இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

நஜம் சேத்தி


(நஜம் சேத்தி பாகிஸ்தானின் ‘ஃப்ரைடே டைமஸ் ‘ வார ஏட்டின் ஆசிரியர்.)

இந்தியாவும் பாகிஸ்தானும் உறவுமுறைகளைச் சீராக்கி சகஜநிலைக்குத் திரும்ப முயல்கின்றன. இந்த நேரத்தில் மாணவர்களை மூளைச்சலவை செய்வதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். வெறுப்பை விதைத்து, தலைமுறை தலைமுறையாய் யுத்தத்தை வளர்த்தெடுக்க உதவி செய்யும் இந்தப் பாடப் புத்தகங்களைச் சீர்திருத்தி அமைக்க வேண்டும். இரு தரப்பினரும் ‘மற்றவரை ‘ப் பற்றிய விஷத்தைப் பரப்பும் பாடப் புத்தகங்களைக் கொண்டுள்ளன. பம்பாயில் தயாராகும் திரைப்படங்கள் பலவும் மிகக் கேவலமாகப் பாகிஸ்தானைச் சைத்தானாகவும், இந்தியாவை மாவீர நாடாகவும் சித்தரிக்கின்றன. இரு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இந்த ஆபத்தான போக்கைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். எனவே இரு நாடுகளும் பொருளாதார முன்னேற்றமும் ஒத்துழைப்பும் வேண்டினால், தெற்காசியா சரியான திசையில் வளர்ச்சி பெற பாடப் புத்தகங்களையும் , பிரசார ஊடகங்களையும் சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

1947 முதல் இந்த இரு நாடுகளும் ஒரு வினோதமான ‘தேச நிர்மாணத்தில் ‘ ஈடுபட்டு வருகின்றன. முரண்பட்டு நின்றுதான் இந்த நாடுகள் இருக்கமுடியும் என்ற மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் பாடப்புத்தகங்களில் அழுத்தம் கொண்ட நிகழ்வுகள் , மற்ற நாட்டின் பாடப்புத்தகங்களில் கண்டுகொள்ளப் படாமல் போகும் அல்லது முக்கியத்துவம் இல்லாததாகச் சித்தரிக்கப் படும். இந்த நெளிவினால், இரண்டு வேறு வேறு முரண்பட்ட வரலாறுகள் இரு புறத்திலும் எழுதப் பட்டுள்ளன – சம அளவிலேயே இரு புறமும் இந்த திரிபுகள் நடந்துள்ளன. ஆனால் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் வெகுவாக பேணப் படுவதால், இந்தத் திரிபுகள் மிக நுண்மையாகவும், மறைமுகமாகவும் உள்ளன. பாகிஸ்தானிலோ மிக வெளிப்படையாகவே இந்த விஷப் பிரசாரம் நடக்கிறது. சில சமயம் இது நகைப்புக்கிடமானதாகவும் உள்ளது.

இதில் வியப்படைய எதுவும் இல்லை. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சமயம் இந்தப் பாடப்புத்தக யுத்தங்களும் நடந்ததுண்டு. சோவியத் பாடப்புத்தகங்களில் இருந்த கேலிக்கிடமான திரிபுகள் மேலை நாடுகளில் எள்ளி நகையாடப்பட்டதுண்டு. ஆனால் அமெரிக்கப் பாடப்புத்தகங்களில் ‘சோவியத் யூனியன் ‘ எப்படி தீய சாம்ராஜ்யம் என்றும் கூறப்பட்டதுண்டு. அமெரிக்காவில் பாடப்புத்தகங்களைப் பற்றிய இரு வேறு கருத்துகள் உண்டு. ‘வரலாறு என்பதே நம் பாடப்புத்தகத்தில் இருப்பது தான், சோவியத் யூனியன் பாடப்புத்தகம் எல்லாமே வெறும் பிரசாரங்கள் தான். ‘ இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கூட இதே போன்ற நிலை தான்.

ஒரு மானிடக் குழந்தையின் கீழ்ப்படிதலுக்காக பெற்றோர்கள் மேற்கொள்ளும் ‘சமூகத்தன்மை ‘யை குழந்தைக்குத் தரும் முயற்சியைப் போன்றே, தேசங்களும் நல்ல பிரஜைகளை உருவாக்க சில ‘கருத்துத்திணிப்பு ‘ (conditioning) மேற்கொள்கின்றன. வரலாற்றைப் பயன்படுத்தி ஒரு சீரான கருத்துள்ள மனத்தை (தேசீய அடையாளத்தை) உருவாக்க முயல்கின்றனர். இதனால் ஒரு போலியான, சலவை செய்யப்பட்ட ஒரு வரலாற்றை பாடப்புத்தகங்களில் கட்டமைக்கின்றனர். பாகிஸ்தானைப் பற்றி இந்தியாவும், இந்தியாவைப் பற்றி பாகிஸ்தானும் ஒரு குறிப்பிட்ட விளக்கத்தைப் புகட்டுகின்றனர். இந்த நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு பரஸ்பரம் அண்டைநாடு ( பாகிஸ்தானுக்கு இந்தியா, இந்தியாவிற்குப் பாகிஸ்தான் ) பற்றிய அறிவைப் பெற்றுவிட்டதாய் நம்புகின்றனர். புதிதாக பரஸ்பரம் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் இவர்களுக்குத் தயக்கம் – எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கை. இந்திய வரலாற்றாசிரியர் கிருஷ்ணகுமார் இது பற்றி குறிப்பிடுகிறார் : ‘இரு நாடுகளுமே ஒன்றை ஒன்று அறிந்துவிட்டதாய் நம்புகின்றனர். தம்முடைய பகுதியாய் இருந்தவர்கள் தானே என்று எண்ணுகின்றனர். தெரியாத ஒரு மக்கள் சமூகத்தைத் தெரிந்து கொள்ள ஓர் ஆவல் இரு தரப்பிலுமே இல்லை. தூரதேசமாய் ஒரு நாடுகளும் இருந்திருந்தால் ஒரு வேளை ஆர்வம் தூண்டப் பட்டிருக்கலாம். இந்த அருகாமையே அறிதலுக்கான ஆர்வத்தை அழித்து விட்டது. ‘ பாகிஸ்தானின் வரலாற்றாசிரியர் கே கே அஜீஸ்-ம் இது போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார்.

பாடப்புத்தகங்கள் எப்படி வரலாற்றைத் திரிக்கின்றன என்பதற்கு இவை சில உதாரணங்கள். சர் சையத் அகமது கான் ,மற்றும் அல்லாமா இக்பால் பற்றிப் பேசும் போது இந்தியப் பாடப் புத்தகங்கள் அவர்களின் இளமைக் கால வாழ்வைப் பேசுகின்றன. ஆனல் பாகிஸ்தான் புத்தகங்களோ அவர்களின் பிற்காலத்திய வரலாற்றையே பேசுகின்றன. சர் சையத் எப்படி சீர்திருத்தங்களுக்கு வழி கோலினார் என்று பேசும் இந்தியப் பாடப்புத்தகங்கள் அவர் ‘மற்றொரு நாடு ‘ பற்றிப் பேசியதை மறைக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் புத்தகங்கள் அவருடைய மதம் சார்ந்த அறிவு பூர்வமான செயல்பாடுகளை மறைக்கின்றன. அறிவுபூர்வமாய்ச் சிந்திப்பதே பாகிஸ்தானில் குற்றமாகும். 1857-ன் சிப்பாய்க் கலகம் பற்றிய அவரது கருத்துகளை இரண்டு நாடுகளின் பாடப்புத்தகங்களுமே மறைத்துவிடுகின்றன. அந்தக் கலகத்திற்கு இரண்டு நாடுகளுமே ‘ சுதந்திரப் போர் ‘ என்று நாமகரணம் செய்துவிட்டன. வரலாற்றாசிரியர் மஜ்உம்தார் இந்தக் கலகம் பற்றிப் பேசும்போது ‘தேசம் ‘ என்ற கருத்தாக்கம் இதில் இல்லாததைக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் கூறுவதை யாரும் கேட்கத் தயாரில்லை. இந்தப் பெரும் கதையாடல்களில் மிகப் பெரும் வேறுபாடு, வங்காளப் பிரிவினை பற்றியதாகும். இந்திய வரலாறு இந்த நிகழ்வு எப்படி பிரிட்டிஷார் ‘பிரித்தாளும் கொள்கை ‘யை அமல் படுத்தினார்கள் என்பதைப் பறைசாற்றுவதாக அமைகிறது. ஆனால் பாகிஸ்தானின் வரலாறு , கர்சன் பிரபுவினால் நிகழ்த்தப் பட்ட இந்தப் பிரிவினையை எப்படி முஸ்லிம்கள் ஆதரித்தார்கள் என்றும், இந்துக்கள் பிரிவினைக்குத் தெரிவித்த எதிர்ப்பு எப்படி முஸ்லீம்களை ஒன்றுபடவைத்தது என்றும் பதிவு செய்கிறது. இந்தியப் பதிவு முஸ்லிம்களின் இந்த எதிர்வினையைக் கணக்கில் கொள்வதில்லை. பிரிவினைக்கு இந்து முஸ்லிம் இரு சாராருமே எதிர்ப்புத் தெரிவித்தனர் என்று பதிவு செய்கிறது.

