காரியம் செய்யி… துக்கத்தை அப்படியே முழுங்கப் பார்க்கறா. அவளால முடியவும் இல்ல. எப்படியும் அவ அழுதாகணும்…. நீ போயி அவ ஃப்ரெண்ட் சுலோச்சனா வீடு தெரியுமா? அவளைக் கூட்டிக்கிட்டு வரியா?” என்கிறார்.
“தெரியும்ப்பா” என்று ஓடுகிறது வித்யா.
அது மருந்துபோல் வேலைசெய்தது.
நிலைமையை சுலோச்சனா சரியாகப் புரிந்து கொண்டிருந்தாள். அவள் உடைத்தாள் அந்தக் காற்று முட்டையை. துயரப்புயலாய், ஈரமாய் அவள்மீது வந்து கவிந்துகொண்டாள் சுலோச்சனா.
மாடியேறும்போதே சுலோச்சனா “அடிக் கட்டித் தங்கமே, உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சிடி…. இப்பிடி ஆயிட்டதே. எல்லாம் சரியா வந்துரும்னு நான் எத்தனை சந்தோஷமா யிருந்தேன் தெரியுமா? உனக்காடி இந்த நிலைமை வந்தது? குருடனுக்கு கண் பார்வை வந்து…. திரும்பவும் போயிட்டாப்ல…. ஆயிட்டதே உன் நிலைமை?” என்று கதறியபடி வந்தாள் சுலோச்சனா.
அழுதபடி அவள் ஜானகியைக் கட்டிக் கொண்டாள்.
அதற்கே காத்திருந்தாற் போல ஜானகி அவள் தோளில் சரிந்து அழ ஆரம்பித்தாள்.
கோடை மழையென அவளிலிருந்து பனிக்கட்டியும் ஊசிக்கால்களுமாய் உறைந்திருந்த கசடுகள் உடைந்து சிதறுகின்றன.
“ஜானகி…. சீதா…. அப்டியெல்லாம் பேர் வைக்கக் கூடாது. அந்தப் பேர் வெச்சவா யாருமே சுகப்பட்டதேயில்லைம்பாங்க…” என்கிறாள் சுலோச்சனா.
“மத்தவங்களைப் பத்தித் தெரியாது… என்வரையில் அது உண்மைதான்” என்கிறாள் ஜானகி.
ஒரு குழந்தைபோல அவள் சுலோச்சனாவின் மடியில் கிடக்கிறாள். ஒரு கன்றுக்குட்டிபோல அவள் சுலோச்சனாவின் வருடலை ஏற்றுக் கொள்கிறாள்.
“அருமையான மனுசன் பாஸ்கர்…. எத்தனை அழகு. ஒரு பந்தா கிடையாது. வந்தவர் எங்க எல்லார் கிட்டயும் எத்தனை இதமா விடைபெற்றுக் கிட்டார் போகும்போது பார்த்தியா? மேனேஜர்ன்ற ஒரு அலட்டல் கிடையாது….”
“உங்க எல்லார் கிட்டயும் சொல்லிக்கிட்டுப் போனார். என்ட்ட ஞாயித்துக்கிழமை வர்றேன்னு சொல்லிட்டுப் போனார்…. வரவேயில்லை” என்கிறாள் ஜானகி. அவள் முதுகு குலுங்குகிறது.
உதட்டைக் கடிச்சிருவேன் – என்கிற அந்தக் குரல், அதன் தாகம், இதுநாள்வரை காத்திருந்த ஆவேசம் அவள் காதில் இப்போதும் எதிரொலித்துக் கொண்டே யிருக்கிறது.
பாவம், அவனுக்கு ஒரு முத்தம் தந்திருக்கலாம்…. அவள் முதுகு குலுங்கியது.
“ஐயோ என் கட்டிக் குஞ்சலமே அழாதடி. உனக்கு எப்படி ஆறுதல் சொல்றது தெரியலையேடி…. நான் சேதி கேள்விப் பட்டதும் உன்னை எப்படியாவது பிடிச்சிறணும்னு பார்த்தேன். நீ சேதி கேள்விப்பட்டவுடனே கிளம்பி மாமனார் கூட இருக்கறதாப் போயிட்டேன்னு சொன்னார். நல்ல காரியம் பண்ணினே இவளே…. பாஸ்கருக்குக் கூட அது ரொம்பப் பிடிச்ச விஷயமா இருந்திருக்கும்….” என்கிறாள் சுலோச்சனா.
மனசுக்கு இதமாய் இப்படிப் பேச எனக்குக்கூட ஆட்கள் இருக்கிறார்களா? அவள் சுலோச்சனாவைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
சுலோச்சனாவின் கை அவளைத் தலையெங்கும் முதுகெங்கும் பரிவுடன் வருடுகிறது.
“இன்னிக்கு என்கூடப் படுத்துக்கோ சுலோச்சனா…. உன்னால முடியுமா?” என்று கெஞ்சினாள் ஜானகி.
“நான் என் வீட்டுக்காரர்கிட்டச் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன் இவளே…. நான் இருக்கேண்டி, நிச்சயமா இருக்கேன். எழுந்துவா. ஒருவாய் சாப்பிடு. மூஞ்சி கழுவிட்டு வா” என்றாள் சுலோச்சனா.
அவள் பதிலை எதிர்பார்க்கவேயில்லை அவள். மாடியில் இருந்து கீழே பார்த்து “மாமி என்ன இருக்கோ கொஞ்சம் பிசைஞ்சி வைங்கோ. குழந்தை பசியா இருக்கா.”
சுலோச்சனா சொன்னதும்தான் அவளுக்குத் தன்பசியே உரைத்தது.
எத்தனை அருமையான சிநேகிதி அவள். என்னை எப்படிப் புரிந்து கொள்கிறாள். என் சார்பில் எனக்காக என்குரலேபோல எப்படிப் பேசுகிறாள்….
அதுவும் வேண்டித்தான் இருக்கிறது.
கீழே இறங்கி முகம் கழுவி சாதாரண வீட்டு உடைக்கு மாறிக் கொண்டாள் ஜானகி.
பழைய உடைகள். அவளுக்கு சாஸ்வதமான உடைகள். பீரோவைத் திறந்து அவள் புடவையை உருவினாள்.
உள்ளேயிருந்து விழுந்தது அந்தப் புகைப்படம். அவனைப் பார்த்துச் சிரித்தாற்போலப் புகைப்படம்.
பாஸ்கரின் படம்.
ஹோவென்று திரும்பவும் அழுகை புரட்டி யெடுத்தது அவளை.
“என்னாச்சி என்னாச்சி” என்று சுலோச்சனா ஓடி வந்தாள். சிரித்தபடி பாஸ்கரின் படம். அதைப் பார்க்கிறாள்.
“சாவு வரலாம்டி கண்ணு. அதைப் பத்தியென்ன… மனுசன்னா சாவு வர்றதுதான்…. அது இத்தனை கோரமா வரக்கூடாது. பாவம் பாஸ்கர்….” என்கிறாள் சுலோச்சனா.
புண்ணின் காயத்தைக் கீறிக் கீறி குணப்படுத்தி ஆற்றுகிறாற் போலவே இருந்தது அவள் பேச்சு.
“அந்த மட்டுக்கு ஒரு நல்ல விஷயம். அவர்பாடு அத்தோடு முடிஞ்சிட்டது. அவரோட அப்பாவை நினைச்சிப்பாரு…. இப்படி அடி செமத்தியாப் பட்டுக்கிட்டு மாசக்கணக்குல படுக்கைல கிடக்க வேண்டிதாப் போச்சே அவர்…. என்னாச்சி, மயக்கம் தெளிஞ்சதா அவருக்கு?”
“இன்னும் இல்ல. காலைல போகணும் நான்” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ஜானகி.
“திருப்பியுமா? அவங்ககிட்ட இல்லாத ஆளுங்களா இவளே?”
“அவர் கண்ணைத் திறந்து பாக்கட்டும்… அதுவரையாவது நான் அவரைப் பார்த்துக்க விரும்பறேன்…. ”
அப்பா ஜானகியைப் பார்த்தார்.
“சாப்பிட வாம்மா. நீயில்லாம எங்களுக்கெல்லாம் சாப்பிடவே பிடிக்கல. குழந்தை வீட்ல சாப்பிட்டே ரெண்டு மூணு நாளாச்சி. இப்பதான் வந்திருக்கா” என்றார் சுலோச்சனாவைப் பார்த்து.

10
அன்றிரவு மழை பெய்தது.
அவளுக்குத் தெரியாது. நல்ல தூக்கம். காலை எழுந்து பார்த்தபோது மழை விட்டிருந்தது.
நானா இப்படித் தூங்கினேன் என்று அவளுக்கு ஆச்சரியம். என்னதான் வசதிகள் இருந்தாலும் ஆஸ்பத்திரியும் வேறிடமும் என்று உள்மனசு குறித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. தூக்கம் சற்று எச்சரிக்கையுடனேதான் இருந்திருக்கிறது.
தவிர மனசில் ஒளிந்துகொண்டு இழையாடிக் கிடந்த துயரம்….
காலை உற்சாகமாய் இருந்தது. அவள் எழுந்து கொள்ளாததில் சுலோச்சனா சொல்லிவிட்டுக் கிளம்பி யிருந்தாள் போல. ஜானகி எழுந்து கொண்டபோது சுலோச்சனா இல்லை.
“இப்போ மணி என்ன?” என்றாள் அம்மாவிடம்.
“ஏழு” என்று அம்மா புன்னகைக்கிறாள்.
“ஏழா” என்று பதறி எழுந்து கொண்டாள் ஜானகி.
“அதனால என்ன இவளே? நீ தூங்கணுன்னா தூங்கு. ராத்திரி நிறையப் பேசிட்டிருந்தியே. அலுப்பாய் இருப்பே….”
“இல்லம்மா. நான் ஆஸ்பத்திரிக்கு வரேன்னிருக்கேன்….” என்று பரபரப்புடன் அவள் காலை கிளம்ப ஆயத்தமாகிறாள்.
“அவர் ஃபோன் பண்ணினார்….” என்றாள் கீதா.
“அவரா?” என்று ஜானகி திரும்பிப் பார்த்தாள்.
கீதா தலையாட்டினாள். “மிஸ்டர் பத்மநாபன்…. பிசிவோ நம்பர் இருக்கில்ல நம்ப அக்கவுண்ட் கடைல. அதுக்குக் கூப்ட்டுப் பேசினார். செல் நம்பர் தந்திருக்கார்.”
“என்ன சொன்னாங்க?”
“மேடம் வரணுன்றதில்லை. நாங்களே பார்த்துக்கறோம். அவங்க வரப் பிரியப்பட்டாற் போலிருந்தது. தகவல் சொன்னா கார் அனுப்பறேன்…. அவங்க ஆப்ஷன்னாரு….”
துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் ஜானகி. மழைத் தண்ணீர் கலந்து சிலீரென்றிருந்தது தண்ணீர்.
ஆஸ்பத்திரியில் குழாயில் வெந்நீர் கொட்டும். இங்கே வெந்நீரும் இல்லை. மேற்கூரை மறைப்பும் இல்லை. யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துப் பார்த்துக் குளிக்க வேண்டும்.
சில நாட்களில் குளித்து முடித்ததும் ஏதாவது பறவை மேலிருந்து எச்சமிட்டு விடும். எரிச்சலாய் இருக்கும்.
