இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

பாவண்ணன்


1982ல் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. சமுதாயா என்னும் கன்னட நாடகக் குழுவின் கிளை அந்த மாவட்டத்தில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்தது. ‘குரிகளு ‘ என்னும் நாடகத்தை அப்போது பரவலாக எல்லா இடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்கள். குரிகளு என்றால் ஆடுகள் . அரசியல் அங்கத நாடகம் அது. எந்த யோசனையும் இல்லாமல் தலைமை சொல்கிற கட்டளைகளையெல்லாம் தலைமேற்கொண்டு தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு வீழ்கிற மக்களைப் பற்றிய நாடகம். அங்கத உத்தியில் அந்த நாடகம் மிகச் சிறப்பான முறையில் இயக்கப்பட்டிருந்தது. மக்கள் சுயசிந்தனையே இல்லாமல் யாரோ ஒரு தலைவன் பின்னால் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். இன்னொருவன் தோன்றி ஈர்ப்பான அழைப்புகளை முன்வைத்ததும் முதலாமவனை விட்டு இரண்டாமவன் பின்னாலும் ஓடுகிறார்கள். மக்களின் செயல்களில் எந்தத் தர்க்கமும் இல்லை. ஈர்ப்பான அழைப்புகளே மக்களை மயக்கப் போதுமானவை என்று தலைமைக்குப் புரிந்து விடுகிறது. மேலும் மேலும் ஈர்ப்புகளைக் கூட்டியபடி பல தலைவர்கள் தோன்றி மக்களைத் தம் பக்கம் அழைக்க முற்படுகிறார்கள். இப்படிப் போகிறது நாடகம்.

மக்களைப் பற்றிய சற்றே மிகையான படிமம்தான் இது. ஆனாலும் அடிப்படையில் இருக்கிற உண்மையை மறுக்க முடியாது. திடார் திடார் என்று அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் தோன்றி மக்களை ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிற சந்தர்ப்பங்கள் பெருகிக் கொண்டே போவது கவலையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

திருக்குறளில் இறைமாட்சி என்றொரு அதிகாரம் இடம்பெறுகிறது. அரசனாக இருப்பவனுடைய பண்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது அந்த அதிகாரம். அந்த அதிகாரத்தின் முக்கியமான குறள் ‘கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி ‘ என்பதாகும். கொடை குணம், இரக்கம், செங்கோல், மக்கள் நன்மையில் அக்கறை ஆகிய குணங்களை அரசர்களுக்கு வலியுறுத்துகிறது குறள். அந்தக் காலத்தில் அரசர்கள் என்றால் இந்தக் காலத்தில் தலைவர்களுக்கும் இக்குறள் பொருந்தும்.

இக்காலத் தலைவர்களோ மேற்சொன்ன எந்தக் குணங்களும் இல்லாதவர்கள். மாறாக, நடிப்பையும் தந்திரங்களையும் மட்டுமே துணையாகக் கொண்டவர்கள். இவையெல்லாம் மக்களுக்கும் தெரியும். ஆனாலும் அத்தலைவர்கள் பின்னால் ஓடுகிறார்கள். அவர்கள் கட்டளைக்கு உடன்படுகிறார்கள். தெரிந்தும் எப்படி இவ்வாறு நடக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. தலைவர்களின் நடிப்பும் தந்திரங்களும் இவர்களிடமும் இருக்கிறது. ஒரு தந்திரம் மற்றொரு தந்திரத்தை ஈர்க்கிறது. ஈர்க்கப்படும் இடத்திலிருந்து எவ்வளவு பங்குகளை உடலோடு ஒட்டி எடுத்து வரமுடியும் என்ற மாற்றுத் தந்திரம் செய்கிறது மற்றொரு தந்திரம். வாழ்க்கை நடிப்பு விளையாட்டாகவும் தந்திர விளையாட்டாகவும் மாறி விட்டது.

நாடகம் பார்த்து விட்டுத் திரும்பிய அன்று மனத்தில் அசை போட்ட எண்ணங்களுக்கு மேலும் மேலும் வலிமை ஏறிக்கொண்டிருக்கிறதே தவிர, எண்ணங்களை மாற்றிக் கொள்கிற அளவுக்கு சூழல் இன்னமும் மாறி விடவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தந்திரங்கள் முன்னைப் போலன்றி இப்போதெல்லாம் வெளிப்படையாகவே தெரிகின்றன எனச் சொல்லலாம்.

அன்று இரவு படுக்கப் போகும் போது சட்டென ஒரு பழைய சிறுகதை மனத்தில் மின்னியது. அதுவும் அங்கதத் தொனியோடு எழுதப்பட்ட ஒன்று. சார்வாகனின் ‘கனவுக்கதை ‘ அது. பிற்காலத்தில் தந்திரத்தலைவர்களை நினைத்தும் அவர்கள் பின்னால் ஓடுகிற மக்கள் கூட்டத்தை நினைத்தும் வருத்தம் பெருக உட்கார்ந்து விடும்போதெல்லாம் தவறாமல் மனத்தில் நிழலாடத் தொடங்கும் கதை இது.

