இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

செல்வன்


இந்தியா சுதந்திரம் பெற்றதும் நேரு சோஷலிசப்பாதையில் இந்தியாவை கொண்டு சென்றார்.ரஷ்யாவை ரோல்மாடலாகக் கொண்ட இம்முறையில் உற்பத்தியை விட வினியோகமே முக்கியமானதாகக் கருதப்பட்டது.இம்போர்ட் சப்ஸ்டிட்யூஷன் எனும் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு இந்தியா பின்பற்றியது.Be Indian,buy Indian, garibi hatavo,தேசியமயமாக்கல்,பொதுவுடமை போன்ற கவர்ச்சிக் கோஷங்களும் இந்தியா முழுவதும் உச்சரிக்கப்பட்டன.
1947 முதல் 1992 வரையிலான காலகட்டத்தை பொருளாதார நிபுணர்கள் பல கிண்டலான பெயர்களில் அழைப்பார்கள்.லைசன்ஸ் ராஜ், control regime என்பார்கள்.அதாவது ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தியை பெருக்க வேண்டுமானால் அரசிடம் அனுமதியோ லைசன்ஸோ பெற வேண்டும்.டில்லிக்கு காவடி தூக்கி அந்த துறையை பற்றி சுத்தமாக எதுவும் தெரியாத ஐ.பி.எஸ் அதிகாரியிடமோ அல்லது அமைச்சரிடமோ உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வாங்க வேண்டும்.3000 மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்யும் கம்பனி 4000 மூட்டையாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் டில்லியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.(லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்)

வெள்ளையர்கள் மீதான அவநம்பிக்கை தான் இறக்குமதி மறுப்பு கொள்கைக்கு முக்கிய காரணம்.இக்கொள்கை நமது தொழில்துறையை கிட்டத்தட்ட முடக்கி குட்டிச்சுவராக்கியது.நவீன இயந்திரங்கள்,தொழில்நுட்பம் கிடைக்காததால் இந்திய தொழிற்சாலைகள் உலகின் மற்ற நாடுகளின் தொழிற்சாலைகளை விட பின் தங்கின.லைசன்ஸ் முறை போட்டியை ஒழித்ததால் மட்டுமே இத்தொழிற்சாலைகள் உள்ளூர் சந்தையில் தாக்குப்பிடித்தன.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1960ல் இருந்து 1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் காரை குறிப்பிடலாம்.உலகின் ஆடொமொபைல் துறை இக்காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது.டயோட்டா,Honda போன்ற கம்பனிகள் புதுப்புது மாடல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உலக சந்தையை ஆகிரமித்து அசுர வளர்ச்சி அடைந்தன.தீவிர போட்டியால் விலைகுறைப்பு,புது தொழில் நுட்பம்,புது டிசைன்கள்,எரிபொருள் சேமிப்பு என பலவற்றை செய்தே தீரவேண்டிய கட்டாயம் இன்னுறுவனங்களுக்கு ஏற்பட்டன.அதனால் வாடிக்கையாளருக்கு நன்மையும் ஏற்பட்டது.இக்கம்பனிகளும் திறமை வாய்ந்தவையாயின,.

அம்பாசிடர் கம்பனிக்கு(Hindustan Motors) இந்த போட்டி போடும் பிரச்சனை எல்லாம் கிடையாது.கார் இறக்குமதி,புதுகார் கம்பனி ஆரம்பிப்பது,பழைய கார்கம்பனிகள் உற்பத்தியை பெருக்குவது இவை அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டிருந்தன,அதனால் அம்பாசிடர் கம்பனிக்கு போட்டி என்பதே இல்லாமல் போனது.உற்பத்தியை விட தேவை மிக அதிகம் என்பதால் விற்பனை செய்யவும் சிரமப்படவேண்டியதில்லை.விளம்பரமும் தேவைஇல்லை.நவீன தொழில்நுட்பமும் தேவை இல்லை.தரத்தை உயர்த்த வேண்டிய சிரமமும் இல்லை. Price control சட்டம் இருந்ததால் விலையை பற்றி கவலைப்பட வேண்டிய பிரச்சனையும் இல்லை.சுருக்கமாக சொன்னால் சந்தைபடுத்துதுதலின் 4P’s( Product,price,place and promotion ) பற்றி ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் கவலைப்பட வேண்டியதில்லை என்றாகிவிட்டது.

அம்பாசிடர் என்றில்லை,அனைத்து துறைகளிலும் இந்நிலை தான் காணப்பட்டது.ஸ்கூட்டரில் லம்பிரெட்டா,பஜாஜ் என இரண்டே கம்பனிகள் தான்.முழுபணத்தையும் கட்டி 1 வருடம் காத்திருந்தால் மட்டுமே ஸ்கூட்டர் கிடைக்கும் என்ற நிலை.தரம்,எரிபொருள் சிக்கனம்..மூச்ச்….

எதை உற்பத்தி செய்தாலும் விற்கும் என்ற நிலைதான் அப்போது நிலவியது.இறக்குமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்தியை கட்டுபடுத்தியதால் குறிப்பிட்ட சிலர் மட்டும் பணம் சம்பாதிக்கவும்,வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கவும் இந்நிலை வழிவகுத்தது.

ஐந்தாண்டு திட்டங்களை சோவியத் ரஷ்யாவிடமிருந்து இந்தியா காப்பியடித்தது இந்நிலையை மேலும் மோசமாக்கியது.இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்திலிருந்து நாசம் துவங்கியது என சொல்லலாம்.இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை(1956 – 1961) மகலனோபிஸ் எனும் வங்காள கம்யூனிஸ்ட் பொருளாதார நிபுணர் உருவாக்கினார்.உருவாக்கினார் என்பதே தவறு.வரிக்கு வரி ரஷ்ய ஐந்தாண்டு திட்டத்தை காப்பி அடித்து கொடுத்து விட்டார்.அத்திட்டத்துக்கு மகலனோபிஸ் திட்டம் என்றே பெயர்.

இந்த இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தால் சர்வநாசம் ஏற்பட்டது. ரஷ்ய சோஷலிசத்தோடு காந்திய சோஷலிசத்தையும் கலந்த இத்திட்டத்தின் கீழ் 17 தொழில் துறைகள் தேசியமயமாக்கப்பட்டன.புது கம்பனிகளை ஆரம்பிக்க,உற்பத்தியை பெருக்க,புது பொருட்களை தயாரிக்க அரசு லைசன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது.கம்பனிகளை மூடவும் அரசு அனுமதி தேவைப்பட்டது.ஒரு தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடினால் அரசு உதவித்தொகை(subsidy) கொடுக்கும் என சட்டம் போடப்பட்டதால் முதலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.லாபம் வந்தால் பணம்,நஷ்டம் வந்தாலும் பணம் என்றால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்?

லாபம் வரும்படி கம்பனி நடத்துவதை விட நஷ்டம் வரும்படி கம்பனி நடத்துவது லாபகரமாகப் போனது.நஷ்டம் வந்தால் மிஷின்களை விற்றுவிட்டு தொடர்ந்து நஷ்டத்திலேயே கம்பனியை முதலாளிகள் ஓட்டுவர்.அரசு உதவித்தொகை தான் கிடைக்கிறதே?ரொம்ப நஷ்டம் வந்தால் அரசு அத்தொழிலை எடுத்துக்கொள்ளும்.நிலம்,மிஷின ்கள்,பாக்டரி என அனைத்தின் மேலும் கடன் வாங்கிவிட்டு அரசிடம் நஷ்ட ஈடாக கணிசமான ஒரு தொகையையும் பெற்றுக்கொண்டு ஜாலியாக முதலாளிகள் எஸ்கேப் ஆயினர்.ஒரு அரசியல்வாதியை அந்நிறுவனத்தலைவராக அரசு அறிவிக்கும்.அவரும் இஷ்டத்துக்கு சுருட்டுவார்.கம்பனி தொடர்ந்து நஷ்டத்தில் ஓடும்.சம்பளத்தை அரசு கொடுப்பதால் தொழிலாளிகள் அரசு ஊழியர் என்ற தகுதியோடு ஜாலியாக இருப்பார்கள்.

நேருவுக்கு பின்வந்த இந்திரா காந்தி கிட்டத்தட்ட தொழில் துறையை முடித்தே கட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.தேசியமயமாக்கல் என்பதை ஒரு வெறியோடு அவர் செயல்படுத்தினார்.எல்.ஐ.சி,வங்கிகள் ஆகியவை அரசுமயமாக்கப்பட்டன.

இந்திராவுக்கு பின்வந்த ஜனதா அரசு துக்ளக் ராஜ்ஜியம் தான் நடத்தியது.கோக்,ஐபிஎம் ஆகியவற்றை ஜார்ஜ் பெர்ணான்டஸ் இந்தியாவை விட்டு துரத்தினார்.இறக்குமதியை தடை செய்ததால் உணவுபஞ்சம் வந்தது.உணவை இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு திங்கட்கிழமை தோறும் நாட்டு மக்கள் உபவாசம் இருக்க வேண்டும் எனும் புரட்சிகரமான திட்டத்தை மொரார்ஜி தேசாய் அறிவித்தார்.அவரும் திங்கட்கிழமைகளில் உண்ணாவிரதம் இருக்க துவங்கினார்.ஆசிய விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்த வாய்ப்பு வந்தபோது அது ஆடம்பரம் என்று சொல்லி மொரார்ஜி அரசும், சரண்சிங் அரசும் அதை இந்தியாவில் நடத்த மறுத்தன.

1980 வரை இவர்கள் அடித்த கூத்துக்கு எல்லையே இல்லை என சொல்லலாம்.1950- 1960, 1960- 1970, 1970- 1980 ஆகிய இக்காலகட்டத்தில் இந்திய மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.5% ஆக மட்டுமே இருந்தது.(இக்காலகட்டத்தில் ஜனத்தொகை 2.5% ஆக முன்னேறியதால் உண்மையான வளர்ச்சி விகிதம் 1% தான்)இந்த பெருமை மிகுந்த(!) வளர்ச்சி விகிதத்தை “இந்து வளர்ச்சி விகிதம்” என உலக பொருளாதார நிபுணர்கள் கிண்டலடித்தனர்.

“இந்து வளர்ச்சி விகிதம்” என குறிப்பிட காரணம் அப்போதைய கிழக்காசிய டைகர் எகானமி நாடுகளின் வளர்ச்சி விகிதம் தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகள்(பவுத்தம்) அசுர வேகத்தில் பாய்ந்து முன்னேறின.மேற்கத்திய நாடுகள்(கிறிஸ்துவம்) பெரும் வளர்ச்சி அடைந்தன.பெட்ரோல் காசு இஸ்லாமிய நாடுகளை பெரும் செல்வந்தர்களின் நாடாக்கியது.இப்படி அனைத்து மத நாடுகளும் அசுர வேகத்தில் முன்னேற, இந்தியா தேவ வேகத்தில்(இந்து வளர்ச்சி விகிதத்தில்) முன்னேறியதால் இவ்வளர்ச்சி விகிதத்தை “இந்து வளர்ச்சி விகிதம்” என கிண்டலாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர்.சோஷலிச செக்யூலரிஸ்டுகள் கொண்டு வந்த வளர்ச்சி விகிதம் அப்படி(##)….

