இன்னும் சில வார்த்தைகள், நட்புணர்வுடன்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

வெங்கட் சாமிநாதன்ஜனாப் ‘வஹாபி’ அவர்கள், பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்கள் சார்பாக எனக்கு விளக்கம் தர முன்வந்ததற்கும் தந்துள்ள விளக்கங்களுக்கும் அவை வந்துள்ள வரைக்கும் எனது நன்றி. முதன் முறையாக, குரானே படித்தறியாத, இஸ்லாம் பற்றி மார்க்க அறிஞர்களிடம் படித்தறியாத ஒரு கா·பிர் விளக்கம் கேட்டால் அதற்கு பதில் அளிக்கிறேன் என்று தம் பீடத்திலிருந்து இறங்கி வந்துள்ள பெருந்தன்மைக்கும் என் நன்றிகள். பெரும்பாலும், இப்படி எந்த கா·பிராவது சங்கடமான கேள்விகள் கேட்டுவிட்டால், “அவதூறு, வசை” என்று சொல்லி நகர்ந்து விடுவது தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதை மீறிய முதல் காலடி வைப்பு, எனக்குத் தெரிந்த வரை, வஹாபி அவர்களதாக இருக்கிறது. அவரது பதிலகள், மறுபடியும் நான் வசையாளர்கள்/வெறுப்பாளர்கள் அனியில் இருப்பதாகச் சொல்லும்போது மரபு சார்ந்தும், இருப்பினும் ஒரு வெறுப்பாளருக்கு சிரமப்பட்டு விளக்கங்கள் தர முயலும்போது மரபு மீறியும் உள்ளன. பரவாயில்லை. கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத் தான் எல்லா முதல் அடி வைப்பும் இருக்கும். முற்றாக வஹாபி அவர்கள் தன்னை மரபிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் அவர் தன்னை ‘வஹாபி” என்று அறிவித்துக் கொண்டு விட்டபிறகு. நாகூர் ரூமி போல, வஹாபி தன் புனைபெயர் பின்னிருக்கும் அடையாளங்களைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நான் வசையாளர்/வெறுப்பாளருடன் சேர்ந்து விட்டதாக அவர் எனக்கு லேபிள் ஒட்டியிருப்பதும் எனக்கு புதிய அனுபவமில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்கு லேபிள் ஒட்டப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது போல ஏதும் இசைகேடான கேள்விகள் கேட்டு அவர்கள் அதிர் வடையும் போதெல்லாம், ‘அமெரிக்க ஏகாதிபத்யத்தின் கைக்கூலி’, ‘சி.ஐ.ஏ. ஏஜெண்ட்’, ‘அமெரிக்காவிலிருந்து மணி ஆர்டர் வருகிறது’, ‘தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பிளவு படுத்த வந்த உளவு ஆள்,” என்ற வகையில் தான் என்னை அவர்கள் எதிர் கொண்டார்கள்.. அவர்கள் இப்போது தலித் இலக்கியத்தையும் ஸ்ட்ரக்சுரலிஸத்தையும் போஸ் மாடர்னிஸத்தையும், மதச் சார்பின்மையையும், இன்ன பிறவற்றையும் காக்க களத்தில் குதித்து விட்டதால், இப்போது அந்த பழைய ரெடி மேட் லேபிள்களைக் கைவிட்டு விட்டார்கள். சிலர், தம்மை கிறிஸ்துவ நாடார்களாக (முதலும் பிரதானமுமாக நாடார், பின்னர் கிறித்துவர் ) ரகசியத்தில் தங்களைக் காண்பவர்கள், நவீன முல்லாக்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள். இந்தத் தலைமுறைக்கு, அவர்கள் விட்ட இடத்தில் தொடர பேராசிரியர் முகம்மது ர·பி அவர்களும், மார்க்க அறிஞர் வஹாபி அவர்களும் வந்திருக்கிறார்கள். எனக்கு இந்த மாதிரி வசைகள் கேட்டு நாற்பது வருஷத்துக்கும் மேலாக பழக்கம்.

