ஆகாயப்பறவை.

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

புதியமாதவி, மும்பை.


உங்கள் நிழல்களின் நிழலில்
நிற்பதாலேயே
உங்கள் நிழல்களையே
நிஜம் என்று
வேர்கள் சொல்லுமா ?

உங்கள் கண்ணாடி அணிந்து
பார்ப்பதாலேயே
உங்கள் கண்ணாடியே
கண்கள் என்று
முகம் சொல்லுமா ?

உங்கள் துண்டுகள் மாலையாய்
விழுவதாலேயே
உங்கள் துண்டுகளையே
மலர் என்று
மண் சொல்லுமா ?

உங்கள் கைகளை கோத்துநான்
ஆடுவதாலேயே
உங்கள் கைகளே
என் தோள்கள்
அசைக்க முடியுமா ?

உங்கள் கதைகேட்டு
ரசிப்பதாலேயே
என்கதையில்
உங்களையே
எழுத முடியுமா ?

உங்கள் முற்றத்தில்
தெரிவது
என் ஆகாயமல்ல.
ஆகாயப்பறவையை
அடைத்து வைக்க முடியாது.
உங்களால்-
வெட்டப்பட்ட சிறகுகள்
கட்டப்பட்ட கால்கள்.
வலி மறக்க வைக்கும்
வலி நிவாரணிகளை
இனி தேவையில்லை.
வலியுடன் பறப்பதே
என் வலிமையின் ஆயுதம்.
பறக்கப் போகிறேன்.
காலமெல்லாம்
ஆகாயத்து பறவையை
அடைத்து வைக்க முடியாது.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை