அலாஸ்கா கடற் பிரயாணம் – 1

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

தேவராஜன்


முதல் பாகம்

1. அர்ப்பணிப்பு

நாங்கள் மேற்கொண்ட அற்புதமான அலாஸ்கா கப்பல் பயணத்தையும், அதனைத் தொடர்ந்து டெனாலி தேசீயப் பூங்காவைப் பார்வையிட்ட பிரயாண விவரங்களையும் இக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் மகளும், மாப்பிள்ளையும் மகிழ்ச்சிகரமான உல்லாசக் கப்பல் பிரயாணத்துக்குக் கரிப்பியன் (caribbean) கடலுக்கு எங்களை அழைத்துச் சென்றிருந்தனர். ஒரு தடவை கப்பல் பயணத்தின் சுவை கண்ட நாங்கள் “அலாஸ்கா பிரயாணத்துக்கு வருகிறீர்களா” என மகள் அழைத்தவுடன், கரும்பு தின்னக் கூலியா என தயாராகி விட்டோம். இக் கட்டுரையை அவர்கள் இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

2. பிரயாண ஆயத்தங்கள்

நாங்கள் வசிக்கும் டர்ஹாம் (DURHAM) நகரம் வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரம் வட கரோலினா பகுதியில் உள்ளது..ஆனால் அலாஸ்காவோ அமெரிக்க நாட்டின் வட மேற்கு எல்லையில் உள்ளது. ஏறக்குறைய இரண்டாயிரம் மைல்களுக்கும் அதிகமான தூரம் செல்ல வேண்டும். டர்ஹாமுக்கும் அலாஸ்காவுக்கும் நான்கு மணி நேர வித்தியாசம். ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே சுற்றுலாக் கப்பலில் இட ஒதுக்கீடும், டர்ஹாமிலிருந்து கப்பல் புறப்படும் துறைமுகத்துக்குச் செல்ல விமான டிக்கட்டுகளும், சாலைப் பிரயாணத்துக்கான பேருந்து எற்பாடும் இன்ன பிறவும் என் மகள் ரிசர்வ் செய்து விட்டாள். எங்களுடன் மூன்று நண்பர் குடும்பங்களும் வருகிறார்கள். கப்பல் அவ்வபோது நிற்குமிடங்களில் எந்தெந்த கவர்ச்சிகரமான இடங்களைக் காண வேண்டுமென கருத்துப் பரிமாறுவது ஒரு பெரிய காரியமாகும். மின் அஞ்சல்கள் நூற்றுக் கணக்கில் பறந்தன! மொத்தம் பதினேழு பேர்கள் இக் குழுவில் சேர்ந்து விட்டார்கள். அவரவர்கள் சௌகரியம் போல் வெவ்வேறு ஊர்களிலிருந்து புறப்பட்டாலும் கடைசியாக யாவரும் கனடாவிலுள்ள வாங்கூவர் நகரம் வந்து சேர வேண்டுமென ஏற்பாடு.

3. டர்ஹாமிலிருந்து வாங்கூவர்

டர்ஹாம் நகரத்திலிருந்து ஸியாட்டில் (Seattle) நகரத்துக்கு விமான மூலம் பறந்து சென்ற நாங்கள் ஓரிரவு அங்கே தங்கி விட்டு மறு நாள் கனடாவுக்குப் பேருந்தில் (van) புறப்பட்டோம். இங்கே அமெரிக்காவுக்கும், கனடாவுக்கு மிடையே உள்ள நட்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இரண்டு நாட்டு மக்களும் பிரயாண அனுமதி (visa) இல்லாமல் பரஸ்பரம் பிரயாணம் செய்யலாம். அமெரிக்கா-கனடா எல்லையை நாங்கள் அடைந்ததும் விரைவுச்சாலையின் ஒரு பக்கமிருந்த கூண்டில் கனடா எல்லை அதிகாரி உட்கார்ந்திருந்தார். எங்களை வண்டியை விட்டு இறங்கி, immigration, சுங்கப் பரிசோதனைக்கு அழைப்பார்கள் என்று எங்களுடைய பாஸ்போர்ட்டுகளைத் தயாராக வைத்திருந்தோம். அவ் வதிகாரியோ “நீங்கள் யாவரும் அமெரிக்கத் தேசத்தினரா” என வினவினார். “ஐந்து பேர்கள் அமெரிக்கா தேசத்தினர், இரண்டு பேர்கள் பச்சை அட்டை (Green card) கொண்டவர்” என மாப்பிள்ளை பதிலளித்தார். “எத்தனை நாட்கள் கனடாவில் தங்குவீர்கள்” என்ற கேள்விக்கு “நாளைக்கு அலாஸ்கா பிரயாணக் கப்பல் ஏறப் போகிறோம்” என்றார் மாப்பிள்ளை. அவ்வளவு தான், அந்த அதிகாரி “Wish you a happy cruise” என்று வரவேற்பு வார்த்தைகளுடன் தடுப்புச் சட்டத்தைத் திறந்துவிட்டார்! எங்கள் பாஸ்போர்ட்டையோ, பச்சை அட்டையையோ காட்டச் சொல்ல வில்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.