நான் குரான் படித்ததில்லை. இஸ்லாமிய சரித்திரமும் படித்ததில்லை. குரான் வாசகங்கள் அதன் அரபி மூலத்தில் கவித்வமானவை, சக்தி வாய்ந்தவை, கம்பீர தொனி கொண்டவை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததும் பிடித்தவையும் உருது கவிதைகளும், சூ·பி இசையும் தான். முன்னாள் குடியரசுத் தலைவர் டா. ஜாகிர் ஹ¤சேன் பேசக் கேட்டிருக்கிறேன். அந்த உருது ஒரு அனுபவம். போகட்டும். விஷயத்துக்கு வரலாம்.

வஹாப அவர்கள் மேற்கோள்களாக சிரமம் எடுத்துக் கொடுத்துள்ள குரான் வாசகங்கள், பின்னர் ஹதீஸ்கள் எல்லாம் எனக்கு அரேபியாவில் ஒரு கால கட்ட வாழ்க்கையை, சில சரித்திர நிகழ்வுகளை, அசாதாரணமான, இயல்பு நிலை அற்றுவிட்ட நாட்டின் கதியில் ஒரு சக்தி வாய்ந்த தலைவர் ஒரு ஒழுங்கை, வரைமுறையை நிலைநாட்ட முயல்வதின் பதிவுகளைச் சொல்கின்றன. அவ்வப்போது வஹியாக தன்னை வந்தடைந்த இறை மொழியை முகம்மது நபி சொல்ல உடனே யாரும் அப்படியே பதிவு செய்திருக்க சாத்தியமில்லை. காலம் கடந்து பின்னர் தான் அவை எழுதப்பட்டிருக்கவேண்டும். எழுதியவர்கள், குரான் வாசகங்களின் சொல்லப்பட்ட கம்பீரத்திற்கும் கவித்வத்துக்கும், அரபி மொழியில் வல்லமை பெற்றவர்களாகத் தான் இருந்திருக்க வேண்டும். பைபிள் மாதிரி தான். எத்தனையோ நூற்றாண்டுகளாயின ஏசு வாழ்ந்த காலத்துக்கும் அதிகாரபூர்வமான பைபிள் எழுதப்படுவதற்கும் இடையே. வேதங்களும் வாய்மொழி மரபிலே தான் காற்றில் மிதந்து வந்தன பல நூற்றாண்டுகளாக.

குரானின் சரித்திர, காலகட்ட குணங்கள் பற்றி இஸ்லாமிய சரித்திரம் அறிந்தவர்கள் தான் சொல்லவேண்டும். அதெல்லாம் சரி. ஆனால், இப்போது வஹாபி அவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களைப் படிக்கும் போது 1400 வருஷங்களுக்கு முந்திய அரபிய சமுதாயத்தில் உள்நாட்டுப் போரின் போது நடந்த நிலையற்ற, அமைதியிழந்த கால கட்ட நிகழ்வுகளைச் சொல்லக் கேட்பது போல இருந்தது. இதில் பேசப்படும் தர்மங்கள், சொல்லப்படும் நியாயங்கள் போரில் நிலை குலைந்த சமூகத்தினதாகத் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால்,

போரில் கைது செய்யப்பட்டவர்கள் படைவீரர்கள் மட்டுமல்ல. பெரும்பாலும் சாதாரண குடிமக்களும் தான். இந்த விவரங்கள் சொல்லப்படும் தோரணையைப் பார்த்தால் அவர்கள் கைதான மனிதர்கள் இல்லை. கொள்ளையடிக்கப் பட்ட பொருட்கள் போலத்தான் பாவிக்கப் பட்டார்கள்.. அந்தப் கொள்ளைப் பொருட்களைச் சொந்தம் கொண்டாடும் முறையில் தான் சில விதிகள், கட்டுப்பாடுகள் சொல்லப்படுகின்றன. முகம்மது நபி தோன்றி இவ்விதிகளைப் பிரகடனம் செய்யும் முன் எந்த கட்டுப்பாடும் இல்லாத ஒரு அராஜக நிலை இருந்ததென்று தோன்றுகிறது. அதனால் தான் இவை குரானில் இடம் பெற்று பாராயணத்துக்கு உகந்ததாகியுள்ளது போலும். தனக்கு வலக்கரம் உரிமை யுடைய எல்லோரையும் படுக்கைக்கு அழைக்க முடியாது. ஆண்களும் இருப்பார்களே. கிழங்களும் இருப்பார்களே. அதற்காக இளம் பெண்களைப் பொறுக்கி உடனே படுக்கைக்கு இட்டுச் செல்லமுடியாது. அவர்கள் மாதவிடாயில் உள்ளவர்களா, கருத்தரித்தவர்களா என்றெல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது. தாயோடு மகளையும் பிடித்துச் செல்லமுடியாது. இப்படியான விதிகள். ஈட்டுத் தொகை கொடுத்தோ கொடுக்காமலோ அவர்களை விடுவிக்கலாம். அவர்களைத் தம் அணியைச் சேர்ந்த எல்லோருக்கும் வேண்டியவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கலாம். முகம்மது நபி தன் மருமகன் அபுல் ஆஸ¤ம் கைதிகளில் ஒருவனாகப் பார்த்தபோது தன் தோழர்களின் அனுமதி பெற்று ஈட்டுத் தொகை இல்லாமலே விடுதலை செய்கிறார்………