நேரமாகி விட்டது…. விறுவிறுவென்று சோப் தேய்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
பத்மநாபனின் செல் நம்பருக்குப் பேசினாள் ஜானகி.
முதன்முதலில் அவனுடன் அவள் அவளாகப் பேசுகிறாள். இந்தத் தொலைபேசியே, அவர்கள் தலைமுறைக்கே மறுக்கப்பட்ட விஷயம் அல்லவா?
படபடப்பாய் இருந்தது. “ஹல்லோ, ஆர் யூ மிஸ். ஜானகி?” என்று மறுமுனையில் உற்சாகக் குரல். எப்படிக் கண்டுபிடித்தான் ஃபோனில், என்று ஆச்சரியம் அவளுக்கு.
“குட் மார்னிங்” என்றாள் ஜானகி. “நாந்தான்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
என் குரலை அவ்வளவு கவனமாக மனப்பதவில் வைத்திருக்கிறானாக்கும்?
“இட்ஸ் ரியலி நைஸ் டு ஹியர் ஃப்ரம் யூ. நைஸ் மார்னிங்” என்றான் அவன்.
“செல்போன்ல காலர்-ஐடி வரும். உங்க பிசிவோ நம்பர் வரும்” என்கிறான் அவன்.
“நல்லாத் தூங்கினீங்களா? உங்களை ஏற்கனவே நிறையத் தொந்தரவு பண்ணிட்டோம்… இல்லியா?”
“எஸ், அன்ட் தட்ஸ் ஓ.கே. சம் டைம்ஸ் அப்பிடி ஆயிருது. உங்களுக்கு உதவியா இருக்கறதுல எனக்கு சந்தோஷந்தான். தொந்தரவு இல்லாம இருக்கறது முக்கியம்…”
“நோ – யூவார் வெல்கம். உண்மைல நீங்க வருவீங்கன்னு நான் சில புது கேசட்டுகள் வாங்கி வெச்சிருக்கேன். உங்களால நானும் சில மியுசீஷியன்ஸை ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்…. ஆஃப் கோர்ஸ் எ லாங் வே டு கோ…. உங்க பாட்டை நான் கேட்டதே இல்லையே ஜானகி?”
“நான் கேசட் ரிலீஸ் பண்ணலை இன்னும்….” அவள் கலகலவென்று சிரிக்கிறாள்.
“சொல்லுங்க பண்ணீறலாம்….” என்கிறான் அவனும் உற்சாகமாய்.
என்னமாய்த் தூண்டில் மாட்டுகிறாப் போலப் பேசுகிறான்…
சடடென்று சுதாரித்துக் கொள்கிற லயமாற்றத்துடன் “கார் அனுப்பட்டுமா மிஸ் ஜானகி?”
“சரி…. நான் காத்திருக்கிறேன்….” என்றாள் அவள். “அப்பாவுக்கு எப்படி இருக்கு?”
“இன்னும் கண் திறக்கல. மதிய வாக்கில் வலி தெரிய ஆரம்பிக்கும் போலிருக்கு. இனிமேதான் அவர் படற பாடு நமக்குத் தெரியும்…. வாங்களேன் பேசுவோம்” என்கிறான் பத்மநாபன்.
“ரைட்” என்று தொலைபேசியை வைக்கிறாள்.
உற்சாகமான ஆள்தான். நேற்று நான் என் மேடுகளை அழுது கரைத்திருக்கிறேன் என யூகித்திருக்கிறான்.
தவிர கீதாவிடம் கேட்டு விவரங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். எல்லாரும் எப்படி நறுவிசாக, பூனைப்பாதம் வைத்தாற் போல இயங்குகிறார்கள்.
காத்திருந்த போது அவன் தன்னைப் பாடச் சொன்னது ஞாபகம் வந்தது. புன்னகை செய்து கொண்டாள்.
