இரவில் கனவில் வானவில் – (7)

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



தனியே கனவு கண்ட கணங்கள் அவளைக் கேலி செய்தன. வாழ்க்கை பெரும் அலையென எழுந்து மேலே தூக்கியபோது அவள்தான் எத்தனை கிறுகிறுத்துப் போனாள். குடைராட்டினம் போல அப்போது தான் உயர்த்தப் பட்டது தெரியாமல்….
இப்போது கீழே இறங்குகிற முறை போலும். இந்த அடிவயிற்றுச் சிலீர் சிரிப்பாக இல்லை. பயமாக ரொம்ப பயமாக இருந்தது.
எல்லாம் கனவு என மறந்துவிட முடிந்தால் எத்தனை நன்றாய் இருக்கும். தங்கைகளுக்கு அவள் முகத்தைப் பார்க்கவே தெம்பில்லை. அப்பாவைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். கலகலப்பான அந்த வீடே களையிழந்து போயிற்று.
அதிலும் எப்போதும் சிரித்தபடி வளைய வரும் ஸ்ரீவித்யாவின் முகமே அழுதழுது வீங்கி யிருந்தது. அவளிடம் ரகசியமாக கீதா “டீ இப்பிடி அழுதழுது அக்காவை அதைரியப் படுத்திறாதே…. புரிஞ்சுதா?” என்று கண்டித்தது ஜானகிக்குக் கேட்டது.
எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது…. என வறட்சியான ஒரு புன்னகையுடன் நினைத்துக் கொண்டாள். தனிமையான கணங்களோவெனில் அவளை வெருட்டி மிரட்டின.
தாவணி போட்ட அன்றே குனிந்து விளக்கேற்றுகையில் அவள் தாவணி தீப்பற்றிக் கொண்டது… அது ஞாபகம் வந்தது….
சிறிதே சிறிது நேரம்…. சொர்க்கவாசல் திறந்தது. அவள் என்ன என உணருமுன், காட்சி முடிந்து, அவள் தனியே திகைப்புடன் வெளியே, பெரும் கதவுகளுக்கு வெளியே நிறுத்தப் பட்டு விட்டாள்.
இடையே அறிவோ பாஸ்கரின் மரணத்தை நீ இன்னும் பொறுப்புடன் அணுக வேண்டுமாய் அவளை வற்புறுத்தியது. அதுதான் எப்படி என்று புரியவில்லை.
அந்த பத்மநாபன்…. அவனுக்கு துக்கம் இல்லாமல் இருக்குமா என்ன?
முதல் பார்வையிலேயே அவன் உற்சாகம் கொப்புளிக்கிற ஆண் என்று தெரிந்தது அவளுக்கு.
எப்பவுமே மூத்தது கோழை… இளையது காளை என்று சொல்வதுண்டு. பொறுப்பு குறைவு அல்லவா?….
நம் வீட்டிலேயே ஸ்ரீவித்யாவின் வேகமும் கனவுப் படபடப்பும் கண்விரிதலும், பேசும்போதே கிணற்று ஜகடையாய்ச் சிரிப்பு உருண்ட உற்சாகமும் யாருக்கு இருக்கிறது?….
பாஸ்கரின் சாயல் நன்றாய்த் தெரிந்தது
பத்மநாபனிடம். மாடியில் தலைவாரிக் கொண்டிருந்தவள் தூரத்தில் அவனது வண்டி வருவதைப் பார்த்ததும் பாஸ்கர்தான் வருவதாகவே நினைத்தாள். மனசெல்லாம் பூரிக்கக் கீழே இறங்கி வந்தால் செய்தி இடியென அவளில் இறங்கியது.
அண்ணாவுக்குப் பின் பொறுப்புக்கு வந்த தோரணையுடன் அவன் நடந்து கொண்டது அவளுக்குப் பிடித்திருந்தது. எத்தனை பட்டுக் கத்தரித்த பாவனையுடன், மற்றவர்களை அதிர வைக்காத கவனத்துடன், அதேசமயம் எளிமையாய் அவன் பேசினான். எப்பேர்ப்பட்ட குடும்பம்….
சரவணப் பெருமாளைக் கவனித்துக் கொள்ள அவர்கள் வசதிக்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்…. என்றாலும், சட்டென்று நான் முன்வந்தேன். இந்தத் தனிமையைவிட அந்த உலகம் தேவலாமாய் ஒரு சட்டென்ற முடிவு.