(ஒரு சின்ன சந்தேகம், வஹாபி அவர்களே. இதில் நேசகுமார் சொன்னது போல “ஏலம்” எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்கள். உண்மை தான். 7-வது நூற்றாண்டு அரேபியாவில் இன்று நாம் அறிந்த ஏலம் இல்லை தான். யாரும் தெருவில் ஒரு மேஜையைப் போட்டுக்கொண்டு, விலை( asking bid) சொல்லி ஏலத் தொகை கூடக் கூட, “ஒரு தரம், இரண்டு தரம் ” என்று கூவவில்லை தான். ஆனால் இதில் தேர்வு, ஈட்டுத் தொகை என்றெல்லாம் பேசப்படும் இடத்தில், 7-நூற்றாண்டு அரேபியாவில் இன்றைய ஏலத்தின் ஆரம்பங்களைத் தானே பார்க்கிறோம்?)

“எனக்கும் முத்தலி குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கிவிடுகிறேன்”. என்கிறார் நபி. இன்னொரு இடத்தில் கைதிகளில், யூத இனத் தலைவரின் மகள், ஸ·பியாவை திஹ்யா என்னும் தோழர் கேட்க அவருக்கு ஸ·பியாவைத் தந்துவிடுகிறார் முகம்மது நபி. ஆனால் “ஸ·பியா உங்களுக்குத்தான் ஏற்றவள்” என்று ஒரு தோழர் சொல்ல, முகம்மது நபி, ஸ·பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளைப் பார்த்ததும், தோழர் சரியாகத்தான் சொல்கிறார் என்று தெரிந்து ஸ·பியாவை தனக்கு என வைத்துக் கொள்கிறார். திஹ்யாவின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, திஹ்யாவைப் பார்த்து கருணை கூர்ந்து “உனக்குப் பிடித்த வேறொரு பெண்ணை எடுத்துக்கொள்” என்று சொல்கிறார். (புடவைக் கடையில் “இந்தக் கலர் எனக்கு இருக்கட்டும், அதை வேணா நீ எடுத்துக்கோ” ங்கற மாதிரி) பின் ஸ்·பியாவுக்கு இஸ்லாத்தைப் பற்றி உபதேசம் செய்து, அவளை இஸ்லாமியப் பெண்ணாக்கி தன் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆக, எல்லோருக்கும் ஈட்டுத் தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்கப் படும். ஆனால், சிலருக்கு first preference உண்டு. ஈட்டுத் தொகை கொடுத்தோ கொடுக்காமலோ. மிஞ்சியது மற்றவர்களுக்கு.

ஆக அவரும் தான் விதித்த கட்டுப்பாடுகளுக்கு தன்னையும் ஆட்படுத்திக் கொள்கிறார் தான். ஆனால், இதெல்லாம் ஏதோ போரில் கொள்ளையடித்த பொருட்களை எல்லோரும் பங்கு போட்டுக்கொள்ளும் காரியமாகத்தான் தெரிகிறதே தவிர கைது செய்யப்பட்டவர்கள் தன் சக ஜீவன்கள், தன்னைப் போன்ற மனிதர்கள் என்ற நினைப்பில்லை. இப்படித்தான் அமைதிக் கால தர்மங்கள் குலைந்து போகும். இலைங்கையில் இன்று முகாம்களில் இருக்கும் தமிழர்கள், இராக்கில் கைதானவர்கள் என்ன மனிதர்களாகவா நடத்தப் படுகிறார்கள்? அவர்கள் போர்க்கைதிகள் அல்லவா?.

