இது என்னுடைய வெள்ளிக்கிழமை

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

செழியன்


இஸபெல்லிடம் இருந்து திடாரென இப்படியொரு அழைப்பு தனக்கு வரும் என்று இரத்தின சிங்கம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. “நீ உண்மையிலேயே அதிஸ்டக்காரன்” ரொப் அன்று முழு நாளும் கூறிக்கொண்டே இருந்தான். புதிதாய் முட்டை போட்ட கோழி கொக்கரித்துக் கொண்டு திரிந்ததைப்போல திரிந்தான். அவன் நிறைய உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவனுக்கு அன்றைக்கு வேலை ஓடவே இல்லை. கழுவ வந்த நான்கு ஐந்து பீங்கான் கோப்பைகள், கழுவி வைத்த இரண்டு பியர் கிளாாஸ் என்று வாழ்கையில் முதற் தடவையாக பலதையும் கைதவறி உடைத்துக் கொண்டேயிருந்தான்.

ரொப் மிக்க நல்லவன். இவன் கொங்கோடியா பல்கலைக்கழத்தில் படித்துக்கொண்டு பகுதி நேரமாக இங்கு வேலை செய்கின்றான். இவனுடைய பூர்வீகம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமாகின்றது. அவனுடைய தாத்தா சிலோனில் இருபது வருடங்கள் இருந்தவர் என்று சிலாகித்துக் கூறுவான். அதனாலோ என்னவோ அந்த நாட்டின் குடிமகன் இரத்தின சிங்கத்தை கோப்பை கழுவுகின்ற இடத்தில் பகுதி நேர வேலையாளாகக் கண்டபோது கலங்கிவிட்டான். இரத்தின சிங்கத்திற்கு எல்லாமே புதிதாக இருந்தது. அப்படித்தான் இருக்கும். இரத்தின சிங்கத்தை மொன்றியல் தெருக்களில் நடமாடும் நல்ல பிரைஐயாக எப்படியும் மாற்றிக் காட்டுவது என்று முதலில் முடிவெடுத்தது ரொப் தான்.

கோப்பை கழுவுகின்ற இயந்திரத்துக்குள் புகவே முடியாத பெரும் பானைகள், சட்டிகள் இன்னும் பெயர் சொல்ல முடியாத சாமான்களை எல்லாம் எப்படி இலாகுவாக உள்ளே தள்ளிக் கழுவுகின்றது என்ற வித்தையை ஒரே வாரத்தில் ரொப் இரத்தின சிங்கத்துக்கு கற்றுக் கொடுத்து விட்டான். அரை மணிநேரத்தில் எப்படி முழு உணவகத்தையும் ‘மப்’ அடிப்பது என்று ரொப் காட்டிக் கொடுத்த போது அதை பதினைந்து நிமிடத்தில் இரத்தின சிங்கம் செய்து ஒரு அதிசயத்தையே நிகழ்த்திவிட்டான். அதற்குப் பிறகு ரொப்பிற்கு இவனை ரொம்பப் பிடித்து விட்டது. முள்ளுக் கரண்டியால் ‘சலாட்;’ சாப்பிடுவது, பியரை உடைத்து பியர் கிளாசுக்குள் நுரைக்காமல் எப்படி ஊற்றுவது என்றெல்லாம் அங்குலம் அங்குலமாக இரத்தின ‘சிங்கத்தை’ இரத்தின ‘பீவராக’ (டிநயஎநச) தயார்படுத்தினான்.

“இவனுக்கு இன்றைக்குப் பேய் பிடித்து விட்டது” இத்தாலிக் கிழவி அடிக்கடி ரொப்பை திட்டிக்கொண்டேயிருந்தாள். அவள் தான் அந்த சிறு உணவகத்து முதலாளியின் மனைவி. வாரத்திற்கு இரண்டு மூன்று தடவையாவது அங்கு வந்து போவாள். என்றைக்காவது அவள் வந்தாள் என்றால் அன்றைய நாள் ஒரு எரிச்சல் பிடித்த நாளாகத்தான் ஆரம்பமாகும் என்று அங்கு வேலை செய்கின்ற எல்லோருக்குமே தெரியும். இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு நிலைமை இன்னொரு கட்டத்திற்குப் போய்விடும். கிழவி மூக்கு முட்டக் குடித்து விட்டு செய்கின்ற அட்டகாசங்களைப் பொறுத்துக் கொள்வதற்குத் தனியான பயிற்சி வேண்டும்.

இஸபெல்லை இரத்தின சிங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததே இந்தக் கிழவிதான். அன்றைக்கும் கிழவி குடித்து முழு வெறியில் தான் இருந்தாள். உருகி வழிந்த பனிபோல நடந்து வந்த இஸபெல்லிடம் இரத்தின சிங்கத்தை பிரேஞ்சில் அறிமுகம் செய்தாள். அலட்சியமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “ஹாலோ” என்ற ஒற்றை வார்த்தையோடு நகர்ந்தாள். அவளுடைய கண்கள் அதிசயமாய் இருந்தன. ‘கருநீல கண்கள்’ என்று

“இந்தப் பிரேஞ்சுக்கார இளவரசி தனியாகத்தான் இருக்கின்றாள்” கிழவி அசிங்கமாய் கண் சிமிட்டியது இரத்தின சிங்கத்திற்குப் பிடித்திருந்தது.

“தனித்து திரிகின்ற யானை, ஒற்றைப் புலி, தனித்த அழகி ஸ இங்கெல்லாம் ஏராளமான அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றது….”என்று கூறி இரத்தின சிங்கத்தைப் பார்த்துச் சிரித்தாள். அவள் சிரித்தால் அது அடங்குவதற்கு வெகு நேரமாகும். அது வரை பொறுமையாக காத்திருப்பது சிரமான காரியம் என்றாலும் அதைவிட வேறு வழி கிடையாது. தொடர்ந்து ஒரு வாய் விஸ்கியைப் பருகிய கிழவி; “.. கூடவே ஆபத்துக்களும் நிறைய இருக்கின்றனஸ.” என்று எச்சரிக்கையும் செய்தாள்.

இந்த அழகியின் உதடுகளை ஒருமுறையாவது கவ்வ வேண்டும் என்று இரத்தின சிங்கம் ஆசைப்பட்டான். இப்படித்தான் அழகான பெண்களைக் காண்கின்ற போதெல்லாம் அசிங்கம் அசிங்கமாய் ஆசைப்படுவான். அவர்களுடைய உதடுகளும், மார்புகளும் தனக்காகப் படைக்கப்பட்டது என்று உருகுவான். அதிகாலையில் வருகின்ற கனவுகளில் இந்தப் பெண்கள் மிக நெருக்கமாக வருவார்கள். அவர்களுடைய உதடுகள் குளிர்மையாக இருக்கும். மெல்லிய மூங்கில் வாசைன உடலில் இருந்து எழும். நிர்வாணத்தை மறைக்க எந்த எத்தனமும் இந்தப் பெண்கள் காட்டுவதில்லை. கடைசியில் ஒன்றுமே நடந்திராது. மனைவியைத் தவிர எந்தப் பெண்ணுடனும் இவன் கனவில்க் கூட உறவு கொண்டதே கிடையாது.

ஒரு வெள்ளிக்கிழமை, கழுவிவைத்த வைன் கிளாசுகளை அடுக்கிவிட்டு வருமாறு ரொப் இரத்தின சிங்கத்திடம் கூறினான். மது விற்பனை செய்யும் இடத்தில் (டாயச) அதற்கென்று இருக்கின்ற கண்ணாடி அலுமாரியில் இந்த வைன் கிளாசுகளை அழகாக அடுக்கவேண்டும். வழமையாக வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிடுகின்ற சாப்பாட்டு மண்;;டபத்துக்குள் போய் (னைெைபெ ாயடட) செய்யவேண்டிய வேலைகள் எதுவும் இருந்தால் ரொப் தான் செய்கின்றவன். இப்படிப் போய் வந்த நாட்களில் ரொப்; மிக்க சந்தோசமாக இருப்பான். அதற்குக் காரணம் உபயமாக கிடைக்கின்ற கலப்படமில்லாத அரை கிளாஸ் வொட்கா.

இந்த கிளாஸ் அடுக்குகின்ற வேலை உண்மையில் உணவு மற்றும் அற்ககோல் பறிமாற இருக்கின்ற சேவகர்களுடையது. வெள்ளிக்கிழமை என்றாலே எல்லா உணவகங்களையும் போல இந்த உணவகமும் பெரும் களை கட்டி விடும். சில நேரங்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை கட்டுமீறிப் போய்விடும். முதலில் இதன் இரகசியம் என்ன என்று இரத்தின சிங்கத்துக்குத் தெரியவில்லை. ரொப் தான் வழமைபோல இதனையும் சொன்னான். திங்கள் காலை முதல் வெள்ளி மாலை வரை- வேலைக்காரத் தேனீயாய் வேலை செய்து அலுத்துப் போனவர்கள் – இந்த வெள்ளி இரவை நினைத்தே உருகிவிடுகிறார்கள். இந்த நகரத்தைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை என்பது ஒரு மகா உற்சவம். அப்சரஸ் போல இருக்கும் கன்னிகளின் கைகளினால் மதுவை குடுவையில் ஊற்றிக் குடிக்க கிழவர்களும் ஆசைப்படுகின்ற நாள்தான் இந்த வெள்ளிக்கிழமை. உணவகம் பெரும் களை கட்டுகிற நாட்களில்; சேவகர்களுக்கு சின்ன சின்ன உதவிகளை செய்தே ஆகவேண்டும் என்பது இத்தாலிக் கிழவி ரொப்புக்கு இட்ட உத்தரவு. இந்த விசேட உதவிகளுக்காக இத்தாலிக் கிழவிக்குத் தெரியாமல் அரை கிளாஸ் வொட்கா கிடைத்து வந்தது.

இரத்தின சிங்கத்திற்கு இது இன்னுமொரு புது அனுபவம். வைன் கிளாசுகளை அடுக்குவதற்காக அவன் போன போது இஸபெல் ஒரு ஸ்பானிஸ்காரனின் மதுக் கோப்பையில் விஸ்கியை ஊற்றிக் கொண்டிருந்தாள். இவனை அவள் கவணித்திருக்க நியாயமில்லை. இரத்தின சிங்கம் நிதானமாக கிளாசுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது தளிர் இலைகள் மெல்ல அவனருகே வந்து உரசுவது போன்ற உணர்வும், பெயர் தெரியாத ஒரு பூவின் மெல்லிய வாசமும் எழுந்தது.

“ஏய் உனக்கு என்ன விஸ்கியா ? வொட்காவா ?” இஸபெல் முத்தமிடும் நெருக்கத்தில் நின்று கிசுகிசுத்தாள்.

உதடுகள் துடித்துக் கொண்டிருப்பது அழகான ஒரு முத்தத்திற்காக என்று இரத்தின சிங்கத்திற்குத் தோண்றியது. என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எங்கு இருக்கின்றேன் என்பதையே அவன் மறந்து போய்விட்டான்.

“கிழவியைப்பற்றிப் கவலைப்படாதே ஒரு போத்தல் வைனைக் குடித்துவிட்டு கவிழ்ந்து போய்க்கிடக்கிறாள்” என்றவள் அடுத்த வாடிக்கையாளரைக் கண்டதும் அவரை கவணிப்பதற்காக திரும்பினாள்.

இரத்தின சிங்கத்துக்கு ஒரு வார்த்தை பேச முடியவில்லை. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நடந்து கொள்வது என ரொப்பிடம் கேட்காமல் விட்டு விட்டோம் என்று நிறையத் துக்கப்பட்டான். இலவசமாக கிடைக்கின்ற மதுவில் மிதக்கின்ற சுவை தனியானது. இரத்தின சிங்கத்துக்கு அந்தச் சுவை தெரிந்திருந்தாலும் இன்றைக்கு இவளிடம் மது வாங்கிக் குடிப்பதில்லை என தீர்மானித்தான். “நீ நினைப்பதைப் போல் நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை”. இரத்தின சிங்கம் கருவிக்கொண்டான்.

மறுபடி இஸபெல் வந்து குனிந்த போது சிறு காட்டு முயல்கள் போன்ற அவளது மார்புகள் மட்டுமல்ல, கைகளில் இருந்த மதுக் கோப்பையில் மிதந்த ஐஸ் துண்டுகளும் குலுங்கின.

“உயர் ரகமான விஸ்கி இது, ஒரு அவசரமும் இல்லைஸ ஆறுதலாக இருந்து குடித்து விட்டுப்போ” மெல்லக் கூறியவள். ஒரு குடுவையின் பின்னால் மதுக்கோப்பையை மறைத்து விட்டுப் போனாள். இதற்குப் பிறகு பல வெள்ளிக்கிழமைகள் வந்து போய்விட்டன. தேவதையின் கைகளால் மதுசரம் குடித்த அனுபவம் யாருக்காவது இருக்குமோ தெரியாது. தனக்கு அந்த அனுபவம் நிறைய இருப்பதாக இரத்தின சிங்கம் இன்றுவரை நம்பிக் கொண்டிருக்கின்றான்.

இன்னொரு நாள் இளம் புயலைப் போல, கோப்பை கழுவும் இயந்திரம் இருந்த இடத்துக்கு வந்த இஸபெல் மதுக் கோப்பைகள் உடைந்து தெறித்தது போலப் பட படத்தாள்.

“ஏய் றற்ன்ணாஸ நீ ஒரு பெரும் ஓவியனாமே ?ஸஉன்னுடைய ஓவியங்கள் அற்புதம்ஸ” வந்த வேகத்திலேயே போய்விட்டாள்.

இரத்தின சிங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தன்னோடு ஒரு வருடமாக அறையில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரியாத விடயம் இந்த பிரேஞ்சுக்காரிக்கு எப்படித் தெரியவந்தது ?

ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தது. ஆர்ப்பாட்டமே இல்லாமல்; இந்த இரத்தின சிங்கம் இருந்தாலும் சும்மா சாதாரண ஆள் கிடையாது. ஒரு பெரிய ஐPனியஸ்ஸ ஏதோ அரசியல் நிலைமை …. தற்சமயம் கோப்பை கழுவிக் கொண்டிக்கின்றான். இது இந்தத் தேவதைக்குத் தெரிந்து விட்டதே. அதை நினைக்க நிறைய சந்தோசமாய் இருந்தது. இன்னோர் பக்கம் பயமாய் இருந்தது அவனது அகதி நிலைக் கோரிக்கைக்கான வழக்கு இன்னமும் கூட முடியவில்லை. அதற்குள் குடிவரவு அதிகாரிகள் ஏதும் இசகு பிசகான விசாரணைக்காக வந்து போனார்களா ? குழம்பிப் போய்விட்டான். யாழ்ப்பாணம் பெரிய வைத்தியசாலையின் பின் சுவரில் யானை அளவில் துப்பாக்கிகளையும், பூனையளவில் இராணுவச் சப்பாத்துக்களையும் அங்குலம் அங்குலமாக வரைந்த போது வராத பயம் இப்போ வந்து தொலைத்தது.

அன்று இரவு இத்தாலிக் கிழவிதான் அதைக் காட்டினாள். வாயிலேயே புகமுடியாத பெயரைக் கொண்ட ஒரு பிரேஞ்சு சஞ்சிகையொன்றில் அவனது புகைப்படம் மற்றும் ஓவியங்களுடன் இரண்டுபக்க கட்டுரை வந்திருந்தது. இது இன்னமும் ஆச்சரியம்! இந்த பிரேஞ்சுப் பத்திரிகைக்கு இப்படியொரு கட்டுரையை எழுதியது யார் ? பிரான்சில் இருந்து குழாமெகண் என்று அந்தக் கிழவிதான் தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தாள்.

மொன்றியளில் இருந்து வருகின்ற சஞ்சிகைக்கு பிரான்சில் இருந்து தன்னைப்பற்றி எழுதிய இந்த குழாமெகண் யார் என்று கண்டுபிடிக்க இரத்தின சிங்கத்துக்கு பதினெட்டு மணித்தியாலமும் முப்பத்தி நான்கு நிமிடங்களும், பதினைந்து டொலர்களும் பிடித்தன. அது வேறு யாரும் இல்லை கலாமோகன் தான்.

முன்னை பின்னை பார்த்தோ பேசியோ அறியாவிட்டாலும் கலா மோகனைக் கண்டால் அது எந்த இடமாய் இருந்தால் கூட காலில் விழுந்து கும்பிடத் தயாராக இருந்தான் இரத்தின சிங்கம். அந்தளவுக்கு இஸபெல் இரத்தின சிங்கத்துடன் அன்பாய் பழகினாள்.

“இந்த வெள்ளிக்கிழமை நீ என்னுடைய வீட்டுக்கு வருகின்றாயா ?” என்ற இஸபெல்லின் அழைப்பு இன்;றைக்குத்தான் கிடைத்தது. மெல்லிய கண்சிமிட்டலுடன் கொஞ்சலாகக் கேட்டாள். ஐஸ் நிறைந்த மதுக் குவளை தழும்பியது போல மனம் குலுங்கிக் குதிபோட்டது.

இஸபெல்லிடம் இருந்து இப்படியொரு அழைப்பு வரவேண்டும் என்று இரத்தின சிங்கம் வைக்காத நேர்த்தி இல்லை. இப்போ இருக்கின்ற நிலைமையில் மாவிட்டபுரக் கந்தரிடம் போகலாமா ? இல்லையா ? என்று தெரியாமலே கட்டாயம் வந்து கற்பூரம் கொழுத்துவதாகவும் நேர்த்தி வைத்திருந்தான்.

ரொப் வெகு நேர்த்தியாக இரத்தின சிங்கத்தை தயார்படுத்தி விட்டான். மூன்று முறை மூன்று விதமான சவர்க்காரம் பாவித்துக் குளித்தான். விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தை மிக இலேசாகப் பூசிக்கொண்டான். “அதிகமாய்ப் பூசி அட்டகாசமாய் மணத்தால் அசிங்கம்” ரொப் பல தடைவ சொல்லி விட்டான். சலவைக்குப் போட்டெடுத்த உடைகளை மடிப்பு கலையாது அணிந்து கொண்டான். மிகச் சுவையானது என்று ஒரு தடவைக்கு பல தடைவ கேட்டுச் சரிபார்த்து இரண்டு போத்தல் சிவப்பு பிரேஞ்சு வைன் வாங்கிக் கொண்டான். “நேரம் முக்கியம்.” ரொப் மிக கண்டிப்பாகச் சொல்லியிருந்தான். அதனால் முதல் நாளே ‘ஹன்றி புரோசா’ மெற்றோ வரையும் போய் ரியேசல் செய்திருந்தான். ‘ஹன்றி புரோசா’ மெற்றோவுக்கு பாதாள இரயில் செல்லவேண்டும். அங்கிருந்து 54ம் இலக்க பஸ் எடுக்கவேண்டும். பஸ்சில் செல்லும் போது முப்பத்தைந்து நிமிடத்திற்குப் பின் வருகின்ற சிறிய ஐந்து மாடித் தொடர் கட்;;டிடத்;தடியில் இறங்கினால் அந்த தொடர்மாடியில்தான் அவளுடைய அப்பாட்மென்;ட்டும் இருக்கிறது.

சரியாக இரவு ஏழு மணிக்கு அப்பாட்மென்ட் கதவைத் தட்டிய போது இஸபெல் துள்ளி வந்து கதவைத் திறந்ததை உணர முடிந்தது.

“நல்வரவு” அழகாகச் சொல்லி, மார்பு படாமல் தழுவிக் கன்னத்தில் முத்தமிட்டாள். குளிர்மையாய் இருந்தது.

மெல்லிய பச்சை நிற உடையில் அதிகபட்சம் தெரியக் கூடிய அழகுகள் எல்லாம் பளீரென்று தெரிந்தன. இந்த உடையில் சற்று உயரமாய்த் தெரிந்தாள்.

மறக்காமல் பாதணிகளைக் கழற்றிவைத்துவிட்டு, குளிர்காலத்தில் அணிகின்ற தன்னுடைய அங்கியை கழற்றினான். அதை இஸபெல் மிக மென்மையாக வாங்கி உரிய இடத்தில் தொங்கவிட்டாள்.

அழகான சிறு வரவேற்பு அறை. விலை உயர்ந்த சோபா. நிறையப் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருந்தாள். அதிலேயே அவளுடைய நேர்த்தி தெரிந்தது. சுவரில் ஒரே ஒரு ஓவியம் தொங்கியது. அதைப்பார்க்வேண்டும் என்று, அவசரத்தில் கிண்ணத்தில் ஊற்ற எழுந்த பியர் நுரைபோல் பீறிட்டு எழுந்த ஆர்வத்தை சீக்கிரமாகக் கட்டுப்படுத்திக்கொண்டான.; அனாவசியமான பேச்சுகளில் இறங்கி நேரத்தை வீணடிக்காமல் காரியத்தில் சட்டு புட்டென்று இறங்கிவிடவேண்டும் என்பது இரத்தின சிங்கத்தின் இரகசியத்திட்டம்.

இஸபெல் சோபாவில் அவனருகிலேயே மிக நெருக்கமாக அமர்ந்திருந்தாள். கனவில் வந்து வந்து பாவ்லா காட்டிய பெண்களில் இருந்து வந்த வாசனையை விட உயர்வான நறுமணம் அவள் உடலில் இருந்து வந்து கொண்டிருந்தது.

“பிளடி சீசர் தெரியுமா ?” தலையை சரித்து கண்ணை ஒரு வெட்டு வெட்டினாள்.

“சீசரைத் தெரியும்ஸ பிளடியையும் தெரியும்.. ஆனால் பிளடி சீசரைத் தெரியாது” கவலையோடு சொன்னான்.

“ உனக்கு இன்றைக்கு அதி விசேடமாக இதைக் கலந்திருக்கின்றேன்” இஸபெல் துள்ளி எழுந்து போய் இரண்டு மதுக் கிண்ணங்களுடன் வந்தாள்.

“இதனுடைய சுவையே தனியானது” இரத்தின சிங்கத்திடம் ஒரு கிண்ணத்தை நீட்டினாள்.

“சியேஸ்” இரண்டு கிண்ணங்களும் இலேசாக உரசிக் கொண்டன.

கிண்ணங்களை உரசவிடும் போது மிக அவதானமாய் இருக்கவேண்டும். கிண்ணங்களில் இருந்து மது வெளியே சிந்திவிடக் கூடாது. முரட்டுத்தனமாய் மோதவிட்டு காதுகளுக்கு விருப்பமில்லாத ஒலியை எழுப்பிவிடவும் கூடாது. “பெண்ணுடனான முதலாவது உரசலைப் போல் மிக மென்மையானதாயும் அழுத்தமானதாயும் இருக்கவேண்டும்” ரொப் அழகாகச் சொல்லிக் கொடுத்தது மட்டுமல்ல, முதல் நாள் உணவகத்தில் அரை மணி நேரப்; பயிற்சியும் கொடுத்திருந்தான். பயிற்சியில் இரண்டு தடவை கண்ணாடிக் கோப்பைகள் மோதி உடைந்து போனது வேறு விடயம்.

மதுக் கிண்ணத்தில் மெதுவாக உதட்டை வைத்து இலேசாக ஒரு வாய் பருகியவன், மெல்லக் கிண்ணத்தை தனக்கு முன் இருந்த சிறு கோப்பி மேசையில் வைத்தான். “மடக் மடக் என்று மது வைக்குடிப்பது அநாகரிகம்” இரத்தின சிங்கத்தின் ஒவ்வோர் அசைவிற்கும் பின்னால் ரொப் மானசீகமாய்; நின்று கொண்டிருந்தான்.

“அற்புதம்” ஒரு வித கிறக்கத்தில் சொல்வதைப் போல இரத்தின சிங்கம் சொன்னான்.

சரியாக இந்த வார்த்ததைகளுக்காகத்தான் இஸபெல் காத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகம் மகிழ்ச்சியால் இன்னமும் சிவந்தது.

“நன்றி” என்று கூறினாள். அவள் ஏனோ உணர்ச்சிவசப்பட்டிருந்தாள். அவளது ‘நன்றி’ என்ற வார்த்தை பிரேஞ்சில் வந்து விழுந்ததையே அவள் உணரவில்லை.

“எலும்பிச்சம் பழ சாற்றுக்குள் மதுக் கிண்ணத்தின் விளிம்புகளைஸ ஒரு அங்குலம் அளவில் தோய்த்து எடுக்கவேண்டும். பின்னர் மிளகுப்பொடியும் உப்பும் கலந்த கலவைக்குள் இந்த ஈரவிளிம்புகளை திணித்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதன் பிறகு வொட்காவையும் தக்காளி பழச்சாற்றையும் மிக அளவாக இந்தக் கிண்ணத்தில் கலந்துவிடவேண்டும். கடைசியாய் ஒரு எலும்பிச்சம் துண்டை கிண்ணத்தின் விளிம்பில் செருகி, கிண்ணத்தின் நடுவில் இலைகளுடன் கூடிய நான்கு அங்குல நீளமான ‘சலரித்’ தண்டை மிதக்க விடவேண்டும்” மிகவும் சுவாரசியமாய் இஸபெல் கூறிக்கொண்டிருந்தாள்.

அவளுடைய வார்த்தைகள் வந்து விழுகின்ற அதிர்வுகளுக்கு ஏற்ப அவளுடைய மார்புகள் இரண்டும் எவ்வாறு ஏறி இறங்குகின்றன என்று இரத்தின சிங்கத்தின் கண்கள் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தன. அவளுடைய படுக்கை அறையின் கதவு இலேசாகத் திறந்து கிடந்தது.

‘பத்து செக்கன்களில் அவளுடை கட்டிலை எட்டிவி;;டக்கூடியதாக இருக்க ஏன் இப்படி இந்த நேரத்தை இவள் அநியாயத்துக்கு வீணடிக்கின்றாள் ?’ இரத்தின சிங்கத்துக்கு எரிச்சலாய் இருந்தது. ரொப் எதிரிலேயே நின்று ஆறுதல் படுத்தினான். “மூன்று மணி நேரம் கூட ஆகலாம்ஸ. அதுவரை அவசரமே படக்கூடாது..”

“இந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய அப்பாட்மென்டில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்கின்றது. இந்த பிளடி சீசரை அங்கு அறிமுகம் செய்து எல்லாரையும் அசத்தி விடுகின்றேன் பார்.” ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லிவைத்தான். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த முடிவின்படி கொஞ்ச மதுவை கிண்ணத்திலேயே விட்டு மேசையில் வைத்தான் இரத்தின சிங்கம்.

“எனக்கும் அழைப்பு இருக்கிறது தானே ?” கொஞ்சலாகக் கேட்டாள் இஸபெல். அவளுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.

இரத்தின சிங்கம் எதிர்பாராத கேள்வியால் தடுமாறிப் போய்விட்டான். இஸபெல் அங்கு வந்தால்ஸ பிறகென்ன, நாலுநாள் கட்டிவைத்த ‘காபேச்’ மணத்தது போல கதை மொன்றியள் முதல் கொட்டாஞ்சேனை வரை பரவி விடும். இலைகள் உதிர்ந்தபின் வெண்பனியால் வெள்ளி முலாமிட்;ட மரங்கள் ஒளிபட்டு அசிங்கப்பட்டதைப்போல் இரத்தின சிங்கம் போட்டிருக்கின்ற இராமர் வேசம் கலைந்து உருகிப்போய்விடும்.

“இல்லைஸஇல்லைஸ அது சரியாய் வராது இஸபெல்..”

“ஏன் ?” இஸபெல்லுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“எல்லாருக்கும் தெரிஞ்சு போய்விடும்ஸ”

“தெரிஞ்சால் என்ன ?” இன்னம் ஆச்சரியப்பட்டாள். விழிகள் வியப்பால் உயர்ந்ததை இரத்தின சிங்கமே அவதாணித்தான்.

“மரியாதை கெட்டுப்போய்விடும்ஸ”

“யாருக்கு ?” இஸபெல்லின் கண்களில் சடுதியான ஒரு மாற்றம் தெரிந்தது.

“எனக்குத்தான்ஸ இந்த விசயங்களை இரகசியமாய் வைத்திருக்கவேண்டும்”

“ஓ”

சின்ன இதழ்களின் வழியாக, மிக அளவாகப் புன்னகை கலந்து, பிசிறில்லாமல் வந்து விழுந்து கொண்டிருந்த அவளுடைய வார்த்தைகளில் கீறல் விழுந்தது.

“எனக்கு இந்த ஞாயிற்றுக் கிழமை வேலைஸ நீ அழைத்தாலும் என்னால் வரமுடியாதுஸ.நான் சும்மாதான் கேட்டேன்.” இஸபெல் வெகு சாதாரணமாகக் கூறினாள். இரத்தின சிங்கத்திற்கு நின்மதியாய் இருந்தது. கொஞ்ச நேரத்திற்குள் அவனுக்கு தேவையில்லாம் வேர்த்தும் விட்டது. இலேசான ஏறி இருந்த வெறி எங்கு போய் தொலைந்தது என்றே தெரியாது. கொஞ்ச நேரம் அமைதி. கைகளில் இருந்த தனது மதுக் கோப்பையை வெகு ஆறுதலாகக் குடித்துவிட்டு வைத்தாள் இஸபெல்.

“இன்னொரு கிண்ணம் மது அருந்தப் போகின்றாயா ? அல்லது சாப்பிடப் போகின்றாயா ?” இஸபெல் திடாரென்று எழுந்தாள்.

இன்னொரு கிண்ணத்தை அருந்தி நேரத்தை வீணடிப்பது அநாவசியம் என்று இரத்தின சிங்கத்திற்குத் தோண்றியது. “சாப்பிடுவோமே” என்று கூறினான்.

“நான் இப்போ சாப்பிடவில்லைஸநீ சாப்பிட்டு விட்டு கிளம்புஸ.இங்கிருந்து மெற்றோவுக்கு போகின்ற கடைசி பஸ்சுக்கும் நேரமாகிவிட்டது.” சலனமில்லாமல் கூறியவள் சட்டென்று சென்று சாப்பாட்டை எடுத்து வந்தாள்.

பிரேஞ்சு முறைப்படி கோழி வதக்கி இருந்தது. புதிதாய் ஒரு இலையில் ‘சலாட்’ போட்டிருந்தாள். பிரேஞ் புடிங் என்று மூன்று வர்ணங்களின் கலவையாக ஒன்று தந்தாள். ஒன்றுமே சுவைக்கவில்லை.

மனிதர்களின் நடமாட்டங்கள் எதுவுமே இன்றி வழமையாகவே வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்ற அந்த இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கையில்தான் இரத்தின சிங்கத்தால் அதை உணரமுடிந்தது. விலையுயர்ந்த காலணிகளையும் இறுக்கமான குளிர்கால அங்கிகளையும் அணிந்திருந்தாலும் சரியான குளிர். வெப்பநிலைகூட அன்றைக்கு -35பாகைஉ என்பது சற்று தாமதமாகவே நினைவுக்கு வந்து தொலைத்தது.

***

‘உயிர்மை’யில் வெளிவந்தது.

chelian@rogers.com

Series Navigation