ஆண்மகன்

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

ஜோசப்


“நாம அந்த பொண்ணைப் பார்த்துவிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது. இன்னமும் ஒரு முடிவும் அவங்களுக்கு சொல்லாம இருந்தா என்னடா நினைப்பாங்க ? அப்படியென்னடா குழப்பம் உனக்கு ? உன் மனசுல வேற யாராவது இருந்தா சொல்லேன், டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வரலாம் ?”

“என் மனசுல வேற யாரும் இல்லேங்கறது உங்களுக்கும் புவனாவுக்கும் நல்லாவே தெரியும். அப்படியிருந்தா இந்த பெண் பார்க்கற சடங்குக்கே ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன். என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாதாப்பா ?”

“அப்புறமென்ன ? முடிவை சொல்லிரவேண்டியதுதானே ?”

“அதுக்கில்லைப்பா. வேற ஒரு விஷயம் இருக்குது. அதுக்குத்தான் யோசிக்கறேன்.”

“அப்படியென்னடா விஷயம், சொல்லேன் ?”

ரவி தன் தந்தையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பி தன் தங்கையின் அறையைப் பார்த்தான். புவனா அறைக்கதவை அடைத்துக்கொண்டு மும்முரமாக தன் கடைசி செமஸ்டர் பரீட்சைக்கு தயாரித்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். அவளுடைய படிப்புக்கு இடைஞ்சல் விளைவிக்காவண்ணம் குரலைத் தாழ்த்திக்கொண்டு பேசினான்.

“அப்பா, நான் அந்த பொண்ணோட கொஞ்சம் பேசணும்னு கேட்டுட்டு அவளோட ரூம்ல இருந்து கொஞ்ச நேரம் பேசினோமே அப்போ ஒரு விஷயத்தை என்கிட்ட வெளிப்படையா அந்த பொண்ணு பேசினாப்பா. அதை நினைச்சாத்தான் எனக்கு தயக்கமாயிருக்கு..”

மகாதேவன் தன் மகனுடைய தயக்கம் புரியாமல் எரிச்சலடைந்தார். இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு மெளனமாய் அவனைப் பார்த்தார்.

“கல்யாணத்துக்கப்புறமும் தன்னோட முழு சம்பளத்தையும் தன் வீட்டுக்குத்தான் குடுக்கணுங்கற அவளோட முடிவுக்கு நான் சம்மதிக்கணும்னு சொன்னாப்பா. அதான் யோசிக்கறேன்.”

மகாதேவன் வியப்புடன் தன் மகனைப் பார்த்தார். “நீ அதுக்கு ஒண்ணுமே சொல்லலையா ?”

“யோசிச்சி சொல்றேன்னு சொன்னேன்.”

“ஏன் ?”

ரவி குழப்பத்துடன் தன் தந்தையைப் பார்த்தான்.

“என்னப்பா கேக்கறீங்க ? அவ்வளவு ஈசியா முடிவு பண்ணக்கூடிய விஷயமா இது ? உங்கக்கிட்டல்லாம் டிஸ்கஸ் பண்ணவேண்டாமா ?”

“சரி. உடனே என்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்க வேண்டியதுதானே ? போகட்டும். இப்ப டிஸ்கஸ் பண்ணலாம். அவளோட ரிக்வஸ்ட் நியாயமானதுன்னு நினைக்கறியா, இல்லையா ?”

“நீங்க என்ன நினைக்கறீங்க ?”

“நான் நினைக்கறது இருக்கட்டும். நீ என்ன நினைக்கறே ?”

“என்னால இப்பவும் முடிவு பண்ண முடியலை ? அதான் குழம்பி போயிருக்கேன்.”

“சரி. அதிருக்கட்டும். பொண்ணை உனக்கு புடிச்சிருக்கா, இல்லையா ? அதச் சொல்லு முதல்ல.”

‘இதென்ன கேள்வி ? ‘ என்பதுபோல் அவரைப் பார்த்தான் ரவி. “அவளைப் புடிக்கலைனா அவளோட ரிக்வெஸ்ட்டைப் பத்தி ஒரு முடிவுக்கு வர இவ்வளவு யோசிக்க மாட்டேனேப்பா ?”

“ரைட். ஒத்துக்கறேன். இருந்தாலும் இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு ? ஒண்ணு இதுக்கு ஒத்துக்கணும். இல்லன்னா முடியாதுன்னு சொல்லிரணும். இதுல ஏதாவது ஒண்ணுதானே உன் முடிவாயிருக்கணும் ? இதுக்கெதுக்கு பத்து நாள் ?”