ஆனால் வஹாப் சாகேப் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. அவர் இன்றைய இஸ்லாமிய பழக்கங்களுக்கும் பார்வைக்கும் நியாயம் கற்பிக்கும் தோரணையில் தான் தன் விளக்கங்களைத் தருகிறார். எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் தர்மங்களாகப் பார்க்கிறார். ஏதோ ஒரு சரித்திர காலத்தில் அரபிய நாட்டில் அப்படி நடந்ததை, ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க இனமக்களை அடிமைகளாக வாங்கி கப்பலேற்றவில்லையா? 1807-ல் 1809-ல் நடந்தது தெரியாதா? என்ற பாவனையில் பேசுகிறார். வாஸ்தவம் தான். நடந்தன தான். ஆனால் அதை இன்று நியாயப் படுத்துகிறவர்கள் உலகில் எங்கும் இல்லை. யாரும் இதை கிறித்துவ மதத்தோடு உறவு படுத்துவதில்லை. ஏசுவின் உபதேசமாகச் சொல்வதில்லை. இக்கொடுமைகளுக்குக் காரணம் அவ்வக்கால சமூகத்தில் நிலவிய அராஜக செயல்பாடுகள். அதை தாங்கிப்பிடித்த மிருக பலம். இன வெறி. இயேசு காலத்தில் ஒழுக்கங்கெட்ட பெண்ணை ஒரு மனிதக் கூட்டமே கல் எறிந்து தண்டனை கொடுத்தது. அதை இயேசு தடுக்கவேண்டி வந்தது. “ஆமாம், நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்கோ?”என்று கண்டித்து. அது ஒரு கால கட்ட மனித சமூகத்தின் அவலம். மீண்டும், அது அவலம் தான். இன்று அந்தக் கல்லெறியும் கூட்டம் criminal mob-ஆகப் பார்க்கப்படுவார்கள். இன்று எந்த கிறித்துவ, யூத குருமாரும் இதற்கு மதச் சாயம் பூச வெட்கப் படுவார்கள். இது எங்கோ நிலவிய பண்டைய கால கொடூர நடைமுறை. ஆனால் இதற்கு மத அங்கீகாரம் கொடுத்து நடைமுறைப் படுத்துவதை ஒரு சில இஸ்லாமிய சமூகங்களில் முகம்மது நபி பிறந்த சௌதி அரேபியாவில், பாகிஸ்தானில், காண்கிறோம். இதை பாகிஸ்தான் குடியரசுத் தலைவர், பர்வேஸ் முஷ்ஷர·ப் (speedy inexpensive justice) என்று சொன்னார். அது ஒரு வக்கிரம் பிடித்த பார்வை. இருப்பினும் திரும்பவும் சொல்லலாம். ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சமூகத்தில் நிலவிய கொடூர நடைமுறை. அதை என்றென்றைக்குமான ஒன்றாக, தர்மமாக, ஷரியாத் சொல்கிறது என்று சொல்லி மத ஒப்புதல் தருவது கொடூரம் தான். அதைத் தான் பேராசிரியர் முகம்மது ர·பி சொல்லப் போய் அவருடைய முஸ்லீம் நண்பர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவந்தது. பாவம், பேராசிரியர். என் போன்ற கா·பிர்களிடமிருந்து வந்தாலும் அவர் நம் அனுதாபத்துக்கு உரியவர். வேறு எந்த மதத்தினரும் நினைத்தே பார்க்காத ஒரு கொடுமையை கொடுமை என்று சொல்லி எதிர்க்கக்கூட இன்று 2009-ல் ஒரு பேராசிரியர் வாதாட, அல்லல்பட வேண்டியிருக்கிறது. வஹாபி அவர்கள் அது பற்றி ஏதும் சொல்லவில்லை. அவரும் பேராசிரியர் நண்பர்களைப் போல இதில் பேராசிரியர் முகம்மது ர·பியியுடன் கோபத்தில் இருக்கிறாரோ என்னமோ தெரியவில்லை. என்ன இருந்தாலும் தன்னை ‘வஹாபி’ என்று சொல்லிப் பெருமை கொள்பவராயிற்றே!. பேராசிரியரைப் போல “ரூமி” என்று சொல்லிக்கொள்ளவில்லையே.! அந்த ஒரிஜினல் ஜலாலுதீன் ரூமியே கிட்டத் தட்ட ஒரு கா·பிர் மாதிரிதான்.

