அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

சோதிப் பிரகாசம்


“கடவுளின் திருவிளையாடல்களை விட முக்கியமான ஆடல்களாக அ. மார்க்ஸின் சொல்லாடல்கள் நமக்குத் தெரிகின்றன. ஏனென்றால் இராமர் கோயில் பிரச்சனை, குஜராத் கொடுமை ஆகியவை பற்றிய ‘பகுத்தறிவு’ களஞ்சியங்களாக அவை வெளிப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றன. (புதிய கோடாங்கி . ஏப்ரல் – ஜுன், 2002)

எனினும், குஜராத் கொடுமைகளுக்குக் கடவுளின் திருவிளையாடல்தான் காரணம் என்று அ. மார்க்ஸ் கருதுவதாக நமக்குத் தெரிவதால், அவரது சொல்லாடல்களை விட கடவுளின் திருவிளையாடல்கள்தாம் இங்கே முக்கியம் பெறுகின்றன. இந்துத்துவத்தின் வெறியாடல்களாகத் தமது சொல்லாடல்களைக் கதையாடி விடுவதால் மட்டும், கடவுளின் திரு விளையாடல்களை விட முக்கியமான வாயாடல்களாக அ. மார்க்ஸின் நாவாடல்கள் இருந்திட முடியுமா, என்ன!

இராமர் கோவில் பிரச்சனையின் வரலாற்றினையும் குஜராத்தில் நடைபெற்று வந்து இருக்கின்றன கொடுமைகளையும், தமக்கே உரிய ஆய்வுப்பான்மையுடன் அ. மார்க்ஸ் சித்தரித்து இருக்கிறார் என்பதில் நமக்கு ஐயம் இல்லை. ஆனால், இந்தப் பிரச்சனைகளும் கொடுமைகளும், வெறுமனே மொழியின் பிரச்சனைகளோ அல்லது உச்சரிப்பின் கொடுமைகளோ அல்ல!மாறாக, கொலைகளாகவும் கொள்ளைகளாகவும் கற்பழிப்புகளாகவும் நிகழ்த்தப்பட்டு வந்து இருக்கின்ற மனித உரிமை மீறல்கள் இவை! மனித மாண்பிற்கு இழைக்கப்பட்டு வந்து இருக்கின்ற கொடுமைகள் இவை!இங்கே, குஜராத் கொடுமைகளுக்குக் காரணமான முரட்டுவாதிகளின் மொழி, மதவாதத்தின் மொழியா அல்லது சிற்றுடைமைவாதத்தின் மொழியா என்பதுதான் அடிப்படையான நமது கேள்வி. அதாவது, குஜராத் கொடுமைகளுக்கு, ‘மத நலன்கள்’ காரணமா ? அல்லது ‘பொருளாதார நலன்கள்’ காரணமா ? என்பதுதான் கேள்வி.

மத நலன்கள், மத நம்பிக்கைகள் என்பனவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர் அ. மார்க்ஸ். ஈ. வே. ரா (பெரியார்) கூட இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லா ஒரு மறுப்புவாதிதான் (நாத்திகர்) என்பது அனைவரும் அறிந்தது. எனினும், நமது வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு நமது மத நம்பிக்கைகள்தாம் காரணம் என்று ஈ. வே. ரா. கருதினார். எனவேதான், நமது மண்டைகளில் இருந்து மத நம்பிக்கைகளை நாம் அகற்றிவிட்டால் போதும், நமது வாழ்க்கை வளம் பெற்றுவிட முடியும் என்று அவர் எடுத்து உரைத்து வந்தார். அவரது சீடரான அ. மார்கஸோ, ‘இந்து மதவாதம்’ தான் குஜராத் கொடுமைகளுக்குக் காரணம் என்று நமக்குப் போதித்திட முன் வந்து இருக்கிறார். எனினும், இவரைப் பின்பற்றி, நமது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மதப் பிரச்சனைகள்தாம் காரணம் என்று நாம் கருதிவிட முடியாது. ஏனென்றால், “இருப்பு வாதத்தின் (ஆதிக்கத்தின்) இறுதிக் கட்டம் தான் மறுப்பு வாதம் (நாத்திகம்); கடவுளுக்கு வழங்கப்படுகின்ற எதிர்மறையான ஒப்பளிப்பு அது என்று கார்ல் மார்க்ஸ் கூறி இருப்பது நமக்குத் தெரியும். (பார்க்க: புனிதக் குடும்பம், மாஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக்.130 அல்லது வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு: பக்.202).

முதலில், குஜராத் கொடுமைகளை ‘அ. மார்க்ஸின் வழியில்’, அதாவது, கருத்துவாதப் பார்வையில் புரிந்துகொள்ள நாம் முயல்வோம்.

கருத்து வாதப் பார்வை

==================

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்று திருமூலர் கூறி இருப்பதுபோல, அண்டம் அனைத்தையும் படைத்துக் காக்கின்ற கடவுள் ஒருவர்தாம்! எனினும், ‘சிவம்’ என்னும் சூரியக் கடவுளாகத் திராவிடங்களுக்கும், ’ஏலி’ என்னும் சூரிய கடவுளாகச் செமியர்களுக்கும் (செமிட்டிக்] ‘அல்லா’ என்னும் சூரியக் கடவுளாகப் பிற்காலச் செமியர்களுக்கும் வெவ்வேறு பெயர்களில் இவர் தோற்றம் அளித்துக் கொண்டு வந்து இருக்கிறார். கடவுளுக்குச் சூட்டப்பட்டு இருக்கின்ற இந்தப் பெயர்கள் எல்லாம், தமிழ்ப் பெயர்கள்தாம் என்பது வேறு விசயம். (சிவந்த சூரியன் – சிவன்; எல் = ஒளி – எல்லன் = சூரியன்; எல் – ஏலி; எல் – அல் – அல்ல.)விண்ணையும் மண்ணையும் முதலில் படைத்து முடித்த கடவுள், பின்னர் விலங்கு இனங்களையும் இறுதியில் மனிதர்களையும் படைத்தார். தாங்கள் படைப்பாளிகள் என்று கதை – கவிதைக்காரர்கள் பெருமை அடித்துக் கொள்கின்ற கேலிக் கூத்துகளை இங்கே நாம் பொருட்படுத்தித் தேவை இல்லை. தமது படைப்புகளைக் காணக் காணக் கடவுளுக்குப் பெருமையாகத்தான் இருந்தது என்ற போதிலும், தனிமைப்பட்டுப் போய் விட்ட ஒரு சலிப்பு காலப்போக்கில் அவரிடம் ஏற்படத் தொடங்கியது. எனவே, தமது தனிமையின் தவிப்புகளைப் போக்கிக் கொள்வதற்காக, மனிதர்களுடன் உறவு வைத்துக் கொள்ள அவர் விரும்பினார். தாம் படைத்த மனிதர்கள் தம்மை வணங்கி வழிபடுவதுதான், மனிதர்களுக்கும் தமக்கும் இடையே உள்ள உறவின் சரியான வெளிப்பாடாக இருந்திட முடியும் என்று அவருக்குத் தோன்றியது.உடனே, மதங்களைக் கடவுள் படைத்தார். பூமியில் ஆங்காங்கே வாழ்ந்து வந்து கொண்டு இருந்த மனிதர்கள், தத்தம் மதங்களின் மூலமாகக் கடவுளை வழிபடத் தொடங்கினார்கள். தம்மில் – தாம் ஆக இருந்து வந்த கடவுளுக்கு, தம்மின் – பிறிது ஆகிவிட்ட ஒரு மகிழ்ச்சி இதனால் ஏற்பட்டது.

காலப்போக்கில், இந்த வழிபாடுகளும் அவருக்குச் சலிப்பு ஊட்டிடத் தவறவில்லை. ஏனென்றால், ஒரே மாதிரியாகவும் ஒரே சீராகவும் எல்லா மதத்தினரும் அவரை ஆராதித்துக் கொண்டு வந்ததில், விறுவிறுப்பு எதுவும் இல்லாமல் போய்விட்டு இருந்தது.எனவே, மதக் கிளர்ச்சியாளர்களையும் எதிர்ப்புவாதிகளையும் அவர் படைத்தார். கடவுள் மறுப்புவாதிகளாக மாறிவிட்டு இருந்த எதிர்ப்புவாதிகள், கடவுளுக்கு எதிராக வாதங்கள் புரிந்து கொண்டு வந்தனர். மதக் கிளர்ச்சியாளர்களோ, சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, புதிய விளக்கங்களைக் கடவுளுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தனர். கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும் கூறி, இருப்புவாதிகளும் மறுப்பு வாதிகளும் புரிந்து கொண்டு வந்த வாதங்கள் கடவுளுக்கு விறுவிறுப்பு ஊட்டுவனாக இருந்தன. புதுப்புது விளக்கங்களைக் கொடுத்து அவருக்கு மகிழ்ச்சி ஊட்டிக் கொண்டு வந்தனர் மதக் கிளர்ச்சியாளர்கள்! இதனால் தம்மின் – பிறிது ஆகி இருந்த கடவுளுக்கு, தம்மின் – நேர்ப் பிறிது மற்றும் எதிர்ப்பிறிது என இரண்டாகி விட்டு இருந்த ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