ரவி எரிச்சலுடன் தன் தந்தையைப் பார்த்தான். அப்பா எப்போதுமே இப்படித்தான். சினிமால வர விசு மாதிரி. எல்லாத்துக்கும் வில்லங்கமாவே யோசிப்பார், பேசுவார்.

“என்னடா யோசிக்கறே ? இதுக்கும் குழப்பமா ?”

“நீங்க ஏதாவது எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு பார்த்தா.. என்னைப் போட்டு குழப்பறீங்களேப்பா!”

மகாதேவன் எழுந்து ஹாலின் குறுக்கே நடக்க ஆரம்பித்தார்.

ரவிக்கு எரிச்சல் கூடியது. அப்பா இப்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் விஷயம் மேலும் சிக்கலாகப் போகிறதென்று அர்த்தம். தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது.

நளினியைப் பார்த்தவுடனே அவளுடைய அழகில் மயங்கி மனதில் சம்மதம் என்று சொல்லிவிட்டான் ரவி. புவனாவும் அவனைப் பார்த்து அண்ணி சூப்பர்டா அண்ணா என்று கண்ணாலேயே சாடைக் காட்டினாள். விஷயத்தை அத்தோடு விட்டிருந்தால் இந்த குழப்பமேயிருந்திருக்காது. எல்லாம் அவளிடம் தனியாய் பேசவேண்டும் தான் ஆசைப்பட்டதின் விளைவுதான். இருந்தாலும் இந்த குழப்பம் திருமணத்திற்கு முன்னமே வந்தது நல்லதுதான் என்றும் தோன்றியது அவனுக்கு. திருமணம் முடிந்த கையோடோ அல்லது அவளுடைய முதல் மாச சம்பள தினத்தன்றோ இந்த பிரச்சினை கிளம்பியிருந்தால் தன்னால் என்ன செய்திருக்க முடியும் ?

“சரிடா ரவி. நான் உன்னை ஒண்ணு கேக்கறேன். இந்த விஷயத்தை நளினி கல்யாணம் முடிஞ்ச பிறகு உன்கிட்ட சொன்னான்னு வச்சிக்குவோம். அப்போ நீ என்ன முடிவு பண்ணியிருப்பே ?”

“அப்பா நீங்க விசுவை இமிடேட் பண்ணி உங்க குரலை மாடுலேட் பண்ணாதீங்க. எரிச்சலாயிருக்கு.”

மகாதேவன் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை ஏளனத்துடன் பார்த்தார்.

“டேய் டிராக்கை மாத்தாதே. நான் விசுவை இமிடேட் பண்றேன்னே வச்சுக்குவோம். உன் பதிலைச் சொல்லு. என்ன பண்ணியிருப்பே ?”

என்ன செய்திருப்பேன் ? தனக்குத்தானே ஒரு முறை கேட்டுக்கொண்டான் ரவி.

‘முடியாது. அதெப்படி உன் சம்பளம், என் சம்பளம் என்று பிரித்துப் பார்ப்பது ? இனி நம்ம ரெண்டு பேரோட சம்பளத்தையும் சேர்த்துத்தான் பட்ஜெட் போடமுடியும். அப்பாவும் ரிடையர்டாயாச்சு. அவருக்கு பென்ஷன், கின்ஷன்னு ஒண்ணும் கிடையாது. அதுக்குத்தானே நானே வேலை செய்ற பொண்ணு வேணும் இத்தனை நாள் அலைஞ்சேன் ? ‘

இப்படி பேசியிருப்பேனா இல்லை ‘சரி.. குடுத்துக்கோ.. நாம எப்படியாவது மேனேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லியிருப்பேனா ? தெரியலையே! ‘ என்று மேலும் குழம்பினான்.

குறுக்கும் நெடுக்கும் நடப்பதை நிறுத்திவிட்டு கடந்த சில மணித்துளிகளாய் தன் முன் நின்றுக்கொண்டிருந்த தன் தந்தையை ஏறெடுத்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான் ரவி ‘ஒண்ணும் தெரியலைப்பா ‘ என்பதுபோல்.

“உன்னால முடிவெடுக்க முடியலை. சரியா ?”

“ஆமாம். நீங்க சொல்லுங்க. என்ன பண்றது இப்ப ? நளினியோட சம்பளம் இல்லாம நம்மால மேனேஜ் பண்ண முடியுமா ?”

“இவ்வளவு நாள் பண்ணலையா ? அப்படியே பண்ணிட்டா போச்சு.”

‘எத்தனை அசால்டா சொல்றார் ? ‘ என்ற வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தான் ரவி. ‘அப்பா எப்பவுமே இப்படித்தான். அவனுக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்து அவர் டென்ஷனாகி அவன் பார்த்ததே இல்லை. அம்மா அதற்கு நேர் எதிர். அப்பாவுக்கும் சேர்த்து டென்ஷனாயி, டென்ஷனாயிதான் ரத்தக்கொதிப்பு அதிகமாயி அல்பாயுசுலேயே போய் சேர்ந்துட்டாங்க.. இப்ப நானும் புவனாவும் இவர்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறோம் ‘

“டேய். என்ன சைலண்டாயிட்டே.. ?”

கடந்தகால நினைவுகளில் மூழ்கிப்போன ரவி திடுக்கிட்டு நிமிர்ந்து ஒன்றும் புரியாமல் தன் தந்தையைப் பார்த்தான். “எ… என்னப்பா ?”

“சர்த்தான் போ. உங்கம்மா மாதிரியே கனவு காண ஆரம்பிச்சிட்டியா ? அவ தான் இருக்கற வரைக்கும் நிகழ்காலத்துல வாழ்ந்ததே இல்லை. ஒண்ணு ஒரு இருபத்தஞ்சி வருஷம் முன்னால நடந்தத நினைச்சி புலம்புவா.. இல்லன்னா இப்படியே போனா அஞ்சாறு வருஷத்துக்கப்புறம் நாம எப்படியிருப்போம்னு புலம்புவா.. என்னாச்சி ? உங்க ரெண்டு பேரையும் என் தலையில கட்டிட்டு அல்பாயுசுல போய்ட்டா..”

ரவிக்கு எரிச்சலாய் வந்தது.. “இப்ப என்னப்பா சொல்ல வரீங்க ?”

“நீதாண்டா சொல்லணும். நீதானே கல்யாணம் பண்ணிக்கப்போறவன் ? நீதான் சொல்லணும்.”

“நான் என்ன சொல்லணும்னு சொல்றீங்க ?”

“சரியாப்போச்சு. நாம இப்ப என்ன பேசிக்கிட்டிருக்கோம்னே மறந்து போச்சா ? விளங்குனாப் போலத்தான்.”

ரவி மீண்டும் புவனாவின் அறைக்கதவைப் பார்த்துவிட்டு தன் தந்தையிடம் கண்ணால் சாடைக் காண்பித்து ‘கொஞ்சம் உங்க குரலைத் தாழ்த்தி பேசுங்க ‘ என்றான்.

“சரி.. சொல்லு. இப்ப என்ன பண்லாம்கறே.” குரலை வெகுவாய் தாழ்த்தி ரகசியக் குரலில் தன் முகத்துக்கு வெகு அருகில் வந்து பேசிய தன் தந்தையின் முகபாவனை அவனை அந்த குழப்பத்திலும் கட்டுப்படுத்தமுடியாமல் உரக்க சிரிக்க வைத்தது.

“டேய், டேய். என்னை சொல்லிட்டு நீ எதுக்கு இப்படி சத்தம் போட்டு சிரிக்கறே ?”

புவனா ரவியின் சிரிப்பு சத்தத்தைக் கேட்டுவிட்டு தன் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“என்னப்பா.. அண்ணா இப்படி சிரிக்கறான்! என்ன ஜோக் அடிச்சீங்க ? எனக்கும் சொல்லுங்கப்பா நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போறேன்.. படிச்சி, படிச்சி போர் அடிக்குதுப்பா..”

“ஒண்ணுமில்லை புவனா.. நீ போய் படி.. இல்லைன்னா புத்தகத்தை மூடிவச்சிட்டு போய் தூங்கு. நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்து படி.. போ.. அப்பாவுக்கு வேற வேலையில்லை நேரம், காலம் தெரியாம எதையாவது சொல்லிக்கிட்டிருப்பார்.”

மகாதேவன் பொய்க்கோபத்துடன் தன் மகனை அடிக்க கை ஓங்கினார். “டேய் ஆரம்பிச்சது நீ. இப்ப என்னை சொல்றியா ? நீயே கேளு புவனா.. அன்னைக்கி பொண்ணு பார்க்க போனோமில்லையா ?”

“ஆமாம். அதுக்கென்ன இப்போ ? அதான் அண்ணா அன்றைக்கே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டானே.”

வியப்புடன் தன் மகளைப் பார்த்தான் மகாதேவன். “என்ன புவனா சொல்றே.. பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டானா ? இவனா ? யார்கிட்ட ?”

“என் கிட்டதான் சொன்னான். நானும் நைஸ் செலக்ஷன்னு சொன்னேன். சரிதானேப்பா. அவங்களுக்கு என்ன குறைச்சல் ?”

மகாதேவன் ஓரக்கண்ணால் தன் மகனைப் பார்த்தாவாறே பேசினார். “அதில்லைம்மா பிரச்சினை ? அந்த பொண்ணும் உங்கண்ணாவும் தனியா ரூம்ல போய் பேசினாங்களே, உனக்கு ஞாபகம் இருக்கா ?”

“ஆமா.”

“அந்த பொண்ணு கல்யாணத்துக்கப்புறமும் என்னோட முழுசம்பளத்தையும் எங்க வீட்லதான் குடுப்பேன்னு சொன்னாளாம்..”

புவனா வியப்புடன் தன் அண்ணனை பார்த்தாள். “என்னண்ணா அப்படியா ? நீ ஏன் அன்றைக்கே என்கிட்ட சொல்லலை ?”

“ஏய் புவனா, உன்கிட்ட சொன்னா நீ என்ன செஞ்சிருப்பே ?”

“இதென்னப்பா கேள்வி ? அதெல்லாம் முடியாதுன்னு சொல்ல சொல்லியிருப்பேன்.”

“கரெக்ட். நீ சொல்றதுதான் சரி. அதுக்காகத்தானே ஒரு வேலை செய்ற பொண்ணுதான் வேணும்னு காத்துக்கிட்டிருந்தேன்.”

“அப்ப ஏண்ணா குழம்பறே ? அப்பா நீங்களே கூப்பிட்டு சொல்லிருங்க. இந்த பொண்ணு நமக்கு வேண்டாம். வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ளயே இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டா நமக்கு சரிவராது..”

மகாதேவன் பதில் சொல்லாமல் மெளனமாயிருந்தார்.

ரவி புவனாவை பார்க்க அவள் தன் தந்தையைப் பார்த்தாள்.

“என்னப்பா ஒண்ணும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் ?”

மகாதேவன் தன் பிள்ளைகள் இருவரையும் பார்த்தார். பிறகு முடியாது என்பதுபோல் தலையை அசைத்தார்.

புவனாவும், ரவியும் ஒரு சேர, “அப்படின்னா ? என்னத்த முடியாதுங்கறீங்க ?” என்றனர்.

“நான் அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி உங்க பொண்ணை புடிக்கலைன்னு சொல்ல முடியாதுங்கறேன்.”

“ஏன் ?”

“ஏன்னா அந்த பொண்ணு உன் கிட்ட சொன்ன விஷயத்தை அவ அப்பா, அம்மாக்கிட்ட சொல்லியிருக்கோ என்னவோ. பத்து நாள் கழிச்சி இப்ப போய் உங்க பொண்ணை பிடிக்கலைன்னு என் பையன் சொல்றான்னு எப்படி சொல்றது ? நீயும் புவனாவும் அங்கேயே வச்சி சைகையாலேயே அந்த பொண்ண புடிச்சிருக்குங்கறா மாதிரி பேசினதை எல்லாரும் பார்த்திருப்பாங்க.. அதனால…”

ரவிக்கு தன் தந்தை சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் பேசினான். “அப்ப இதுக்கு என்னதான் முடிவு ?”

“அதை நீதான் சொல்லணும். உனக்கு அந்த பொண்ணை புடிச்சிருக்கு. அவளோட ஐடியாவைத்தான் புடிக்கலை. ஏன்னா நம்ம குடும்பம் நிலவரம் அப்படியிருக்குன்னு யோசிக்கறே. ஆனா அதே சமயம் அந்த பொண்ணோட யோசனைக்கு அவங்க வீட்டாரே ஒத்துக்குவாங்களான்னு தெரியலையே.. அதனால வெறுமனே உங்க பொண்ணைப் பிடிக்கலைன்னு சொல்லாம.. உங்க பொண்ணு சொன்ன யோசனைல எங்களுக்கு உடன்பாடில்லை.. அப்படான்னு சொல்லிருவோம்.. என்ன சொல்றே ?”

ரவிக்கு தன் தந்தையின் ஆலோசனை சரியென்று பட்டாலும் அந்த பெண் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்று நினைத்தான். ‘சே! எல்லாம் தன் அதிங்கப்பிரசங்கத்தால் வந்த வினை ‘ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டான். அதுவுமல்லாமல் இந்த விஷயத்தை பெண் வீட்டாருக்கு அறிவிக்கும் வேலையை தன் தந்தையிடம் கொடுப்பதில் உள்ள பிரச்சினையையும் எண்ணிப் பார்த்தான். அவர் சுபாவம் அப்படி. பேச்சுவாக்கில் ஏதாவது ஏடாகூடமாக பேசப்போய் விஷயம் பெரிசாகிவிடுமோ என்ற பயம் அவனுக்கு.

“என்னடா மறுபடியும் யோசனை ?” என்ற தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான் ரவி. அவர் இந்த விஷயத்தை விலாவாரியாய் பெண் வீட்டாரிடம் தொலைப்பேசியில் பேச தயாராய் நிற்பதைப்போல் தோன்றியது. கண்டிப்பாய் இந்த விஷயத்தை அவரிடம் விடக்கூடாது.. தானே டால் பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தான்.

“அது சரிவரும்னு தோணலைப்பா.. நானே பார்த்துக்கறேன்.. புவனா நீ போய் படு.. எனக்கும் தூக்கம் வருது. குட்நைட்ப்பா..” என்றவாறு தன் அறையை நோக்கி நடக்கவாரம்பித்த ரவியை ஓடிச்சென்று வழிமறித்தார் மகாதேவன்.

“டேய் உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டிருக்கே ? நீயா டால் பண்ணிக்கறயா ? அப்ப எதுக்கு என்கிட்ட யோசனை கேட்டே ? இவ்வளவு நேரம் ராத்திரி நேரத்துல மாங்கு மாங்குன்னு என் மண்டையக் குடைஞ்சி ஒரு அருமையான யோசனைய சொன்னா அது சரிவராது நானே பார்த்துக்கறேன்னு சொன்னா என்ன அர்த்தம் ?.. இங்க பார் ரவி. இது சாதாரண விஷயமில்லே. உங்கள மாதிரி சின்னப் பசங்க எதையாவது தனியா பேசிக்க வேண்டியது.. அப்புறம் அதுல முடிவெடுக்கற விஷயத்த மட்டும் தூக்கி அப்பா, அம்மா மேல போட்டுர வேண்டியது.. கல்யாண விஷயம்டா.. அதுவும் ஒரேயொரு பொண்ணைப் பெத்துவச்சிக்கிட்டு அந்த குடும்பம் எப்படியாவது தன் பொண்ணை ஒருத்தனுக்கு கட்டிக்குடுத்தாப் போறும்னு நினைச்சி ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்கறப்போ.. பாவம்டா அவங்க.. பொண்ணைப் பார்த்துட்டு போய் பத்துநாளா ஒரு பதிலும் வரலையேன்னு அவங்க அங்க அலைபாஞ்சிக்கிட்டிருக்கறப்போ… உன்கிட்ட அந்த பொண்ணு சொன்ன விஷயத்தை அன்றைக்கே எங்கிட்ட சொல்லியிருந்தாலும் ரெண்டொரு நாள்லயே எதையாவது தீர்மானம் பண்ணி முடியும், முடியாதுன்னு சொல்லியிருக்கலாம். அத விட்டுட்டு… இப்ப இவனா முடிவெடுத்துக்கறானாம். அதுக்கு இத்தனை நாள் என்ன செஞ்சே.. டேய்! இதெல்லாம் நல்லா இல்லை. சொல்லிட்டேன்…”

இதற்கு மேல் இந்த விஷயத்தில் தன் பங்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தோடு தன் அறையை நோக்கி நடந்த புவனா நின்று தன் தந்தையைப் பார்த்தாள். ‘அப்பா சொல்வதும் நியாயம்தானே! ‘ என்று தோன்றினாலும் தன் குடும்பத்துக்காக மட்டுமே தன் சகோதரன் முடிவெடுக்கமுடியாமல் தடுமாறுகிறான் என்பதை நினனக்கும்போது அவனுக்காக அனுதாபப் பட்டாள். தானே தன் சகோதரனுக்கு ஒரு பாரமாய் நிற்கிறோமே என்று நினைத்தவள் அவனை நோக்கிச் சென்று அவன் தோளில் கைவைத்து தன்னை நோக்கித் திருப்பினாள்.