ஒரிஸ்ஸாவில் ஒரு கிராமத்து குடிசை வாசி இரவு குடித்து விட்டு வந்து போதையில் தன் மனைவியுடன் வந்த சண்டையில் ‘தலாக்’, தலாக்’ என்று மூன்று முறை சொல்லிவிடுகிறான். காலையில் அவன் போதை தெளிந்ததும் அதையெல்லாம் மறந்து விடுகிறான். ஆனால் இந்த சம்பவத்தைக் கேட்ட அண்டை அயலாரும் அந்த ஊர் முல்லாவிடம் சொல்ல, அந்த முல்லா ‘தலாக்’ சொன்னது சொன்னது தான், இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று சொல்லிவிடுகிறான். கணவனும் மனைவியும் இது போதையின் விளைவு என்று சொல்லியும் முல்லா கேட்பதாயில்லை. இந்தக் கொடுமைக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்? முல்லா மதத்தின் பெயர் சொல்லி தன் மூர்க்கத்தன அதிகாரத்திற்கு புனிதப் போர்வை போர்த்துகிறான். ஹரியானாவில், ராஜஸ்தானில் கிராமப் பஞ்சாயத்துக்கள் இப்படித்தான் சாதி பணம், அதிகார ஆசை இவையெல்லாம் குல வழக்கம், சாதிப் பெருமை என்று சொல்லி தம் மூர்க்கத்தனத்திற்கு நியாயம் தேடுகின்றனர். குல வழக்கத்தைக் கெடுத்து விட்டான் என்று ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்ட இளம் தம்பதிகளின் பெற்றோர்களே அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள். இதற்குப் பெயர் குல தர்மம் காத்தல். ஒரு காலத்தில் சதி, உடன் கட்டை ஏறுதல் எல்லாம் ஹிந்து சமுதாயத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இருந்தன தான். அப்போதும் அக்கொடுமைகளுக்கெல்லாம் சாஸ்திர நியாயம் சொன்னார்கள். இக்கொடுமைகளை எதிர்த்தவர்களை ஹிந்து விரோதிகள் என, மிலேச்சர்கள் என குற்றம் சாட்டினர். எந்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது? என்று ராஜா ராம் மோஹன் ராய் கேட்டார். பதில் இல்லை. அது ஒரு கால கட்டம். அதைத் தாண்டி ஹிந்து சமுதாயம் வந்து விட்டது. யூத கிறித்துவ சமுதாயம் பெண்ணுக்கு கல்லெறிந்து சாவு என்று தண்டனை என்று கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டது போல. இன்று இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மத, சாஸ்திர நியாயம் சொன்னால் சிரிப்பார்கள்.