எனினும், ஒரே மாதிரியாக அமைந்து, இந்த விறுவிறுப்பும் கடவுளுக்குச் சலிப்பு ஊட்டிடத் தவறவில்லை. ஏனென்றால், மறுப்புவாதிகளை எதிர்கொள்ள முடியாமல், இருப்புவாதிகள் தடுமாறிக் கொண்டு வந்ததை அவர் பார்த்தார். தனிமையில் இப்படித் தவித்துக் கொண்டு இருந்த கடவுளுக்கு, திடுமென்று ஒரு நாள் ஒரு ஞான உதயம் ஏற்பட்டது. விளைவாக, நிலையான முரண்களின் இடைவிடாத இயக்கம்தான் இடைவிடாமல் தம்மை இயங்க வைத்திட முடியும் என்று அவர் முடிவு செய்தார்.இப்பொழுது, இந்து மதம் என்றும் கிறிஸ்துவ மதம் என்றும் இஸ்லாம் மதம் என்றும் தம்மை வழிபட்டுக் கொண்டு வந்து இருந்த மக்களை, பகை முரண்களாக நிறுத்துவத்தைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.எனவே, உலக அளவில் மனிதர்களை ஒன்றுகூட வைப்பதற்காக, தொழில் நுட்பங்களைக் கடவுள் படைத்தார். தொழில் வளர்ச்சியையும் வணிக வளர்ச்சியையும் ஏற்படுத்தி, மனிதர்கள் இடையே நெருக்கமான உறவுகளை அவர் வளர வைத்தார்.

இந்தத் தொடர்புகள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே, தனித்தனியான மத நலன்களையும் மத முரண்களையும் வளர்த்தன. இதனால், தம்மின் – பன்மைப் பிறிது ஆகத் தாம் மாறிவிட்ட ஒரு நிறைவு கடவுளுக்கு ஏற்பட்டது.விளைவாக, ஒருவர் மேல் ஒருவர் பகை கொண்டு, பல்வேறு மதத்தினரும் மத மொழிகளை உதித்துக் கொண்டு வரத் தொடங்கினர். இவற்றுள், இந்துக்கள் உதிர்த்துக் கொண்டு வந்த உதிர்த்துக் கொண்டு வருகின்ற – மொழிதான் இந்துத்துவத்தின் மொழி! இதனைத்தான் நாம் கவனித்திட வேண்டும் என்று அ. மார்க்ஸ் ஆசைப்படுகிறார்.

ஆக, மத நலன்கள், மத மொழிகள் முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு அயோத்திப் பிரச்சனையும் குஜராத் பிரச்சனையையும் நாம் அணுகுவது, இறுதியில் கடவுளின் திருவிளையாடலில்தான் நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதில் நமக்கு ஐயம் இல்லை. ஆனால், விண்ணகத்தின் கருத்துகளை மண்ணகத்தின் வார்த்தைகளாக நாம் வடித்துக் காட்டுவதற்கு வேண்டும் என்றால் நமக்கு இது பயன்படலாமே ஒழிய, மண்ணகத்தின் மெய்மைகளை நாம் புரிந்து கொள்வதற்கு இது பயன்பட்டு விட முடியாது.

மாறாக, பொருளாதார நலன்களில் இருந்து இப்பிரச்சனைகளை நாம் நோக்குகின்ற பொழுது, பொருளாதார நலன்களின் வெறியாடல்கள்தாம், கடவுளின் திருவிளையாடல்களைக் குஜராத்தில் வெளிப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று ஈ. வே. ராவைப் போல அ. மார்க்ஸும் முழங்கலாம்; நமது கைதட்டல்களையும் அவர் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், மண்ணின் வாழ்க்கையில் இருந்து, தவிர்க்க முடியாத ஒரு தேவையாக, தன்னியல்பாக எழுந்து வந்து இருக்கின்ற, ஒரு கற்பனையான நம்பிக்கைதான் கடவுளே ஒழிய, யாரோ ஒரு மேதாவியோ அல்லது முட்டாளோ கற்பித்து விட்டதால் மக்களைப் பற்றிக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு நம்பிக்கை அல்ல!

எனவே, பொருளாதார நலன்களில் இருந்து – அந்த நலன்களின் முரண்களில் இருந்து – அதாவது, மார்க்ஸியப் பருமைவாதப் பார்வையில் – அயோத்திப் பிரச்சனையையும் குஜராத் பிரச்சனையையும் இப்பொழுதுதான் அணுகுவோம்.