“அண்ணா நான் ஒண்ணு சொன்னா கேப்பியா ?”

“என்ன புவனா ? சொல்லு.. அப்பா மாதிரி உனக்கும் ஏதாவது ஐடியா சொல்லணுமா..”

ரவியின் கேள்வியிலிருந்த கேலியையும் வேதனையையும் பொருட்படுத்தாத புவனா.. “நீ பேசாம இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிருண்ணா.. எனக்கு இந்த செமஸ்டர் முடிஞ்சதும் காம்பஸ் ரெக்ரூட்லயே வேலைக் கிடைச்சுருங்கற நம்பிக்கையிருக்கு.. நம்மால மேனேஜ் பண்ணிக்க முடியும்ணா.. என் கல்யாணத்துக்கு பணம் சேக்கணுமேங்கறதுக்காக நீ இதை வேணாம்னு சொல்லிறாத.. அதுக்கு இன்னும் எத்தனையோ வருஷம் இருக்கு.. இருபத்தஞ்சி வயசுக்கு முன்னால கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே எனக்கு இல்லை.. நீ நிம்மதியா போய் தூங்கு.. நாளக்கு அப்பா அவங்க வீட்டுக்கு போய் சம்மதம்னு சொல்லிட்டு வந்திரட்டும்.. அப்பா போய் படுங்கப்பா.. மீதியை நாளைக்கு பேசிக்கலாம்.. குட்நைட்..”

தன் பதிலுக்குக் காத்திராமல் தன் அறைக்குள் சென்று திரும்பி தங்கள் இருவரையும் பார்த்து மெலிதாய் புன்னகைத்துவிட்டு கதவைச் சாத்திய புவனாவைப் பார்த்து மலைத்து நின்ற ரவி திரும்பி தன் அருகில் நின்ற தன் தந்தையைப் பார்த்தான்.

உணர்ச்சி மேலீட்டால் கண்கள் கலங்கி நின்ற தன் மகனைப் பார்த்த மகாதேவன்.. “பாத்தியாடா.. அவ பேசிட்டு போறத ? இதவிட உனக்கு என்னடா வேணும் ? யோசிக்காம சரின்னு சொல்லுடா.. அந்த பொண்ணும் சரி, அந்த குடும்பமும் சரி, ரொம்ப நல்ல மாதிரின்னு எனக்கு மனசுல தோணுதுறா.. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்காக ஒருவேளை அந்த பொண்ணு உன்கிட்ட அப்படி பேசியிருக்கலாம்.. இப்ப அதப்பத்தி நாம யோசிக்க வேணாம்.. கல்யாணம் முடியட்டும்.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம். என்ன சொல்றே.. ?” என்றார்..

“சரிப்பா.. நீங்களே கூப்பிட்டு சொல்லிருங்க..”

“ஃபோன்ல வேணாம். நான் நாளைக்கி நேராவே போய் சொல்லிட்டு மேல ஆக வேண்டியதை பாருங்கன்னு சொல்லிட்டு வந்திடறேன்..நீ போய் நிம்மதியா தூங்கு..”

தன் அறையை நோக்கிச் சென்ற தன் மகனையே பார்த்தவாறு நின்ற மகாதேவன் நடுக்கூட விளக்கை அணைத்துவிட்டு வழக்கம்போல் மின்விசிறியின் அடியில் கிடந்த ஈசிச்சேரில் சாய்ந்து கண்ணை மூடினார்.

****

அடுத்த நாள் காலை ரவியும் புவனாவும் கிளம்பிச் சென்றபின் வீட்டைப் பூட்டிக்கொண்டு தன் டி.வி.எஸ் 50ஐ எடுத்துக் கொண்டு கிளம்பிய மகாதேவன் எதிரில் கல்யாணத் தரகர் வருவதைப் பார்த்துவிட்டு வண்டியை அணைத்துவிட்டு தன் வீட்டு வாசலிலேயே நின்றார்.

“என்ன சார் எங்கே கிளம்பிட்டாங்க ? உங்கள பாக்கத்தான் வந்துக்கிட்டிருக்கேன். நல்ல வேளை, வாசல்லயே பிடிச்சிட்டேன்..”

“என்ன சந்தானம், என்ன விஷயம் ? காலங்கார்த்தாலயே தேடிக்கிட்டு வரீங்க.. ? போன வாரம் அந்த தாம்பரம் சம்பந்தத்தைப் போய் பார்த்துட்டு வந்தோமே.. அங்கதான் போய்கிட்டிருக்கேன்.. சம்மதம்னு ரவி சொல்லிட்டான்..”

தரகர் குழப்பத்துடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த மகாதேவன், “என்ன அப்படி பார்க்கறீங்க ? ஏதாவது பிரச்சினையா ?”

இவரிடம் எப்படி சொல்வதென்று சிறிது நேரம் யோசித்த தரகர்.. “உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை.. நீங்க பார்த்துட்டு வந்து பத்துநாளா பேசாம இருந்துட்டாங்க.. அந்த பொண்ணு என்ன நினைச்சதோ தெரியலை.. உங்க பையனை தனக்கு பிடிக்கலைன்னு நாலு நாளைக்கு முன்னால சொல்லிருச்சாம்.. வேற பையன் இருந்தா.. சொல்லுங்கோன்னு என்ன கேட்டாங்க.. நேத்து ஒரு பையனைக் கூட்டிக்கிட்டு போய் பொண்ணைப் பார்த்தோம்.. பொண்ணும் உடனே சரின்னு சொல்லிருச்சி.. பையனுக்கும் பிடிச்சிப் போயிருச்சி.. அத உங்க கிட்ட சொல்லிட்டு வேற ஒரு ஜாதகத்தை குடுத்திட்டு போலாம்னுதான் வந்தேன்..” என்று சொல்லி முடித்தார்.. தயக்கத்துடன்..

“அப்படியா.. நல்ல நேரத்துல வந்தீங்க. இல்லன்னா நான் பாட்டுக்கு அந்த வீட்ல போய் மூக்குடைஞ்சி திரும்பியிருப்பேன்.. அதிருக்கட்டும், அந்த பொண்ணு நம்ம ரவியை ஏன் பிடிக்கலைன்னு சொன்னாளாம்மா ?”

“என்கிட்ட சொல்லலை சார்.. உங்க ரவியை விட இப்ப பார்த்திருக்கற பையன் ரொம்பவும் சுமார்தான்.. சம்பளமும் குறைச்சல்.. ஆனாலும் என்ன சொல்றது ? இந்த காலத்துப் பசங்களுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு எங்க தெரியுது ? நான் என் மனசுல பட்டத சொல்றேன்.. நீங்க சம்மதம்னு உடனே சொல்லணும்னு அந்த பொண்ணு நினைச்சிதோ என்னவோ.. நீங்க ஒருவாரமாயும் ஒண்ணும் சொல்லாததுனால நம்மள அவருக்கு பிடிக்கலை போலன்னு நினைச்சிருக்கும்.. அதான் அதுக்கு முன்னால நாம முந்திக்கலாம்னு புடிக்கலைன்னு சொல்லிருச்சி.. அவங்க அப்பா, அம்மாவுக்கும் கொஞ்சம் வருத்தம்தான்.. இருந்தாலும் ஒரே பொண்ணாச்சேன்னு சரின்னு சொல்லிட்டாங்க… விட்டுத் தள்ளுங்க.. கல்யாணம்ங்கறது கடவுளோட சித்தம்னு சும்மாவா சொல்றாங்க ? இந்த ஜாதகத்தை பாருங்க.. இந்த பொண்ணும் நல்லா சிவப்பா, அழகா இருக்கும்.. அந்த பொண்ணை விட சம்பளமும் கொஞ்சம் கூட.. இதுவும் ஒரே பொண்ணுதான்.. அப்பா இல்லை.. அம்மா மட்டும்தான்.. ஜாதகம் பொருந்துச்சினா பொண்ணோட ஃபோட்டோவைக் கொண்டு வரேன்.. பிடிச்சிருந்தா போய் பார்க்கலாம்.. இந்தாங்க.. பொருத்தம் பார்த்துட்டு சொல்லுங்க.. ரெண்டு நாள் கழிச்சி வரேன்..”

ஜாதகத்தை கையில் திணித்துவிட்டு வேக வேகமாய் நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்த மாநகர பேருந்தை நோக்கி ஓடிய தரகரைப் பார்த்துக்கொண்டே நின்ற மகாதேவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் வண்டியைக் கிளப்பி தன் குடும்ப ஜோசியர் வீட்டை நோக்கி சென்றார்..

****

“டேய் ரவி.. உனக்கு ஃபோன்.. யார்டா, வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டாருக்கு.. ? ஏதாவது அஃபேரா.. சொல்லவேயில்லையே..”

அப்பா அந்த பொண்ணோட வீட்ல போய் சொல்லியிருப்பார் போல.. அந்த பொண்ணாயிருக்குமோ.. என்ற நினைவுடன் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று தொலைப்பேசியை தன் நண்பனின் கையிலிருந்து வாங்கி தயக்கத்துடன் “ஹலோ..ரவி ஹியர்” என்றான் .

“மிஸ்டர் ரவி.. நான் நளினி பேசறேன். என்னைத் தெரியுதா ?”

அந்த மிக இனிமையான குரலைக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு சில நொடிகள் திகைத்துப் போன ரவி சுதாரித்துக்கொண்டு.. “சொல்லுங்க.. அதெப்படிங்க அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் ?” என்றான் தன்னைப் பார்த்து ‘யார்ரா அது.. ரொம்பவும் வழியாதே.. ‘ என்ற தன் நண்பனைப் பொருட்படுத்தாமல்..

“எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருச்சு.. அதை உங்கக்கிட்டதான் முதல்ல சொல்லணும்னு நினைச்சேன்.. அதான் கூப்பிட்டேன்..”

‘எங்கிட்டயேவா ? என்ன கொழுப்பு இவளுக்கு ? லேசுப்பட்டவளில்லைப் போலிருக்கே ‘ என்று மனதுக்குள் நினைத்த ரவி.. “அப்பா உங்க வீட்டுல வந்து சொல்லிட்டாரா ?” என்றான்.

“உங்கப்பாவா.. இல்லையே.. நான் ஆஃபீஸ் புறப்பட்டு வர வரைக்கும் வரலை.. அது சரி, உங்கப்பா எங்க வீட்டுக்கு ஏன் வரணும் ? எனக்கு புரியலை.”

“பின்னே.. நீங்க சொன்னதுக்கு அர்த்தம் ?”

எதிர்முனையில் எழுந்த கலகலவென்ற சிரிப்பொலி ரவியை என்னவோ செய்தது.. “அர்த்தமா ? மிஸ்டர் ரவி.. உங்களுக்கு வேணும்னா ஒரு ஆண்மகனைப்போல முடிவெடுக்க தைரியமில்லாம இருக்கலாம்.. ஆனா நான் உங்ககிட்ட கேட்ட அதே கேள்விக்கு வேற ஒருத்தர் ஒரே நொடியில ‘அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதுங்க. என்னால இதுக்கு ஒத்துக்கமுடியாதுன்னு ‘ பதில் சொல்லிட்டார்.. அவரோட நேர்மையான பதில் எனக்கும் புடிச்சிப் போயி உடனே ‘சரி ‘ன்னு சொல்லிட்டேன்.. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.. அத சொல்லத்தான் கூப்பிட்டேன்.. வச்சிடறேன்..”

இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒலிவாங்கியைக் கையில் பிடித்தவாறு திகைத்துப்போய் ஒருசில நொடிகள் நின்ற ரவி தன் இருக்கையை நோக்கி நடந்தான்.

‘உங்களுக்கு வேணா ஒரு ஆண் மகனைப் போல முடிவெடுக்க தைரியம் இல்லாம இருக்கலாம் ? ‘ என்ற வார்த்தைகள் அவனையே சுற்றி சுற்றி வந்தன..

‘அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராதுங்க. என்னால இதுக்கு ஒத்துக்க முடியாதுன்னு பதில் சொல்லிட்டார்.. அந்த நேர்மையான பதில் எனக்கு புடிச்சி போச்சி. ‘

அப்படியென்றால் நளினி தன்னோட முடிவை மட்டும்தான் எதிர் பார்த்தாளா ? அது தனக்கு பாதகமாயிருந்தாலும் பரவாயில்லை என்றுதான் அவள் நினைத்திருக்கிறாள்..

தன் வருங்கால கணவனின் ஆண்மைத் தனத்தை சோதிக்க ஒரு பெண் இப்படியெல்லாமா சிந்திப்பது ?

‘சே! ‘ என்றிருந்தது அவனுக்கு.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் நளினியையையும் அவளைப்பற்றிய நினைவுகளையும் ஒதுக்கிவிட்டு தன் முன்னாலிருந்த அலுவலக வேலையைக் கவனிக்கவாரம்பித்தான் ரவி தன்னையே விநோதத்துடன் பார்த்த தன் நண்பனைப் பொருட்படுத்தாமல்..

****

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்