இரவில் கனவில் வானவில் 6

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


6

சரவணப் பெருமாளும் பாஸ்கருமாய் பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள்.
புயல் உருவாகி நகரமே தத்தளித்துக் கொண்டிருந்தது. மழை மழை இடைவிடாத மழை. மரங்கள் நடுங்கி ஆடின. பெரும் பெரும் மரங்கள் சாலைகளில் மறித்து முறிந்து கிடந்தன.
“பாத்து மெதுவாப் போ பாஸ்கர்” என்றார் சரவணப் பெருமாள்.
ஜாக்கிரதையான பிள்ளைதான். மெல்லத்தான் கவனமாய்த்தான் போனான். நல்ல பெரிய அகலமான சாலைதான். இருபுறமும் பெரிய பெரிய மரங்கள். காலகாலமாய் நிற்கிற மரங்கள். காலப்பிரமாணமாய் மரங்கள். காலத்தோடு கலந்து காலத்தின் பிம்பமான மரங்கள்.
திடீரென்று அப்படி நிகழ்ந்தது.
ஒரு மரம் இற்றுப்போய் வேரோடு பெயர்த்துக் கொண்டு அவர்கள்மேல் விழுந்தது. சரியாய் அது பாஸ்கர் மேல் விழுந்தது. அப்படியே அந்த மரத்தால் பாஸ்கர் அமுக்கப் பட்டான். பின் சீட்டில் அப்பா. முட்டியில் சரியான அடி அவருக்கு. வண்டி நிலைகுலைந்து சரிய, அவர் விநாடியில் நினைவிழந்து விட்டார்.
நடந்த விவரங்கள் அவருக்குத் தெரியாது.
பாஸ்கர் அந்த இடத்திலேயே இறந்து போனான். அவருக்குத் தெரியாது.
சனிக்கிழமை.
ஜானகி ஞாயிறை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
சனியன்று செய்தி வந்தது. இடி போன்றதோர் செய்தி. அப்படியே உறைந்து போனாள்.
காதால் கேட்கக்கூட முடியவில்லை அந்தச் செய்தியை. ஹா என்று பேரலை ஒன்று கிளம்பி அவள் மூச்சை அடைத்தது. பயத்தை துக்கத்தை அழுகையை மீறியதோர் பிரமிப்பு அது. இதுவா வாழ்க்கை, இப்படியும் நடக்குமா என்கிறதோர் பிரமிப்புதான் முதலில் வந்தது.
“நீங்க?” என்று சேதி கொண்டு வந்தவனைப் பார்க்கிறார் பஞ்சாட்சரம்.
“நான் அவன் தம்பி. பத்மநாபன்.”
அவன் பாஸ்கரைப் போலவே இருந்தான் கிட்டத்தட்ட. அவனே களைப்பாய் உடல்தளர்ச்சியாய் நின்றிருந்தான்,
“அப்பாவுக்கு இன்னும் தெரியாது. அவருக்கு இன்னும் நினைவு திரும்பல. ஆஸ்பத்திரில இருக்கார்….” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் அவன்.
அவனை உட்காரக்கூடச் சொல்லத் தோன்றாமல் வீட்டில் திகைப்பாய் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
அவனே தொடர்ந்து பேச வேண்டியிருந்தது. எல்லாரையும் விட, குறிப்பாய் அவன் ஜானகியைப் பார்த்தபடியே பேசினான். ஆ, இவள் நொறுங்கிப் போவாளோ, இவளைச் சரியாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டுமே, என்றிருந்தது அவனுக்கு. ரொம்ப சூட்சுமமாய் இருந்தான். பிரச்னைகளில் நெருக்கடி நேரங்களில் அவன் அநாவசிய சென்ட்டிமென்ட் தவிர்த்து இயங்குகிறவனாய் இருந்தான்.
மேலோட்டமாய் விளையாட்டுப் பிள்ளைபோலத் தோற்றம் இருந்தாலும் அவன் உள்கவனமாய் இயங்குகிறவனாய் இருந்தான். ஒரு கணக்கில் பஞ்சாட்சரத்தையே அவன் தன் நிதானமான சலனமற்ற போக்கினால் அசைக்கிறவனாய் இருந்தான். பதறாமல் நிதானமாய்ப் பேசினான்.
“நான் தற்செயலாய் நேத்து வந்தேன்….” என்று பொதுப்படையாய்ப் பேசுவது போல இயல்பானதோர் சூழலைக் கொணர அவன் முயன்றான்.
“சரி. இப்ப விஷயம் என்னன்னா, இப்படில்லாம் பேசவே எனக்கு வருத்தமா இருக்கு. எல்லாம் நாம கடந்துபோக வேண்டிய கட்டாயம்.. சில சமயங்கள்ல நிறைய விஷயங்கள் சட்டுச் சட்டுனு நடந்துர்றது. நாம உணர்றதுக்குள்ளவே….” என்று நிறுத்தினான்.
