இந்த வாரம் இப்படி – மே 13 2001

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதாவின் வெற்றி

ஆமாம் இது தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். சாதியக் கட்சிகள் வன்னியர்- தேவர் இணைவு, ம தி மு கவின் கடைசி நிமிடப் பிரிவு கருணாநிதியின் சில மேம் போக்கான நடவடிக்கைகள் எல்லாம் காரணமென்றாலும், ஜெயலலிதா தன் வெற்றிக்காக அமைத்த வியூகமும் கணக்கீடுகளும்தான் இந்த வெற்றிக்குக் காரணம். கடந்த முறை இருந்தது போல் ராஜிவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை இப்போது இல்லை. ஜெயலலிதாவின் குற்றங்களை முன்னிறுத்தித் தான் இந்தத் தேர்தல் நடைபெற்றது. ஜெயலலிதாவைத் தேர்தலில் நிற்க விடாமல் கருணாநிதி சதி செய்கிறார் என்ற ஜெயலலிதாவின் பேச்சை யார் நம்பினார்கள் என்று தெரியவில்லை. அமைப்பு ரீதியாய் இணைந்துள்ள கிருஷ்ணசாமி-திருமாவளவனைக் காட்டிலும், இன்னமும் எம் ஜி ஆர் பெயருக்கு தலித் மக்களிடம் உள்ள தனிப் பட்ட முறையிலான செல்வாக்கை நம்பித் தான் ஜெயலலிதா தலித் அமைப்புகளை விலக்கி வைத்தார். அந்தக் கணக்கீடும் வெற்றி அளித்துள்ளது. மதிமுக 5 சதவீதம் ஓட்டு வாங்கியிருக்கிறது. ஆனால் அந்த ஓட்டைச் சேர்த்தாலும் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கணக்குக் காட்டுகிறது. அதே நேரம் இன்னும் காங்கிரசுக்கு காங்கிரஸ் பேர் சொல்லும் தமகாவுக்கும், பாமகவுக்கும் உள்ள ஓட்டு வங்கியும் நிரூபணமாகி இருக்கிறது. அதிமுக தோன்றியகாலத்திலிருந்து காங்கிரஸ் ஓட்டு எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப்பக்கமே வெற்றி என்பதும் பரிபூரணம். அதே நேரம் தட்டுத்தடுமாறி பெறுகின்ற அதிமுக அணி வெற்றியின் போது தமாகாவுக்கும் பாமகவுக்கும் ஆட்சியில் பங்கு வரும் என்று கணக்குப் போட்டு சேர்ந்த இரண்டு கட்சியினரும் இன்று மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவேண்டிய நிர்ப்பந்தம். இந்த நிலை மூன்றாவது அணி தோன்றியிருந்தால் அதில், பாமக, தமாக, திருமாவளவன் கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை இணைந்து நின்று, தேர்தலைச் சந்தித்திருந்தால், ஒரு நல்ல எதிர்க்கட்சி அணி தோன்றியிருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அரசியலிலிருந்து குற்றவாளிகளை விலக்கி வைக்க வேண்டும் என்ற குரல்கள் ஏன் அர்த்தமில்லாமல் போகின்றன என்று யோசித்துப் பார்த்தால், லஞ்சம் ஒரு குற்றமாகவே கருதப் படவில்லை என்றுதான் தோன்றுகிறது. எல்லோரும் அவரவர் அளவில் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தயாராய் உள்ள ஒரு மன நிலை உரிவாகி விட்டது. ‘பணப்புழக்கம் இல்லை ‘ என்பது லஞ்சம் இல்லை என்பதன் குறியீடாகத்தான் இந்தத் தேர்தலில் பயன்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. லஞ்சம் வாங்காதவன் பைத்தியக் காரன் என்று ஒரு பேச்சும் சர்வ சாதாரணமாய்க் கேட்கிறது. அதனால் வருமானத்துக்கு மீறிய சொத்துச் சேர்த்த ஜெயலலிதா ஒரு பெரும் குற்றவாளியாக அல்லாமல் புத்திசாலியாய்க் கருதப் பட்டார். இந்தச் சமன்பாடுகளை மனதில் வைத்துத் தான் எதிர்காலச் செயல்பாடுகள் உருவாக வேண்டும்.

ஜெயப் பிரகாஷ் நாராயண் மாதிரி யாராவது பைத்தியக் காரர்கள் இந்தச் சங்கிலித் தொடரினை அறுக்க முயற்சி செய்தால் தான் உண்டு. அதற்கான எந்த நம்பிக்கையையும் தமிழக மக்கள் இப்போது கொடுக்கவில்லை.

***

கேரளாவில் இடதுசாரிகள் வெளியேற்றம் : வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும்

சோனியாவிற்கு கேரளாவில் வெற்றி; வங்காளத்தில் தோல்வி என்று சொல்ல வேண்டும். இரண்டு மானிலங்களும் இடது சாரிகள் ஆட்சிக்கு வந்தனர் என்பதால் இந்த இரண்டு மானிலங்களின் அடிப்படைகள் ஒன்றேபோல் என்று கருத முடியாது. கேரளாதான் முதன் முதலில் சாதியக் கட்சிகளைப் பெருமளவில் உருவாக்கியது என்பது பலருக்கு நினைவில் வருவதில்லை. நாயர் சர்வீஸ் சொசைடியும், நாராயண தர்ம பரிபாலன சங்கமும் (ஈழவர்களுக்கானது) போன்ற பல அமைப்புகள் அங்கு உள்ளன. தேர்தலில் பலவிதங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன. வங்காளத்தில் நிலைமை வேறு. இடது சாரிகள் – இடதுசாரிகளுக்கு எதிராக காங்கிரஸ் என்று ஒருவித திட்டவட்டமான பிரிவு உருவாகி விட்டது. இதனைச் சாதித்ததை ஜோதி பாசுவின் சாதனை என்று சொல்லலாம். இடது சாரி அரசு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்குமா என்பது பெரும் கேள்வி.

***

ஆர் கே நாராயண்

ஆர் கே நாராயண் மரணம் இந்திய எழுத்துலகிற்குப் பெரும் இழப்பு. அவருடைய மால்குடி கதைகள் மெல்லிய உணர்வுகளைக் கொண்ட சாதாரணர்களின் கதைகள் ‘சுவாமியும் நண்பர்களும் ‘ ‘மிஸ்டர் சம்பத் ‘ போன்ற கதைகளின் அடிப்படையான நகைச்சுவையும் மனித நடவடிக்கைகளில் உள்ள கேலியும் தவற விடலாகாதவை. இந்திய ஆங்கிலம் என்ற வகைக்கு நாற்பதுகளின் உதாரணம் அவர். சல்மான் ரஸ்டி போன்றவர்களுக்கு அவர் முன்னோடி என்பது பொருந்தாததாய்த் தோன்றக் கூடும். ஆயினும், ‘அரசியின் ஆங்கிலம் ‘ தான் நல்ல ஆங்கிலம் என்ற பிரமையை அவரும் கூட விலக்கி வைத்தவர் தான்.

***

நேரடித்தேர்தல் ஒளிபரப்பு

சன் டிவியில் தேர்தல் நேரடி ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரும் திணறுகிறார்கள். திமுக தோற்றதற்காகத் திணறவில்லை. சரியாகப் பேசத்தெரியாமல் திணறுகிறார்கள். சற்றுநேரம் படு மெளனம். இப்போது தண்டபாணி அவர்களிடம் பேசினோம் என்று நடந்தகாரியத்தை சொல்லி வழிகிறார்கள்.

***

போலீஸ் ஆதரவு தெரிவிக்கும் வன்முறை

ஜான்பாண்டியன் பரிதி இளம் வழுதியைத் தாக்குவதை போலீஸார் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் என்று படித்து ஆச்சரியம். அதிமுகதான் ஜெயிக்கும் என்று போலீசுக்குத் தெரியுமா என்ன ?

முன்பு பரிதி இளம் வழுதி தன்னந்தனியாக அதிமுக அராஜகத்தை சட்டசபைக்குள்ளேயே சந்தித்தவர். இப்போது என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கத்தான் வேண்டும்.

இன்னும் கொளுத்தப்படப்போகும் பஸ்கள், எரியப்போகும் மாணவிகள், செருப்படிப்படப்போகும் ஆடிட்டர்கள், குளத்தில் மூழ்கி இறக்கப்போகும் பக்தர்கள், கட்டவுட் மேலே விழுந்து மரணிக்கப்போகும் ஸ்கூட்டர் ஓட்டுனர்கள், நடத்தப்படப்போகும் திருமணங்களுக்காக ஆர்வமுடன் பல கோடி தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ‘நான் எதைச் செய்வேன் என்று எதிர்பார்த்து மக்கள் ஓட்டுப்போட்டார்களோ அதைச் செய்யப்பாடுபடுவேன் ‘ என்று கூறியிருக்கிறார்.

***

Series Navigation