அவள் வீடு

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

கெளரிகிருபானந்தன்


அதிகமாகப் படிக்காத கமலாவுக்கு சிறிய வேலை கிடைத்தது. சில நாட்கள் கழிந்த பிறகு தான் குடியிருப்பதற்காக வீடு தேடிக் கொள்ள முடிவு செய்தாள். வேலைக்காக அப்ளிகேஷன்களைப் போடும் போது “இந்த வயதில் உனக்கு வேலை எதுக்கு?” என்று அவளுடைய கணவன் கேட்டான்.
“நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில் இந்த வேண்டாத வேலை உனக்கு எதுக்கும்மா?” மகன் நாராயணன் வருத்தப் பட்டுக்கொண்டான்.
“அக்கா! வேலைக்குப் போக வேண்டிய தலையெழுத்து உனக்கு எதுக்கு? மனதிற்கு ஏதாவது மாறுதல் வேண்டும் என்றால் என்னோடு வந்து இரு” என்று தம்பி கிருஷ்ணன் கடிதம் எழுதினான்.
“எனக்குப் பொழுது போகவில்லை. ஒருக்கால் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுகிறேன்.” கமலா எல்லோருக்கும் பொதுவாக ஒரே பதில் சொன்னாள்.
இவள் கேட்டால் மட்டும் இந்த வயதில் யார் இவளுக்கு வேலையைத் தூக்கிக் கொடுத்து விடப் போகிறார்கள் என்ற நினைப்பில் யாருமே மறுப்பு சொல்லவில்லை. நம் நாட்டில் இருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால் உழைப்பதற்கும், எந்த வேலையாக இருந்தாலும் செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு வேலை கிடைக்காமல் போகாது. குறிப்பிட்ட வேலைக்குத்தான் போவேன் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்குத்தான் வேலை கிடைப்பது கஷ்டம். தனக்கென்று ஒரு வருமானம் இருக்க வேண்டுமென்று கமலா தீவிரமாக முயற்சி செய்ததில் அதிகமாக கஷ்டப்படாமலேயே வேலை கிடைத்துவிட்டது.
வேலையில் சேர்ந்த சில நாட்கள் கழித்து தனக்கென்று ஒரு வீடு, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை என்று தேட முயன்றாள். வீடு பார்த்துத் தரச் சொல்லி தெரிந்தவர்களிடம் கேட்டால் உதவி செய்வதற்கு மாறாக தன்னையே குற்றம் சாட்டுவார்கள் என்று தெரியும். அதனால் தானே முயற்சி செய்யத் தொடங்கினாள். ஆனால் வேலை கிடைத்த அளவுக்கு சுலபமாக வீடு கிடைப்பதாகத் தெரியவில்லை.
“எத்தனை பேர் இருப்பீங்க?”
“நான் ஒருத்திதான்.”
“உங்கள் கணவரும், குழந்தைகளும் இந்த ஊரில் இல்லையா?”
“கணவர் இந்த ஊரில்தான் இருக்கிறார். குழந்தைகள் திருமணம் முடிந்து எங்கேயோ தொலைவில் இருக்கிறார்கள்.”
“கணவர் உங்களை விட்டுவிட்டுப் போய் விட்டாரா? இல்லை டைவோர்ஸ் ஆகிவிட்டதா?”
“அப்படி எதுவும் இல்லை.”
“உங்கள் கணவர் என்ன செய்கிறார்?”
கமலா சொன்னாள்.
“அத்தனை பெரிய வேலையில் இருப்பவருக்கு மனைவியாக இருந்துகொண்டு இந்த சின்ன போர்ஷனில் இருக்க உங்களால் முடியுமா?”
“முடியும்னுதான் நினைக்கிறேன்.”
“உங்கள் கணவர் வந்து போய்க்கொண்டு இருப்பாரா?”
கமலா சற்று யோசித்துவிட்டு “தெரியாது” என்றாள்.
“உங்களுக்குள் ஏதாவது சண்டையா?”
“இல்லை.”
“உங்களுக்கு சொந்த வீடு இருக்கா?”
“இல்லை.”
“நீங்க ஒரு வாடகை வீட்டிலும், உங்கள் கணவர் வேறொரு வாடகை வீட்டிலும் இருக்கப் போறீங்களா?”
“இல்லை. நான் வாடகை வீட்டிலும், என் கணவர் தன்னுடைய சொந்த வீட்டிலும் இருப்போம்.”
“அவருக்கு சொந்தமாக இருக்கும் வீடு உங்களுக்கு சொந்தமானது இல்லையா?”
“இல்லையாம்.”
“யார் சொன்னது?”
“என் கணவர்தான். திருமணம் ஆனது முதல் அப்படித்தான் சொல்லி வருகிறார். வாடகை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் அது அவருக்கு மட்டும்தானாம். அது போகட்டும். இந்த வீடு உங்களுடையதா? உங்கள் கணவருடையதா? இந்த வீட்டை வாடகைக்குக் கொடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதா?”
கமலா ஒவ்வொரு வீட்டுக்காரியிடமும் கேட்டாள். இத்தனை நாளாக வீடு தங்களுடையதுதான் என்று அவர்கள் எண்ணி வந்தார்கள். உண்மையில் வீட்டை வாடகைக்குத் தரும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களுடைய கணவர்களுக்குத்தான் இருந்தது.
கமலாவின் கேள்விகள் அவர்களுக்கு சங்கடத்தைத் தந்தால், அவளுடைய போக்கு அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அடங்காப்பிடாரியாக இருப்பாளோ என்ற சந்தேகமும் வந்தது. கமலா விதவையாக இருந்தாலோ, அல்லது கணவனால் கைவிடப்பட்டவளாக இருந்தாலோ அவர்களுக்குக் கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ. ஆனால் இரண்டுமே இல்லை. நிம்மதியாக இருக்கும் குடித்தனத்தை வேண்டாமென்று துறந்துவிட்டு வந்தவள் வெளிப்பார்வைக்கு நல்லவளாகத் தென்பட்டாலும் தங்களுடைய குடித்தனத்திற்கு ஆபத்து வரக்கூடும் என்று அந்த இல்லத்தரசிகள் பயந்தார்கள். தம் வீட்டுப் பெண்கள் மீது அவளுடைய பாதிப்பு ஏற்பட்டால் அதனுடைய விளைவு எப்படி இருக்குமோ என்று அந்த வீட்டு யஜமானர்கள் பயந்தார்கள். அதனால் அவர்கள் யாருமே அவளுக்கு வீடு தரவில்லை.
கடைசியில் கமலாவின் ஒத்த வயதில் இருக்கும் திருமணமாகாத பெண்மணி ஒருத்தி, கமலாவின் ஆபீசிலேயே வேலை பார்ப்பவள் தந்தை தனக்காகக் கொடுத்திருந்த சிறிய வீட்டில் ஒரு போர்ஷனைத் தனியாக ஏற்பாடு செய்து கமலாவுக்குக் கொடுத்தாள், தனக்கும் துணையாக இருக்குமே என்ற எண்ணத்துடன்.
