இதுவும் சாத்தியம்தான்

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

கோபிகிருஷ்ணன்


முதலில் சிறிது தயங்கினான்; பிறகு சொல்லியேவிட்டான், ‘நீங்கள் வந்த பிறகுதான் மருத்துவமனை கூடுதல் சோபிதத்துடன் துலங்குகிறது. நீங்கள் உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கிறீர்கள். என் உளம் நிறைந்த பாராட்டுக்கள். ‘ அவள் ஒரு மென்முறுவல் பூத்து நகர்ந்தாள்.

பரிச்சயம் வலுப்பட்டது. அடிக்கடி பேசிக் கொண்டார்கள். உணவு இடைவேளையில் ஒன்றாகவே சாப்பிட ஆரம்பித்தார்கள். அவனுக்கு முதலில் சொன்னது போதுமானதாக இல்லை போலும். மீண்டும் ஒரு முறை சொன்னான், ‘உங்கள் வடிவ நேர்த்தி மிகவும் போற்றத்தக்கது. சிருஷ்டியில் நீங்கள் ஓர் உன்னதப்படைப்பு. உங்களுக்கு ரசனையுடன் உடை அணியத் தெரிந்திருக்கிறது. மீண்டும் என் பாராட்டுக்கள். ‘ இப்பொழுது அவளிடமிருந்து ஒரு கூடுதல் மென்முறுவல்.

அவன் தொடர்ந்தான், ‘உங்கள் நீண்டவிரல்கள் கவித்துவம் வாய்ந்தவை. வீணையில் தவழ வேண்டிய விரல்கள். உங்கள் புன்னகையிலும் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கிறது. உங்கள் வெளிப்பாடுகள் அனைத்திலும் அழகுணர்வு இருக்கிறது. உங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை. ‘

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன மிகவும் சுகமாகவே. இப்பொழுதெல்லாம் ஒரே தட்டிலேயே பகல் உணவைப் பகிர்ந்து கொண்டார்கள். பணி நேரம் முடிந்ததும் மருத்துவமனைச் சிற்றுண்டியகத்தில் தேனீர் அருந்திவிட்டுப் பேருந்து நிறுத்தம்வரை சென்று அவள் செவிலியர் விடுதிக்குச் செல்லப் பேருந்தில் ஏறிக்கொள்ளும்வரை இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள்.

அவன் மறுபடியும் பாராட்டினான், ‘உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடன் என்னால் சகஜமாகவும் அன்னியோன்னியாகவும் உணர முடிகிறது. ‘

அவள் அதற்குப் பதிலளித்தாள், ‘உங்கள் உணர்வை நான் வரவேற்கிறேன். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். ‘

‘வாழ்க்கையில் பிரதானமானது அழகு ஒன்றுதான். நீங்கள் அழகுடன் இருப்பது மட்டும்தான் எனக்கு எல்லாவற்றைக்காட்டிலும் முக்கியமானதாகப்படுகிறது ‘ என்றான் அவன்.

ஒரு மாலை; பணிநேரம் முடியும் தறுவாய்; மிகவும் கலவரமடைந்த முகத்துடனும் அவசரத்துடனும் அவனது அறையை நோக்கிவந்தாள் அவள். அறையில் அவன் மட்டும்தான் இருந்தான். அவளது கண்கள் கலங்கியிருந்தன. மருத்துவர் அவளது இடுப்பை வளைத்துப் பிடிக்கப் பார்த்தாராம். அவன் அவளது கண்ணீரை வாஞ்சையுடன் துடைத்தான்.

பணியை முடித்துவிட்டு இருவரும் கடற்கரைக்குச் சென்றார்கள். அவன் மடிமீது சிரசை வைத்த வண்ணம் அவள் கண்ணீர் உகுத்தாள். அவன் தேற்றினான், ‘அழுது தீர்த்து விடுங்கள். அழுவது மிகவும் ஆரோக்கியமானது. உணர்வுகளின் கொந்தளிப்பிலிருந்து விடுபடச் சிறந்த வழி. மருத்துவரின் போக்குக்குக் காரணம் நீங்கள் மிகவும் அழகாக இருப்பதுதான். எழிலைக் கலாபூர்வமாக ரசிக்கத் தெரியாமல் அடைய யத்தனிப்பது உணர்வுகளில் ஏற்படும் இசைகேடான சிக்கல். இந்த விஷயத்தில் நம் மருத்துவர் ஒரு வெறும் பாமரன்தான். உங்களுக்கு மீண்டும் இந்நிலை வரக்கூடாது என்பதே நான் மிகவும் விரும்புவது. ‘

அவள் விசும்பலுக்கிடையே சொன்னாள், ‘உங்களுடன் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். என்னால் இதைக் காரணரீதியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. ‘

