இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

தேவமைந்தன்


சாளரக் கண்ணாடி வழியாய் ஊடுருவும்
ஒளிக்கதிர் காட்டும் தூசியின்
நீக்கமற நிறைந்த அறைக்குள் நடனம்.
இருந்த இடத்தில் இருந்தவாறே
வலமும் இடமுமாய் நகர்ந்து கொண்டே
வலைக்குள் தளைப்பட்ட பூச்சிகளை
வாய்க்குள் அவசரம் ஏதுமின்றி
மெல்லத் திணிக்கும் சிலந்தி மூலைகள்.
இரவின் இருளில் எதுவும் மங்கலாய்
அஞ்ஞான சாட்சி; மாயத் தோற்றம்.
குறுகலான இந்த வசிப்பில்
கும்மிருட்டுந்தான்
சூழ்ந்துகொண்டால்தான் என்ன?
இருக்கவே இருக்கிறது என்னிடம்,
இருபுறமும் மருந்து தேய்ந்துபோன
தீப்பெட்டி. அதன்-உள்
எஞ்சியிருக்கும் ஒற்றைத் தீக்குச்சி
சமாளித்துப் பற்றிக் கொண்டு,
அணைவதற்குள் ஒளியேற்றும்.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation