இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

மலர் மன்னன்


துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததும் கீழே சாய்ந்த காந்திஜி ‘ஹே ராம் ‘ என்றெல்லாம் சொல்லவில்லை என்று

அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னதை நான்தான் திண்ணையில் பதிவு செய்தேன். காரணமாகத்தான். ஆனால் விவரம் அறிந்த எவரும் இந்திரா பார்த்தசாரதி கருதுவது

போல் அதனைப் பிரச்சினை ஆக்கியதாகத் தெரியவில்லை. ஹே ராம் என்று அவர் சொன்னாரா இல்லையா என்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்பது இ.பா.வின் எண்ணமாயிருக்கலாம். பெரிய விஷயந்தான். அதனால்தான் அவரது சமாதியில் கொட்டை எழுத்துகளில் அவ்வாறு பொறித்து வைத்திருக்கிறார்கள்.

முதலில், திடாரென உயிர் பிரியும் தறுவாயில்கூட இறைவன் பெயரை உச்சரித்த, உண்மையிலேயே மகானாக இருக்கப்பட்டவர் அவர் என உணரச் செய்வது. இரண்டாவதாக ராம நாம மகிமையில் மனம் பறிகொடுக்கும் இயல்பினரான ஹிந்துக்கள் பலருக்கும் காந்திஜி மீது அன்றைய சூழலில் உருவாகியிருந்த வெறுப்பை அகற்றுவதற்கான முயற்சி. தென்னாட்டவருக்கு இந்த வெறுப்பின் தீவிரத்தை அவ்வளவாக உணரவியலாதுதான். மேற்குப் பஞ்சாபிலிருந்தும் கிழக்கு வங்காளத்திலிருந்தும் மானம் மரியாதை, வீடு, வாசல், அனைத்தும் இழந்து, நெருங்கிய உறவினர் கண்ணெதிரே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும், இறந்த பின்னரும் அவர்களின் உடல்கள் இழிவு செய்யப்பட்டதைக் கண்டும் கொதிப்பேறி, அகதிகளாய் வந்துசேர்ந்த ஹிந்துக்களுக்கு காந்திஜியின் மீது அளவிட முடியாத ஆத்திரம் ஏற்பட்டிருந்த சமயம் அது. தேசப் பிதாவின் மீது அப்படியொரு வெறுப்பு நீடிக்க இடந்தரலாகாது அல்லவா ? ஆகவேதான் அவரது இறுதி வார்த்தை ஹே ராம் என்பதாகக் கற்பிக்கப்பட்டது. இந்த உண்மையினை இப்பொழுது தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று வேண்டுமானால் கேட்கத் தோன்றலாம். மறைக்கப்பட்ட உண்மைகளைப் பதிவு செய்தல் அவசியம் என்ற வரலாற்று அக்கறை ஒன்று; விடுதலைப் போராட்ட காலத்தில் மாபெரும் மக்கள் சக்தியைத் திரட்டி, மிகச் சாமர்த்தியமாகத் தமக்குக் கட்டுப்படச் செய்து, தாம் விரும்பிய வண்ணம் அதனைச் செலுத்தத் தெரிந்த அரசியல் தலைவர் என்ற அவருக்குரிய ஸ்தானத்தை அவருக்கு அளிக்க வேண்டுமேயன்றி, மகாத்மா என்கிற பிரபையையெல்லாம் அவரது தலைக்குப் பின்னால் சூட்டிவைத்து, அவரை அசாதாரணமானவர்போல் உருவகப் படுத்தி, இளந் தலைமுறையினருக்கு அவர் சாதனைகள் மீது அவநம்பிக்கை ஏற்பட இடமளிக்கலாகாது என்கிற சமூகப் பொறுப்பு இரண்டாவது.

காந்திஜி மற்ற அரசியல் தலைவர்களைப் போலன்றி, பல் விளக்குவதிலிருந்து மனித சமூகம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் வலியுறுத்தியவர். எவருமே துணியாத அளவுக்குத் தமது பிரம்மச்சரிய திடசங்கற்பம் எந்த அளவுக்கு உள்ளது என்று சோதித்துப் பார்த்த அசாத்த்ியத் தைரியமுள்ள அதிசய மனிதர். மக்கள் நலனில் மெய்யான அக்கறை காட்டியவர். ஆனால் அவரை மகாத்மா என்று வெகு உயரத்தில் தூக்கிவைத்து விட்டால் அதுவே மற்ற பொதுவாழ்

வினருக்குத் தப்பித்தலுக்கான வழிசெய்து கொடுப்பதாகிவிடும். நான் சாதா ஆத்மா. அவரோ மகாத்மா. அவர் மாதிரியான ஒழுங்கை என்னிடம் எதிர்பார்ப்பது எங்ஙனம் சரியாகும் என்று ஒருவர் சுலபமாகத் தமது முறைகேடுகளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டுப் போய்விடக் கூடும். ஆகவேதான் அவரை மகாத்மாவாக அல்லாது நம்மைப் போன்ற மானிடராகக் காண்பதே உசிதம்.