அவன் வலியுறுத்தும் குரலில் கூரினான், ‘வேண்டாம். உணர்வுகளை அப்படியே தக்க வைத்து வடியவிடுங்கள். அலசுவது, ஆய்வது இதெல்லாம் மிகவும் சங்கடத்தில்தான் போய் முடியும். ‘

அவளுக்கு அன்றைக்குப் பிறந்த நாள். அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவள் காலையில் சீக்கிரமே மருத்துவமனைக்கு வந்திருந்தாள். அவன் அவளுக்கு ஒருபுடவையைப் பரிசளித்தான். ‘உங்கள் எழிலுக்கு இது ஒரு சிறு காணிக்கை ‘ என்றான். இருபத்து ஒரு மெழுகுவர்த்திகளை ஏற்றினான். ஒரு கேக். காக்காய்க்கடி கடித்து இருவரும் சாப்பிட்டார்கள். அவள் உருக்கத்துடன் சொன்னாள், ‘நீங்கள் என் மனதை மிகவும் தொட்டுவிட்டார்கள். நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ‘

அவன் அவசரமாகத் தடுத்தான். ‘இல்லை, நீங்கள் எனக்குச் சமூகமளித்துக் கொண்டிருப்பதற்கு நான்தான் உங்களுக்குக் கடமைப்படவேண்டும். கீட்ஸ்உக்கு நைட்டிங்கேல் பறவையில் கிடைத்த பரவசம் நீங்கள் அருகிலிருக்கும்போது எனக்குக் கிடைக்கிறது. ‘

மதியம் அவள் அந்தப் புடவையில் காட்சியளித்தாள். ‘உங்கள் தோழமைப் பகிர்வு உணர்வுக்கு நான் உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவேண்டும் ‘ என்றான் அவன் நெகிழ்வுடன்.

ஒரு மாலை. மழை பெய்து ஓய்ந்த நேரம். அவள் அவசரமாக அவனை அழைத்தாள். ஜன்னலின் வழியே தெரிந்த பரந்த ஆகாயத்தில் ஓர் இரட்டை வானவில். ஓர் அற்புதம். இருவரும் நீண்டநேரம் அதை ஆழ்ந்து ரசித்த வண்ணம் இயற்கையோடு ஐக்கியமாகிச் சமைந்தார்கள்.

ஒரு விடுமுறை. அவர்கள் மை லேடாஸ் கார்டனில் இருந்தார்கள். அன்றைக்கு அங்கு மலர்க் கண்காட்சி. புஷ்பங்களின் செளந்தர்யத்தை இருவர் உள்ளமும் உள்வாங்கியும் வியந்தும் கொண்டிருந்தன. அவன் சொன்னான், ‘உங்களுக்கு மிகவும் கச்சிதமான வாசஸ்தலம் இது போன்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும். ‘

ஓராண்டு அன்னியோன்னியமாகக் கழிந்தது. அது ஒரு தற்காலிக வேலை. அன்றைக்கு இறுதி தினம். அன்றிரவு அவள் தன் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும். ரயில் புறப்படுவதற்கு முக்கால் மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையத்தில் இருவரும் இருந்தனர். அவன் அவளுக்கு பால் கிரேவ் தொகுத்த கோல்டன் ட்ரஷரி என்கிற கவிதை நூல் ஒன்றினைப் பரிசாக அளித்தான். ‘உங்களுக்கு இதுதான் மிகவும் பொருத்தமான பரிசாக அமைய முடியும் ‘ என்றான்.

அவள் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டாள், ‘ஒரு சந்தேகம். உங்களுக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றியதுண்டா ? ‘

அவனும் சிறிது தயங்கினான். பிறகு விடையளித்தான், ‘ஒருமுறை கனவில் நீங்களும் நானும் முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று தோன்றிற்று. காலையில் என் மனம் கொஞ்சம் சங்கடத்திலாழ்ந்தது. அன்றைக்கு நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன், உங்கள் சந்திப்பைத் தவிர்க்க. அடுத்தநாள் மனம் பழைய நிலையை எய்திவிட்டது. ஆழ்மனத்தின் வெளிப்பாடுகளை சாக்கடையாகவே கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே ஆழ்மனம் நிர்மாணிக்கப்பட்டு விடுவதால் அது சிறுபிள்ளைத்தனமாகத்தானே இருக்க முடியும். ஆழ்மனத்தின் விகல்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவெடுத்தால் அது அபத்தமாகத்தான் இருக்கும். இன்னொன்றும் சொல்லலாம். உங்களைப் போன்ற ஓர் அழகான ஓவியம் எனக்காகச் சமைத்துப் போட்டுக் கொண்டு இம்சைப் படுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மேலும், திருமணமானால் எனக்கு உங்கள்மேல் என்னையும் மீறி உடைமை மனப்பான்மையோ ஆதிக்க உணர்வோ தோன்ற வாய்ப்புண்டு. ஓர் அழகான உறவு சிதைவுறும். நல்லவேளை இந்த எண்ணம் வேரூன்றுமுன்னமே களைந்தெறியப்பட்டு விட்டது. ‘ அவள் பெருமூச்செறிந்தாள் நிம்மதியுடன்.

