இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

le1


தொறொன்ரோ பல்கலைக்கழகம்

தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மாநாடு இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நகரங்களில் ஒன்றாகத் தற்போது தொறொன்ரோ விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழியல் கற்கைகளுக்கான ஓரு முக்கிய நகராகவும் தொறொன்ரோவை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டின் மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் வழங்கும் இடங்களது வரலாற்றின் ஒட்டுமொத்த அடையாளம், சமூகத் தொடர்பு, அகழ்வாராய்ச்சி ஆய்வுகள், பண்டை இலக்கியங்கள், இடைக்கால சமய வழமைகள், “தேசியமும்” இக்காலப் புரிதல்களும் எழுச்சியும் போன்றவற்றை தற்கால தென்னிந்தியா, ஈழத்தின் சமூக மற்றும் பண்பாட்டு அடையாள மாற்றங்கள் வழியாக ஆய்வு செய்கின்றன. அத்துடன் கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் வளர்ச்சியையும் பண்பாட்டு வழமைகளையும் கட்டுரைகள் ஆராய்கின்றன.

அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர். மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம்: www.chass.utoronto.ca/~tamils
இந்த இணையத்தளத்தில் மாநாடு, பங்கேற்கும் பேராளர்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்க: tamils@chass.utoronto.ca

அமைப்புக்குழு:
பேராசிரியர் செல்வா கனகநாயகம் (தொறொன்ரோ பல்கலைக்கழகம்)
பேராசிரியர் சேரன் (வின்சர் பல்கலைக்கழகம்)
கலாநிதி தர்ஷன் அம்பலவாணர்

Series Navigation