ஆறு பள்ளமாகி வாய்க்கால் மேடான கதை

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

திருதிருக்கை


அள்ள அள்ளப் பணம் … எங்கே எதிலே என்று திகைக்கிறீர்களா. மணலில்தான் ஐயா மணலில்தான். மண்ணாய்ப்போகும் இந்த மனிதர்கள் இந்த மண்ணில்…. மணலில் அடிக்கும் கொள்ளைதான் கோடிக்கணக்கில்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் தண்ணீர் மட்டும்தான் வரமாட்டேங்கிறது. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்குதோ இல்லையோ கோக், பெப்ஸி, மிராண்டா என மிரட்டும் குளிர்பானங்கள் கூரைக்கடையிலும் கூப்பிட்டு விற்கின்றனர். தண்ணீருக்குத் தட்டுப்பாடான தமிழகத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் தொழிற்துறைகளான கார் தொழிற்சாலை, குளிர்பான தொழிற்சாலை என மாநில, மத்திய அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு அனுமதி அளிக்கின்றன.

தண்ணீர் இல்லா ஆறுகளும், குட்டைகளும், குளங்களும் ரியல் எஸ்டேட்காரர்களால் மனைகளாக் மாற்றம் பெறுகின்றன. மிச்சமிருக்கும் ஆற்றில் மீதியிருக்கும் மணலை தெரிந்தும் ? தெரியாமலும் கொள்ளை, தடுக்க வரும் அரசு அதிகாரிகளை மணல் லாரிகளை புல்டோசரைப் போன்று ஏற்றிக்கொல்லும் கொடுமை என கொடுமையின் கோரத்தாண்டவம் கொடிகட்டிப்பறக்கிறது தமிழ்நாட்டில்.

வரைமுறை இல்லாமல் மணலைச்சுரண்டி எடுத்ததால் நிலத்தடி நீர்வளம் பாதிப்பது மட்டுமன்றி, ஆறே பள்ளமாகி வாய்க்கால்கள் மேடாகி நீர்பாயாமல் உள்ளன. இந்தக்காட்சிகள் அரங்கேறுவது கரூரில் உள்ள அமராவதி ஆற்றில்தான்.

எந்தக்கட்சியின் கொடி கோட்டையில் பறந்தாலும், கோட்டையின் கொடிக்கு மேலே பறப்பது அநீதி என்ற மாறாத கொடிதான் இந்த 58 ஆண்டுகளில்.

பெருகிவரும் மக்கள்தொகை, மற்றும் தொழில் பெருக்கம், மக்களிடையே முன்னிருந்ததைக்காட்டிலும் பணப்புழக்கத்தை அதிகரித்திருப்பதை மார்கெட்டுக்கு சென்றால் அறிந்து கொள்ளமுடியும், இந்த சுழலில் ஒவ்வொருவரும் அடிப்படை தேவையான ‘குடியிருக்க ஒரு வீடு ‘ என்ற தாகத்தைக் கொண்டிருப்பதால் வீட்டு கட்டுமானப் பொருள்களின் விலை கிடைக்காத தொலைவில் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

செங்கலுக்கு தேவையான களிமண், காரைக்குத்தேவையான ஆற்றுமணல், நுாணநுிகூீப கலவைக்கு தேவையான ஜல்லி, சிமெண்ட், இரும்பு ஆகியவை முக்கிய மூலப்பொருட்கள். இவையனைத்தும் இயற்கையில் கிடைக்கும் கனிம வளங்களையே சார்ந்துள்ளன.

இயற்கை மூலப்பொருட்களான இவைகள் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் நமக்கு கிடைக்கிறது. இப்படியிருக்கிற சுழலில் பெரு நகரங்களிலும் நடைபெறும் பலகோடி ரூபாய் கட்டிடத்திலிருந்து சில இலட்சங்களில் உருவாகும் ஒரு நடுத்தர வர்க்கத்தின் வீடுவரை தேவை ஒன்றாக இருப்பதால், இவைகளில் விலைகளை வரையறுக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாததாகி விடுகிறது. அரசும் கம்மென்று பார்த்திருப்பதைத்தவிர வேறு வழி என்ன ? என்று கன்னத்தை கைகளால் தாங்கிய வண்ணம் உள்ளது.

ஆற்றுமணலையோ, சிமெண்ட்டுக்குத் தேவைப்படும் சுண்ணாம்பையோ, ஜல்லியையோ, இரும்பையோ செயற்கைமுறையில் தயாரிக்க தற்போது உலகில் வழியேதும் கிடையாது. ஆக மாற்று கட்டுமானப் பொருட்களை உபயோகிக்க அல்லது வழி கண்டுபிடித்தல் அவசியமானது.

உதாரணமாக அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரித்து உருவாகும் சாம்பல் பன்னெடுங்காலமாக வீணாக்கப்படுகிறது. இப்பொழுதுதான், சிமெண்டிலும், சாலை அமைத்தலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாம்பலைக்கொண்டு செங்கல்களைச் செய்ய உரிய தொழில் நுணுக்கங்கள் எளிதில் கிடைக்கின்றன. இதனை மிகப்பெரிய அளவில் செய்யும்போது, மணலுக்கான தேவை சற்றேனும் குறையும். இதுபோன்ற மாற்று வழிகள் ஒவ்வொரு கட்டுமான பொருள்களுக்கும் கண்டுபிடிக்கவேண்டிய, கட்டாய சுழலில் உள்ளதால், பல்கலைக்கழகங்களும், தொழில்நுட்பக்கல்லூரிகளும் இத்துறையில் நாட்டம் செலுத்தி, நல்ல கண்டுபிடிப்புகளை உருவாக்கவேண்டியது அவசியமாகிறது.

எப்படி எரிபொருளுக்கு மாற்றுத் தேவை என்ற கருத்து வளமாகி மாற்றுவழிகள் கண்டறிந்து, செயல்பட்டு வருகிறதோ, அதுபோல கட்டுமானப்பொருள்களுக்கு மாற்று வழிகளை வளர்க்க மனங்கள் முன்வரவேண்டும்.

மணற்கொள்ளை, பகல்கொள்ளை என்று ஏடுகளில் படித்து உச் கொட்டுவதுடன் நில்லாமல் முனைப்புடன் முயன்றால் முடியாததை முறியடிக்கலாம். நினைத்துப்பாருங்கள் விளையாட்டக சிலர் கூறுவர், பணம் மரத்தில் காய்க்குதா ? என் பைக் என்ன தண்ணீரிலா ஓடுகிறது என. ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் நீரால் ஓடுகிற கார்கள் உலாவந்து கொண்டிருக்கின்றன. கட்டுமான பொருள்களுக்கு மாற்று வெகுதொலைவில் இல்லை.

****

thirukkai@gmail.com

Series Navigation

திருதிருக்கை

திருதிருக்கை