‘ஆடலரசன்’ இரகுநாத் மனே

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

முனைவர் மு. இளங்கோவன்


புதுவைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. கிரேக்க, உரோம், நாடுகளுடன் இவ்வூர் பண்டைக்காலத்தில் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை அரிக்கமேட்டு அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.இடைக்காலத்தில் பிரஞ்சுக்காரர்களாலும் இவ்வூர் புகழ் பெற்று விளங்கியது. புதுச்சேரி சிறிய பகுதியாக இருந்தாலும் உலகத்தவர்கள் விரும்பும் வண்ணம் இப்பூமிப் பந்தில் எழில்கொஞ்சும் நகரமாகவும், அமைதிக்குப் பெயர் பெற்றதாகவும். கல்விஅறிவு, வேலைவாய்ப்பு, கலைகள், பண்பாடு ஆகியவற்றில் வளர்ந்திருக்கும் பகுதியாகவும் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் கலைகளில் குறிப்பாக நடனம், இசை, நாட்டியம் முதலியனவற்றில் நாட்டம் கொண்டவர்களாக விளங்கினர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

புதுவை நகரத்தின் அருகில் உள்ள வில்லியனூர்,பாகூர் முதலியன புகழ்பெற்ற ஊர்கள். வரலாற்றுச் சிறப்புப் பெற்றது போலவே கலையாலும் இறைவழிபாட்டாலும் இவ்வூர்கள் புகழ்பெற்றிருந்தன. கோயில்களில் இறைத்தொன்டில் ஈடுபட்ட “தேவரடியார்கள்” என்னும் “தேவதாசிகள்” இவ்வூர்களின் கோயில்களில் நாட்டியக்கலையை வளர்த்து வந்தனர்.

‘ சதிர்’ எனவும் சதிர்க்கச்சரி எனவும் அழைக்கப்பட்ட இக்கலையில் வல்ல பெண்கள் பிரஞ்சுக்காரர்களின் உயர் அதிகாரிகள் வரும்பொழுதும், ஊர்க் கோயில், திருவிழாக்களின் பொழுதும் நாட்டியம் ஆடி இக்கலையை உயிரோட்டத்துடன் காத்துவந்தனர். ‘தேவதாசி சட்டம்’ நடைமுறைக்கு வந்ததும் நாட்டியக்கலையில் வல்லவர்களான தேவரடியார்கள் தங்களின் முன்னோர்களிடமிருந்து வழிவழியாகக் காத்து வந்த நாட்டியக்கலையிலிருந்து விலகிவிட்டனர்.

இக்கலை இன்று பொழுதுபோக்குக்கும், சமூகஅந்தஸ்துக்கும் மேல்வகுப்புமக்களின் தகுதிப்பாட்டை நிர்ணயிப்பதாகவும் உள்ளது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு ஆறுமாதத்தில் அரங்கேற்றம் என்று பலகையை மாட்டிக்கொண்டு வணிகர்கள் நாட்டியக்கலையைத் தொழிலாக்கிவிட்டனர். இவ்வாறு தனித்தன்மையும் உயர் திறமையையும் காட்டும் கலையாக இருந்த கலைப்புதையல் கவனிப்பாரற்று அதன் உண்மைத்தன்மைகள் மறைக்கப்பட்ட சூழலில் புதுச்சேரிப் பகுதியிலிருந்து ஒரு நம்பிக்கை நட்சத்திரம் கலைவானில் பிரகாசித்தது.

ஆம்.
பெண்களுக்கே நாட்டியம் கற்பது முடியும் என்ற நிலையை மாற்றி, ஆண்களாலும் நாட்டியம் கற்கமுடியும், புகழ் பெற முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டியவர் இரகுநாத்மனே.

மற்றவர்களுக்கு நாட்டியம் என்பது பொழுதுபோக்கு, கௌரவம் காட்டும் அடையாளம். இரகுநாத்மனேவுக்கு நாட்டியம் எனபது உயிர், இயக்கம், அசைவு, மூச்சு.

இரகுநாத்தின் தாத்தா ஞானமணி அவர்கள் புதுவையில் புகழ்பெற்ற வயலின் கலைஞர். அப்பா பிரஞ்சு அரசில் காவல்துறையில் பணிபுரிந்த புதுவைத் தமிழர். அம்மா வியட்நாம் நாட்டு வழியில் வந்தவர்.

சிறுவனாக இருந்த இரகுநாத்மனே வீட்டிற்கு வரும் நட்டுவனார் வில்லியனூர் நாதன் அவர்கள் பெண்பிள்ளைகளுக்கு நாட்டியம் பயிற்றுவிப்பதையும் ஜதி சொல்லும் ஓசைகளையும் கேட்ட சிறுவன் இரகுநாத்மனேயை நாட்டியம் தன்பக்கம் இழுத்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தை இசைக்கருவி வாசிக்கவேண்டும் அதற்குப் பயிற்சி பெறவேண்டும் என்று நினைத்தனர். இளமையில் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நாட்டியத்தைக் கற்கத் தொடங்கி ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடி பயிற்சி பெற்று, கற்று இன்று உலக நாடுகள் முழுவதிலும் நாட்டியமாடிப் புகழ்ப்பெற்றுள்ளார்இந்த அரங்கேறாத நாட்டிய மாணவ அறிஞர். ஆம்.

மாணவரைப்போல் ஒவ்வொரு நாளும் இன்னும் பயிற்சி பெறுவதிலும் ஆடுவதிலும் பழைமையான நுட்பங்களை நூல்கள் வழியும் கோயில் சிலைகள் வழியும் தக்க கலைஞர்கள் வழியும் அறியத்துடிக்கும்இரகுநாத்மனே காலத் தேவைக்கேற்ப்ப நாட்டியத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்குத் தயங்கவும் இல்லை. நம் நாட்டின் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்களுடன் இனைந்தும் உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு நாட்டுக்கலைஞர்களுடனும் இணைந்து பல நாட்டிய நிகழ்ச்சிகளைப் பல நாடுகளில் நடத்தியுள்ளார்.

அந்தந்த நாடுகளுக்குச் செல்லும்போது அந்நாட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு வராமல் அங்கு நிலவும் கலை, பண்பாடு, நாட்டுப்புறப்பாடல், ஆடல் இசைக்கருவிகளை அறிந்து, பயின்றுவருவது இவர் வழக்கம்.நம் நாட்டியக் கலையை உலகம்முழுவதும் பரப்பவேண்டும் என்பது இரகுநாத்மனே அவர்களின் விருப்பம்.இதற்காக இவர் பாரிசிலும், புதுச்சேரியிலும், நாட்டியப் பள்ளிகளையும் நடத்திவருகின்றார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நாட்டியத்தைக் கற்றுத்தரவும் ஏற்பாடு செய்துள்ளார்.

19வயது மாணவராகச் சென்ற இரகுநாத் மனே 35வயதில் புதுவைக்கு வந்தபொழுது தாம் வாழ்ந்த புதுவையின் நினைவுகளைக் காட்சிப்படுத்திப் “பாண்டிச்சேரி கனவு”என்னும் குறும்படத்தை எடுத்துள்ளார் அதில் தன் நடிப்புத் திறமையை இரகுநாத்மனே பதிவு செய்துள்ளார்.மேலும் தாம் ஓரு பாடகர் என்பதையும் இயக்குநர் என்பதையும் மெய்ப்பித்துள்ளார்.
இரகுநாத்மனே நாட்டியத்தில் மிகச்சிறந்த சிறப்புப் பெற்றதற்குக் காரணம் அடிப்படையைக் கற்றுத்தந்த நாதன் அவர்களும் அதன் பிறகு ‘கலாசேத்ராவில்’ பெற்ற நாட்டியப்பயிற்சியும்தான் காரணம். ( இவருடன்; ‘கலாசேத்ராவில்’ நடிகை சுகன்யா, சோபனா ஆகியோர் பயின்றுள்ளனர்). கோமதிசங்கரஐயர் என்பவரிடம் நாட்டியக் கலையைக் கற்றவர். இரகுநாத்மனேக்கு நாட்டியத்தில் மட்டும் பயிற்சி அமைவதோடு இல்லாமல் நன்கு வீணையும் வாசிப்பர். வாய்ப்பாட்டுப் பாடவும் நாட்டியத்திற்குண்டான ஜதிஅறிவு மிகவும் பெற்றவர்.இராசேசுவரிபத்மநாபன், ரெங்நாயகி இராசகோபாலன், ஆகியோரிடம் வீணையும் வாய்ப்பாட்டும் கற்றுக்கொண்டவர். எனவே இவர் மேடையில் நாட்டியம் ஆடுபவராக மட்டும் தோன்றாமல் இடையில் வீணை வாசிக்கவும் செய்வார். வாய்ப்பாட்டும் பாடுவார், தாளக்கருவியை வைத்துக் கொண்டு ஜதியும் சொல்வார்.

பண்டைக்காலத்தில் பரதநாட்டியக்கலையில் வல்லுநர்களாக விளங்கியவர்கள் நட்டுவனார்கள் எனப்படுபவர்கள். இவர்கள் நாட்டியஅறிவுபெற்றதுடன் மிருதங்கம் வாசிக்கவும், ஜதி சொல்லவும் வீணைவாசிக்கவும் வாய்ப்பாட்டு பாடவும் திறமை பெற்றிருப்பார்கள். அதுபோல் கற்பிப்பதில் தன்னிகரில்லா புலமை பெற்றிருப்பர். வாழ்நாள் முழுவதும் இக்கலைபற்றிய நினைவுகளுடனே வாழ்ந்தனர் அத்தகைய பழம்பெறும் புகழ்பெற்ற நட்டுவனார்களைப் போலவே நம் இரகுநாத்மனே அவர்கள் எந்நேரமும் இசை,நாட்டியச் சூழலில் வாழ்பவர்.

இவர் வீட்டில் நுழையும் போது ஒரு பிரம்மாண்டமான கலைஞன் வீட்டில் காலடி வைப்பது போன்ற பிரமை ஏற்படும்.இசைப்பாடல்களும் தாள ஓசையும் நாட்டியத் துள்ளல்களும் மாணவர்களின் சலங்கை மணியோசையும் காதுக்கு இரம்மியமாக இருக்கும். அதனால்தான் தமிழ்நாட்டின் பிரபலமான பாடகரான பாலமுரளி கிருட்டிணா அவர்களும் மிகச்சிறந்த நடிப்பக் கலைஞரான நடிகர் நாசர் அவர்களும் இரகுநாத்மனே அவர்களிடம் மிகுந்த அன்பு காட்டுகின்றனர்.

இரகுநாத் மனேஅவர்களின் நாட்டியத் திறமயைக்கண்டு உலகம் முழுதும் வாழும் பல்வேறு நாட்டினரும் இவரை அழைத்துத் தத்தம் நாடுகளில் கலைப்பணி ஆற்றிட அழைத்து மகிழ்கின்றனர். அதன் அடிப்படையில் இவர் அமொpக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, சுவிசர்லார்ந்து ஆங்காங், நீயூக்கோலிடனோ, மொரீசியசு, ரியூனியன் மார்ட்டினிக், சிங்கப்பூர், பிரான்சு நாடுகளிலும் பலமுறை நாட்டியம் நடத்தியுள்ளார்.

பாரிசில் புகழ்பெற்ற “திதேயர்பெல்லாக்” எனபவருடன் இணைந்து இவர் நடத்திய கலைநிகழ்ச்சிகள் மிகவும்பிரபலமானது. உலகப் புகழ் பெற்றது. இவர் சிவத்தாண்டவம் நடனம் ஆடும்போது உணர்ச்சிப்பிழம்பாகத் தெரிவார். தன்காலடி அசைவில் இவ்வுலகத்தையே கட்டிப்போடும் ஆற்றல் இரகுநாத்மனே அவர்களிடம் இருப்பதை அறியலாம் .

இரகுநாத்மனே அவர்கள் நாட்டியம் ஆடுவதிலும், வீணைவாசிப்பதிலும், வாய்ப் பாட்டு பாடுவதிலும் வல்லவர். தானேதனித்தும் தம்குழுவினருடனும் இக்கலைப்பணிகளைச் செய்பவர்.மேலும் புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்தும் கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்

“ஓபேரா” “தி பாரிஸ்” என்னும் பெயரில் 6மணிநேரம் இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். நேரடியாகப் பார்ப்பவர்கள் கேட்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இரகுநாத்மனே அவர்கள் பல்வேறு ஒளி, ஒலி நாடாக்களையும் மற்றும் சிடிகள் வெளியிட்டும் தம் கலைப்பயணத்தில் இன்னுமொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடன் இசைவெளியீடுகளில் இணைந்து பணிபுரிந்தவர்களுள் திரு. பாலமுரளி கிருட்டிணா, உமையாள்புரம் சிவராமன், குருவாயூர் துரை, டி.கே. மூர்த்தி, பாலக்காடு இரகு, டி,வி, கோபாலகிருட்டிணன்,திருவாரூர் பக்தவச்சலம், மதுரை சீனிவாசன். வேலுர்ராமபத்ரன். முதலானவர்கள் குறிப்பிடதக்கவர்கள்.

ஓளி, ஓலி, ஊடங்களில் பரிணமித்த இரகுநாத்மனே நூல்களின் வழியாகவும் தம் கருத்துகளை, ஆய்வு முடிவுகளை உலகிற்க்கு வழங்கியுள்ளார். இவற்றுள் ‘வில்லியனூர்கோயில் நாட்டியகலைஞர்கள்’ ‘பரதநாட்டியம்,’ ‘கர்னாடிக் மியூசிக்’ ‘பயாதர்’ என்னும் நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இவரின் நாட்டியப் பணிகளைப் பாராட்டிப் பல்வேறு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டள்ளன.இவற்றுள் குறிப்பிடத்தக்க விருது பிரஞ்சுநாட்டின் செவாலியே விருது, நாட்டியசிரோன்மணி, நாட்டியநாயகன், நாட்டியபரணி, முதலியன குறிப்பிடதக்கன.

ஆண்டின் பெரும்பகுதி பிரான்சுநாட்டில் வாழ்ந்தாலும் புதுச்சேரியை மறவாமலும் அழிந்துவரும் கலையை மறவாமலும் அடிக்கடி புதுச்சேரி வந்து கலைப்பணிபுரியும் இரகுநாத்மனே நாட்டியக் கலையைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

முனைவர் மு. இளங்கோவன்

புதுச்சேரி, இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்