இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

தமிழவன்


சமீபத்தில் மைதிலியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்திய வெளிஉறவுத் துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன்.இப்போது மைதிலியைப் பேசுவது இல்லை, எல்லோரும் இந்திதான் பேசுகிறோம் என்றார். அதுபோல் கொடவா என்ற தமிழின் ஆதிகால வடிவத்தை இன்னும் வைத்திருக்கும் மொழியைப் பேசும் கர்னாடகத்தில் வாழும் கூர்க் இனத்தவர்கள் தனி மாநிலம் கேட்கும் செய்தியும் சிலர் தெரிந்திருக்கலாம்.ராஜஸ்தானியர்கள் தங்கள் மொழி, இந்தி மொழியால் இனம் தெரியாமல் போய்க்கொண்டிருப்பதற்கு எதிராக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளையும் சிலர் தெரிந்திருக்கலாம்.இது போல் பல மாநில மொழிகளும் இந்தியாவில் மறைமுகமான நெருக்கடிக்குத் தினம் தினம் ஆளாகிக் கொண்டிருக்கின்றன.ஆங்கிலம்,இந்தி,மற்றும் மாநில மொழிகளுக்கிடையேயான போட்டியில் தர்க்க ரீதியாக மாநில மொழிதான் நீண்டகால நோக்கில் பலிகொள்ளப் படும்.மாநில மொழிகளுக்கே இந்த நிலை என்றால் இந்தியாவில் பேசப்படும் நூற்றுக்கணக்கான சிறிய மொழிகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.இவற்றில் பல மொழிகள் சாகும் நிலையில்.

இந்திமொழி கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு ஒழுங்கையும் வளர்ச்சியையும் பெற்று பல்வேறு கிளைமொழிகளாக இருந்த நிலையிலிருந்து தனிப்பெரும் மொழியாக இந்திய அரசின் கோடிக்கணக்கான பணச் செலவின் மூலம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்துள்ளது.அசுரத்தனமான வேகத்தில் வளர்ந்து, வெகு வேகமாக ரஷ்யன்,ஆங்கிலம்,ஸ்பானிஷ், ஜெர்மன், பிரஞ்ச் போன்ற உலகமொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதை எல்லா வெளிநாட்டு மொழி பற்றிய நிபுணர்களும் இன்று கூறுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் தமிழ் இல்லை.இனி என்றும் தமிழ் இருக்காது.இந்தி தான் இருந்து கொண்டிருக்கும்.கடந்த ஐம்பது ஆண்டுகளில் எல்லாமொழியையும் பேசும் இந்தியர்களின் வரிப்பணத்தால் இந்தி மொழி உலக மொழி ஆகிவிட்டிருக்கிறது.இந்தி என்பதும் இந்தி-யா என்பதும் ஒன்று என்றே உலகில் பல வெளிநாட்டவர்களும் கருதுகிறார்கள்.இந்திய ஒன்றியத்தில் உள்ள பலமொழிகளில் இந்தியும் ஒருமொழி என்பதோ இந்தியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாத இந்தியர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதோ வெளிநாடுகளில் பலருக்குத் தெரியாது.

இந்தியாவின் முக்கியமான மொழி என்று, தாகூருக்கு நோபெல் பரிசு கிடைத்தபோது,

வங்காளி மொழி வெளிநாடுகளில் பரவியது.இது இருபதாம் நூர்றாண்டின் தொடக்கப் பகுதில்.வார்ஸா பல்கலைக் கழகத்தில் ஆயிரத்தித்தொள்ளாயிரத்து முப்பதுகளில் சமஸ்கிருதத்திற்குப் பிறகு, வங்காளி மொழி தான் பயிற்றுவிக்கப் பட்ட ஒரே இந்திய மொழி.பின்பு கால்டுவெல்லின் கண்டு பிடிப்பான திராவிட மொழிகளில் மூத்தமொழி தமிழ் என்ற கருத்து வெளிநாடுகளில் பரவியபோது தமிழ் பற்றிய ஆர்வம் பரவியது.வார்ஸா பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுபதின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.அதன் பின்பு தான் இந்தி மொழி ஆரம்பிக்கப் பட்டது.கடைசியாக வந்த இந்தி மொழி இன்று கொடிகட்டி ஆள்கிறது.அதாவது வெளிநாடுகளில் இந்தி ஒரு அறிமுகமில்லாத மொழி என்பதிலிருந்து காலப்போக்கில் மிகப்பெரும் உலமொழி என்ற அந்தஸ்தைப் பெற்ற பின்னணி இது.அதாவது இந்திமொழியின் சிறப்பு திடார் என்று தமிழைப்போல் கண்டு பிடிக்கப் படவில்லை. மாறாக இந்தியாவுக்குள் அது தன்னை அரசியல் ரீதியாக பிறமொழிகளைவிட அதிகாரமுள்ள மொழி என்று காட்டியதால் தான் சிறப்புக்குரியதாக ஆனது.பிற மொழிகளின் மீது சவாரிசெய்யும் மொழி,அதிகாரமுள்ள மொழி.பிற மொழிகள் எல்லாம் இந்த சவாரியை ஏற்றுக் கொண்டிருப்பது அவலம்.இந்த வகையில் இந்திய சமூகத்தின் மிகப் பெரிய மொழிச் சமவுடைமை ஓர்மையை எழுப் பிய சம்பவம் 1965 மொழிபோராட்டம்.அது பிற இந்திய மொழிகளின் உரிமை வேட்கையைக் கூட அன்று தூண்டியது.அது தொடரவில்லை.இன்று இந்தியாவில் தேவைப்படும் ஜனநாயகக் குரல் சமயப் பன்முகம், மற்றும் மொழிப் பன்முகம்.விவர ஞானமில்லாத கன்னடிகர்கள் தமிழுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தி என்னும் மொழி ஒரு சவாரிசெய்யும் மொழி என்பதை உணராதிருக்கிறார்கள்.சமயப் பன்முகம் பலி போவதுபோல் மொழிப்பன்முகமும் பலி போய்கொண்டிருக்கிறது. பிஜெ.பி வந்ததால் சமயப் பன்மைக்குணம் பலிபோய்விட்டது என்பது முற்றிலும் உண்மையல்ல.இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் வந்த தேசியத்துவமும் கூட இலங்கைத் தேசியத்துவம் போல ஏகமையக் குணம் கொண்டது.இங்கு ஏன் தாக்குப் பிடிக்கிறது என்றால் மாநில வாரியாக அதிகாரப் பங்கீட்டை செய்த உயர்ந்த மனிதர்களால்.இந்தி மொழி என்பது இந்தியத் தேசியத்துவ ஏகமையக் குணத்தின் சங்கேதம்.

இந்திய தேசியத்துவத்தின் அதிகார அடிப்படை ஏகபோகத்தன்மை கொண்டது. 1965-இல் திராவிடத் தத்துவம் சொன்னது இன்று நிரூபணமாகிக் கொண்டுள்ளது.இலங்கையில் இந்த ஏக போகத்தன்மை ஒர் போரை உருவாக்கி தெற்காசியாவில் சிறப்பாக இருந்த நாட்டை இன்றைய நிலமைக்குக் கொண்டு வந்துள்ளது.இந்திய தேசியத்துவம் தனக்குள் ஓர் மொழிச்சமத்துவ விழுமியத்தை உருவாக்கவேண்டும்.இதற்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது ?

வரலாற்றில் பல்வேறு தாக்குதல்களைச் சந்தித்த தமிழ் ஜனநாயத்தின் உறைவிடம்.தமிழுக்கு ஏதேனும் பெருமை இருக்கிறது என்றால் அது சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலமாக தொடர்ந்து பேசப் படுகிற மொழி என்பதும் சமஸ்கிருத மொழி போல் இறந்துபோகாத மொழிஎன்பதும்.(சமஸ்கிருத மொழிக்கு அகில இந்திய வானொலி மூலமாகவும் இன்னும் வேறு முறைகளிலும் சமீபகாலத்தில் உயிரூட்ட நடை பெறும் தமாஷ்களைப் பற்றி அறிய சிக்காகோ பல்கலைக் கழக சமஸ்கிருதப் பேராசிரியர் ஷெல்டன் போலக் அவர்களின் -Death of Sanskrit-கட்டுரையைப் பார்க்க).இன்னொரு பெருமை தென்கிழக்காசியாவில் பல நாடுகளில் பேசப்படுகிறது என்பது.இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளின் தேசிய மொழிகளில் ஒன்று என்பது.இன்று இங்கிலாந்து,ஆஸ்த்ரேலியா,கானடா,மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ள மொழி என்பது.சோழர் சாம்ராஜ்யம் பரவியபோது கடாரம் கன்னடம்,தெலுங்குநாடு என்று பரவிய தமிழ் காலனியத்தை எங்கும் நிலை நாட்டவில்லை.

தமிழ் மொழிக்கான சுயவிடுதலைக் குணத்தைப் பிற இந்திய மொழிகளுக்கும் விஸ்தரிக்கும் தத்துவமாகத் திராவிடத் தத்துவம் மாநில சுயாட்சி என்ற கோட்பாட்டை அன்று உருவாக்கியது.அந்தச் சிந்தனை இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனை.அதனைத் தொடராதது திராவிடத் தத்துவம் வழிமாறியதையும் வழிமாறுவதையும் காட்டுகிறது. இன்று தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரத்தை விரிவாக்கும் முறை மாநில சுயாட்சிீக் கோட்பாட்டைத் தொடர்வதன் மூலம் தான்.எதிர்காலத்தில் திராவிடத் தத்துவம் தலித் சிந்தனைகளையும் இந்தியச் சமூகத்தின் இந்தியக் குணமுள்ள சமவுடைமையையும் முன்னெடுப்பதன் மூலம் தொடர முடியும். மேலே எடுத்துச் செல்ல கடந்த காலத்தில் அது கொண்டிருந்த புத்திவலயம் சார்ந்த செயல்பாடுகளைத் தொடந்து செய்ய வேண்டும்.கம்யூனிஸ்டுகள் பொருளாதாரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்னும் பழைய கோட்பாட்டை இன்னும் கனவில் சுமந்து திரிவதை விட இன்றைய சூழலுக்குத் தக இந்தியச் சமூகத்தின் அதிகாரம் பற்றிய ஆய்வை மேற்கொள்வதற்கு இத்தகைய அல்தூஸரிய மார்க்ஸிஸ்டு ஆய்வுமுறைமை பயன்படும் என்பது என் எண்ணம்.

மொழியென்பது ஒரு கருவி மட்டுமல்ல.சிந்தனையோடு இரண்டறக் கலந்துள்ள ஊடகம்.இந்திமொழி ஒரு மொழியாகவும் ஒரு அதிகார வம்போக்குக் குறியீடாகவும் செயல் படும் போது தமிழ் இன்றைய அரசியலில் ஜனநாயகத்தின் நெறிசார் குறியீடாகவும் செயல்பட முடியும். இது போன்ற ஆய்வுகள் தொடர்நிகழ்வாகும்.

—-

carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்