ஆயுளைக் குறுக்கும் ஊழ்!

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

சி.ஜெயபாரதன், கனடா


கொடிது! கொடிது!
மனித உலகம் கொடியது!
நொடிப் பொழுதில்
பெருங்கதை ஒன்று சிறுகதையாய்
முடியுது!
பள்ளத்தைக் கடக்க
வாலிப வல்லுநர்,
பாலம் கட்டுவார்!
மேதைகள் பணி புரிய
கல்மீதும், முள்மீதும் சீரான
பாதை அமைப்பார்!
ஆயினும்
ஊழியின் துதிக்கை கண்மூடி
வெடிவைக்கும்
ஒரு நொடியில் !

எத்தனை வடிவில் எமபெருமான்
வாசல்முன் வருகிறான்!
வாஞ்சையாய்ப் பாசக் கயிற்றில்
ஊஞ்சல் ஆடுவான்!
உத்தமர் ஆயுலில்
பாதியைத் தேடுவான்!
சிலுவையில் தொய்ய விட்டான்,
வலுவிலா ஏசுவை!
நோயில் புரட்டினான்,
மாகவிப் பாரதியை!
துப்பாக்கி உண்டது,
ஒப்பிலா மார்டின் லூதரை!
பிணியில் மாய்ந்தான்,
வாலிபனாய்க்
கணித மேதை ராமானுஜன்!
அவ்வித நோயில் மறைந்தார்,
மனிதருள்
புனிதர் விவேகா நந்தர்!
கன்னி வயதில்,
என்னரும் தங்கையை
எமன் கொண்டு சென்றான்!

சென்ற மாதம் இன்றைய தினத்தில்
புற்று நோய்க் கூடத்தில்
ஆய்வுகள் புரிந்தவர்!
இன்றைய தினத்தில்,
வாலிப நிபுணர்,
ஆய்வகம் விட்டுப் போனவர்,
மீள வில்லை,
நல்வினை புரிவோர்க் கெல்லாம்,
நான்முகன்
நறுக்கென அறுத்தான்,
நடுவே ஆயுளை!
ஊழிப் பேயின் கோரப் பசிக்கு
வாலிப உயிர்தான்
வயிற்றுக் குணவா?

ஊரினில் அமைத்தது மருத்துவ ஆய்வு!
ஊழ்விதி அளித்தது மரணப் பரிசு!
புற்றுநோய் பணிக்கு விதி
வைத்தது,
முற்றுப் புள்ளி!
பதிமூன் றாண்டுகள் மருத்துவப்
பயிற்சி பெற்றார்,
அமெரிக்க நாட்டினில்!
பதிமூன்று வாரத்தில் ஆயுள்
பாதியாய் முறிந்தது,
பிறந்த பூமியில்!
களைகளை விட்டு ஊழின்கை
அறுவடை புரியும்
முளைகளை!
கொடிது! கொடிது!
மனித உலகம் கொடியது!
நொடிப் பொழுதில்
ஆலமரம் ஒன்றை வெட்டி
வாழை மரமாக்கும்
ஊழ்!

********************

(கவிக்குயில் திலகபாமாவின் உறவினர், மருத்துவ நிபுணர் அமெரிக்காவில் 13 ஆண்டுகள் புற்றுநோய் ஆய்வுகள் செய்து, இந்தியாவுக்கு மீண்டு சிவகாசியில் மூன்று மாதங்கள் தன் புதிய ஆய்வுக் கூடத்தில் பணியாற்றிச் சமீபத்தில் திடீரென வாகன விபத்தில் காலமான அதிர்ச்சி நிகழ்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய ஓர் இரங்கற்பா.)

jayabarat@tnt21.com [S. Jayabarathan July 20, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா