இயக்குனர் தியோ வான் கோ: முதலாமாண்டு நினைவு அஞ்சலி

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

ஆசாரகீனன்


இஸ்லாத்தில் காணப்படும் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் போக்கையும், பால் சமத்துவமின்மையையும் விளக்கும் குறும்படமான Submissionபற்றியும், அதன் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனர் தியோ வான் கோ (Theo Van Gogh) இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவனால் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் பட்டபகலிலேயே படுகொலை செய்யப்பட்டது பற்றியும் திண்ணையில் எழுதியிருந்தேன். மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் இத்தகைய படுகொலைகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள் கருத்துத் தளத்தில் செயல்படுவது பற்றியும், இந்தப் படத்தின் கதையை எழுதிய ஹிர்ஸி அலி பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் திண்ணையில் எழுதியிருக்கிறேன்.

இயக்குனர் தியோ வான் கோ படுகொலை செய்யப்பட்ட முதலாமாண்டு நினைவு தினம் நவம்பர் 2, 2005 அன்று அனுசரிக்கப்பட்டது. அவர் கொலையுண்ட இடத்துக்கு அருகில் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் நெதர்லாந்து நாட்டின் பிரதமர் யான் பீட்டர் பால்கெநன்டெ (Jan Peter Balkenende) கலந்து கொண்டு பேசினார். ‘நெதர்லாந்து நாட்டில் நமக்கு நெருக்கமான அனைத்தையும் அந்தப் படுகொலை குலைத்து விட்டது, வன்முறை என்பது ஒரு பாதையே அல்ல ‘ என்றார் அவர்.

தியோ வான் கோவின் தீரம் மிக்க கலைத் திறனை விளக்கும் விதமாக இலைகளற்ற தண்டுடன் கூடிய செடிகளும் (Cactuses), புலி பொம்மை ஒன்றும் நினைவிடத்தில் வைக்கப்பட்டன. ஆம்ஸ்டர்டாம் நகர வீதி ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இயக்குனர் தியோ வான் கோவை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய உடலில் குரானின் பக்கங்களைச் செருகி வைத்த முகம்மது பெளயேரி (Mohammed Bouyeri) என்ற இஸ்லாமிய தீவிரவாதிக்கு நெதர்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது தனக்காக யாரும் வாதாட வேண்டிய தேவை இல்லை என்றும், தம் இஸ்லாமிய மத நம்பிக்கைகள் காரணமாகவே இந்தக் கொலையைச் செய்ததாகவும், மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் இஸ்லாத்தின் பெயரால் இன்னொரு கொலையைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் கொலையாளி வெளிப்படையாகத் தெரிவித்தான்.

இந்தக் குறும்படத்தின் கதையை எழுதிய பெண் எழுத்தாளரும், நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினருமான அயான் ஹிர்ஸி அலி இன்னும் பலத்த பாதுகாப்புடன் தலைமறைவாகவே இருந்து வருகிறார். உள் நாட்டில் சரியான பாதுகாப்பு கிடைக்காததால், இவர் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி வந்தது.

ஐரோப்பிய நாடுகளின் இடதுசாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அளித்து வரும் கருத்துத் தளத்திலான ஆதரவு காரணமாக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள பலரும் ஐரோப்பாவை விட்டுவிட்டு அமெரிக்காவில் குடியேறுவது அதிகரித்து வருகிறது. இதேபோல, பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறியுள்ள மற்றொரு பிரபலம் – எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. ஐரோப்பா விரைவிலேயே ஐராபியா (Eurabia = ஐரோப்பா + அரேபியா) ஆகிவிடும் என்ற அச்சமும் ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ளது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தீவிர மார்க்ஸியர் பலரும் அதி-தீவிர இஸ்லாமிஸ்டுகளாக மாறியுள்ளதை முன்னாள் இடதுசாரியான டேவிட் ஹொரோவிட்ஸ் (David Horowitz) ‘Unholy Alliance: Radical Islam and the American Left ‘ என்ற புத்தகத்திலும், பிற கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இயக்குனர் தியோ வான் கோவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், அவருடைய மூன்று குறும்படங்களின் அமெரிக்க வடிவத்தை பிரபல அமெரிக்க இயக்குனர்கள் இயக்கவிருக்கின்றனர். இயக்குனரும் நடிகருமான பாப் பேலபன் (Bob Balaban) ‘1-900 ‘ என்ற படத்தையும், நடிகர் ஸ்டான்லி டுச்சி (Stanley Tucci) ‘Blind Date ‘ என்ற படத்தையும், ஸ்டாவ் புஸெமி (Steve Buscemi) ‘Interview ‘ என்ற படத்தையும் இயக்குகின்றனர். இந்த முயற்சி வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

தியோ வான் கோவின் பாணியில், மூன்று காமிராக்களைக் கொண்டு துரிதமான கதியில் இந்தப் படங்கள் டிஜிடல் முறையில் உருவாக்கப்படும். இந்த முயற்சிக்கு நெதர்லாந்து அரசாங்கம் ஓரளவு நிதியுதவி செய்கிறது. இந்த மூன்று படங்களும் காமத்தை மையமாகக் கொண்டவை.

’06 ‘ என்ற பெயரில் தியோ வான் கோ எடுத்த படம் ‘1-900 ‘ என்ற பெயரில் அமெரிக்க வடிவம் பெறுகிறது. இது தொலைபேசி வழியான காமத்தில் (Phone-sex) ஈடுபடும் இருவருக்கிடையே நடைபெறும் உரையாடலை மையமாகக் கொண்டது. தம் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்ளும் இந்தப் படம் மிகச் சுவாரசியமானது என்கிறார் இயக்குனர் பேலபன்.

புஸெமி இயக்க இருக்கும் ‘நேர்காணல் ‘ (Interiview) படம் தியோ வான் கோவின் உப-தொழிலுடன் சம்மந்தப்பட்டது. வான் கோ தொலைக்காட்சியில் பல நேர்காணல்களை நடத்தியுள்ளார். இந்தப் படம் செய்தியாளர் ஒருவர் மிக அழகான நடிகையுடன் நடத்தும் நேர்காணல் பற்றியது. இருவருக்குமிடையேயான இந்த நேர்காணல் காம/உணர்வு பூர்வமான போட்டியாக மாறும்போது, இருவருமே தங்கள் கடந்த காலம் பற்றியும் ஆசைகள் பற்றியும் பொய்களைச் சொல்கின்றனர்.

டுச்சி இயக்கவிருக்கும் படம் ‘Blind Date ‘. இளம் வயது மகளை இழந்து விட்ட ஒரு கணவனும் மனைவியும் தங்கள் சோகத்திலிருந்து மீள தாம் வேறு யாரோ போல நடித்து, மாற்றுப் பெயர்களில் பத்திரிகைகளின் ‘தனிப்பட்ட உறவு ‘ (Personal ads) பகுதியில் கொடுக்கும் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம்.

இந்தப் படங்களை அமெரிக்க வடிவத்துக்குக் கொண்டு வருபவர் டேவிட் ஷிக்டெர் (David Schechter). ‘வான் கோவின் படங்கள் மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டவை. அதாவது, உணர்வுபூர்வமான மூலப் பொருளை ஒத்த ஆற்றலும், சிறந்த நடிப்பும் அவற்றில் இருந்தாலும் மிக விரைவாக எடுக்கப்பட்டதால் அவை தர்க்கரீதியான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட படங்களைப் பார்க்கும் பொறுமை அமெரிக்க ரசிகர்களுக்குக் கிடையாது. புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் ‘ என்கிறார் அவர்.

aacharakeen@yahoo.com

Series Navigation