கதையில் நான்கு நண்பர்கள் வருகிறார்கள். ஒருவர் இனிப்புக்கடை வைத்திருக்கிறார். மற்றவர்கள் அக்கடையில் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் அதிக நடமாட்டமற்ற கடை அது. ஆனாலும் கடை வைத்திருக்கும் நண்பர் இனிப்பு வாங்க அதிக நெரிசல் ஏற்பட்டால் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றித் தீவிரமாக யோசித்து மூன்று தட்டுத் தராசு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதைப் பற்றிச் சொல்கிறார். அப்போது சாமியார் போலத் தோற்றமளிக்கும் ஒருவர் கடைக்குள் வந்து ஒருகிலோ இனிப்பு வாங்கிக் கொண்டு செல்கிறார். விட்ட இடத்திலிருந்து பேச்சு மீண்டும் தொடர்ந்து சூடு பிடிக்கிற தருணத்தில் தெருக்கோடியை நோக்கிக் கூட்டம் கூட்டமாக மக்கள் ஓடுவதைப் பார்க்கிறார்கள் நண்பர்கள். கடையை விட்டிறங்கி நண்பர்கள் வேடிக்கை பார்க்கச் செல்கிறார்கள். அவர்கள் கண்களை அவர்களால் நம்ப முடியவில்லை.

இனிப்பு வாங்கிச் சென்ற சாமியார் மையமான மேடை ஒன்றின் மீது நிற்கிறார். அவர் கையில் இனிப்புப் பொட்டலம். மக்களைப் பார்த்து ஏதோ சொல்கிறார். உடனே அவர் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறது கூட்டம். நின்ற இடத்தில் அப்படியே உட்காரச் சொல்கிறார் சாமியார். உட்கார்ந்து விடுகிறார்கள் மக்கள். குனிந்து வணங்கச் சொல்கிறார் சாமியார். மக்கள் குனிந்து வணங்குகிறார்கள். நிமிரச் சொன்னதும் நிமிர்கிறார்கள். இனிப்பை மக்கள் கூட்டம் நோக்கி வீசி எரிகிறார் சாமியார். அந்த இனிப்புத் துண்டுகளைப் பொறுக்கியெடுத்துக் கொள்ள மக்களுக்குள் கடும்போட்டி ஏற்படுகிறது. அதற்குள் மறைந்து விடுகிறார் சாமியார். இனிப்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டவர்கள் பிரசாதமாக அதை எண்ணி ஆனந்தத்துடன் ஊதி ஊதிச் சாப்பிடுகிறார்கள். கனவா, நனவா என்று புரியாத நண்பர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துத் திரும்புகிறார்கள்.

மக்களின் மனநிலையைப் படிமப்படுத்த முயற்சி செய்கிறது கதை. இனிப்பைத் தருபவன் யார் ? அவன் எதற்காகத் தமக்கு இனிப்புகளைக் கொடுக்க வேண்டும் ? அவனுக்கும் தமக்கும் என்ன உறவு ? தமக்கு இனிப்பை வழங்க வேண்டும் என்று அவன் ஏன் நினைக்கிறான் ? தமக்கு அச்சந்தர்ப்பத்தில் இனிப்பு தேவைதானா ? முகமறியாதவனிடம் இனிப்பை வாங்கிச் சாப்பிடலாமா ? எந்தக் கேள்வியும் அவர்களிடம் எழவில்லை. யாரோ எப்படியோ இனிப்பைத் தருகிறார்கள், அதன் துண்டைத் தம் நாக்கும் ருசி பார்த்தால் போதும் என்று மட்டுமே நினைப்பவர்களாக மாறி விடுவதுதான் துரதிருஷ்டவசமானது. மக்களுடைய நாக்குக்கு ருசியாக இனிப்பைக் கொடுப்பவன் மக்களிடமிருந்து ருசியாகத் தம் நாக்குக்கு எதை எடுத்துக் கொள்வான் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. அரசியல், சமயம் எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற திடார் தலைவர்களின் வருகையும் அவர்களுக்குச் சட்டெனக் கிட்டி விடும் ஆதரவும் ஆபத்தானவை. ஆனால் இந்த ஆபத்தை யாரிடம் சொல்ல ? வர இருக்கிற ஆபத்துகளை அறியாமல் குனிந்து இனிப்புத் துண்டுகளைப் பொறுக்கும் மும்முரத்தில் இருக்கும் மக்களுடைய கவனத்தைத் திசை திருப்புவது எப்படி ?

*

மிக அதிக அளவில் எழுதவில்லை என்றாலும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதியவர் சார்வாகன். தொழில்முறையில் மருத்துவர். முப்பதாண்டுகளுக்கும் மேல் எழுதியவர் என்றாலும் அவருடைய முதல் தொகுப்பு 1993ல்தான் க்ரியாவின் வெளியீடாக வந்தது. தொகுப்பின் தலைப்பு ‘எதுக்குச் சொல்றேன்னா ‘ . ‘கனவுக்கதை ‘ ஞானரதம் என்னும் இதழில் 1971ல் வெளிவந்தது. அந்த ஆண்டின் மிகச்சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனையால் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்