அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

பாவண்ணன்


நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம். உடல்நலம் குன்றியிருந்த எங்கள் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆண்டுக்கு இரண்டு முறையாவது மருத்துவமனையில் அவரைச் சேர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் தம்பிகளும் தங்கைகளும் இருந்தார்கள். எல்லாம் சின்னஞ்சிறியவர்கள். வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க அப்பாவின் வருமானம் தடைபட்டதால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாத சங்கடம். இந்நிலையில் கூடுதலான மருத்துவச் செலவைச் சமாளிப்பது மலையைப் புரட்டுகிற மாதிரி இருந்தது. முதலில் காதுக்கம்மலைக் கொண்டுசென்று அடகு வைத்தார் எங்கள் அம்மா. சில நாட்களுக்குப் பிறகு மூக்குத்தியை அடகு வைத்தார். மேலும்மேலும் நெருக்கடிகள் அதிகமான போது தன் திருமணத்தில் அணிந்திருந்த பட்டுப்புடவையை அடகு வைத்தார். அடகு வைக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் நானும் அம்மாவுக்குத் துணையாகச் செல்வேன்.

அடகு வைப்பதற்கென்றே சில வட்டிக்கடைகள் கடைத்தெருவில் இருந்தன. அங்கு அம்மா செல்வதில்லை. எங்கள் தெருவிலும் பக்கத்துத் தெருவிலும் சற்றே வசதி கூடியவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே நெருக்கடியால் அணுகிக் கேட்பவர்களிடம் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பதுண்டு. அப்படிப்பட்ட இடங்களுக்குத்தான் அம்மா செல்வார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வீட்டுக்குச் செல்வதுண்டு. எல்லாருமே சொல்லிவைத்ததைப்போல எங்கள் வருகையைப் பார்த்ததுமே கையில் இருக்கும் பொருட்களைச் சட்டெனப் பின்பக்கம் மறைத்துக் கதவின் மறைவில் வைத்துவிடுவார்கள். அதையெல்லாம் கண்டும் காணாததைப்போல நாங்கள் நின்றிருப்போம். சிலர் எங்கள் முகங்களைக் கண்டதுமே வீட்டுக்குள் வேகமாக மறைந்துவிடுவார்கள். எங்கோ வெளியே போயிருப்பதாகவும் சாயங்காலம் வந்தால் பார்க்கலாம் என்றும் சொல்லச்செய்வார்கள். மறுபேச்சின்றி திரும்பிவிடுவோம். அவர்கள் சொன்னபடி மறுபடியும் சாயங்காலமாகச் சென்று பார்ப்போம்.

போனதுமே பொருட்களை வாங்கிக்கொண்டு யாரும் பணம்தந்து அனுப்புவதில்லை. ஏகப்பட்ட விசாரணைகள் நடக்கும். குறுக்குக்கேள்விகள் கேட்கப்படும். அப்பாவின் உடல்நலம் பற்றி அனுதாபத்துடன் கூடிய விசாரணைகளும் நடக்கும். அவர் பேச்சை எடுத்தாலே எங்களுக்குக் கண்கள் கலங்கிவிடும். கடைசியாக ஒரு கணை வந்துவிழும். அது மெல்லத் தைக்கும் மோசமான ஆயுதம். முதலில் என்னைப் பார்த்து ‘என்னடா படிக்கற ? ‘ என்று கேள்வி கேட்பார்கள். பதில் சொன்னதும் ‘எந்தப் பள்ளிக்கூடம் ? ‘ என்பார்கள். அதற்கும் பதில் சொல்வேன். பிறகு யாராவது ஒன்றிரண்டு ஆசிரியர்கள் பெயர்களைச் சொல்லி ‘அவுங்களெல்லாம் நல்லா இருக்காங்களா ? ‘ என்று கேட்பார்கள். அதற்கும் விடைசொல்லி விடுவேன். பிறகு அம்மாவின் பக்கம் திரும்பி ‘இவ்வளவு பெரிய புள்ளைய வச்சிட்டு நீ ஏம்மா கண் கலங்கற ? ஏதாவது கடையில உட்டாகூட கண்ண மூடிகிட்டு எரநுாறு எரநுாத்தியம்பது கெடைக்குமில்ல ? இந்த காலத்துல படிச்சி என்ன பிரயோஜனம் சொல்லு ?ஏ என்பார்கள். ஏநம்ம தலையெழுத்துதான் இப்படி ஆயிடுச்சி, அவனாவது நாலெழுத்து படிச்சி எங்கனா நல்லா இருந்தா சரிதான் ‘ என்பார் அம்மா. ‘எல்லாம் சரிதாம்மா, ஏதோ கையெழுத்து போட, பேப்பர்ல தலைப்பெழுத்த படிக்க நாலெழுத்து தெரிஞ்சியிருக்க வேண்டிதுதான். அதுக்கும் மேல படிக்கறதெல்லாம் நமக்கு எதுக்கு சொல்லு ? நாமெல்லாம் ஒழைச்சிப் பொழைக்கற சாதி. கைகாலுதான் நமக்கு முக்கியம். படிக்கறதுக்குன்னு சில சாதிங்க இருக்குதுல்ல, அதுங்கள பாத்து நாம ஆசப்படக்கூடாது ‘ என்று முடிப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு வெளிப்படையாக எந்தப் பதிலையும் சொல்ல முடியாத நிலைமையில் நாங்கள் இருப்போம். ‘இன்னம் நாலு நாளு பாக்கறேங்க. அப்பறம் தேவையின்னா வந்து சொல்றேன் ‘ என்று அம்மா முடிப்பார். அந்தப்பதில் அவர்களுக்குத் திருப்தியளிக்கும். ‘அதத்தாம்மா நானும் சொல்றேன். நீ எப்ப வேணா வந்து சொல்லு. கடைத்தெருவுல இருக்கற முதலாளிமாருங்கள்ளாம் எனக்குத் தெரிஞ்சவனுங்கதான். எங்கனா சொல்லி தள்ளி உட்டுடலாம் ‘ என்று அவரும் முடித்துக்கொள்வார். அதற்குள் கொண்டுசென்ற பொருளைப் பரீட்சித்துப் பார்க்கும் வேலையெல்லாம் முடிந்துவிடும். உள்ளே சென்று பணத்தைக் கொண்டு வந்து தருவார்கள்.