பாகிஸ்தானின் பாடப்புத்தகங்கள் 1906-ல் ஜின்னா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதையும், பிரிவினை பெரும் தவறு என்று பேசிய தாதாபாய் நவுரோஜியின் பேச்சைத் தயார் செய்து தந்ததையும் குறிப்பிடுவதில்லை. கிலாஃபத் இயக்கத்தைப் பதிவு செய்வதிலும் இந்தியப் பாடப் புத்தகங்களில் இதேபோன்ற முரண்கள் தான். 1922-ல் செளரிசெளரா தாக்குதலுக்குப் பிறகு காந்தி இயக்கத்தை நிறுத்தியது பற்றி காந்தியைப் பின்பற்றிய முஸ்லிம் மக்களின் நிலை பற்றி இவை குறிப்பிடுவதில்லை. கிலாஃபத் இயக்கத்தின் போது இரு மதத்தினருக்கும் இடையில் நிகழ்ந்த சச்சரவுகளையும் இவை குறிப்பிடுவதில்லை.

இந்திய பாடப்புத்தகங்கள் சில தேர்ந்தெடுத்த நிகழ்வுகளுக்கு அழுத்தம் தருகின்றன. 1916-ல் நடந்த லக்னெள ஒப்பந்தம், 1919-ன் அமிர்தசரஸ் படுகொலை வரையில் சரியாய்ச் சொல்லப்படும் வரலாறு, கிலாஃபத் இயக்கத்தைக் கூறும்போது பூசி மெழுக முயல்கிறது. 1922-1930-காலகட்டமும் மிக அழுத்தமாய்ப் பதிவு செய்யப்படுவதில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் இந்து-முஸ்லிம் உறவுகள் சீர்கெடலாயின. 1928-ல் சமர்ப்பிக்கப்பட்ட நேரு அறிக்கை இந்தியாவில் பெரிதும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் இந்த அறிக்கை முக்கியத்துவம் ப்றுகிறது. காரணம், இந்த அறிக்கை தான் ஜின்னாவின் 14 அம்சப் பதிலுக்குக் காரணமாய் இருந்தது. காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம் பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் இல்லை. ஆனால் லண்டன் வட்டமேஜை மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. வட்டமேஜை மாநாடு இந்தியப் பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை. 1935-ல் இயற்றப்பட்ட அரசு சட்டம் தனித்தனி வாக்காளர்களை/தொகுதிகளை அமைத்ததால் இந்தியப் பாடப்புத்தகங்களில் காணாமல் போய்விட்டது. 1940-ல் லாகூர் தீர்மானம் பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் கிடைக்கும் ஆனால், இந்தியாவின் பாடப்புத்தகங்களில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் மட்டுமே முக்கியத்துவம் பெறும். வரலாறும், முரண்பாடுகளும் பாடப்புத்தகங்களில் திரிக்கப்பட்டுத்தான் மாணவர்களுக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானி குழந்தைகள் இந்தியா தான் 1971 வங்க தேசப் பிரிவினைக்குக் காரணம் என்று பயில்கிறார்கள். அதேபோல் காஷ்மீர்ப் பிரசினைக்கு பாகிஸ்தான் மட்டுமே காரணம் என்று இந்திய மாணவர்கள் கற்பிக்கப் படுகிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிலுமே ‘மைய நீரோட்டம் முன்வைக்கும் கதையாடல்கள் ‘ (master narratives) இப்படி முரண்படுவதற்குக் காரணம் எந்த லட்சியத்தை முன்வைத்து இவை செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. லட்சியங்கள் நாம் முன்வைக்கும் நிகழ்வுகளைப் பாதிக்கின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் விடுதலை ‘லட்சிய நிறைவேற்றம் என்றாலும் பெருத்த இழப்பையும், சோகத்தையும் ‘ கொண்டது. ஆனால் பாகிஸ்தான் தன் விடுதலையை ‘ஒரு தற்காப்பு மற்றும் தப்பித்தலை ‘ உள்ளடக்கியதாய்க் காண்கிறது. இதனால் பாடப்புத்தகங்கள் முரண்பட்ட வரலாற்றை முன்வைத்து, என்றும் தீராத யுத்தத்திற்குக் காரணம் ஆகின்றன.

தெற்காசிய பிராந்திய அமைப்பு (SAARC) பாடபுத்தகங்களில் தவறான , விஷம் பரப்பும் பாடங்களுக்கு எதிராக, அவற்றைக் களைய வேண்டும் என்று ஒரு தீர்மானம் இயற்றியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அறிஞர்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி வரலாற்றின் பொய்களைக் களைய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மேலும் பொய்கள் மேலும் மேலும் யுத்தத்திற்கே வழிவகுக்கும்.

—-

Series Navigation

நஜம் சேத்தி

நஜம் சேத்தி