“யாராவது வரணும்னா வாங்க. வரணும்ன்றதில்லை. அந்தமாதிரி ஃபார்மாலிட்டிஸ்ல எனக்கு நம்பிக்கை இல்லை. மனசார நாம எல்லாரும் இந்த இழப்பை உணர்றோம். அந்த இழந்த அற்புதமான மனிதனை நினைச்சுக்கறோம். நான் பேசறது அதிதமா இருக்கா?” என்று நேரே – ஜானகியைக் கண்ணுக்குக் கண் பார்த்து அவன் பேச, அவள் மௌனமாய் இல்லை, என்கிறாற் போலத் தலையாட்டுகிறாள் ஒரு பொம்மை போல. அளந்து பேசுகிறான் இவன். கத்திபோல் பேச்சு.
“இன்னும் காரியங்கள் இருக்கு. நான்தான் பாத்துக்கணும். எல்லாரும் திகைச்சுப் போய் இருக்காங்க. எப்படியும் நிலைமை இன்னும் கொஞ்சகாலம் இப்படித்தான் இருக்கும். காலத்தை நாம தள்ளி விடணும்…. எங்கப்பா….” என நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
“அவருக்கு இன்னும் நினைவு திரும்பல. முட்டி ரெண்டும் நல்லா அடிபட்டுப் பிசகியிருக்கு. ஆனா பெரிசா கவலைப்பட ஒண்ணுமில்லைன்றாங்க டாக்டர்ஸ். அவருக்கு பாஸ்கர் பத்தின விஷயம் தெரியாது. நாம சொல்லவும் முடியாது….”
எல்லாரும் பேச முடியாத திகைப்புடன் வாயடைத்துப் போய் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பத்மநாபன் முதன் முறையாக தொண்டையைச் செருமிக் கொண்டான்.
“இங்க ஆக வேண்டிய காரியம் நிறையக் கெடக்கு. நான் சின்னப் பையன். வேற ஆளும் இல்லை எடுத்து நடத்த…. அத்தை மயங்கி மயங்கி விழறா. அவகிட்டப் பேசவே முடியல.”
ஆ, இவள் நின்றபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். ஜானகி. வேணுன்னா உக்காந்துக்கோ என்று சொல்ல வேண்டுமாய் இருந்தது அவனுக்கு. அவள் காலொடிந்தாற் போல விழுந்து விடுவாளோ என்றிருந்தது. அவளையே பார்த்தபடி பேசினான்.
“சாவு வரலாம். இத்தனை வேகமா வந்ததும், இத்தனை கோரமாய் அது நடந்ததும்….” என்று நிறுத்திக் கொண்டான். சாவு என்ற வார்த்தையை அவன் தவிர்த்திருக்கலாம் போலிருந்தது.
அவன் புதியவன். அவன் முன்னால் ஜானகி உடைந்து அழ முடியவில்லை. கூடாது, என்று பல்லைக் கடித்துக் கொண்டாள். தலை கிறுகிறுத்துச் சுழன்றது. அத்தனைக்கு நடுவே அவன் நிதானத்தோடு பேசுவது எல்லாருக்குமே வேண்டியிருந்தது. அவளையே எத்தனை மரியாதையான கனிவுடன் பார்த்தபடி அவன் பேசினான். பார்வையால் அவளைப் பிடித்து நிறுத்தி யிருந்தாற் போலிருந்தது. கண்வழியே அவளுக்குத் தன் நிதானத்தை அவன் செலுத்தினாற் போல ஓர் உணர்வு. உடம்பே மரத்தாற் போல இருந்தது.
அவன் பேச்சை நிறுத்திய மறுகணம் அவள் பொத்தென்று விழுந்து விடக்கூடும் என்ற பயம் அவளுள் எழுந்தது.
ஹா, வாழ்க்கை…. எத்தனை பேரலையை சுறாமீனின் நாக்குச சுருளல் போல எழுப்பி, வளைத்து, அது மனிதர்களை முழுங்குகிறது. இரு, அவன் என்னவோ இன்னும் பேசுகிறான்….
“அண்ணாவோட காரியங்கள் நடக்கற வரைக்கும் எங்க உறவுக்காரா அத்தனை பேரும் அங்க வேண்டியிருக்கு….” என்று அவன் அவளைப் பார்த்தே பேசிக்கொண்டு போனான்.
அங்கிருக்கிற எல்லாரையும் விட அவளிடம் சொல்லவும் கலந்து கொள்ளவுமே முன்னுரிமை அளித்தான் என்பது அவளுக்குப் புரிந்தது. அந்த அவனது அணுகுமுறை பிடித்திருந்தது.
“அப்பா பக்கத்துல இப்ப, எங்க உறவுக்காரா இல்லாம, உதவிக்கு ஆள் வேணும்…. அவர்கிட்டச் சேதி சொல்லவும் கூடாது. அவரையும் பொறுப்போட கவனிச்சுக்கணும்….”
அதுவரை பேசாதவள் சட்டென்று பேசினாள். “நான் போறேன்.” பஞ்சு நம்ப முடியாதவராய்த் திகைத்துப் போய் அவளைப் பார்த்தார்.
“ஆற காரியங்களை நீங்க பாருங்க. நான் உங்கப்பாவைப் பாத்துக்கறேன்….”
“ஐய அதுக்கில்லங்க” என்று பதறி எழுந்து கொண்டான் பத்மநாபன்.
“என்னை உங்கப்பாகூட விட்ருங்க” என்றாள் ஜானகி ஒரு உறுதியுடன்.

Series Navigation