அவரவர் கோணத்தில் தென்படும் உண்மைகளின் வழியாகப் பதிவு செய்யப்படுவதுதான் வரலாறு என்று இந்திரா பார்த்தசாரதி வெகு எளிதாக வரையறுப்பது வியப்பூட்டுகிறது. இதனை நிறுவுவதற்கு வேறு ஒரு நபரின் கூற்றை அவர் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம் அவருக்கு நேர்ந்திருப்பது அதைவிட வியப்பாக உள்ளது. இம்மாதிரியான விஷயங்களில் தமக்கென்று சுயமாக ஒரு கருத்தைக் கொண்டிருப்பதல்லவா சிறப்பு ? இ.பா. சிறந்த சிந்தனையாளர் என்பதை அறிவேன். செஸ்டர்டன் சொல்லிவிட்டார் என்பதால் ஏற்றுக்கொண்டுவிடுதல் தகுமா ? எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதுதானே இ. பா. போன்றோர்க்கு அறிவுடைமை ?

நான் முன்பே தெளிவுசெய்துள்ளவாறு, பத்திரிகையாளருக்குரிய ஒழுக்க விதிகளின் பிரகாரம் பல்வேறு தரப்புகளிலிருந்தும் தீர விசாரித்துத் திரட்டிய தகவல்களைத் திரும்பவும் மறு பரிசீலனை செய்து அறிக்கை தருவதுதான் எனது செயல்முறை. அவற்றில் ஏதேனும் தவறுகள் இடம் பெறக் கூடும். நிச்சயமாக உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. செய்திகளின் வரிகளுக்கு இடையே எனது நம்பிக்கைகளை நான் நுழையவிடுவதில்லை. முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்தை வரித்துக் கொண்டு அதன் தடத்தில் நான் பயணிப்பதுமில்லை.

கீழ் வெண்மணி பற்றி நான் வெளியிட்ட தகவல்தான் இ.பா.வை இவ்வாறு கருத்துத் தெரிவிக்கத் தூண்டியிருக்கும் எனக் கருதுகிறேன். கீழ் வெண்மணிவரை யாத்திரை சென்று குருதிப் புனல் என்கிற நாவலை எழுதி அதற்காகவே சாஹித்திய அகாதமி விருது பெற்றவர் அவர். ஆனால் இன்று அவர் அந்த நாவலைப் படித்துப் பார்த்தால் அது குறித்துப் பெருமிதம் கொள்வது சாத்தியம்தானா ? படிக்கையில், எம்ஜிஆரும் எம்என் நம்பியாரோ, எஸ்ஏ அசோகனோ வரும் திரைப் படம் ஒன்றின் நினைவு அவருக்கு வராமல் போகக் கூடுமா ? சர்வ தேசப் பரப்பிலான சம கால இலக்கியப் படைப்புகளுடன் நல்ல பரிச்சயம் உள்ளவர் இ.பா. நம்மூர் மார்க்சிஸ்டுகளை வேண்டுமானால் குருதிப் புனல் மகிழ்விக்கக் கூடுமேயன்றி அதனை ஒரு மார்க்சிய சிந்தனை வழியிலான இலக்கியப் படைப்பு என அவராலேயே மதிப்பீடு செய்ய இயலுமா ? அவரது வேறு பல படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குருதிப் புனல் எத்தகைய பெறுமானம் உள்ளதாக இருக்கும் ? அவரே அறிவார்.

ஒரு செய்தியைப் பதிவு செய்வதும் அச்செய்தியின் அடிப்படையில் விமர்சனம் செய்வதும் ஒரு பத்திரிகையாளனின் பணிக்குள் அடங்கும் எனினும் அவை இருவேறு பணிகளேயாகும். செய்தி சரித்திரமாகும்; விமர்சனம் ஆய்வேடாகும்.