பகவத் கீதை ஹிந்துக்களுக்கு தேவ வாக்கு தான். கண்ணன் தெய்வம் தான். “எதிர் அணியில் நிற்கும் என் உறவினர்களை, என் குருக்களை நான் எப்படிக் கொல்வேன்? இவர்களைக் கொன்று கிடைக்கும் எதுவும் வேண்டாம்” என்று போர் புரிய மறுக்கும் அர்ஜுனனு க்கு கண்ணன் சொல்கிறான், “அழிவது அவர்களது சரீரமே, ஆத்மா அல்ல. ஆத்மா அழிவற்றது சரீரம் நிலையற்றது. ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவை கொலை செய்வதாகச் சொல்வதும், கொலைபடுவதாகச் சொல்வதும் அறியாமை” என்று இப்படிப் போகிறது. கண்ணனே சொல்லிவிட்டான், பகவத் கீதை சொல்லிவிட்டது என்று இன்று யாரும் ஆத்மா அழிவற்றது என்று சொல்லி அண்ணன் தம்பியைக் கொல்ல அரிவாளை எடுத்துக் கிளம்புவதில்லை. கொலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அது இதிஹாஸ நிகழ்வு. அததற்கு அததன் சந்தர்ப்பம், காலம் உண்டு. இன்று அண்ணனும் தம்பியும் பிஜேபியிலும் காங்கிரஸிலும் போட்டியிடுவார்கள். தந்தையிடம் ஆசி பெற்று ஒருவரை ஒருவர் எதிர்த்து பிரசாரம் செய்கிறார்கள். இது இன்றைய குரு§க்ஷத்திரம். மகா பாரதத்தில் குந்தி மாதாவே சொல்லிவிட்டாள், “கொணர்ந்த பரிசை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றால், இன்று அப்படிச் சொல்லும் குந்தியைக் காணமுடியாது. இன்று எந்த அர்ஜுனனையும் தன்னதைப் பகிர்ந்து கொள்ளச் சொல்ல்முடியாது. இன்றைய அர்ஜுனனும் அதைச் செய்யமாட்டான். அது இன்றைய தர்மமில்லை. அன்றைய தர்மமுமில்லை.

ஆனால் இதை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய பேரறிஞர் (PTV யில் அடிக்கடி குரான் பிரசங்கம் செய்பவர்) ஏதோ பழைய உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தன் வாதத்திற்கு அரண் செய்வதாக மேற்கோள் காட்டுவது போல, (அந்தக் காலத்தில் தில்லியில் எங்கள் கேபிள் காரர் பட்டியலில் பாகிஸ்தான் டி.வி.யும் இருந்தது) பகவத் கீதையில் இந்த அத்தியாயத்தில், இன்ன ஸ்லோகத்தில் (எண் எல்லாம் சொல்லி), குரான் சொல்வதைத்தான் ஹிந்துக்களின் கடவுள் கிருஷ்ணனும் சொல்கிறார் என்பார். கூட்டம் மலைத்துப்போய் மூச்சுப் பேச்சற்று இருக்கும்.(அந்தக் காலத்தில் திராவிட கழக பேச்சாளர்கள் ஹிந்து புராணங்களை நம்மை விட அதிகம் படித்து எதெது பிரசாரத்துக்கு பயன்படும் என்று குறித்து வைத்திருப்பார்கள்). அது போலத்தான் இந்த அறிஞரும். ஆனால் அவர் பெயர் நினைவில் இல்லை. ஒல்லி மனிதர். சுமாரான உயரம் ஹோசி மின் மாதிரி தாடி இருக்கும். இவரது குரான் பேருரை வழக்கமாக ஒலி பரப்பாகும். எங்கோ வெளிநாட்டில் ஒரு அப்பாவி, “முஸ்லீம் மதம் மாறினால் அது மரண தண்டனை விதிக்கத் தக்க குற்றம் என்கிறீர்களே? என்று கேட்டு விட்டார். அந்த அறிஞர் உடனே சொன்னது, “ஆமாம், ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறுவது it is an act of treason. Treason–க்கு என்ன தண்டனை?. மரணம் தானே?” என்றார். கூட்டத்தில் பெருத்த கைதட்டல். அவ்வப்போது குரான் ஒதுவார்கள் பி.டி.யில். அது ஒரு அறிமுகத்துடன் தொடங்கும் “முகம்மது நபி தோன்றும் வரை உலகமே இருளில் ஆழ்ந்திருந்தது. உலகின் இருளைப் போக்கி ஒளி தந்தவர் நபிகள் நாயகம் தான்” – என்று ஒரு அசரீரி ஒலிக்க இருண்டிருக்கும் டி.வி. திரை மெல்ல மெல்ல ஒளிரத் தொடங்கும். பைபிளில் வருமே, “And then the Lord said, ‘Let there be light”. And there was light” என்று. அந்த மாதிரி தான். ஆனால் ஒன்று. PTV-யின் சீரியல்கள் நம்ம சீரியலை விட எவ்வளவோ மேல். சரி போகட்டும் விஷயத்துக்கு வரலாம்.

போதையில் சொன்ன ‘தலாக’ தலாக் தான் என்று ஆணையிட்ட முல்லாவை எதிர்த்து எந்த முஸ்லீம் மதத் தலைமையும் ஒரு கண்டனம் சொன்னதாக செய்தி இல்லை. இன்று ஒரு மாநிலத்தின் அமைச்சரே, ஒரு பெண்ணின் மேல் ஆசை வைத்தால், முதல் மணைவியை ஒதுக்கிவிட்டு தன் ஆசைக்கிழத்தியை மணம் செய்துகொள்ள வசதியாக இஸ்லாமியராகிறார். அவர் மதம் மாறியது இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தால் கவரப்பட்டு அல்ல. கிரிமினல் குற்றத்திலிருந்து தப்பிக்க. இஸ்லாம் இப்படிப்பட்ட போக்கிரித்தனங்களுக்கு இடம் கொடுக்கவேண்டுமா?

குரானில் நாம் காண்பது, நீங்கள் எல்லாம் சொல்வதிலிருந்து, 1400 வருடங்கள் முந்திய ஒரு பாலைவனப் பிரதேசத்தின் போர்க்கால நிலையை, அக்கால தர்மங்களை, வாழ்க்கை நியதிகளை. அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை 2009-க்கு எடுத்துக் கொள்ள முடியுமா? நீங்களும் அப்படி எடுத்துக் கொள்வதில்லை. உலகம் அறியும் உங்களுக்கு சௌகரியமானவற்றை, சுகம் தருவனவற்றை, ego-வை ஊதிக்காட்டுவனவற்றை நீங்கள் பொறுக்கிக்கொண்டு, மற்றவர்களுக்கு மற்றதைத் திணிக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு உடை. பெண்களுக்கு வேறு. வெளியில் உலவ உங்களுக்கு சுதந்திரம். மற்றவர்களுக்கு நீங்கள் விதிக்கும் கட்டுப் பாடுகள் அவர்களை அவமானப் படுத்துகிறவை. திறந்து வைத்த இறைச்சி என்று பெண்ணைச் சொல்லும் ஒரு முல்லாவை என்ன சொல்வது? . நேற்று வரை பக்ரீதுக்கு ஆடு பலி கொடுத்தவர்கள், இப்போது ராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள். செய்தி படித்தேன். இனி அவர்கள் டீ காபிக்கு ஒட்டகப் பால் தான் வேண்டுமென்று சொல்லக் கூடும். அரேபியாவில் 7-ம் நூற்றாண்டில் வாழ்க்கை எப்படி இருந்ததோ அப்படி இங்கு வாழ்வது தான் ஒரு இஸ்லாமியன் சொர்க்கத்திற்கு தாமதமின்றி express train-ல் போகும் தகுதி தரும் என்று நம்புவது போல் இருக்கிறது. இல்லாவிட்டால் அங்கு மதுக்குடங்களுடன் காத்திருக்கும் கன்னியர்கள் ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும். வெகு சமீப காலமாக, தெருக்களில், பஸ் நிறுத்தங்களில், கல்லூரிகளுக்கு வெளியே, ஒரே கருப்பு கோஷாக்கள். ஆண்டவன் அருளிய அழகிய முகங்கள் இப்படியா ஆகவேண்டும்? மிகவும் வேதனையாக இருக்கிறது வஹாப் அவர்களே. அப்துல் கலாம், பர்வீன் சுல்தானா, அபீதா பர்வீன், படே குலாம் அலி கான் போன்றவர்கள் எல்லாம் எந்த விதத்திலும் குறைபட்ட முஸ்லீமகள் இல்லை. இவர்கள் வாழ்க்கைக்கு அழகும் வண்ணமும் சேர்த்து உன்னதமாக்கியவர்கள். ஷேக் சின்ன மௌலானா சாஹிப் தியாகராஜ கீர்த்தனை வாசிக்கக் கேட்டிருக்கிறீர்களா, அன்பரே. இல்லையென்றால், வாழ்க்கையில் நீங்கள் இழந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியாது.


வெங்கட் சாமிநாதன்/17.6.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்