மார்க்ஸியப் பார்வை

================

கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்டு வந்த எல்சபெத் அரசி, எதிர்நிலைக் கிறிஸ்தவத்தின் (புரட்டஸ்டாண்ட்] ஆதரவாளர் என்பது நமக்குத் தெரியும். அரியணையில் அவர் அமர்வதற்கு முன்னரே, இங்கிலாந்தில் எதிர்நிலைக் கிறிஸ்தவர்கள் பெருகி வரத் தொடங்கி இருந்தனர் என்பதும் அவர்களுள் தீவிரமானவர்களை, கத்தோலிக்கத் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்று வந்தார்கள் என்பதும் நாம் அறிந்தவை. இதற்குப் பழி வாங்குகின்ற வகையில், எலிசபெத் அரசி அரியணை ஏறிய உடன், கத்தோலிக்கத் தீவிரவாதிகளை எதிர்நிலைத் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்று வந்தனர் என்பது வரலாறு.

புனித ரோமப் ‘பேரரசில்’ இருந்து பிரிந்த, தனி ஒரு தேசமாக ஒரு ‘தேசிய அரசாக’ இங்கிலாந்தை மாற்றி அமைத்து இருந்த எலிசபெத் அரசியோ, போப் ஆனவரின் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து இங்கிலாந்தைப் பிரித்து அதற்கு என்று தனி ஒரு திருச்சபையை நிறுவி வைத்தார். அவரைக் கொல்வதற்காக கத்தோலிக்க குருவானவர் ஒருவரைப் போப் ஆனவர் அனுப்பி வைத்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கும் எதிர்நிலைக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வந்து இருந்த இந்த மத வெறிக்கு, கிறிஸ்தவ மதம் காரணமாக என்றால், இல்லை! மாறாக, பண்ணையக் கிழார்களுக்கும் முதலாளர்களுக்கும் இடையே அன்று ஏற்பட்டு வந்து இருந்த மோதல்கள்தாம் காரணம்.

விண்ணகத்துக் கடவுளின் மண்ணகத்து மறுநிகரியான போப் ஆனவர், வெறும் ஆன்மிகத் தலைவர் மட்டும் அல்லர்; உலகின் மிகப் பெரிய பண்ணைக் கிழாரும் ஆவார். அவரது திருச்சபையின் சொத்துகளோ கணக்கில் அடங்காதவை. அந்தச் சொத்துகளில் உழுது பயிரிட்டு, அவருக்கு வருமானத்தைச் சேர்த்துக் கொடுத்துக் கொண்டு வந்தவர்களோ குத்தகை வேளாளர்கள் . வேளாண்மை முதலாளர்களாகவும் இவர்கள் வளர்ந்து வந்து கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில், புதிதாக வளர்ந்து வந்து இருந்த உற்பத்திச் சாலை முதலாளர்களோ பண்ணையக் கிழார்களின் கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்திட முற்பட்டுக் கொண்டு வந்தனர். கத்தோலிக்க மடங்களைக் கைப்பற்றிடத் துடித்துக் கொண்டு இருந்த வேளாண்மைக் குத்தகையாளர்களுக்கு, அதாவது வேளாண்மை முதலாளர்களுக்கு ஆதரவு அளித்துக் கொண்டும் அவர்கள் வந்தனர்.

ஆக, போப் ஆனவரின் மடங்களையும் சொத்துகளையும் கைப்பற்றி, அவரது ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட முனைந்து இருந்த இடைத்தட்டு மக்களின் கோட்பாடுதான், எதிர்நிலைக் கிறிஸ்தவ வாதம் என்பதும் தெளிவு. எனவே, எதிர் நிலைக் கிறிஸ்தவத்திற்கும் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கும் இடையே இங்கிலாந்தில் அன்று நடை பெற்று வந்து இருந்த மோதல்கள், முதலாளர்களுக்கும் பண்ணையக் கிழார்களுக்கும் இடையே உருவாகி வந்து இருந்த பொருளாதார நலன்களின் மோதல்கள்தாம் என்பது முடிவு. (பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம் : பாகம் ஒன்று: அதிகாரம் – 4)

இந்தியத் துணைக் கண்டத்தில், மடங்களை நிறுவிச் சொத்து சுகங்களை அனுபவித்து வந்தவர்கள் புத்த மதத்தினர் என்பது அனைவரும் அறிந்தது. இந்த மடங்களைக் கைப்பற்றிக் கொளளுகின்ற மோதல்கள்தாம், புத்த மதத்திற்கும் சிவ மதத்திற்கும் இடையே அன்று ஏற்பட்டு வந்து இருந்த மோதல்களும் ஆகும். மடங்களைக் கைப்பற்றிய பின்னர்தான், ஆதிக்க மதங்களாகச் சைவ – விண்ணவ மதங்கள் வளர்ந்திடவும் தொடங்கி இருந்தன. இந்தச் சாதியக் காலத்தை, ‘பக்தி இலக்கியங்களின் காலம்’ என்று நமது வரலாற்றாளர்கள் வரையறுத்து வைத்து இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். பேராசிரியர்களின் விசயம்!

ஆதி சங்கரரைப் பற்றி நமக்கு தெரியும் அண்டம் அனைத்தும் அனைத்து உயிர்களும் – ஏன், சிவன், விண்ணவன் முதலிய தெய்வங்கள்கூட – வெறும் மாயைகள்தாம் என்று சித்தரித்து, பரம்பொருள் உணர்மையாக மனிதனின் சுய – உணர்மையை மட்டும் நிலைநிறுத்திக் காட்டியவர் அவர். ஆனாலும், ஆதி சங்கரரின் பெயரில்தான் காஞ்சிபுரத்துச் சங்கர மடம் இன்றும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தச் சங்கர மடத்தின் நலன்களோ, வெறுமனோ ‘பரம் பொருள்’ பற்றிய நலன்கள் மட்டும் அல்ல; மாறாக, சங்கர மடத்தின் ‘சொத்து’ப் பற்றிய நலன்கள்!

இப்படி, அயோத்திப் பிரச்சனையும் ஒரு ‘கோயில் சொத்து’ப் பிரச்சனைதானே ஒழிய, வெறுமனே ‘இராமர் பக்தி’ப் பிரச்சனை அல்ல!

உலகின் அனைத்து மதங்களும் மடங்களின் துணையுடன்தான் நிலை நின்று கொண்டு வந்து இருக்கின்றன. இந்த மடங்களோ, வருமானம் வரத் தக்க சொத்துகளை அடிப்படையாகக் கொண்டவை! மழை மட்டும் பெய்திடவில்லை என்றால், கடவுளுக்குச் சிறப்பும் பூசனையும் நடக்காது என்று, கடவுளைத் திருவள்ளுவர் கூட முன்னர்க் கிண்டல் அடித்திட வில்லையா ? (பார்க்க:வான் சிறப்பு. குறள்) இதுபோல, சொத்து இல்லை என்றால் மதங்களுக்கு மதிப்பு எதுவும் இருக்காது!

இங்கே ஒரு சிக்கல் எழுகிறது. மத நலன்களுக்குப் பொருளாதார நலன்கள்தாம் அடிப்படை என்றால், வெறுமனே பொருளாதார நலன்களாக இல்லாமல் மத நலன்களாக – பொருளாதாரப் பிரச்சனைகள் வெளிப்படுவது ஏன் ?

இதுதான் சிக்கல். இங்கேதான் தமது சொல்லாடலை அ. மார்க்ஸ் அவிழ்த்து விட்டு இருக்க வேண்டும். ஆனால், வெறும் கதையாடலாக நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சொல்லாடல் சிக்கல் அல்ல இது!

சிற்றுடைமை வாதம்

===============

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, சமுதாயத்தின் பல்வேறு பிரிவு மக்களுடம் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.விலை உயர்வைக் கண்டித்துப் பொது மக்கள் போராடுகிறார்கள்; ஆண்டைச் சாதிகளின் அடக்குமுறைகளைக் கண்டித்து அடிமைச் சாதியினர் போராடுகிறார்கள். தன்னாட்சி உரிமையினைக் கேட்டுத் தேசிய இன மககள் போராடுகிறார்கள்.

இப்படி மின்சாரம் கேட்டு, தண்ணீர் கேட்டு, கல்வி கேட்டு, வேலை கேட்டு, வசதிகள் கேட்டு, பாதுகாப்பு கேட்டு, வரிக் குறைப்பு கேட்டு, கூலி உயர்வு கேட்டு, தனி மனித உரிமைகள் கேட்டு மற்றும் பிற சலுகைகள் கேட்டு, சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் போராடுகிறார்கள்.

இவர்கள் யார் ? உழவர்கள், ஊழியர்கள், உழைப்பாளர்கள், வணிகர்கள், முதலாளர்கள் முதலிய மக்கள்! உழைப்பில் நம்பிக்கை வைத்து இருப்பவர்கள்!

தங்கள் மதங்களின் பெயரால் கோரிக்கைகள் எவற்றையும் இவர்கள் எழுப்புவது இல்லை. ஏனென்றால், இவர்களது கோரிக்கைகளில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியும். சமுதாய நியாயம், பொருளாதார நியாயம், சட்ட நியாயம், வாழ்க்கை நியாயம் என ஒரு வரலாற்று நியாயம் இவர்கள் பக்கம் இருக்கிறது. ஆனால், தனது மதம்தான் சிறந்த மதம் என்று ஒருவன் வலியுறுத்துவதிலோ – கடவுளுக்குத் தான் சூட்டி வைத்து இருக்கின்ற பெயர் தான் சிறந்த பெயர் என்று ஒருவன் வாதிடுவதிலோ ஆன்மீகக் காரியங்களையும் சொத்து – சுகங்களையும் சம்பந்தப்படுத்திப் பேசுவதிலோ எந்த ஒரு நியாயமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி, நியாயம் அற்ற கோரிக்கைகளை எழுப்புபவர்களுக்குத்தான், ஏதேனும் ஒரு மதத்தின் போர்வை தேவைப்படுகிறது.

சட்டங்களை மீறிய ஒரு வரலாற்று நடவடிக்கைதான் புரட்சி என்பது நமக்குத் தெரியும். அவ்வக் காலத்துச் சட்டங்களை மீறித்தான் புரட்சிப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டும் வந்து இருக்கின்றன. ஆனால், வெறும் சொத்து சுகங்களுக்காகச் சட்டங்களை மீறுவது நியாயம் ஆகிட முடியுமா ?சட்டத்தின் ஆட்சியை இவர்கள் விரும்புவது இல்லை. ஏனென்றால், மதக் கட்டுப்பாடுகளை மீறி மனிதர்கள் வளர்ந்து கொண்டு வருவது இவர்களுக்குப் பிடிப்பது இல்லை. சாதிக்கு ஒரு நீதி – ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு நியதி – முதலிய காட்டுத் தனங்களைப் போதித்து வருவதற்கு இவர்கள் வெட்கப்படுவதும் இல்லை!

மதப் பதாகைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டால் போதும் – கொலைகாரன் கூட இங்கே குணாளன் ஆகி விடுகிறான்; கற்பழிப்புக்காரன் கூட கண்ணியவான் ஆகி விடுகிறான்; ஊழல்காரன் கூட உத்தமன் ஆகி விடுகிறான்; போக்கிரிகூட போதகன் ஆகி விடுகிறான்!

ஆனால், யார் இவர்கள் ? உழைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள்; ஊரைக் கொள்ளை அடித்துத் தங்கள் வீட்டில் உலை வைத்துக் கொள்பவர்கள்; சொந்தம் இல்லாத சொத்து – சுகங்களை எல்லாம் அனுபவித்திடத் துடிப்பவர்கள்! இவர்களுக்குத்தாம், பெரிய பெரிய கோயில்கள் வேண்டும்: குளங்கள் வேண்டும்; மத மூடங்கள் வேண்டும்; பண வசூல்கள் வேண்டும்; இவர்கள்தாம் சிற்றுடமையாளர்கள்!

ஓர் உழைப்பாளியின் பொருளாதார நலனை மிகவும் எளிதாக நாம் வரையறுத்துவிட முடியும் – கூலி என்று! ஆதாயம்தான் முதலாளிகளின் பொருளாதார நலன் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால், ஒரு சிற்றுடைமையாளனின் பொருளாதார நலன்களை – வருமானங்களை – அவ்வளவு எளிதாக யாரும் வரையறுத்துவிட முடிவது இல்லை.

எனினும், பொதுப் படையாக இவர்களை நாம் இப்படி வரையறுக்கலாம் – ஊரில் இவர்களுக்குக் கொஞ்சம் நிலம் இருக்கும்; சொந்தமாக வீடும் உழைப்புக் கருவிகளும் இருக்கும்; இதனால் சுற்றி உள்ளவர்கள் இடையே கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் இருக்கும். வசதியாக வாழ்ந்தவர்கள் – வாழ்ந்து கெட்டவர்கள் – உழைத்து உயர்பவர்கள் – வாழ்ந்து வருபவர்கள் என்று எல்லாம் வகை வகையாக இவர்களை எங்கும் நாம் காணலாம்.கிராமங்களுக்கு மையமான சந்தை நகரங்களிலும் நகரங்களுக்கு மையமான பெருநகரங்களிலும், தொடர்பு உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள், இவர்களுள், மேல் நோக்கி வளர்ந்திடவும் முடியாமல், கீழ் நோக்கி இறங்கிடவும் விரும்பாமல், பழைய நிலைகளிலே தங்களைப் பாதுகாத்துக் கொண்டு வருபவர்கள் தாம் சிற்றுடைமை வாதிகள்!

இந்தப் பழமைவாதிகளுக்குத்தாம், சாதிகள் வேண்டும்; மதங்கள் வேண்டும்; மதங்கள் வேண்டும்; மத மூடங்கள் வேண்டும்; சாதிப் பெருமை, மதப் பெருமை, ஆணாகப் பிறந்துவிட்ட பிறவிப் பெருமை என வீண் பெருமைகளில் திளைத்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்!

ஏனென்றால், பெருமைப்படுவதற்கு என்று எந்த ஒரு தகுதியும் இவர்களிடம் இருப்பது இல்லை. இரண்டும் கெட்டவர்களாக இடைத்தட்டில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கின்ற இவர்களுக்கு, கீழ்த்தட்டில் இருப்பவர்களைக் கண்டால் இளக்காரம்; மேல் தட்டில் இருப்பவர்களைக் கண்டால் பொறாமை நிறைவேறிட முடியாத ஆசைகளோ இவர்களிடம் ஏராளம்!

உழைப்பதில் இவர்களுக்கு விருப்பம் இருப்பது இல்லை; ஆனால், உப்பரிகையில் வாழ்வதிலோ விருப்பம் அதிகம்! தகுதிகளை வளர்த்துக் கொள்வதில் இவர்களுக்கு விருப்பம் இருப்பது இல்லை; ஆனால், தலைவர்கள் ஆகி விடுவதிலோ விருப்பம் அதிகம்! இவர்களது ஆதரவாளர்கள்தாம் உதிரிகள் ஆவர்!

பொது நாயகம் தனி மனித உரிமை என்று எல்லாம், காலத்திற்கு ஏற்ற பண்புகள் எவையும் இவர்களுக்குத் தேவைப்படுவது இல்லை. இவர்களது தலைவர்களுக்கோ, எண்பது வயதில்கூட முதிர்ச்சி ஏற்படுவது இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கின்ற பொழுது குற்றங்களைத் தூண்டி விடுகின்ற இவர்கள், ஆளுங்கட்சி ஆகிவிட்ட உடன் குற்றங்களுக்குத் துணை போகத் தொடங்கி விடுகிறார்கள்!

முதலாண்மையின் வளர்ச்சியில் சீரழிந்து கொண்டு வருபவர்கள் சிற்றுடைமையாளர்கள் தாம் என்பது நமக்குத் தெரியும். முதலாளர்களாக வளர்ச்சி அடைவதில்தான் இவர்களுக்கு நாட்டம் என்ற போதிலும், இவர்களால் அது முடிவது இல்லை. ஆனால், உழைப்பாளர்காள மாறிடவோ இவர்கள் இல்லை. ஆனால், உழைப்பாளர்களாக மாறிடவோ இவர்கள் விரும்புவது இல்லை. (இது குறித்துப் பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம் : பாகம் ஒன்று : பக். 52-53; பாகம் இரண்டு : பக்.18-20, 179-82.)

இவர்களுள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளில் இருப்பவர்கள் போக, மீதம் உள்ள பிற்போக்காளர்கள் அனைவரும் பற்றிப் பிடித்துக் கொள்வதுதான் மத வெறி ஆகும். அனைத்து மத வெறியர்களுக்கும் இது பொருந்தும்.

ஆக, சிற்றுடைமையாளர்களின் பொருளாதார நலன்கள்தாம் மத வாதத்திற்கு அடிப்படை என்பது தெளிவு. வரலாற்று முறையான எந்த ஒரு நியாயமும் இவர்களிடம் இல்லாத காரணத்தினால்தான், மத வாத நலன்களாக இவர்களது நலன்கள் வெளிப்பட்டுக் கொண்டும் வருகின்றன.

எனவே, இந்து வாதத்தின் மொழி மட்டும் அல்ல, அனைத்து மத மொழிகளும், சிற்றுடைமை வாதத்தின் மொழிகள்தாம் ஆகும். எனவேதான், ஒரு மதத்தின் பக்கம் நின்று கொண்டு இன்னொரு மதத்தைச் சாடுவது, மத வெறியைத் தூண்டிவிடுவது ஆகிறது.

ஆக, தொடர்ச்சியான தொழில் வளர்ச்சி மட்டும்தான், மத வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்திடத் தக்கப் பொருளாதார வளர்ச்சியாக இருந்திட முடியும் என்பது முடிவு. ஆனால், அ. மார்க்ஸின் சொல்லாடலிலோ, மதங்களின் வெறியாடல்களையும் நாம் காண முடிகிறதே ஒழிய, கரணிய முறையாக (reason] வாதங்களை அல்ல!

உலகாயத வாதம்

==============

குற்றங்களும் சட்டங்களும் மோதிக் கொள்ளுகின்ற பொழுது, சட்டங்களின் பக்கம் நாம் நிற்போம்.

வல்லதிகாரமும் பொது நாயகமும் மோதிக் கொள்ளுகின்ற பொழுது, பொது நாயகத்தின் பக்கம் நாம் நிற்போம்.

அடக்குமுறைகளும் மனித உரிமைகளும் மோதிக் கொள்ளுகின்ற பொழுது, மனித உரிமைகளின் பக்கம் நாம் நிற்போம்.

பேரரசு வாதமும் தேசிய வாதமும் மோதிக் கொள்கின்ற பொழுது, தேசியத்தின் பக்கம் நாம் நிற்போம்.

ஆண்டைச் சாதிகளும் அடிமைச் சாதிகளும் மோதிக் கொள்ளுகின்ற பொழுது, அடிமைச் சாதிகளின் பக்கம் நாம் நிற்போம்.

முதலாளர்களும் உழைப்பாளர்களும் மோதிக் கொள்ளுகின்ற பொழுது, உழைப்பாளர்களின் பக்கம் நாம் நிற்போம்.

ஆனால், தங்களுக்குள் மத வெறியர்கள் மோதிக் கொள்ளுகின்ற பொழுதோ, உலகாயதத்தின் பக்கம்தான் நாம் நிற்போம்; ஏதேனும் ஒரு மதத்தின் பக்கம் நின்று கொண்டு, மத வெறிகளைத் தூண்டி விடாமலும் நாம் இருப்போம்.

ஏனென்றால், சாதி வேற்றுமைகளை நியாயப்படுத்துகின்ற எந்த ஒரு மதமும் – ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமன்மையை மறுதலிக்கின்ற எந்த ஒரு மதமும் – தன்மானத்தின் எழுச்சிக்குத் தடை போடுகின்ற எந்த ஒரு மதமும் – காலத்தால் பின் தங்கிக் கிடக்கின்ற ஒரு பிற்போக்கான மதமாகத்தான் இருந்திட முடியும் – இந்து மதமாக அது இருந்தாலும் சரி, இஸ்லாம் மதமாக இருந்தாலும் சரி, அல்லது கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி!

ஆனால், அ. மார்க்ஸோ, ஒரு மதத்தின் பக்கம் மட்டும் நின்று கொள்கிறார்; மத வெறியைத் தூண்டி விடுவதற்கும் காரணம் ஆகி விடுகிறார்; ஏளன்றால், கடவுளின் திருவிளையாடல்களாக வரலாற்றைக் கருதுகின்ற கருத்து வாதத்திற்குள் மூழ்கிக்கொண்டு அவர் வருகிறார்.

[ ‘சோதிப்பிரகாசம் ‘ என்ற பெயரில் எழுதி வரும் மரிய அற்புத சோதிப்பிரகாசம் நெல்லை அருகே காவல்கிணறு என்ற சிற்றூரில் ஒரு எளிய கிறித்தவ குடும்பத்தில் பிறந்து குறைந்த கல்வி அறிவுடன் உடலுழைப்புத்த் தொழிலாளியாக வாழ்வை துவக்கியவர். பொதுவுடைமை கட்சி ஊழியராக ஆனார். புரட்சிகரமான தொழிற்சங்கவாதியாக இருந்த குசேலரின் நம்பிக்கைக்குரிய தொழிற்சங்க தலைவராக வளர்ந்தார் . சிம்ப்ஸன் போராட்டம் முதலிய புகழ்பெற்ற வேலைநிறுத்தங்களில் பெரும்பங்காற்றினார். நக்சலைட் இயக்கம் உருவானபோது ஏ. எம் .கோதண்டராமன் தலைமையில் அதில் ஈடுபட்டு நீண்ட தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார் . இந்த காலத்தில்தான் அவர் படிக்க ஆரம்பித்தார். பின்பு வழக்கறிஞர் படிப்பை முடித்து இப்போது உயர் நீதிமன்றத்தில் தோன்றி வாதாடுகிறார். இன்று தமிழ்ப் பண்பாட்டியக்கம் மார்க்ஸிய அறிவியக்கம் இரண்டிலும் தீவிரமாக பங்காற்றி வருகிறார்.

கார்ல் மார்க்ஸின் ‘முதல் ‘ [மொழியாக்கம் ], வாழ்க்கையின் கேள்விகள் ,வரலாற்றின் முரண் இயக்கம் [இரு பாகங்கள்] , மனதின் விடுதலை ஆகிய மார்க்ஸிய ஆய்வு நூல்களையும் , திராவிடர் வரலாறு[இரு பாகங்கள்] என்ற ஆய்வுநூலையும் எழுதியுள்ளார் . இவை பொன்மணி பதிப்பகம் எண் 7, முதல் குறுக்குதெரு சிறுத்தொண்டன் தெரு ஒண்டிக்குப்பம் மணவாள நகர் திருவள்ளூர் மாவட்டம் 602002 என்ற விலாசத்தில் கிடைக்கும்

சோதிப்பிரகாசம் முகவரி :சோதிப்பிரகாசம் , 62, கிழக்கு மாட வீதி, வில்லிவாக்கம், சென்னை 600049

இக்கட்டுரை தலித் ஆய்விதழான ‘புதிய கோடாங்கி ‘ யில் வெளியானது ]

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்