அவன் தொடர்ந்தான், ‘சில நாட்கள் முன்புகூடத் தோன்றிற்று. நீங்கள்தான் ஊருக்குப் போகப் போகின்றீர்களே, உங்கள் புகைப்படம் ஒன்றை எனக்கு நீங்கள் கொடுக்கவேண்டும் என்று கேட்கலாம் என்று. ஆனால் அதிலும் எனக்கு உடன்பாடு இல்லாமல் போயிற்று. கடற்கரைக்குச் சென்று ரம்மியத்தை அனுபவித்ததின் ஞாபகார்த்தமாக ஒரு பிடி மணலையா அள்ளி எடுத்துக்கொண்டு வைத்துப் போற்றுகிறோம் ? எல்லா நினைவுச் சின்னங்களும் ஒரு விதத்தில் ஃபெட்டிஷஸ்(fetishes). இதுவும் மனத்தின் விகாரம்தான். சின்னங்கள், புறத்தூண்டுதல்கள் இவை இல்லாமலேயே நினைவுகள் பசுமையாக நெஞ்சில் தங்கிவிடுகின்றன. நினைவுகளை அவற்றின் இயல்புக்கே விட்டு விடுவோம். நாமாக வலிந்து எதையும் செய்ய வேண்டாம். ‘

அவனுக்கு அவளிடம் சொல்ல இன்னும் விஷயங்கள் இருந்தன. ‘இதையும் உங்களிடம் சொல்லவேண்டும். சிலகாலம் முன்பு ஓர் அழகான பெண்ணுடன் இதேபோல் பழகிக் கொண்டிருந்தேன். நீங்கள் பொறாமைப் படவில்லையே ? ‘

‘இல்லை, எனக்கு யாதொரு அசூயையும் தோன்றவில்லை. சொல்லுங்கள். ‘

‘மேலெழுந்தவாரியாகச் சொல்கிறீர்களா ? இல்லை உண்மையாவா ? ‘

‘உண்மையாகத்தான். உங்களுக்கென்ன என்மேல் இப்படி ஒரு திடார் சந்தேகம் ? ‘

அவன் ஆசுவாசத்துடன் தொடர்ந்தான், ‘எனக்கு இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஆச்சரியமாக இல்லை. சராசரிகளிலிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர் என்பதை ஓரளவுக்கு மேலேயே நான் அறிவேன். உங்கள் ஆளுமை மிகவும் ஆரோக்கியமானது. ‘

அவள் சிரித்தாள். சொன்னாள், ‘நீங்கள் ஒரு வினோதமானவர். ‘

அவன் அதையே அவளிடம் திருப்பிச் சொன்னான், ‘நீங்களும்தான் ஒரு வித்தியாசமான பெண். ‘

அவன் தொடர்ந்தான். ‘விஷயத்துக்கு வருகிறேன். அந்தப் பெண் திடாரென்று ஒரு நாள், நீங்கள் என் உடன்பிறவா சகோதரர் மாதிரி என்று சொல்லிவிட்டாள். அன்றிலிருந்து அவளுடன் பழகுவதை விட்டுவிட்டேன். ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பைத் தேடிக் கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல். என்னைப் பொறுத்தமட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே. இப்படிப் பார்க்கும்போது உங்கள் தோழமையை பவித்திரம் வாய்ந்ததாகவே நான் உணர்ந்து கொள்கிறேன். ‘

ரயில் கிளம்புவதற்கான ஒலிபெருக்கி முன்னறிவிப்பு, அதைத் தொடர்ந்து விளக்குச் சமிக்ஞை, ஊதல் ஒலி, கொடி காட்டல் நிகழ்ந்தேறின.

அவன் தொடர்ந்தான், ‘உங்களுடன் பழகிய நாட்கள் கவிதையுலகில் சஞ்சரிப்பது போன்றவை. மென்மையானவை. மனநிறைவு கொடுத்தவை. ‘

ரயில் நகர ஆரம்பித்தது. அவள் வலது கையை நீட்டினாள். அவன் தனது இரு கைகளாலும் அதைப் பற்றி நட்புணர்வுடன் குலுக்கி விடை கொடுத்தான். தோழமையின் உன்னத உணர்வலைகள் இருவர் மனத்தின் அனைத்து இழைகளிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அவள் கண்கள் லேசாகப் பனித்திருந்தன. அவள் பார்வையிலிருந்து மறையும்வரை அவன் இமை கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

Series Navigation

1 Comment

Comments are closed