யூதர் இன அழிப்புச் சம்பவம் பற்றிய கருத்தில் இர்விங்கை ஈரான் அதிபர் ஆதரித்ததை இ.பா. தீவிர வலது சாரியின் மதம் தாண்டிய ஒற்றுமைக்குச் சான்றாகக் காண்பதும் வியப்பிற்குரியதுதான். ஈரான், ஷியா பிரிவு முகமதியத் தீவிரவாத தர்பார் நடக்கிற தேசம் என்பது தெரிந்த சங்கதி. இர்விங் மத அடிப்படையில் தாம் கிறிஸ்தவர் என்பதால்தான் யூதர் இன அழிப்பு நடக்காத ஒன்று என்று வாதிட்டாரா ? யூதர்கள் பொதுவாகவே முகமதியரால் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் எங்கணும் அவர்களின் சுபாவம், நடத்தைகள் காரணமாக வெறுக்கப்பட்டவர்கள்தாம். பாரதம்தான் இதில் விதி விலக்கு. ஈரானின் பாரம்பரியமான யூத துவேஷம் இர்விங் கருத்தை ஆதரிக்கச் செய்திருக்குமேயன்றி இதில் மதம் தாண்டிய தீவிர வலதுசாரி ஒற்றுமைக்குச் சான்று எங்கே உள்ளது ? இர்விங் அல்லாது ரொமிலா தாப்பர் மாதிரியான இடதுசாரி நபர் அவ்வாறு கூறி யிருப்பினும் அதனை ஈரான் வரவேற்றிருக்கும்தான்!

அதே இரண்டாம் உலகப் போரின்போது கம்யூனிச ரஷ்யாவின் ஸ்டாலின் அமெரிக்க முதலாளித்துவத்துடன் கை கோத்துக் கொண்டது எதனைத் தாண்டிய ஒற்றுமைக்குச் சான்று ? அவ்வளவு தூரம் போவானேன், இங்கே மத்தியில் இடதுசாரிகள் எதைத் தாண்டிய ஒற்றுமைக்குச் சான்றாகத் தமது ஜன்ம விரோதிபோல் பாவிக்கும் காங்கிரசுடன் கரம் கோத்துள்ளனர் ? சீனா எதனைத் தாண்டி இன்று அமெரிக்க சகவாசத்தை விரும்புகிறது ?

இங்கே தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்திலிருந்து கிளை பிரிந்த கட்சிகளை லும்பன் என்று வர்ணிக்கும் இடதுசாரிகள் தேர்தல் வரும்போது மட்டும் நாலைந்து தொகுதிகளில் இடம் பிடிக்கவேண்டும் என்பதற்காக அந்த லும்பன் தலைமையில் வாக்கு வேட்டைக்குப் புறப்படுகிறார்களே, அது எந்த ஒற்றுமைக்குச் சான்று ?

மேடையில் எச்சரிக்கிறார்கள், தனிமையில் நச்சரிக்கிறார்கள் என்று இதுபற்றிக் கிண்டல் செய்வார், கருணாநிதி!

மேலும், ஈரானுக்குத் தீவிர வலதுசாரி என்கிற முத்திரையெல்லாம் இல்லை. அது ஒரு இங்கிதமற்ற மத அடிப்படைவாத அனாசார ஆட்சி நடைபெறும் நாடு. அது வலதுசாரி நாடெனில் மேற்கத்திய தேசங்கள் அதனை ஒதுக்கிவைக்கக் கூடுமோ ?

இன்னோரு விஷயம். இனஅழிப்பு சரி என்று வாதாடுவதுதான் பல நாடுகளில் சட்டப்படிக் குற்றமேயன்றி இனஅழிப்பு நடைபெறவில்லை என்று ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூறுதல் அல்ல. இனஅழிப்பு நடைபெறவில்லை என உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டுவதாயிருப்பின் அது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் அத்துமீறல் எனக் கண்டனம் செய்வதுதான் அறிவுடைமையாக இருக்குமேயன்றி அதனை ஒரு பாராட்டுக்குரிய அம்சம்போல் தெரிவிப்பது உசிதமல்ல. அவ்வாறாயின் காலத்திற்கு ஒவ்வாத முகமதியச் சட்டங்களையெல்லாம், பத்வாக்களையுங்கூட, ஒப்புக்கொள்ளும்படியாகிவிடும்.

இ.பா. எனக்குக் கிடைத்த பல நண்பர்களுள் முக்கியமானவர். அவரது பெயரைக் காணும்போது எனக்குப் பழைய நினைவுகள் யாவும் வருகின்றன. அவர் வீட்டில் அவர் அமெரிக்கா செல்லுமுன் நடந்த வழியனுப்புதல் போன்ற கூட்டத்திற்கு மிகவும் தற்செயலாகவே நான் சென்றேன். திருமண மண்டபம் தவறுதலாகப் போய்விடுகிற மாதிரி!

அவரைப் பார்த்ததும் முந்தைய நினைவுகளும் வந்தன. 1978 வாக்கில்தான் நான் முதன் முதலில் அவரைச் சந்தித்தேன். முனைவர் பட்டம் பெற வேண்டிய அவசியம் காரணமாக ராமாநுஜர் பற்றிய ஆய்வேடு எழுதும் பொருட்டு அவர் நீண்ட விடுமுறையில் சென்னை வந்திருந்தார். கணையாழி அலுவலகத்தில் அறிமுகம் ஆனார். பட்ட மேற்படிப்பு மாணவர் விடுதியில் அறை கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று சொன்னார்.

அந்தச் சமயத்தில் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தவர் கோவை பிஎஸ்ஜ்ி குழுமத்திற்குரிய ஜி.ஆர். தாமோதரன். என்னால்தான் தமக்குத் துணை வேந்தர் பதவி வாய்த்தது என்பதில் தாமோதரனுக்குச் சந்தேகமில்லை. அதில் ஓரளவு உண்மையும் உண்டு. சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது யாரை நியமிக்கலாம் எனப் பலரிடமும் ஆலோசனை கேட்ட முதல்வர் எம்ஜிஆர், என்னிடமும் ஏனோ கேட்டார். நான் கல்விமானோ பேராசிரியனோ அல்ல என்ற போதிலும்! நான் தாமோதரன் பெயரைக் குறிப்பிட்டேன். அது பற்றி தாமோதரனிடமும் தெரிவித்திருந்தேன். சில நாட்களில் அவர் துணை வேந்தராக நியமனம் ஆகிவிட்டார்!

இ.பா.வைத் துணை வேந்தர் தாமோதரனிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தேன். தமது குருதிப் புனலின் ஆங்கில மொழிபெயர்ப்பான River of Blood பிரதியொன்றைச் சம்பிரதாயமாக து.வே.க்கு இ.பா. அன்பளித்தார். வந்த நோக்கத்தை தாமோதரனிடம் தெரிவித்தேன். உடனே து.வே. இ.பா.வுக்கு அறை கிடைக்கச் செய்தார். இ.பா. அந்த அறையிலிருந்து கொண்டுதான் மாயமான் வேட்டை என்கிற நாவலையும் த்ினமணி கதிருக்காக எழுதத் தொடங்கினார்.

இ.பா.வைத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதும் ஒருவேளை இன்றைக்கு பேஷனாக வர்ணிக்கப்படலாம் என்பதால் முன்கூட்டியே இந்த நிகழ்வைப் பதிவு செய்கிறேனேயன்றி வேறு நோக்கம் ஏதும் இல்லை. அவர் சென்னையில் இருந்த

வரை, அநேகமாகத் தினந்தோறும் என் வீட்டில் பல விஷயங்கள் குறித்து உரையாடுவதில் பொழுதைப் பயன்படுத்தி வந்தோம்.

கணையாழியில் இ.பா. எனது பிர்ஸா பகவான் பற்றிய, தீீபத்தில் வெளிவந்த மலையிலிருந்து வந்தவன் என்ற நாவலைச் சிலாகித்து எழுதியதும், நான் கோஷ்டி எதுவும் சேர்த்துக் கொள்ளாததால்தான் அந்த நாவல் உரிய கவனம் பெறவில்லை என அதில் குறிப்பிட்டிருந்ததும்கூட இப்போது ஞாபகம் வருகிறது.

பிர்ஸா பகவான் வாழ்க்கையை நான் நாவலாக எழுதக் காரணமே, அவன் வனவாசிகளிடையே கிறிஸ்தவ மிஷனரிகள் மூர்க்கத் தனமாக மத மாற்றம் செய்து வந்ததை முழு மூச்சுடன் எதிர்த்தான் என்பதுதான். விடுதலைப் போராளியான அந்த வன வாசியின் நாமத்தை பாரத தேசத்தின் பிற உத்தமர் பெயர்களோடு சேர்த்துக்கொண்டு அனுதினமும் அவனுக்கு வந்தனமும் வணக்கமும் தெரிவிக்கும் பிரார்த்தனை கீதம் இசைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது, ஆர். எஸ். எஸ். இயக்கம்.

++++

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்