1984ல் இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்த எகானமிஸ்ட் பத்திரிக்கை “இது பூட்ட கேஸ்” என்றது.”லைசன்ஸ் ராஜ்,உற்பத்தி கட்டுப்பாடு என்றதன் விளைவால் இந்தியாவுக்கு கம்யூனிசம்,முதலாளித்துவம் ஆகிய இரு கோட்பாடுகளின் தீமைகளும் ஒரே சமயத்தில் கிடைத்தன.இந்திய சிறுதொழில்கள் திறமையற்ற உதவாக்கரை கம்பனிகள்.இந்திய பெருங்கம்பனிகள் கொள்ளையடிக்கும் monopolies” என்றது எகானமிஸ்ட்
1985ல் ராஜிவ் அரசு சில தீர்திருத்தங்களை கொண்டுவந்தது.கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு அனுமதி,தொலை தொடர்பு துறையில் முன்னேற்றம்,லைசன்ஸ் ராஜில் தளர்த்தம் என சீர்திருத்தங்களை ராஜிவ் அரசு கொண்டுவந்தது.கம்ப்யூட்டர் வந்ததால் வேலை போய்விடும் என தோழர்கள் கவலைப்பட்டனர்.1985 மே தினத்தை “கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக” இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனுசரித்தது.

ராஜிவ் ஆட்சிக்கு பின்வந்த விபிசிங் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்று சொன்னாலே அவரது பொருளாதார கொள்கைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலும்.அவர் ஆட்சி காலம் ஒரே கலாட்டா காமெடி ஆட்சிக்காலம் தான்.அவருக்கு பின்வந்த சந்திரசேகர் காலத்தில் மிகப்பெரும் தலைகுனிவு இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டது.பெட்ரோல் இறக்குமதி செய்ய காசில்லாமல் உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்த பின் ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங் ஆப் இங்கிலாந்திடம் அடகுவைத்து கடன் பெற்ற கதையும் நடந்தது.

அதன்பின் 1991ல் நரசிம்மராவ் ஆட்சிக்கட்டிலை ஏறினார்.மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார்.1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.சிங் பட்ஜெட்டை படிக்க படிக்க பங்கு சந்தை குறியிட்டு எண் விஷம் போல் ஏறியது.இடதுசாரிகளின் ரத்த அழுத்தம் அதை விட அதிக வேகத்தில் ஏறியது.சிங் பட்ஜெட்டை படித்து முடித்ததும் பொருளாதார நிபுணர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.புதிய இந்தியா 1992ல் பிறந்தது.

வளர்ச்சி அடைந்த புதிய வல்லரசின்,மக்கள் நலன் பேணும் நல்லரசின் விதைகள் அன்று மன்மோகனாலும்,நரசிம்மராவாலும் விதைக்கப்பட்டன.நாரயணமூர்த்தி,ஆசிம் பிரேம்ஜி போன்றவர்களை உருவாக்கி,பல கோடி இளைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார் மன்மோகன்.மன்மோகன் ஏற்றிய ஒளிவிளக்கை சிதம்பரமும்,ஜஸ்வந்த் சிங்கும்,யஷ்வந் சின்காவும் அதன் பின் மீண்டும் சிதம்பரமும் அணையாமல் கொண்டு சென்றனர்.

1992 பட்ஜட்டை படைத்ததற்காக மன்மோகனை இடதுசாரிகள் இன்னும் மன்னிக்கவில்லை.”வேலை செய்தால் தான் சம்பளம்” என்று சொல்லிவிட்டாரே என்று கோபம் அவர்களுக்கு.”உழைப்பவனுக்கு தான் உயர்வு,சுறுசுறுப்பானவனுக்கு தான் முன்னேற்றம்,சோம்பேறிக்கு ஆப்பு” போன்ற கொள்கைகளை கொண்டு வந்ததால் புதிய பொருளாதார கொள்கையே பிடிக்காமல் போய்விட்டது காம்ரேடுகளுக்கு.
‘இந்து வளர்ச்சி விகிதத்தை’ ஒழித்துக்கட்டி, நவீன இந்தியாவை படைத்த பாரதத்தின் புதிய கடவுளான மன்மோகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினாலும் நாம் அவருக்கு பட்ட நன்றிக்கடன் தீராது.

—————————
holyox@gmail.com

Series Navigation

செல்வன்

செல்வன்