மறுநாள் கமலா ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு வங்கிக்குச் சென்றாள். அவளுடைய தந்தை இறந்து போவதற்கு முன் அவள் பெயரில் ·பிக்ஸட் டிபாசிட் போட்டிருந்தார். அதன் மீது ஐயாயிரம் கடன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் தேவையான கட்டில், மெத்தை, ஸ்டவ், மளிகைச் சாமான் போன்றவற்றை வாங்கினாள்.
பிறகு கணவர் வீட்டுக்குச் சென்றாள். அந்த நேரத்தில் கணவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று அவளுக்குத் தெரியும். புதிதாக வாங்கிய சூட்கேஸில் தன்னுடைய துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள்.
“நீங்க என்னுடன் குடித்தனம் செய்வதற்காக என்னுடைய பிறந்த வீட்டில் உங்களுக்குக் கொடுத்த கட்டில், பீரோ, பாத்திரம், பண்டம் எல்லாவற்றையும் உங்களுக்கே உங்களுடைய வீட்டில் விட்டுச் செல்கிறேன். இத்தனை நாட்களும் எனக்கு ஆதரவு தந்தீர்கள். நான் உங்களுக்கு பணிவிடை செய்தேன். இரண்டிற்கும் கணக்கு சரியாகிவிட்டது.
கீழே என்னுடைய முகவரியை எழுதியிருக்கிறேன். அந்த வீடு வாடகை வீடு. ஆனால் அது என்னுடைய வாடகை வீடு. உங்களுக்கு எப்பொழுதாவது வரணும் என்று தோன்றினால் வரலாம். சாப்பிடணும் என்று தோன்றினால் சாப்பிடலாம். என் வீட்டிலேயே உறங்க வேண்டும் என்று தோன்றினால் உறங்கலாம். இதுதான் என்னுடைய வீட்டுக்கு அழைப்புக் கடிதம்.”
என்று கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சூட்கேஸை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். கதவைப் பூட்டிவிட்டு சாவியை அடுத்த வீட்டு மாமியிடம் தந்தாள்.
“ஊருக்குப் போறீங்களா?” மாமியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“இல்லை. என்னுடைய வீட்டுக்குப் போகிறேன்.”
மாமி குழப்பத்துடன் பார்த்தாள். இன்று இல்லாவிட்டாலும் நாளைக்காவது எல்லோருக்கும் தெரியத்தானே போகிறது என்று நினைத்த கமலா தான் வேறு வீடு பார்த்துக் கொண்டு போவதாக தெரிவித்தாள். மாமி திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டாள்.
கமலாவின் கணவன் வீட்டுக்கு வந்த பிறகு மனைவி எழுதி வைத்திருந்த கடித்ததைப் பார்த்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்த பிறகு கமலாவின் துணிச்சலுக்குக் கோபமும், வியப்பும் ஏற்பட்டன. அந்தக் கோபத்தில் கமலா செய்த முட்டாள்தனமான காரியத்தைப் பற்றி அவளுடைய தம்பிக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கும் கடிதம் எழுதிப் போட்டான்.
கடிதம் கிடைத்ததும் கமலாவின் தம்பி கிளம்பி வந்தான். அத்தான் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டான். முகவரியை எடுத்துக்கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனான். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அவள் வீட்டிலேயே இருந்தாள்.
“வாப்பா” என்று தம்பியை அன்புடன் வரவேற்றாள். இருந்த ஒரே நாற்காலியில் அவனை உட்காரச் சொல்லிவிட்டு தான் கட்டிலில் அமர்ந்துகொண்டாள். தம்பியின் குடும்ப நலனை விசாரித்தாள்.
அக்கா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாக பதில் சொன்ன கிருஷ்ணன் “அக்கா! நீ செய்த காரியம் கொஞ்சம்கூட நன்றாக இல்லை. அத்தானுக்குக் கோபம் அதிகம்தான். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டார் என்றே வைத்தக்கொள். முப்பது வருடங்களாக அட்ஜெஸ்ட் செய்துகொண்டு குடித்தனம் நடத்தி வருகிறாய். உனக்கு புதுசு இல்லையே? சரி போகட்டும். கொஞ்சம் நாள் அவரை விட்டு தொலைவாக இருக்கணும் என்று நினைத்தால் என்னிடம் வந்து இருக்கக் கூடாதா? இல்லை உன் மகனிடம்தான் போய் இருக்கக் கூடாதா? நீ வந்து இருப்பேன் என்று சொன்னால் யார்தான் மறுக்கப் போகிறார்கள்? அத்தான்கூட நீ இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டதற்காக வருத்தப்படுகிறார். நீ திரும்பிப் போனால் ஆதரவு தராமல் இருப்பாரா என்ன? மாட்டேன் என்று சொல்லப் போகிறாரா? அது உன் வீடு இல்லையா? அத்தனை பெரிய வீட்டுக்கு யஜமானியாக இருந்தவள் இந்த சின்ன போர்ஷனில் எப்படி குடியிருக்கிறாய்? எதற்காக இருக்கணும்?” என்று கேட்டான். அந்தக் குரலில் அக்கா செய்த காரியத்திற்கு எரிச்சலைவிட அவள் மீது இருக்கும் அன்புதான் வெளிப்பட்து. அக்கா நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டுமென்ற தவிப்பு இருந்தது.
கமலா நிதானமாக தம்பியை நிமிர்ந்து பார்த்தாள். “அது உன்னுடைய வீடு இல்லையா என்று கேட்டாயே? அது என்னுடைய வீடு இல்லை. ஒரு காலத்தில் என்னுடைய வீடு என்று நினைத்திருந்தேன். அந்த வீடு என் கணவர் வளர்த்து வரும் நாய்க்கு எப்படி சொந்தம் இல்லையோ அதுபோல் எனக்கும் சொந்தமில்லை. அவர் நாயையும் ஆதரவுடன் பார்த்துக்கொள்வார். எனக்கும் ஆதரவு தந்திருக்கிறார். அவ்வளவுதானே தவிர அவரைப் போல் எங்களுக்கு அந்த வீட்டின் மீது உரிமை இல்லை. நாங்கள் எங்களுடைய கடமைகளை சரியாகச் செய்து வந்ததற்கு பிரதிபலனாக அவருடைய ஆதரவைப் பெற்று வந்தோம். அவ்வளவுதான்.”
“அக்கா! இவ்வளவு கடினமான வாரத்தைகள் எதுக்கு? போகட்டும். ஏதோ ஒரு விஷயத்தில் அத்தான் உன் மனதை நோகடித்துவிட்டார். அந்த வேதனை குறையும் வரையில் என்னுடன் வந்து இரு. மனம் கொஞ்சம் சமாதானப்பட்ட பிறகு போய்க் கொள்ளலாம்.” தம்பி சொன்னான்.
“அன்பு கிடைக்காத காரணத்திற்காக நான் என் கணவரின் வீட்டை விட்டு வெளியேற நினைத்திருந்தால் அன்பாகப் பார்த்துக்கொள்ளும் பிறந்த வீட்டிற்கு ஓடி வந்திருப்பேன். அவர் என் மீது காட்டும் அன்புக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் அது என்னுடைய வீடு இல்லை என்றுதான் அங்கிருந்து வெளியேறினேன். அதேபோல் உன்னுடைய வீடும் எனக்குச் சொந்தமில்லை. அதனால் வர மாட்டேன்.” கமலா சொன்னாள்.