அடச்சீ, நாயே – ஒருவேளை என்னை உற்சாகப் படுத்தக் கூட அவன் கேட்டிருக்கலாம். உடனே பெரிய பாடகின்னு ஆரம்பிச்சி அவனைக் கொட்டாவி விட வெச்சிர்றதா…
இதே கட்டுக்கோப்பில் மனம் மீண்டுவிட்டால் நல்லது.
… ஆனால் அதில் பாவனை தெரியாத பேச்சு அவனிடம் இருந்தது. எங்கே என்ன செய்து கொண்டிருந்தானோ?
தினசரி ஒரு சென்ட் வாசனை வந்தது அவனிடம் இருந்து.
அண்ணாவை விட பரபரப்பாய் இருக்க அவன் விரும்பினான்.
அண்ணாவிடம் அந்த மூத்த பிள்ளையின் நிதானம் இருக்கும். அறிந்த நிதானம் அது.
இது கற்றுக் கொள்கிற ஆவேசம் போலிருந்தது….
ஜானகி டீச்சர்…. பேச சட்டுச் சட்டென்று விஷயங்களை உருவாக்கிக் கொள்கிறதே அவளுக்குப் புதிய அனுபவம்தான்.
குதிரையை அடக்கியாள்வதைப் போல, பேச வேண்டிய நேரம், நிதானப் படுகிற நேரம்… என உள் கணக்குகளை இப்படி பொம்மலாட்டம்போல செயல்படுத்துகிறவர்கள் வியாபாரிகளாகப் பெரும் பெயர் எடுக்க முடியும் என்று தோன்றியது அவளுக்கு.
காரை அவனே ஓட்டி வந்தான்.
“வெல். நீங்க தப்பா நினைச்சாலும் பரவால்ல. நவ் யூ சீம்ஸ் ஓ.கே. நேத்து டல்லாயிட்டீங்க திடீர்னு…. இப்டி முன்னாடி வாங்க ஜானகி….” என கார்க்கதவைத் திறந்து விட்டான்.
அவள் புன்னகைத்தாள். வம்புக்கு இழுக்கிற பேச்சாகவே, ஆளை மடக்கி மடித்து வீசுகிற குறும்பாகவே அவன் பேசுவான் போலும்.
தற்செயலாக அவள் பாஸ்கர் வாங்கித் தந்த புடவையையே கட்டிக் கொண்டிருந்தாள்…
நிச்சயமாகி, கல்யாண மண்டபமும் கிடைத்த நிலையில் எல்லாமே திகைத்து நிற்கின்றன.
முதலில் அவள் வேறு புடவைக்குத் தேடினாள். பின் என்ன தோன்றியதோ அதையே கட்டிக் கொண்டாள்.
அதை அவன் கவனித்தான் போலத்தான் இருந்தது. ஒருவேளை அது பாஸ்கர் அவள் வீட்டுக்கு வரும்போது வாங்கி வந்தது என்று தெரியாமல் கூட இருக்கலாம்.
“உங்கப்பா வேலைலேர்ந்து ரிடையராயிட்டாரா?”
“இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு….” என்றாள். அவன் தலையாட்டினான். ஏதோ அவர்கள் பேசியிருப்பார்கள் போலிருக்கிறது… என யூகித்துக் கொள்கிறாள் ஜானகி.
என்ன பேசியிருக்கக் கூடும் என்று மனசில் கணக்குப் போட்டுப் பார்த்தாள். பிடிபடவில்லை. இவள் மனசை அறியவும் கூட அவன் திடுதிப்பென்று இப்படி என் அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தையை நீட்டியிருக்கலாம்.
மேலே பேசுமுன் கார் மருத்துவமனைக்குள் நுழைந்து சிறு உறுமலுடன் நின்றது.

>>>
பாக்யா டாப் 1 மாத இதழ் – நன்றி
தொ ட ர் கி ற து

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்