(“9/11” நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நிலைமை முழுதுமாக மாறிவிட்டது என்பது இன்றைய பிரயாணிகளுக்குத் தெரியும்.)

கனடா எல்லையில் பிரவேசித்த சற்று தூரத்தில் ஒரு குருத்வாரா கண்ணில் பட்டது, இன்னும் சிறிது தூரத்தில் ஒரு மசூதி தென்பட்டது! மாதா கோவிலையும் பார்த்தோம். இந்து கோயிலைப் பார்க்க வில்லை. கூடிய சீக்கிரம் ஒரு கோயிலும் நிர்மாணிக்கப் படலாம் என நினைத்துக் கொண்டேன்.
துறைமுக நகரமான வாங்கூவரில் அன்றிரவு தங்கி, மறு நாள் கப்பல் பிரயாணத்தைப் பற்றிக் கனா கண்டுகொண்டே தூங்கி விட்டோம்.

4. டான் ப்ரின்சஸ் (Dawn Princess) உல்லாசக் கப்பல்

இக் கட்டுரையின் துவக்கத்தில் சொன்னபடி, எங்கள் குழுவில் நான்கு குடும்பத்தினர் சேர்ந்திருந்தோம். என் மகளின் கல்லூரித் தோழி ஒருவளும் எங்களுடன் சுற்றுலா செல்வது இது மூன்றாவது தடவை யாகும். இருபதாண்டுகளுக்கு முன் காஷ்மீர் பிரயாணத்திலும், இரண்டாண்டுகளுக்கு முன் கரிப்பியன் கப்பல் சுற்றுலாவிலும் அவள் கலந்து கொண்டிருந்தாள். கடற் பிரயாணத் தினத்தன்று பிற்பகலில் யாவரும் துறைமுகத்தில் கூடினோம். என் மகளின் மூன்றாவது மகன் அப்பொழுது உதிர்த்த சொல் எங்களைத் தூக்கி வாரி விட்டது. மகளின் தோழி லக்ஷ்மி தன் தகப்பனாரை இந்தியாவி லிருந்து வரவழைத்து இந்தப் பிரயாணத்துக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்ததை என் மகள் புகழ்ந்தாள். “நீயும் இதைப் போல் என் வயதான காலத்தில் எங்களையும் அழைத்துச் செல்வாயல்லவா ” எனக் கேட்டதற்கு, அவனுடைய பதில் என்ன வென்றால், “பெற்றோருக்கு அவரவருடைய பெண்கள் தானே சேவை செய்கிறார்கள், பையன்க ளல்லவே!”

இனி, அடுத்த பல நாட்களுக்கு நாங்கள் தங்கப்போகும் கப்பலைப் பார்ப்போம். சுமார் இரண்டாயிரம் பிரயாணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய கப்பலில் அவர்களுடைய உடைமைகளை எப்படி ஏற்றி சரியாக அவரவர் அறைகளுக்குக் கொண்டு செல்வது? எங்களுடைய (டிக்கட்) பிரயாணச் சீட்டுடன் விதம் விதமான வர்ணங்களில் ஒவ்வொருவருக்கும் அடையாளப் பட்டைகளை அனுப்பியிருந்தனர். அவரவருடைய அறை எண்களும் பொறிக்கப் பட்டிருந்தன. அப் பட்டைகளை அவரவர் பெட்டிகளில் கட்டி, பெட்டிகளைக் கரையோரம் எங்கள் வண்டியிலிருந்து இறக்கி வைத்து விட்டோம். ஏணி வழியாக கப்பலுக்கு ஏறிச் சென்றோம். மலர்ந்த முகத்துடன் சிப்பந்திகள் எங்களை வரவேற்று எங்கள் அறைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். என்ன ஆச்சரியம்! எங்கள் பெட்டிகள் அவரவர் அறைகளுக்கு முன்னர் தயாராகக் காத்துக் கொண்டிருந்தன. மாயா ஜாலம் தான்!

கப்பலின் புள்ளி விவரங்கள் என்னவென்றால், கேளுங்கள் சொல்லுகிறேன்.
பயணிகள் தங்கும் அறைகள்——999
மொத்தம் தங்கக் கூடிய பிரயாணிகளின் எண்ணிக்கை—–2050
கப்பலில் வேலை செய்யும் சிப்பந்திகள் எண்ணிக்கை——870

சிப்பந்திகள் போதுமா?
நாங்கள் ஏறுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு தான் இக் கப்பல் ஒரு பிரயாணத்தை முடித்துக் கொண்டு வந்திருந்தது. இரண்டு மூன்று மணி யளவில் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராகி விட்டார்கள்.

கப்பலில் உள்ள சௌகரியங்களைப் பார்த்தால் இது மிதக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தான் எனச் சொல்ல வேண்டும். எல்லா அறைகளிலும் சேர்ந்த குளியலறைகள், டெலிவிஷன், டெலிபோன் இத்தியாதி. டெலிவிஷனில் கப்பலின் காப்டன் பிரயாணிகளை வர வேற்பதைக் கண்டோம். சிப்பந்திகள் செய்யும் சேவை ராஜ போகம் தான். நாம் சிறிது நேரம் வெளியே போய் விட்டுத் திரும்பினால், அறையைச் சீர்திருத்தி வைக்கிறார்கள்.

கப்பலில் இன்னொரு ஏற்பாடு என்ன வென்றால், அங்குள்ள கடைகளில் பொருள்களை வாங்குவதற்கும், பானவகைகள் வாங்குவதற்கும், காஸினோவில் ஆடுவதற்கும் பணமோ, நமது credit கார்டோ உபயோகிக்கக் கூடாது. பிரத்தியேகமான அடையாளச் சீட்டை ஒவ்வொரு பிரயாணிக்கும் தந்துவிட்டார்கள், அவற்றைத்தான் உபயோகிக்க வேண்டும். கப்பலை விட்டு இறங்கு முன்னர் மொத்தச் செலவுகளை நம்முடைய credit card அக்கௌண்டில் சேர்த்து விடுவார்கள். இச் செலவுகளைத் தவிர சாப்பாடு, கேளிக்கைக் காட்சிகள், விரும்பிய பொழுதெல்லாம் சாப்பிட 24 மனி நேரம் திறந்துள்ள buffet சிற்றுண்டி முதலான யாவும் பிரயாணச் சீட்டுக் கட்டணத்தில் அடக்கம். எழு நாட்கள் பிரயாணத்துக்குக் கட்டணம் 800 டாலர்களாகும். பால்கனி அறையை எடுத்துக் கொண்டால் 1000 டாலர்கள்

நாங்கள் எமது அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் fire drill க்காக யாவரும் life boat தொங்கிக் கொண்டிருக்கும் தட்டுக்கு வரும்படி காப்டன் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார். குபு குபுவென்று நாங்கள் அனைவரும் போய்ச் சேர்ந்தோம். மாலுமிகள் சிலர், எப்படி life jacket ஐ அணிவது, ஆபத்து நேரும்போது எத்தகைய சங்கு ஊதப்படும் முதலான எச்சரிக்கை அறிவிப்புகளை விளக்கினார்கள். டைடானிக் சினிமாவில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தன!

கப்பலில் மொத்தம் 14 அடுக்குகள், மேல் தளம் ஒன்றில் நீச்சல் குளம், வெந்நீர் குளியல் குளம் (ஜக்கூசி), தேகாப்பியாச ஹால், டேபிள் டென்னிஸ் இத்தியாதி.

தினமும் மூன்று வேளை உணவு, நினைத்தபோது சிற்றுண்டி, பான வகைகள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஏழு நாள் பிரயாணத்தில் ஐந்தாறு கிலோ எடை போட்டுவிடுவோம் எனத் தோன்றுகிறது. மத்தியிலுள்ள இரு அடுக்குகளில் இரண்டு பிரமாண்டமான டைனிங் ஹால்கள். நாம் விரும்பியபடி தினந் தோறும் அமர்வதற்கான மேஜைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த மூன்று உணவு பரிமாறுபவர்கள் (இத்தாலி, போர்ச்சுகல், ருமானியா தேசத்தைச் சேர்ந்தவர்கள்) வாடிக்கையாக எங்களுக்குச் சேவை செய்தனர். சிரித்த முகத்துடன் நகைச்சுவைப் பேச்சுடன் பேசி நெடுநாள் நண்பர்களைப் போலப் பழகுகின்றனர். ஏழுநாள் பிரயாணத்தில் இரவுச் சாப்பாட்டின் போது இரண்டு நாட்களில் நாம் சம்பிரதாய உடைகளையும், மற்ற இரவுகளில் சாதாரண உடைகளையும் அணிய வேண்டுமென விதி. (ஆண்களுக்கு ஸூட்டும், டையும், பெண்களுக்கு மாலை கவுனும் சம்பிரதாய உடைகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் வெவ்வேறு தேசத்து மக்கள் அவரவர் நாட்டு உடைகளை அணியலாம். என் மனைவியும், குமாரியும் எப்பொழுதும் போல புடவை அணிந்து கொண்டனர்). இருபதுக்கும் மேலான இந்தியப் பிரயாணிகள் இருந்தோம். சைவ உணவு, அசைவ உணவு எது வேண்டுமோ சாப்பிடலாம். சமையலறையில் சில இந்திய சமையலாட்கள் பணி புரிவதாகவும், நாங்கள் விரும்பிய இந்தியக் கறிவகைகளைச் சமைப்பார்கள் என்றும் head waiter அறிவித்தார். அவ்வளவு தான், எங்கள் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. நாங்கள் சாப்பாடு ராமன்களாகி விட்டோம். இராச் சாப்பாடுக்கு மட்டும் டைனிங் ஹாலுக்குப் போனோம். காலைச் சிற்றுண்டியும், மதிய உணவும் சாப்பிட 12 ஆம் தளத்திலிருந்த buffet ஹாலுக்குச் சென்று சுற்றுப்புறக் காட்சிகளையும், சமுத்திரத்தையும், கரையோரப் பனிமலைச் சிகரங்களையும், இயற்கை யழகையும் கண்டு களித்துக் கொண்டு சாப்பிட்டோம்.

நாம் சம்பிரதாய உடைகளணிந்து சாப்பிடும் நாட்களில் கேமராக்களைக் கையிலேந்தி சிப்பந்திகள் பிரயாணிகளைப் போட்டோ பிடித்து மறுநாள் காலையில் போட்டோ காலரியில் நம் பார்வைக்காக அணி வகுத்து வைக்கிறார்கள். விரும்பிய போட்டோ பிரதிகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

உண்பதும், உறங்குவதும் போக மற்ற நேரங்களில் 7, 11, 12 அடுக்குகளில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு பிரயாணக் காட்சிகளைப் பார்ப்பது வினோதமாகும். சிலர் 7 ஆம் தளத்தில் கப்பலைச் சுற்றி உடற் பயிற்சிக்காக நடக்கலாம். ஒரு முழுச் சுற்று நடந்தால் சுமார் கிலோமீட்டர் தூரம் இருக்கும். எனவே கப்பலின் பரிமாணத்தை நீங்கள் கணித்துக் கொள்ளலாம்.

தினந்தோறும் எங்கு செல்வோம், எங்கே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும், எந்தெந்த கரையோரச் சுற்றுலாக்கள் உள்ளன, மாலைக் காலத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ன நடக்கும் என்ற விவரங்களைத் தினந்தோறும் அச்சடித்து Princess Patter என்ற நாளிதழை நம் அறைகளின் முன்னால் உள்ள அஞ்சல் பெட்டியில் வைத்து விடுகிறார்கள். இதற்கான அச்சகமும் கப்பலிலேயே இருக்கிறது. இந் நாளிதழில் கப்பலின் வேகம், தினமும் எவ்வளவு தூரம் சென்றுள்ளோம், தட்ப வெப்பநிலை தகவல்கள் பற்றி படித்துக் கொள்ளலாம்.

சுருங்கச் சொன்னால் ‘டான் பிரின்சஸ்’ கப்பல் ஒரு மிதக்கும் நகரமே எனக் கூறலாம்.

5.அலாஸ்கா மாநிலம்

அலாஸ்கா பிரதேசம் பற்றி சில ருசியான தகவல்கள். இம் மாநிலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ரஷ்யா தேசத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. பொருளாதாரப் பற்றாக் குறை காரணமாக 1867 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி யன்று ரஷிய அரசாங்கம் 596,000 சதுர மைல் பரப்பளவான இந் நிலப் பரப்பை அமெரிக்கா தேசத்துக்கு 72 லட்சம் டாலருக்கு விற்று விட்டது! அதாவது ஒரு சதுர மைலின் விலை பன்னிரண்டு டாலராகும். நம்ப முடியவில்லை யல்லவா? ‘வில்லியம் ஸேவார்ட்’ என்ற அமெரிக்கா தேசத்தின் உள்விவகார மந்திரி விற்பனைப் பத்திரத்தில் அமெரிக்காவின் சார்பில் கையெழுத்திட்டார். ரஷ்யா தேசத்தின் சார்பில் ‘எட்வார்ட் ஸ்டாக்ல்’ என்ற அதிகாரி கையெழுத்திட்டார். ஜனசஞ்சாரமற்ற பொட்டற் காடாக இருந்த இப் பிரதேசத்தை விலைக்கு வாங்கியதை அமெரிக்க மக்கள் பலரும் அக்காலத்தில் ஆட்சேபித்தார்கள். இச் செயலை “ஸேவார்டின் முட்டாள் தனம்” எனவும் பரிகசித்தனர்! அப்பொழுது இங்கே ஏராளமான பெட்ரோலியம் கிடைக்குமெனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இன்று அமெரிக்காவில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் சுமார் இருபத்து விழுக்காடு எண்ணெய் அலாஸ்கா மாநிலத்தில் கிடைக்கிறது!

முதலில் ஒரு மாவட்டமாக இருந்த இப் பிரதேசம் 1959 ஆம் ஆண்டில் தனி மாநிலமாக நியமிக்கப் பட்டது. அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக சேர்க்கப் பட்டது. இம் மாநில வாசிகளுக்கு பல தனிப்பட்ட சலுகைகள் தரப் பட்டன. இங்கே வசிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. விற்பனை வரியும் கிடையாது. மற்ற மாநில வாசிகள் அலாஸ்காவில் வீடோ, நிலமோ வாங்க முடியாது.

.அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் அலாஸ்காவின் பெரும் பாகம் பனிப் பிரதேசமாக இருந்தது. பனியாறுகள் (glaciers) கணக்கி லடங்கா. நாளடைவில் பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதன் காரணத்தால் பனி உருகிக் கொண்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இப் பிரதேசத்துக்கு வந்தபோது பனியாறு விரிகுடா என அழைக்கப் படும் (glacier bay) கடல், ஒரே பனிக்கட்டிப் பாறையாக இருந்தது. ஆனால் இன்றோ பனிப் பாறை உருகி சுமார் அறுபது மைல் தூரத்துக்கு இவ் விரிகுடா நிலப் பரப்புக்குள் நுழைந்து விட்டது. இதைப் பற்றி மறுபடியும் சொல்கிறேன்.

சில பனியாறுகள் நிலப் பரப்பில் முடிந்து, ஆறுகளாக ஓடுகின்றன. இன்னும் சில பனியாறுகள் நேரே சமுத்திரத்தில் விழுந்து கடல் நீரில் கலந்து விடுகின்றன. கடந்த சில வருடங்களில் மிக வேகமாக பனி உருகி வருகிறது. இந்த மாறுதலினால் சில பனியாறுகள் மறைந்து விட்டனவாம். விஞ்ஞானிகள் சிலர் இப் பனியாறுகளின் மாற்றத்தைக் கணித்து ரிகார்ட் செய்வதில் தங்கள் வாழ் நாள் முழுவதையும் செலவளித்து வருகின்றனர். வலை இணையத்தில் இவற்றைப் பற்றிய விவரங்ளைப் படிக்கலாம்.

பனியாறுகள் ஓடுகின்றன எனச் சொன்னேனல்லவா? ஆனால் அவை ஓடவில்லை. ஆமை வேகத்தில் நகருகின்றன. சில இடங்களில் நாம் பனியாற்றின் மேல் பயமின்றி நடந்து செல்லலாம்.

வாருங்கள், எங்கள் ஏழு நாள் கடல் பிரயாணத்தின் பட்டியல் பற்றிப் பார்க்கலாம். நாங்கள் சென்ற மார்க்கத்தை (inside passage) உள்ளடங்கிய மார்க்கம் என அழைக்கிறார்கள். ஏனென்றால், கரையோரமாக உள்ள சில தீவுகளுக்கும் நிலப் பரப்புக்கும் மத்தியில் உள்ள கடல் வழியாக எங்கள் கப்பல் செல்லுகிறது. தீவுகளுக்கு அப்பால் பசிபிக் மஹா சமுத்திரம் இருக்கிறது. வாங்கூவரிலிருந்து புறப்பட்டு கெட்சிகன் (KETCHIKAN), ஜூனோ (JUNEAU), ஸ்காக்வே (SKAGWAY) ஆகிய துறைமுகங்களில் தங்கி, பனியாறு விரிகுடா (GLACIER BAY), காலேஜ் போர்ட் (COLLEGE FJORD) என்ற விரிகுடாக்களில் சஞ்சரித்து கடைசியாக ஸேவார்ட் (SEWARD) துறைமுகத்தில் கப்பல் பயணம் முடிகிறது.

(தொடரும்)

Series Navigation

தேவராஜன்

தேவராஜன்