“அது அப்பா கட்டிய வீடு. அதில் இருக்க எனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ உனக்கும் அவ்வளவு உரிமை இருக்கு. வந்து இரு.” நேர்மையான குரலில் சொன்னான் கிருஷ்ணன்.
“இது தங்கும் உரிமை பற்றிய பிரச்னை இல்லை. உங்க அத்தான்கூட இருக்கச் சொல்கிறாரே ஒழிய போகச் சொல்லவில்லையே? அசல் விஷயம் என்னவென்றால் என் தந்தை கட்டிய வீடு என்னுடையது இல்லை. என் மாமனார் கட்டிய வீடும் என்னுடையது இல்லை. கடைசியில் என் கணவர் கட்டிய வீடும் என்னுடையது இல்லை. இந்த விஷயத்தை நீங்க எல்லோரும் ஆளுக்கு ஒரு விதமாக உணர்த்திவிட்டீர்கள்.” எந்த விதமான கோபமோ, ஆவேசமோ இல்லாத குரலில் சொன்னாள். அவள் ரொம்ப நாளாக உள்ளூர நொந்துபோய் யோசித்து அலசி ஆராய்ந்து எடுத்த முடிவு, தன்னுடைய வீட்டில் இருப்பது. “அதனால்தான் உங்களுடைய வீடுகளில் தங்குவதாக இல்லை” என்று முடித்தாள்.
“நான் அப்படி சொன்னேனா? எப்போ?” வியப்புடன் கேட்டான் கிருஷ்ணன்.
“இப்போ அந்த விஷயம் எல்லாம் எதுக்கு?”
“பரவாயில்லை சொல்லு” என்றான்.
“உனக்கும் நினைவு இருக்கலாம். எனக்குத் திருமணம் ஆகும்போது பதினெட்டு வயது. உனக்கு பதினைந்து. எனக்குத் திருமணம் முடியும் வரையில் அம்மா பழைய நியூஸ்பேப்பர் விற்ற பணத்தை ஆளுக்குப் பாதியாகக் கொடுத்து வந்தாள். மகளும் மகனும் தன் வீட்டில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றுதானே எந்தத் தாயும் விரும்புவாள்? அதனால்தான் திருமணம் முடிந்த பிறகு கோடையில் நான் பிறந்த வீட்டுக்கு வந்த போது, பழைய பேப்பர் விற்ற பணத்தை வழக்கம் போல் பதிர்ந்து கொடுக்கப் போனாள். அப்பொழுது நீ என்ன சொன்னாய் என்று நினைவு இருக்கிறதா?” கமலா தம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்டாள்.
கிருஷ்ணனுக்கு நினைவு வந்தது. கமலா திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து பிறந்த வீட்டுக்கு வந்தாள். அப்பொழுது அவர்கள் வீட்டில் இருந்த பழைய பேப்பர், பாட்டில்களை கடையில் போட்டார்கள். கிருஷ்ணனின் தந்தை குழந்தைகளுக்கு பாக்கெட் மணி எதுவும் தர மாட்டார். பழைய பேப்பர் விற்று வந்த பணத்தை அவர்களுடைய தாய் குழந்தைகளின் கைச் செலவுக்கு என்று பகிர்ந்து கொடுத்து விடுவாள். அந்த நாளுக்காக கிருஷ்ணன் ரொம்ப எதிர்பார்ப்புடன் காத்திருப்பான். அந்த நாட்களில் பேப்பர் போட்டால் பத்தோ இருபதோ கிடைக்கும். ஆனால் அதுவே பெரிய தொகை. சின்ன வயது என்பதால் தேவைகளும் குறைவு. கமலா புகுந்த வீட்டுக்குப் போன மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு தடவை பேப்பரை கடையில் போட்டபோது வந்த பணத்தை தாய் அப்படியே மகனிடம் கொடுத்துவிட்டாள். அந்த விதமாக கிருஷ்ணன் அந்த பணத்தைத் திருமணமான அக்காவுடன் பகிர்ந்துகொள்ளவில்லை. அக்கா உரிமையை இழந்து விட்டதால் என்று நினைத்தானே தவிர ஊரில் இல்லாமல் போனதால் என்று நினைக்கவில்லை.
இரண்டாவது முறை விற்ற போது கமலாவும் இருந்ததால் தாய் மகளுக்கும் பங்கு தரப் போனாள். அப்பொழுது கிருஷ்ணன் சொன்னான். “அக்காவுக்குத் தேவையான பணத்தைத் தருவதற்கு அத்தான்தான் இருக்கிறாரே? மேலும் அக்காவின் சூட்கேஸில் நிறைய பணம் இருக்கு. நான் பார்த்தேன்.”
“என்னிடம் இருக்கும் பணத்தைப் பற்றி இப்போ பேச்சு எதுக்கு? இத்தனை நாளும் எனக்கு பங்கு இருந்து வந்தது இல்லையா? இப்பொழுது இல்லாமல் போவானேன்?” கமலா வியப்புடன் கேட்டாள்.
கிருஷ்ணன் உடனே பதிலளித்தான். “பெண்களுக்கு திருமணம் முடிந்தும் புகுந்த வீட்டில் உரிமை கிடைத்துவிடும். பிறந்த வீட்டில் உரிமை போய்விடும். ஏதாவது ஒரு வீட்டுச் சொத்தில் பங்கு கிடைக்குமே தவிர கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் எப்படி முடியும்? திருமணமான உன் நாத்தனார்களுக்கு உன் கணவருக்குச் சமமாக உன் மாமனார் பங்கு தருவாரா? அப்படி கொடுத்தால் நீதான் சும்மா இருப்பாயா?”
“இரண்டு ரூபாய் காசுக்கு என்ன பேச்சு பேசிவிட்டாய்? நாளைக்கு என் வீட்டுக்கு வராதே என்று சொல்லிவிடுவாயோ?” கமலாவின் குரலில் வேதனை வெளிப்பட்டது.
“ச்சே… ச்சே… சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். அவ்வளவுதான். இந்த வீட்டில் உனக்கு எப்பொழுதும் இடம் இருக்கத்தான் போகிறது. பிறந்த வீட்டில் பெண்களுக்கு அதிகாரமும் இருக்காது. கடனும் இருக்காது. சீர் வரிசைகளைப் பெற்றுக்கொள்வதில் எந்தக் குறையும் இருக்காது.” நொந்து கொள்வது போல் சொன்னான் கிருஷ்ணன்.
கமலா மௌனமாக இருந்துவிட்டாள். உண்மையிலேயே கமலாவுக்கு பிறந்த வீட்டில எந்தக் குறையும் இருந்ததில்லை. ஆனால் அவளுடைய வருத்தம் என்னவென்றால் எதுவுமே தனக்கு உரிமையாகக் கிடைக்கவில்லை. எல்லாமே சீர்வரிசையாகத் தரப்பட்டவை. பிறந்த வீட்டார் ஆதரவுடன் போடும் பிச்சைதான் அந்த பரிசுகள்.
கமலா தாழ்ந்த குரலில் சொன்னாள். “அன்னிக்கு என் பெட்டியில் பணம் இருப்பதைப் பார்த்தாய். உண்மைதான். ஆனால் அது எவ்வளவு இருந்ததென்று உனக்குத் தெரியுமா? திரும்பிப் போவதற்கு ரயில் மற்றும் ரிக்ஷாவுக்கும் போதுமான ரூபாயைக் கணக்கிட்டு உன் அத்தான் எனக்குத் தருவார், நான் செலவுக்கு சிரமப்படக் கூடாதே என்று.”
“நீ திரும்பிப் போவதற்கு எப்போதும் அப்பாதானே செலவு செய்துவந்தார்? நான்தானே ஸ்டேஷனுக்கு வந்து உன்னை ரயிலில் ஏற்றிவிடுவேன்? அத்தான் கொடுத்த பணத்தை நீ உன் சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே?”
“வழிச் செலவுக்காக அவர் கொடுத்த ரூபாயை ஒரு நாளும் நான் சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதில்லை. அதை அவரிடமே கொடுத்துவிடுவேன், சிலசமயம் அவருக்கு அன்பு பொங்கி வந்தால் ‘உன்னடமே வைத்துக்கொண்டு வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்’ என்று சொல்லுவார்.”
“அத்தான் நல்லவர் என்று நீயும் ஒப்புக் கொள்கிறாய் இல்லையா?”
“நல்லவர் என்பதற்கு நீ கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்தும், நான் விரும்பும் சுதந்திர வாழ்க்கையைப் பொறுத்தும் அது முடிவு செய்யப்படும். அவர் கொடுப்பதை நான் பெற்றுக் கொள்ளும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு இது வேண்டும் என்று நான் கேட்டு அதை அவர் கொடுக்காத போதுதான் பிரச்னையே உருவாகும்.”
“எல்லாம் அவர் வாங்கிப் போடும்போது உனக்கு என்று தனியாகப் பணம் எதுக்கு?” வியப்புடன் கேட்டான் கிருஷ்ணன்.
“”நீ இங்கே இரண்டு நாள் தங்கி இரு. உன்னிடமுள்ள பணத்தை என்னிடம் கொடு. உன் தேவைகளை எல்லாம் நானே கவனித்துக் கொள்கிறேன். அந்த சுவர்க்கத்தை அனுபவித்தால் தவிர புரியாது.”
“நீ வீட்டில் இல்லாதபோது எனக்கு காபி சாப்பிட வேண்டும் போல் தோன்றினால்?”
“அவர் வீட்டில் இல்லாதபோது எனக்குத் தோன்றினால்?”
“வீட்டில்தானே இருக்கிறாய். வேண்டும் என்றபோது காபி கலந்து குடிக்கலாமே?”
“இபொழுது நீயும்தானே வீட்டில் இருக்கப் போகிறாய்? நீயே காபி கலந்துகொண்டு குடிப்பாய். ஆனால் எவ்வளவு ஜாக்கிரதையாக காபியைத் தயாரிப்பாய் என்றால் பால்காரன் கொடுத்துவிட்டுப் போன பாலில் மற்ற தேவைகளுக்கும் போதுமான அளவு இருக்கிறதா என்று பயந்துகொண்டே கலந்துகொள்வாய். ஒருக்கால் நான் ஆபீஸிலிருந்து வந்த பிறகு ஒரு கப் காபி சாப்பிடக்கூடும் என்ற நினைப்போடு ஒரு சொட்டு பால் கீழே சிந்திவிடாமல் அளந்து காபியைக் கலந்து கொள்வாய்.”
கமலாவின் பேச்சைக் கேட்டதும் கிருஷ்ணனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
“அதெல்லாம் போகட்டும் விடு. நம் வீட்டுக்குப் போவோம்.”
“அது நம்ப வீடு இல்லை கிருஷ்ணா! உன் வீடு. அங்கே நான் ஒரு விருந்தாளி மட்டும்தான். அத்தான் வீட்டில் நான் ஒரு அடிமை. நம்ப வீடு என்று நீ சொன்னாலும் உன் மனைவி ஒப்புக் கொள்ள மாட்டாள். அப்பாவே அந்த விஷயத்தை ஒப்புக் கொள்ளவில்லை. உயிலில் எனக்கும் பங்கு எழுதவில்லையா என்று கேட்ட போது.” கமலா சொன்னாள். அவள் குரலில் கோபம் இல்லை. உண்மையை வெளிப்படுத்தும் அழுத்தம் மட்டும்தான் இருந்தது.
கமலாவின் தந்தை சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர். மகளுக்கு பதினெட்டு வயது முடிந்ததும் திருமணம் செய்து வைத்தார். கையில் இருந்த பணத்தில் வீடு கட்டிக்கொண்டு பென்ஷன் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னால் உயிலை எழுதினார். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், உடலில் தெம்பு இருக்கும்போது கைப்பட உயிலை எழுதியதோடு மகள், மகன் மற்றும் மனைவிக்கு படித்துக் காண்பித்தார். அன்றைய தேதிக்கு கமலாவுக்கு திருமணம் முடிந்து இருபத்தி ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. உலகம் என்றால் என்வென்று ஓரளவுக்கு புரியத் தொடங்கியது. அதனால் தைரியமாகத் தந்தையிடம் “அப்பா! உங்களுடைய சுய சம்பாத்தியத்தில் உங்கள் மகளான எனக்கு பங்கு இல்லையா?” என்று கேட்டாள்.
கமலாவின் கேள்விக்கு தந்தை வியப்படைந்தார். மகள் அப்படி கேட்கக்கூடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருப்பதை உணர்ந்தார்.
“இதோ பாரும்மா! தம்பியை உன்னைவிட அதிகம் படிக்க வைத்தேன் என்பது உண்மைதான். ஆனால் உன் கல்யாணத்திற்கும், பிரசவத்திற்கும், சீர் வரிசைக்கும் செலவு செய்தது குறைவான தொகை ஒன்றுமில்லை. அவனுடைய படிப்புக்கு ஆன செலவுக்கும் உனக்காகச் செய்த செலவுக்கும் சரியாகி விட்டது” என்றார்.
“என் திருமணத்திற்காக செலவு செய்ததை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் கணவருக்குக் கொடுத்த பரிசுகளைக் கூட எனக்காகச் செலவு செய்தது போல் குறிப்படுவது அநியாயம்.” கமலா சொன்னாள்.
“உன் குடும்பத்திற்காகத்தானே தந்தோம், மருமகளுக்குப் போட்ட நகை உன் தம்பிக்குக் கொடுத்தது போல்தானே.” தந்தை விளக்கம் அளித்தார்.
“தம்பி விஷயத்தில் அது சரிதான். ஏன் என்றால் நடைமுறையில் மனைவியின் போருட்களின் மீது தம்பிக்கு அதிகாரம் எப்போதும் இருக்கிறது. ஆனால் என் கணவருக்கு நீங்கள் கொடுத்த பொருட்கள் மீது எனக்கு என்றுமே அதிகாரம் இருந்தது இல்லை. சொத்தோ, பணமோ எதுவாக இருந்தாலும் அதன் உரிமை ஆண்களுக்குத்தான். உங்களிடமிருந்து உங்க மகனுக்கும், மாப்பிள்ளைக்கும் கொடுக்கப் பட்டதை என் பங்குக்கு கொடுத்து விட்டதாகச் சொல்றீங்க.” கமலா சொன்னாள்.
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக தானும் தன் கணவரும் ஒன்று என்பது போல் மற்றவர்கள் பேசுவதும், கணவர் தன்னை வேற்று மனுஷியாக நடத்தி வருவதும் அவள் அடி மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. இது நியாயம் இல்லை என்று சமீப காலமாக உணரத் தொடங்கினாள். அவளுடைய கேள்விக்கு அங்கேயே நின்றுகொண்டிருந்த தம்பியின் மனைவியிடமிருந்து பதில் வந்தது.
“அக்கா! உங்க மாமனாருடைய சொத்தில் உங்கள் கணவர் தன்னுடைய அக்கா தங்கைகளுக்குப் பங்கு கொடுத்தாரா? இல்லையே? என்னுடைய அண்ணன் தம்பி எனக்குக் கொடத்தார்களா? என் தந்தையின் சொத்தில் எனக்கு பங்கு இல்லையே. ஒரு பெண்ணுக்கு தன் கணவர் மூலமாக மாமனாரின் சொத்தில் பங்கு கிடைப்பது வழக்கம்.”
தம்பியின் மனைவிக்கு கமலா பதில் சொல்லவில்லை. தன்னுடைய மாமனார் போனபொழுது கணவருக்குச் சமமாக நாத்தனார்களுககும் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்றோ, கூடாது என்றோ அவள் நினைக்கவில்லை. அது அவர்களுடைய சொந்த விஷயம் என்று நினைத்தாள். அவளுடைய நாத்தனாரர்களும், மைத்துனர்களும், கணவர் உட்பட அவளை வேற்று மனுஷியாகத்தான் நடத்தி வந்தார்கள். அதனால் கமலாவிடம் அவர்கள் அபிப்பிராயம் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.
“அக்கா! நீங்க சொன்னதும் நியாயம்தான். உங்களுடைய பங்கை இங்கே பெற்றுக்கொண்டு அங்கே நாத்தனார்களுக்கு அவர்களுடைய பங்கை வாங்கிக் கொடுங்கள்.” தம்பியின் மனைவி சொன்னாள்.
அவளுடைய சாதுரியத்தைக் கண்டு கமலா திகைத்துப் போனாள். தான் இங்கே பெற்றுக் கொள்வதை விட அங்கே இழப்பதுதான் அதிகம். அந்த விஷயம் தெரிந்துதான் தம்பியின் மனைவி அப்படி சொன்னாள். கமலாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“நானும், உங்க அம்மாவும் எங்களுடைய கடைசிக் காலத்தில் தம்பியிடம்தானே இருக்கப் போகிறோம்? அவனும் அவனுடைய மனைவியும் எங்களுக்கு பணிவிடை செய்துதானே ஆகணும்? இந்தக் காலத்தில் பணத்தை விட பணிவிடை முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்க அவனுக்குப் பணமாகக் கொடுப்பதை, அவன் எங்களுக்கு பணிவிடை செய்து அந்தக் கடனைத் தீர்த்துக்கொள்வான்.” தந்தை நிலைமையை சரிப் படுத்துவது போல் சொன்னார்.
அதன் பிறகு அவள் கேட்டாள் என்பதற்காகவோ , இல்லை முன்னாடியே நினைத்திருந்தாரோ தெரியாது. அவள் ஊருக்குப் போகும்முன் அவளுடைய தந்தை அவள் பெயரில் ·பிக்ஸட் டிபாசிட் போட்டார். அடுத்த ஆண்டு அவர் இறந்து போய் விட்டார். உயில் விஷயமாக அன்று நடந்த பேச்சுவார்த்தை கிருஷ்ணனுக்கு நினைவு வந்தது.
“அப்பா அப்படி சொல்லிவிட்டார் என்பதால் அந்த வீடு என்னுடையதுதான். உன்னுடையது இல்லை என்கிறாய். சரி அதைவிடு. அத்தான் கட்டிய வீடு உன்னுடையதுதானே. அங்கேயே இருக்கலாம் இல்லையா. இங்கே இருப்பானேன்?” கிருஷ்ணன் கேட்டான்.
“அது என்னுடைய வீடுதான் என்று உங்க அத்தானை இங்கே வந்து சொல்லச்சொல்லு. வீட்டைப் பெருக்கி துடைத்து கோலம் போடுவதற்கும், பண்டிகை வந்தால் மாவிலைத் தோரணம் கட்டுவதற்கும், கணவரின் நீண்ட ஆயுளை வேண்டி பூஜைகளைச் செய்வது மட்டுமே அல்லாமல் என் பேச்சு எடுபடக் கூடிய இடமாகவும், என்னைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக வந்து போகும் உரிமையும் இருப்பதாக உங்க அத்தானை சொல்லச் சொல்லு. அடுத்த நிமிடமே கிளம்பிப் போய்விடுகிறேன். என் தந்தை கட்டிய வீடு என்னுடையது இல்லை என்று அன்றைக்கே முடிவு செய்யப்பட்டு விட்டது. மறுபடியும் அதைக் கிளற வேண்டாம்.” கமலா தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.
கிருஷ்ணன் அங்கேயே சாப்பிட்டுவிட்டு அத்தான் வீட்டுக்குப் போய் தன்னுடைய தூது தோல்வி அடைந்துவிட்டதென்று தெரிவித்தான். ராகவன் உடனே மனைவியைத் தேடிக்கொண்டு போகவில்லை. கமலா தனியாக இருப்பது பற்றி அக்கம்பக்கத்தில் நாலு விதமாக பேசத் தொடங்கியதும் அவமானமாக உணர்ந்து பத்து நாடகள் கழித்துப் போனான்.
“வீட்டுக்கு வா” என்றான் ராகவன்.
“யாருடைய வீட்டுக்கு?” கமலா கேட்டாள்.
“நம்ப வீட்டுக்கு.”
“நம் வீடு என்ற வார்த்தையை முதல் முறையாக உங்கள் வாயிலிருந்து கேட்கிறேன்” என்றாள்.
“இல்லை என்று எப்போ மறுத்தேன்?”
“ஒரு தடவை இல்லை. ஆயிரம் தடவை சொல்லியிருக்கீங்க.” கமலா சொல்லிக்கொண்டே வந்தாள்.
ராகவன் கமலாவின் பிறந்த வீட்டு பிரஸ்தாபனை வரும்போது “உங்க வீட்டில் அப்படி செய்வார்களோ என்னவோ எங்க வீட்டில் இது வழக்கமில்லை” என்று மனைவியை வேறுபடுத்திப் பேசுவான். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் உங்க எங்க என்ற வார்த்தைகளுக்கு பதில் நம்ப என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வந்ததே இல்லை. என்றாவது கமலா மாற்றுக் கருத்தைத் தெரிவித்தால் “இது என் வீடு. என்னுடைய வீட்டில் என் வார்த்தைதான் சொல்லுபடி ஆகணும்” என்பான்.
“என் பிறந்த வீட்டில் கணவன் வீட்டை என் வீடு என்று சொல்லுவார்கள். நீங்களோ என் பிறந்த வீட்டைப் பற்றி எப்போ பேசினாலும் உன் வீடு என்று சொல்லுவீங்க. அவர்கள் என்னவோ அது என் வீடு இல்லை என்று சொல்லுவார்கள். இந்த இரண்டில் எது என்னுடைய வீடு?” கமலா ஒரு நாள் கேட்டுவிட்டாள்.
“பெண்களுக்கு தனியாக வீடு இருக்குமா என்ன? எல்லாமே அவர்களுடைய வீடுதான்.” ஜோக் செய்வது போல் பேசி சமாளித்துவிட்டான்.
எப்பொழுதாவது கமலாவின் மாமியார் வீட்டுக்கு வந்தால் அவளும், ராகவனும் கமலாவை வேற்று மனுழியைப் போல் நடத்துவார்கள். அவர்களுடைய ரகசியங்களைக் கமலா கேட்டுவிடக் கூடாது என்பதுபோல் கதவுகளைச் சாத்திக்கொண்டு பேசுவார்கள். மாமியாரும் தன்னைப் போல் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தவள்தானே. அவள் மட்டும் வீட்டு மனுஷியாகவும் தான் வேற்று மனுஷியாகவும் நடத்தப்படுவானேன்? ஒருக்கால் தன்னுடைய மகன் வீட்டில் தான் சொந்த மனுஷியாகவும், மருமகள் வேற்று மனுஷியாகவும் நடத்தப்படுவார்களோ? அப்படி நடக்க அனுமதிக்கக் கூடாது என்று கமலா நினைத்துக் கொண்டாள். அதனால்தான் அவள் தன்னுடைய மருமகளை மகனிடமிருந்து பிரிக்கவும் இல்லை. மகனிடம் தான் நெருக்கமாக இருக்க வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை.
ஆனால் ஒரே ஒரு தடவை மகளுடைய சார்பில் கணவரிடம் சண்டை போட்டாள்.
“அவளும் உங்களுக்குப் பிறந்தவள்தான். உங்களுடைய சம்பாத்தியத்தில் அவளுக்கும் பங்கு இருக்கிறது. இரண்டு வீடுகளில் ஒன்றை அவள் பெயரில் எழுதுங்கள்” என்று.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தந்தை இறந்த பிறகு தாயை அழைத்து வந்து சில தாட்கள் தன்னிடம் வைத்துக் கொள்ளணும் என்று கமலா விரும்பினாள். ஆனால் கணவன் சம்மதிக்கவில்லை.
“உங்க அம்மாவின் பொறுப்பு உன் தம்பியுடையதுதான்” என்றான்.
“கடமை வேறு. பாசம் வேறு” என்றாள் கமலா.
“எங்க அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் கடமை நம்முடையது. உங்க அம்மாவின் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.” ராகவன் சொன்னான்.
“கடமை நம் இருவருடையது. அதிகாரம் மட்டும் உங்களுடைது. நன்றாகத்தான் இருக்கு.”
“என்ன சொல்கிறாய்?” எரிச்சலுடன் கேட்டான்.
“இது உங்களுடைய விடு. அவள் உங்களுடைய அம்மா. அவளைப் பார்த்துக்கொள்ளும் கடமை உங்களுடையது.”
“இங்கே உனக்கு எந்த கடமையும் இல்லை என்றால் பிறந்த வீட்டுக்கே போய்க்கொள். இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” ராகவன் கத்தினான், சரியாக வேலை செய்யாத வேலைக்காரியைப் பணியிலிருந்து நீக்கும் தோரணையில்.
அந்த முறையும் கமலா எதுவும் பேசவில்லை. ஆனால் மகள் விஷயம் வந்ததும் தன்னுடைய மகள் மாப்பிள்ளையிடமிருந்து அது போன்ற அவமானத்தை அனுபவிக்கக் கூடாது என்றும், பொருளாதார ரீதியாகத் தன்னைச் சார்ந்திருக்கும் மனைவியைக் கணவன் மதிப்புடன் நடத்தும் வாய்ப்பு குறைவு என்றும் நம்பியதால் மகளுக்கும் மகனுடன் சரிசமமாகப் பங்கு தரச் சொன்னாள். அன்று மகன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான்.
“உலகத்தில் நடக்கிற காரியமா இது? வயதான காலத்தில் உங்க இருவரையும் பார்த்துக் கொள்ளப் போவது நாங்களா இல்லை மகளா?” மருமகள் நியாயம் கேட்டாள்.
கமலா ஒரு முறை மருமகளை இரக்கத்துடன் பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில் சொல்லத் தொடங்கினாள்.
“ஆண்கள் ரொம்ப புத்திசாலிகள். அதனால்தான் காலங்காலமாக நம் மீது அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். ஒரு பிடி புல்லை போட்டால் நாள் முழுவதும் உழைக்கும் மாட்டுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. புதிதாக வந்த அடிமையைப் பணியவைப்பதற்கு பழைய அடிமைகளைப் பயன்படுத்துவது ஒரு யுத்தி. வீட்டுக்கு புதிதாக வந்த மருமகளை மாமியாரும் நாத்தானார்களும் சேர்ந்து பணியவைப்பார்கள். பிற்காலத்தில் சொத்து பங்கீட்டு விஷயம் வரும் போது அந்த வீட்டு மருமகள் நாத்தனார்களை ஓரம் கட்டுவாள். இதெல்லாம் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக நம்மைக் கொண்டு செய்ய வைப்பதுதான். திருடர்களும், கொள்ளையர்களும் பங்கு போட்டுக் கொள்வது போல் ஆண்கள் சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வார்கள். என் கணவரும், மைத்துனர்களும் என் நாத்தனார்களுக்குப் பங்கு கொடுக்காத போது அதில் என் சுயநலமும் இருப்பதால் நான் வாயைத் திறக்கவில்லை. என் தந்தை என்னை வேற்று மனுஷியாக நடத்தியபோது வருத்தப்பட்டேன். இன்று என் மகளுக்காகக் குரல் கொடுத்தேன். நீ குறுக்கே விழுந்து தடுக்கிறாய். இப்படி நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் எதிரியாக நினைத்து வருகிறோம். இந்த வீட்டுக்கு நானும் நீயும், என் பிறந்த வீட்டுக்கு என் அம்மாவும் தம்பியின் மனைவியும், என் மாப்பிள்ளை வீட்டுக்கு என் மகளும் எந்த உரிமையும் இல்லாத வேலைக்காரிகள். எங்கேயோ நூற்றுக்கு ஒருத்தி அதர்ஷ்டசாலியாக இருக்கக் கூடும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு பிறந்த வீடும் சொந்தமில்லை. புகுந்த வீடும் சொந்தமில்லை.”
அன்றுகூட கமலா கணவன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. உலகத்தில் நடப்பதுதானே என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டாள்.
ஒரு நாள் கமலாவின் தம்பி குடும்பத்துடன் வருவதாக கடிதம் வந்தது. கமலா பில்டரில் பொடி போட்டு புதிதாக டிகாஷனை எடுத்து வைத்தாள்.
ராகவன் ஆபீசிலிருந்து வந்தான். கமலாவுக்கு காபி பொடி வாங்க வேண்டுமென்ற நினைப்பு வந்தது. “காபிப் பொடி தீர்ந்துவிட்டது. நாளைக்குத் தேவைப்படும். வாங்கி வந்தீங்களா?” என்று கேட்டாள்.
“ஆபீசுக்குப் போகும்போது நாளை வரையிலும் காணும் என்று சொன்னாய் இல்லையா. நாளைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்று வாங்கி வரவில்லை.” ராகவன் சொன்னான்.
“நீங்க ஆபீசுக்குப் போன பிறகு என் தம்பி குடும்பத்துடன் வரப்போவதாகக் கடிதம் வந்தது. அதான் இருந்த பொடியில் டிகாஷனைப் போட்டேன். அவர்கள் வர வேண்டிய நெரமாகிவிட்டது. அவர்கள் வந்ததுமே எல்லோருக்கும் ஒன்றாகக் கலக்கிறேன்” என்றாள் கமலா.
அரைமணி நேரம் கழிந்த பிறகும் கிருஷ்ணன் குடும்பம் வரவில்லை.
“எனக்கு காபி கலந்து தா. பொய் காபி பொடி வாங்கி வருகிறேன்.” டிரா·பிக் நேரத்தில் மறுபடியும் வண்டியை ஓட்டிக்கொண்டு போக வேண்டுமே என்ற எரிச்சல் அவன் குரலில் வெளிப்பட்டது.
கமலா காபி கலந்து தந்தாள். ராகவன் கடைத்தெருவுக்குப் போய் காபி பொடி வாங்கி வந்தான். கிருஷ்ணன் குடும்பம் வரவே இல்லை.
மறுநாள் காலையில் கமலா புதிதாக டிகாஷன் போட்டு காபி கலந்து தந்தாள். ராகவன் அடிக்கடி காபி குடிக்க மாட்டான். ஆனால் காபி சூடாக, புதிதாக, ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அதுதான் மனைவியிடம் கேட்கவும் செய்தான்.
“நேற்றைய டிகாஷனில் கலந்தாயா?”
“இல்லைங்க. அதை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டேன்” என்றாள்.
“மறந்து போய் கேட்டுவிட்டேன். நீதான் கர்ணன் பரம்பரையில் பிறந்தவளாச்சே.” என்றான் ஏளனமாய்.
“பழைய டிகாஷனில் கலந்தால் குடிக்க மாட்டீங்களே.”
“நீ குடிக்கலாம் இல்லையா. வர்றேன்னு சொன்னது உன் வீட்டார்தானே. வர்றேன்னு சொன்னவங்க பயணத்தை நிறுத்திக்கொண்டால் அதைத் தெரியப்படுத்த வேண்டாமா? அவர்கள் வந்த பிறகு டிகாஷன் போட்டால் போறாதா? இங்கே பணம் ஒன்றும் கொட்டிக் கிடக்கவில்லை. குடும்பம் நடத்தும் லட்சணமா இது? ஒரு ரூபாய் சம்பாதித்துப் பார்த்தால் தெரியும், பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று.” ராகவன் நீண்ட சொற்பொழிவு ஆற்றினான்.
அந்தச் சொற்கள் கமலாவின் மனதைக் காயப்படுத்தின. அந்த வயதில் வேலையைத் தேட முயற்சி செய்தாள். வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பிறகு ராகவன் வேறு விதமாக சொல்லிக்காட்ட ஆரம்பித்தான்.
“பெரிய ஆபீசர் வேலை!”
“நீதான் வேலைக்குப் போகிறவளாச்சே.”
“கணவன் ஒருத்தன் இருப்பது நினைவு இருந்தால் தானே. லேட்டாக வந்தால் கேட்பார் யாரும் இல்லை. தடுப்பவர்களும் இல்லை.”
வாய்க்கு வந்தபடி சொல்லுவான். கமலா பதில் சொல்லாமல் இருக்க பழகிக்கொண்டாள்.
ராகவனின் அக்கா வரப் போவதாக கடிதம் வந்தது. “என்னால் முடியாது. நீ பர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டுக்கு சீக்கிரமாக வந்து சேரு. அக்கா வரும் போது நீ வீட்டில் இருக்கணும்.” அக்கா வருவதாக சொன்ன நாளில் ராகவன் ஆபீசுக்குப் போகும் முன்னால் சொல்லிவிட்டுப் போனான்.
நாத்தனார் வரும் ரயில் மதியம் மூன்று மணிக்குத்தான் வரும். வீட்டுக்கு வந்து சேரும் போது எப்படியும் நாலு மணி ஆகிவிடும்.
ராகவன் ஆபீசுக்குப் போன பிறகு கமலா புடவையை மாற்றிக்கொண்டு ஆபீசுக்குக் கிளம்பினாள். எதற்கும் இருக்கட்டும் என்று வீட்டுச் சாவியை அடுத்த வீட்டில் கொடுத்தாள். மதியம் மூன்று மணிக்கு பர்மிஷன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வழியில் அவள் ஏறி வந்த ரிக்ஷா கவிழ்ந்துவிட்டதால் காலில் நன்றாக அடிபட்டுவிட்டது. சாலையில் இருந்த மக்கள் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு பொனார்கள். எக்ஸரே எடுத்து ·பிராக்சர் ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு காலுக்குக் கட்டு போட்டுவிட்டு அனுப்பிவைத்தார்கள். மணி ஐந்தை தாண்டிவிட்டது. கமலா பதட்டமடைந்தாலும் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு வந்திருப்பதால் கொஞ்சம் தைரியமாக இருந்தாள். வேறு ஒரு ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். ரிக்ஷாக்காரனின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக கீழே இறங்கினாள். அவனுக்கு பணம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள். புடவை மறைத்துவிட்டதால் காலில் கட்டு இருப்பது ராகவனின் கண்ணில் படவில்லை. அவள் நிதானமாக வருவதைப் பார்த்துவிட்டு “கல்யாணப் பெண் போல் ஆடி அசைந்து கொண்டு வருகிறாயா? லேட்டாக வந்தால் வீட்டுக்கு வந்தவர்களே எல்லாம் செய்துகொள்வார்கள் என்ற எண்ணம்தானே?” என்று கத்தினான்.
கமலா ராகவனின் பேச்சை பொருட்படுத்தவில்லை. “அக்கா! பக்கத்து வீட்டுக்காரம்மா சாவி கொடுத்தாளா?” என்று நாத்தனாரிடம் விசாரித்தாள். அந்த அம்மாள் பதில் சொல்லவில்லை.
கணவன் பக்கம் திரும்பி ” வழியில் வரும் போது …” என்று விளக்கம் சொல்லப் போனாள்.
“சினேகிதிகள் யாரையாவது பார்த்திருப்பாய். அப்படித்தானே! வழக்கத்தை விட முன்னாடி வரச் சொன்னால் லேட்டாக வந்திருக்கிறாய். என் வார்த்தை என்றாலே உனக்கு லட்சியம் இல்லை. அப்படி லட்சியம் செய்யாத பட்சத்தில் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு இடம் பார்த்துக்கொண்டு போய்விடு. என்னுடன் குடித்தனம் நடத்துவதாக இருந்தால் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு பயபக்தியோடு நடந்துகொள்ளணும்.” ராகவன் கமலாவை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டான்.
ராகவனுக்குக் கோபம் வந்ததை கமலாவால் புரிந்துகொள்ள முடியும். குறைந்த பட்சம் தாமதமாக வந்த காரணம் என்னவென்று கேட்கக் கூடும் என்று எதிர்பார்த்தாள். தனக்கு அடிபட்டது தெரிந்தால் அய்யோ பாவம் என்று இரக்கப்படுவான் என்று எதிர்பார்த்தாள். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது பொல் அவன் கடிந்து கொண்டதை அவளால் தாங்க முடியவில்லை.
மறுநாள் காலையில் ராகவனுக்கு மனைவிக்கு அடிபட்ட சமாசாரம் எப்படியோ வந்து சேர்ந்தது. தான் தவறு செய்து விட்டது புரிந்து. “நிம்மதியாக வீட்டில் உட்கார முடியாமல் இப்படி தெருத் தேருவாக அலைந்தால் அடிமட்டுமா படும்? கற்பழிப்பு நடந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை” என்றான்.
அந்த சூழ்நிலையில் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. குறைந்தபட்சம் எது பேசக் கூடாதோ அதாவது தெரிந்திருக்க வேண்டும். அவன் அப்படிச் சொன்னதும் கமலாவின் மனம் முற்றிலும் முறிந்துவிட்டது. வேறு வீட்டைத் தேடிக்கொண்டு கணவன் வீட்டிலிருந்து வெளியேறினாள்.
கமலா வீட்டை விட்டுப் பொன ஒரு மாதம் கழித்து தாயைச் சம்மதிக்க வைத்து அழைத்துப் பொவதற்காக நாராயணன் வந்தாள்.
“அம்மா! என்னிடம் வந்து இருக்கக் கூடாதா?” என்று கேட்டாள்.
“உன் வீட்டுக்கு வந்தால் என்னுடைய வேலை என்ன ஆவது? வேலையை விட்விட்டு வந்தாலும் உங்க வீட்டு விவகாரம் எனக்கு ஒத்து வராது. உன்னுடையது கம்பெனி வேலை. நீயும் உன் மனைவியும் அடிக்கடி பார்ட்டிகளுக்குப் போவீங்க. வீட்டிலும் பார்ட்டிகள நடக்கும். அதெல்லாம் விட்டுவிடுங்கள் என்றால் உங்களால் முடியாது. எனக்காக உங்கள் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது இல்லையா?” கமலா சொன்னாள்.
“அம்மா! என் வீட்டிலேயே எனக்கோ, என் மனைவிக்கோ முழு சுதந்திரம் இருக்கா? இரண்டு பேர் சேர்ந்து இருக்கவேண்டும் என்றால் இரண்டு பேரும் ஓரளவுக்கு விட்டுக் கொடுத்தாக வேண்டும் இல்லையா?”
“ஆனால் நீ உன்னுடைய வீட்டில் அடிமை இல்லையே?”
“அம்மா! ஆண்கள் பணத்திற்கு அடிமை. பெண் ஆணுக்கு அடிமை. மனைவி கணவனுக்கு அடிமை. கணவனோ முழு குடும்பத்திற்கே அடிமை. முழு சுதந்திரம் என்பது எங்கேயும் இருக்காது. எல்லைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதுதான் சுதந்திரம்.”
“எனக்கு பெரிய பெரிய வார்த்தைகள் தெரியாது நாராயணா! சமுதாயம் மாறினால் தவிர மாறாதது சிலது இருக்கு. உண்மைதான். ஆனால் மனிதர்கள் மாறினால் மாறக் கூடிய விஷயங்கள் சிலது இருக்கு. அப்படிப்பட்ட மாற்றம் ஏற்பட்டால் சிலருடைய வாழ்க்கையில் கொஞ்சமாவது சந்தோஷம் இருக்கும். ஆண்கள் தங்களுடைய பேச்சில், நடத்தையில் ஓரளவுக்கு அகம்பாவத்தை விட்டொழித்தால், பெணகளின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொண்டால் பெண்களின் வாழ்க்கை சந்தோஷமாக கழியும். பெண்ணாகப் பிறந்தவள் சின்ன வயதில் தந்தை வீட்டிலும், திருமணம் ஆன பிறகு கணவன் வீட்டிலும், வயோதிகத்தில் மகன் வீட்டிலும் இருந்து கொண்டு அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை அனுசரித்து, தனக்கென்று சில விருப்பங்கள் இருப்பதையும் மறந்துவிட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இது உன் வீடு இல்லை என்று எல்லோராலேயும் ஏச்சு பேச்சு கேட்டுக்கொண்டு சுரணையற்று இருக்க வேண்டிய கட்டாயம். என் வீடு எது என்ற கேள்விக்கு பதிலைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.”
“இது உன்னுடைய வீடா அம்மா?” நாராயணன் கேட்டான்.
“ஆமாம். இங்கே என் பேச்சு எடுபடும்.”
“வயதான காலத்தில் என்ன செய்யப் போகிறாய்? அப்பொழுதாவது என்னிடம் வரமாட்டாயா?”
“உன் வயதான காலத்தில் நீ என்ன செய்வாயோ அதையே செய்கிறேன். வயோதிகம் என்பது பெண்களுக்கு மட்டுமே இல்லை. ஆண்களுக்கும் வரும் இல்லையா? பின்னே ‘இது என் வீடு. என் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தால் இரு. இல்லாவிட்டால் போய்க்கொள்’ என்று மனைவியிடமோ, குழந்தைகளிடமோ சொல்லக் கூடிய தெம்பு ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது? அது மட்டுமே எல்லை. அது போன்ற வீட்டை ஏற்பாடு செய்துகொள்ள நான் முயற்சி செய்தால் அது உன்னை, மாமாவை, உன் தந்தையை ஏன் சங்கடப்படுத்துகிறது?”
தாயின் கேள்விகளுக்கு நாராயணனால் பதில் சொல்ல முடியவில்லை.
‘அவளுடைய வீடு எது’ என்ற கேள்வி வீட்டுக்குப் போன பிறகும் அவனைத் துளைத்துக் கொண்டே இருந்தது.

முற்றும்

கணையாழி டிசம்பர் 2006
தெலுங்குமூலம் திரு கவனசர்மா
தமிழாக்கம் கெளரிகிருபானந்தன்

Series Navigation