அப்போது சாதியைப்பற்றி அவ்வளவாகத் தெளிவில்லாத சமயம். நாளாக நாளாக அதன் தந்திரம் புரிந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் படிக்கவந்ததும் முக்கியமான பதவிகளை வகிக்கத் தொடங்கியதும் முற்பட்ட வகுப்பினரிடையே எந்த அளவுக்குக் கொதிப்புணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது என்பது புரிந்தது. அவற்றைத் தடுப்பதற்கு அவர்கள் கையாளும் மோசமான தந்திர நாடகங்களும் புரிந்தன. அதே தந்திரங்களையும் நாடகங்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பிற்படுத்தப்பட்டவர்களே கையாளுவதையும் புரிந்துகொண்டேன்.

சமூதட்டில் தன்னைவிடக் கீழாக இருப்பவன் சகல அம்சங்களிலும் கீழானவனாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது மேல்தட்டில் இருப்பவன் மனம். ஏதோ ஒரு அம்சத்தில் அவன் பெரியவனாகவோ சிறந்தவனாகவோ வெற்றிபெற்றவனாகவோ விளங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்ன செய்து அதைக்குலைப்பது என்று பதற்றத்துடன் திட்டமிடத் தொடங்குகிறது. செயல்படுத்துகிறது. சிதம்பரத்துக்கு நடராச தரிசனத்துக்குச் சென்ற நந்தன் கதை நடந்த புராணக் காலத்திலிருந்து நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவி கொல்லப்பட்ட நிகழ்காலச் சம்பவம் வரை ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அடுக்கடுக்காக மனத்தில் எழும் எடுத்துக்காட்டுகளிடையே எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘அணி ‘ என்னும் சிறுகதைக்கும் இடமுண்டு. சற்றே பிசகினாலும் அப்பட்டமான பிரச்சாரத் தொனி படிந்துவிடக்கூடிய ஆபத்தை அக்கதை கடந்து வெற்றியடையும் புள்ளி மிகமுக்கியமானது.

முதல் அம்சம் இக்கதை எழுத்தில் நிகழ்த்தப்படவில்லை. மாறாகச் சொல்லப்படுகிறது. பேச்சில் மிகவும் சுவாரசியம் மிகுந்தவர்கள் என்று எல்லாராலும் நம்பப்படுகிற முடிதிருத்துநர் வழியாக இக்கதை சொல்லப்படுகிறது. முக்கியமான திருப்புமுனைச் சம்பவங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டு வாடிக்கையாளரிடம் நேரம் கழிவது தெரியாமல் இருக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பாணியில் கதை விரிவடைகிறது. இத்தொனியே கதைக்கு வெற்றியைச் சேர்க்கிறது.

முடிவெட்டிக்கொள்ள வந்த ஒருவரை வரவேற்று இருக்கையில் அமரவைப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. புதியவர் நுழையும் தருணம் யாரோ ஓர் இளைஞனுக்கு முகச்சவரம் முடியும் சமயம். பணிவாகப் பேசிப் புதியவரை அமர வைக்கிறார் முடிதிருத்துநர். சவர வேலை முடிந்ததும் இளைஞன் புறப்பட்டுச்சென்று விடுகிறான். உடனே புதியவருக்கு முடிதிருத்தும் வேலை தொடங்குகிறது.

சுவர்களெங்கும் தொங்கும் லிங்கன், காந்தி, பாரதியார் , லெனின், மாவோ ஆகியோரின் படங்களைப் பார்த்து வியப்பிலாழும் பெரியவரிடம் சிரிப்புடன் உரையாடலைத் தொடங்குகிறார். ஒரு காலத்தில் எல்லா நிலையங்களிலும் இருப்பதைப்போலவே இக்கடையிலும் திரைப்பட நடிகைகளின் படங்களே சுவர்களில் ஆக்கிரமித்திருந்தன என்றும் தன் அண்ணன் மகன் விக்டரின் அதிரடி நடவடிக்கைகளால்தான் எல்லா மாற்றங்களும் விளைந்தன என்றும் சொல்கிறார். தொங்கவிடப்பட்ட படங்களிடையே இருக்கும் அவன் படத்தையும் அவனுக்கு குருவைப்போல இருந்த முருகேசு வாத்தியாரின் படத்தையும் கூடக் காட்டுகிறார்.

உண்மையில் அக்கடை அவருடைய அண்ணனுக்குச் சொந்தமானது. தன் மகனை நல்லபடி படிக்கவைக்க வேண்டும் என்பது அண்ணனுடைய ஆசை. ஆனால் சாதி வேறுபாடுகளைக் கடுமையாகப் பின்பற்றும் யாழ்ப்பாணத்தில் அவர்கள் பட்ட அவமானங்கள் அதிகம். தேத்தண்ணீர்க் கடைகளில் தனிப்பாத்திரங்கள். படிக்கப்போகிற இடங்களில் ஏஉனக்கு எதுக்குடா படிப்பு ? பேசாமல் சவரக்கத்தி எடுத்துக்கொண்டு சிரைக்கப்போஏ என்று பகடி செய்யும் பையன்கள். விக்டருக்கு நன்றாகப் படிப்பு வந்தாலும் ஏழாம் வகுப்பைத் தாண்டமுடியவில்லை. கூடவே இருந்த தம்பிக்காரன் ஒருவன் கடையில் அகப்பட்ட பணம் முழுதையும் சுருட்டிக்கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் ஊரைவிட்டு வெளியேறியபோது கடைச்சுமையைப் பகிர்ந்துகொள்ள விக்டர் தொழிலில் இறங்க வேண்டியிருக்கிறது. முருகேசு வாத்தியாரின் தொடர்பால் அவன் அரசியல் விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறான். அவனது முதல் நடவடிக்கையே எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கடையில் நடுநாயகமாக விளங்கிய தாடிக்கார ஜோர்ஜ் மன்னரின் படத்தை எடுத்துவிட்டு லெனின் படத்தைக் கொண்டுவந்து தொங்கவிடுகிறான். அதன் தொடர்ச்சியாக, ஒரு மாதமாக கடைக்கு வருவதே நின்று விடுகிற அளவுக்கு தகப்பனுக்கும் அவனுக்கும்பெரிய வாக்குவாதமே நடக்கிறது. பிறகு எல்லாவற்றையும் அவன் போக்கிலேயே விட்டுக்கொடுக்க வேண்டியதாகிறது.

தன்னைப் பெரிய சாதியைச் சேர்ந்தவன் என்று எண்ணிக்கொள்ளும் நாகையா என்பவர் ஒருநாள் கடைக்கு வந்ததையு ம் கடையில் அப்போது உட்கார்ந்திருந்த முருகேசுவைப் பார்த்துவிட்டு ஏநாகத்தை மிதித்தவரைப் போலப் பதறி இந்த நளம்பள்ளுகளுக்கு முடிவெட்டும் இவங்களிடம் நான் ஒருநாளும் வெட்டிக்கொள்ள மாட்டேன்ஏ என்று வெளியேறி விட்டதையும் விவரிக்கிறார் பெரியவர். கோயில்கள் சிறுபான்மைத் தமிழர்களுக்குத் திறந்துவிடப்படுவதை அக்கிரமமாக நினைத்து மாரடைப்பில் உயிர்விட்டவர் அந்த நாகையா என்றும் சொல்கிறார். யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிவெறிக்கு இதைவிடப் பெரிய சான்று என்ன வேண்டும் என்று கேட்பதுபோல இருக்கிறது அவர் விவரிப்பு.

அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் முனிசிப்பல் சபை உருவாகிறது. புதிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. முருகேசு வாத்தியாரின் ஆலோசனையின் பேரில் பதினாலாம் வட்டாரத்தின் சார்பில் போட்டியிடுகிறான் விக்டர். வெற்றிக்காக அல்ல அந்தப்போட்டி. முடிதிருத்தும் தொழிலாளியும் தேர்தலில் நிற்கலாம் என்கிற சகஜநிலையை உருவாக்குவதற்கே அந்தப்போட்டி. உடனே ஊரே தடம்புரண்டுவிடுகிறது. எல்லா மூலைகளிலிருந்தும் வசைமழை பொழகிறது. சாதித்துடிப்பு கொண்ட வாடிக்கைக்காரர்கள் கடைக்கு வருவதை நிறுத்திக்கொள்கிறார்கள். விக்டர் தோற்க நேர்கிறது. ஏஅம்பட்டனுக்கு நல்லபாடம்ஏ என்று எல்லாரும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில் முருகேசு வாத்தியார் மட்டும் ஏசெடியை நட்டுவிட்டோம், இனிமேல் அதை வளர்ப்போம்ஏ என்று விக்டரை ஊக்கப்படுத்துகிறார். அடுத்த தடவை தேர்தல் வருகிறது. மறுபடியும் போட்டியிடுகிறான் விக்டர். கட்டுக்காசைத் திரும்பப்பெறும் அளவுக்கே அவனுக்கு வாக்குகள் கிடைக்கின்றன. மூன்றாம் முறையாகத் தேர்தல் அறிவிக்கப்படுகிற போதும் போட்டியில் பங்கேற்கிறான் விக்டர். இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைகிறான். அவன் வெற்றியைச் சாதிவெறியர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெற்றி ஊர்வலத்தில் யாரோ சுட்ட துப்பாக்கிக்குண்டுக்குப் பலியாகி இறந்துவிடுகிறான்.

கதையைச் சொல்லி முடிக்கிறபோது கண்கள் கலங்கிவிடுகின்றன பெரியவருக்கு. முடிவெட்டும் வேலை முடிவடையும் தருணத்தில் மற்றொரு புதிய வாடிக்கைக்காரத் தம்பி நுழைய சட்டென குரல் மாறிய வார்த்தைகளால் வரவேற்கிறார்.

பார்ப்பதற்கு எளிய கதையைப்போலத் தோன்றினாலும் கொல்லக்கூடத் துணியும் அளவுக்கு அறிவுக்கண்ணைத் திரைபோட்டு மூடியிருக்கிற சாதி ஆவேசத்தை அம்பலப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். சற்றே பிசகினாலும் பிரச்சாரக்கதையாகச் சரிந்திருக்கக் கூடிய கதையைப் பாதிக்கப்பட்டவனுடைய அப்பாவித்தனமான உரையாடல் வழியாக நகர்த்தியதன் வழியாக மனத்தில் ஆழமாகப் பதியும்படி செய்துவிடுகிறார் எஸ்.பொ.

*

நற்போக்கு இலக்கியம் என்ற கருத்தாக்கத்தைப் பிரகடனப்படுத்திய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை. நண்பர்களால் எஸ்.பொ. என்று அன்புடன் அழைக்கப்படுபவர். தீ, சடங்கு, நனவிடைத் தோய்தல் ஆகிய முக்கியமான நாவல்களை எழுதியவர். நாடகம், உருவகக்கதை, நாவல், சிறுகதை ஆகிய எல்லா இலக்கிய வடிவங்களிலும் படைப்புகளை உருவாக்கியவர். இவர் படைப்புகள் சாதாரண வாழ்க்கைச் சம்பவங்களின் சித்தரிப்பாகத் தோற்றம் தரினும் அவற்றில் வெளிப்படும் உண்மையின் வழியாக ச்முகத்தின் முகத்தை உணர்த்தும் ஆக்கங்களாகவும் திகழ்கின்றன. ஐம்பதுகளில் எழுதப்பட்ட கதை ‘அணி ‘. ஆனால் 1992 ஆம் ஆண்டில் மித்ர வெளியீடாகப் பிரசுரமான ‘வீ ‘ என்னும் சிறுகதைத்தொகுப்பில்தான் முதன்முதலாக இடம்பெற்றது

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்