மறுகரை சேர்கிற பாஸ்கரின் கடைசிநிமிடங்களைச் சந்திக்க – அமைதியாய்ப் போய்வா நண்பனே, நல்லாத்மாவே… என அவனை அனுப்பி வைக்க அவளுக்குத் திராணியில்லை. மனம் நொறுங்கிப் போகும் போலிருந்தது.
பின் அந்த எளிய சிநேகிதனுக்காய் அவள் எப்படி அஞ்சலி செய்வது என்று உள்ளே ஓடிய குறுகுறுப்புக்கு…. இந்த மிரட்டுகிற தனிமைக்கு…. ஆகாவென அவள் ஒரு முடிவெடுத்தாள். சரவணப் பெருமாளின் ஆஸ்பத்திரி நாட்களில் என்னாலான பணிவிடையில் தான் தன்னைப் பொருத்திக் கொள்வது சுலபமாய் இருந்தது.
விழிவிரிய அயர்ந்துபோய் பிரமிப்புடன் அவளைப் பார்த்தான் பத்மநாபன். அந்தக் கண்களில் நன்றி ததும்பி வழிந்தது.
கண்ணில் கேள்வியுடன் அவன் பஞ்சாட்சரத்தைப் பார்க்கிறான்.
“அவ இஷ்டம்ப்பா…. எங்க ஜானகி முடிவெடுத்தா சரியாத்தான் எடுப்பா” என்கிறார் அவர்.
…. இவள் இன்னும் அவன் குடும்பத்துடனான உறவை…. நட்பைப் பேண விரும்புகிறாள், என்பதே பெரும் ஆறுதலாய் இருந்தது அவனுக்கு. அட இது தேவையில்லை எனவும் ஓர் எண்ணம்.
இனி நீ எங்களை யெல்லாம் மறந்து வேறு திசையில் பயணப் படுவது நல்லது. அதுவே முறை. அதற்காய்ச் சிறுகச் சிறுக உன்னைச் சேகரித்துக் கொள்வது நல்லது பெண்ணே…. எனவும் சொல்ல வேண்டுமானதோர் துடிப்பு அவனுள் எழுகிறது.
அவள் சிறு பெண் அல்ல, முடிவெடுக்கத் தெரியாதவளும் அல்ல. அத்தோடு முற்றிலும் அவளுக்குப் புதியவனான நான் எப்படி இத்தனை சுலபமாக அவளை, என் சிந்தனை வலையின் ஆக்கிரமிப்புடன் அணுகமுடியும்? அது சரியாகுமா, என அவனில் கேள்வி வெட்டியது.
வீட்டில் அப்பாவும் இல்லை. அண்ணனும் இல்லை. அம்மா எப்பவோ போய்ச் சேர்ந்தாயிற்று. முக்கிய தருணங்களில் அத்தை அவனைக் கலந்து கொண்டது ஒரு புது அனுபவம்.
அதுவரை இப்படிப் பொறுப்புகளை அண்ணா அவனுக்கு வைக்கவே யில்லை, எனப் புரிந்தது.
தவிரவும் அவனும் எத்தனை அலட்சியமாக இருந்தான்? விளையாட்டாக இருந்தான். காலை உணவு முதல் கடை கண்ணி வகையறாக்களின் செலவுகள், அண்ணாவின் காரியଭநியதிகள், அப்பாவின் மருத்துவச் செலவும் அவர் அருகே பார்த்துக் கொள்ள, வேளைக்கு அவருக்கு வேண்டிய உணவும் மருந்துகளும் தயார் நிலையில் இருக்க, ஏற்பாடுகள்….
அந்தப் பெண் ஜானகிதான் எத்தனை அருமையாக ஒத்துழைக்கிறாள்
அவளுக்கு என்ன தலையெழுத்து இப்படி இரவும் பகலும் என் தந்தையின் கட்டில் அருகில் கிடந்து அல்லல்பட வேண்டுமென்று?….
இவளைக் கல்யாணம் செய்து கொள்ள அண்ணா எடுத்த முடிவுதான் எத்தனை சரியானது, என அவன் வியந்தான். இவளுக்கு அருமையான இடத்தில் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும். அவன் தன் பொறுப்பும் இருப்பதாய் உணர்ந்தான்.

நன்றி/ பாக்யா டாப் 1 மாத இதழ்
தொ ட ர் கி ற து

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts