அலாஸ்கா கடற் பயணம் – இரண்டாம் பாகம்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

தேவராஜன்


6. முதல் இரண்டு நாள் பயணம்

மாலை 5 மணியளவில் வாங்கூவர் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுக் கரையோரக் கடலில் பிரயாணம் செய்தோம். அன்றிரவு டான் பிரின்சஸ் ஆர்க்கெஸ்ட்ரா குழுவுடன், நடனக் கலைஞர்களும் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்காக இரண்டு அழகான மேடைகள் உள்ளன. தினமும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தினந்தோறும் படக் காட்சிகளைக் காட்டும் திரையரங்கமும் உண்டு.

இரண்டாம் நாளிரவில், கனடா எல்லையைக் கடந்து அமெரிக்க எல்லைக்குச் சேர்ந்த கடலில் நள்ளிரவில் பிரவேசித்தோம். மறு நாள் விடியற்காலை 6 மணிக்குக் கெட்சிகன் (Ketchikan) என்ற துறைமுகத்தை யடைந்தோம். இத் துறைமுகம் அலாஸ்கா மாநிலத்தின் முதல் வாயிலாகும். எங்கள் கப்பல் இங்கே மதியம் 2 மணி வரை நங்கூரம் பாய்ச்சியிருக்குமெனவும், கரையிலிறங்கி சுற்றிப் பார்த்து விட்டு நேரத்தில் திரும்பி வருமாறு கப்பலின் நாளிதழில் அறிவித்திருந்தனர். கரையில் அந்தந்த துறைமுகங்களில் சுற்றுலாக்கள் செல்வதற்குச் சில வாரங்களுக்கு முன்பாகவே ராதிகா ஏற்பாடு செய்து, டிக்கட்டுகள் வாங்கி யிருந்தாள்.

7. மூன்்றாம் நாள் – கெட்சிகன் (KETCHIKAN)

கப்பலி லிருந்து கரைக்கு இறங்குவதற்கு வைத்துள்ள ஏணி காலையில் ஒரு தளத்தில் இருக்கும். மாலையில் இன்னொரு அடுக்குக்கு மாற்றப் பட்டிருக்கும். ஏனென்றால், கடலின் நீர் மட்டம் டைடைப் (tide) பொறுத்து மேலும், கீழும் போய்க் கொண்டிருக்கும். இறங்கும் போது நமக்குக் கொடுத்துள்ள அடையாளச் சீட்டைப் பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். திரும்பி வரும் போது அதனைக் காட்டி ஏற வேண்டும்.

எங்கள் சுற்றுலாப் பேருந்தில் ஒரு அமெரிக்கப் பெண்மணி ஓட்டுனராகவும், வழிகாட்டியாகவும் பணி புரிகிறார். வண்டி ஓட்டும்போதே நமக்கு ஒலிபெருக்கி மூலம் பல தகவல்களைச் சுவையாக விவரிக்கிறார். கெட்சிகன் கிராமம் வருடத்தில் சில மாதங்கள் பனி உறைந்து இருக்கும். எனவே அவ்வமயம் வெகு சில மக்களைத் தவிர ஏனையோர் கெட்சிகனை விட்டு வேறிடங்களுக்குச் சென்று விடுவார்கள். இந்த கிராமம் தூங்கிக் கொண்டிருக்கும். கோடைக் காலம் பிறந்தவுடன் ஐந்து மாதங்களுக்குக் கோலாகலமாக சுற்றுலாப் பிரயாணிகள் நிறைந்திருக்கும்! சுற்றுப் பக்கத்தில் எங்கு பார்த்தாலும் பனி உறைந்த சிகரங்களையும், இயற்கையின் அழகையும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தோம். கெட்சிகனின் விசேஷங்களைப் பற்றி சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு வந்தாள். இந்த பிராந்தியத்தில் டோடம் (totem) என்ற பெயர் கொண்ட கம்பங்கள் விசேஷமானதாகும். சுதேசி மக்கள் ஒவ்வொரு கம்பத்திலும் ஒரு சரித்திரத்தைச் சிற்பமாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். கரடி, கழுகு முதலான சிற்பங்களையும், வீரர்கள், மங்கையர் போன்ற சிற்பங்களையும் செதுக்கி யுள்ளனர். ஐரோப்பியர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கு குடியேறிய பிறகு இக் கம்பங்களைச் செதுக்கியதாக வழிகாட்டி விவரித்தாள். இப்பொழுது கூட இந்த சிற்பக் கலை பாதுகாக்கப் பட்டு வருவதாகக் கூறி சிற்பக் கலை நிபுணர்கள் பணி செய்து கொண்டிருந்த தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றாள். பல நாட்டிலிருந்தும் டோடம் சிற்பம் வேண்டுமென ஆர்டர்கள் வருமாம். செடார் (cedar) மரத்தில் பத்து, இருபது அடி உயரமான இக் கம்பங்களில் உள்ள சிற்பங்களில் சில என்ன கதையைச் சித்தரிக்கின்றது என வழிகாட்டிப் பெண்மணி எடுத்துரைத்தார்.

கெட்சிகனில், ஏன் அலாஸ்காவிலேயே, விசேஷமானது மொட்டைத்தலை கழுகாகும் (bald headed eagle). அமெரிக்காவின் தேசீயப் பறவையாகக் கருதப்படும் கழுகை வெள்ளைத்தலைக் கழுகு எனவும் கூறலாம். ஏனெனில் இக் கழுகின் தலை முழு வழுக்கை அல்ல! உலகில் உள்ள எல்லா மொட்டைத்தலைக் கழுகின் எண்ணிக்கையில் பாதி கழுகுகள் அலாஸ்காவில் இருக்கின்றனவாம். உயரமான மரக் கிளைகளில் இவை கட்டியுள்ள கூடுகளை வழிகாட்டி எங்களுக்குச் சுட்டிக் காட்டினார். இறகுகளை விரித்துக் கொண்டு எங்கள் தலை மேல் பிரமாண்டமான ஒரு கழுகு பறந்து வந்து தன் குஞ்சுக்கு ஆகாரம் ஊட்டியது. நம் தேசத்தில் காணப்படும் கருடனை விடப் பெரியது. இக் கழுகுகள் ஆணும், பெண்ணுமாகச் சேர்ந்து வாழ்நாள் முழுதும் கணவன் மனைவியாக வாழ்கின்றன. ஆம். ஏக பத்தினி விரதம் (ஏக சதி விரதம்) என்னலாம். ஆனால், மனிதர்களைப் போல, தம்பதிகளில் ஒரு வாழ்க்கைத் துணை இறந்து விட்டால் வேறொரு சதியையோ, பதியையோ சேர்ந்து வாழுமாம்!

கெட்சிகன் கிராமத்தை விட்டு மாலையில் புறப்பட்டு இரவு முழுதும் பிரயாணம் செய்து ஜூனோவை (JUNEAU) மறு நாள் காலையில் அடைந்தோம்.

8. நான்காம் நாள் – ஜூனோ ((JUNEAU)

இன்று காலையில் எங்கள் கப்பல் அலாஸ்காவின் தலை நகரான ஜூனோ துறைமுகத்தை யடைந்தது. ஜூனோ நகரம் ஒரு தனி மகத்துவம் வாய்ந்தது. என்னவென்றால் இது ஒரு தீவில் அமைந்துள்ளது. அலாஸ்கா மாநிலத்தினர் படகிலேறித் தான் தம் தலை நகருக்குச் செல்ல முடியும். நினைத்த போது பேருந்திலோ, காரிலோ ஏறி தலை நகருக்குப் போக முடியாது. ஆம், பாலம் கிடையாது!

1879 ஆம் ஆண்டு தங்கச் சுரங்கைத் தேடி வந்த சுரங்க இஞ்சினீயர் முதன் முதலாக நிறுவிய சிறு கிராமமாக இருந்து, படிப் படியாக விரிந்து 1959ல் தலைநகர் ஸ்தானத்தை யடைந்தது. தங்கச் சுரங்கங்கள் மூலம் 1880 முதல் 1944ஆம் வருடம் வரை சுமார் பதினாறு கோடி டாலர்கள் பெறுமான தங்கத்தை வெட்டி எடுத்தார்கள். அதன் பிறகு தங்கச் சுரங்கம் வற்றி விட்டது. மாநாட்டின் தலைநகர் தகுதி பெற்ற பிறகு மானில, மத்திய அரசியல் துறைகளில் வேலை தேடிக் கொண்டனர். இப்போது ஸால்மன் மீன் பிடித்தல், சுற்றுலா ஆகிய துறைகள் பொருளாதாரத்தை வளர்த்து வருகின்றன.

இத் தீவில் பிரபலமான காட்சி மெண்டன்ஹால் (Mendenhal) பனியாறாகும். துறைமுகத்திலிருந்து பேருந்து 13 மைல் தொலைவிலுள்ள இப் பனியாற்றுக்கு எங்களை அழைத்துச் சென்றது. நான் இதற்கு முன் சொன்னதைப்போல் இவ் வாறு மலைச் சிகரங்கள் மத்தியில் ஓடி வந்து நிலப் பரப்பில் தண்ணீர் ஆறாக மாறுகிறது. பல்லாயிர டன்கள் எடைகொண்ட உறைந்த பனிக் கட்டி மேலேயும், உருகுகிற நீரோட்டம் அடியிலும் உள்ளது. சூரிய கிரணங்கள் உறைபனி மேல் தாக்கும்போது வண்ணங்கள் சிதறி நீல நிறம் மட்டும் பிரகாசிக்கிறது. என்னே, இயற்கையின் திருவிளையாடல்!

மெண்டன்ஹால் பனியாற்றைப் பிரிய மனமின்றிப் புறப்பட்ட எங்களை வழிகாட்டி ஸால்மன் மீன் வளர்க்கும் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார். தொழிற்சாலையா எனக் கேட்கத் தோன்றுகிற தல்லவா? இவ் வகை மீன்களை மக்கள் மிகவும் விருப்பத்துடன் உண்பதால், இயற்கையாக உற்பத்தியாகும் மீன்கள் போதாமல் செயற்கையாக வளர்ப்பது பெரும் லாபகரமான தொழிலாகப் பெருகி யுள்ளது.

ஸால்மன் மீனின் அதிசய வாழ்க்கைச் சரிதம் பற்றி நேயர்கள் பலரும் படித்திருப்பீர்கள். இத் தொழிற்சாலையில் பணி புரியும் பெண்மணி எங்களைச் சுற்றிக் காட்டி ஸால்மன் பண்ணை பற்றி விவரமாக விளக்கினார். தொட்டிகளில் மீன் முட்டைகளை வைத்துப் பொரிக்கச் செய்கின்றனர். இக் குஞ்சுகளை அருகிலுள்ள ஆற்றில் விட்டு விடுகின்றனர். நன்னீர் ஆற்றில் பிறந்த மீன் குஞ்சுகள் நீரோட்டத்துடன் நீந்தித் தொலைவில் கடலைச் சென்று அடைகின்றன. கடலில் உப்பு நீரில் சஞ்சரித்து கடலில் இருக்கும் ஏனைய சிறிய பிராணிகளையும், சிறு மீன்களையும் வேட்டையாடி இரையாக்கி வளர்கின்றன. நான்கைந்து வருட காலத்தில் பல்லாயிரக் கணக்கான மைல்கள் வெகு தூரம் பிரயாணம் செய்கின்றன. அலாஸ்காவிலிருந்து புறப்பட்ட மீன்களை ஜப்பான் கடற்கரை யோரத்தில் கூட சந்திக்கலாம் எனச் சொல்கிறார்கள்! நன்றாக வளர்ச்சி யடைந்த பிறகு இம் மீன்கள் சந்ததி வளர்ச்சிக்குத் தயாராகின்றன. தத்தம் பிறப்பிடத்தை நாடி சரியான ஆற்றைக் கண்டுபிடித்து நீரோட்டத்தை எதிர்த்து நீந்தி எதிர் நீச்சல் போட்டுத் தாயகம் திரும்புகின்றன. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! எத்தனையோ முகத்துவாரங்கள் இருந்தாலும், தான் பிறந்த ஆற்றை மறக்காமல் அடையாளம் கண்டுபிடித்துச் சரியான ஆற்றில் நுழைகின்றன! பிறந்தபோது தம் சுற்றுப்புற அடையாளங்களை – நீரின் தரம், வாசனை முதலானவற்றை – ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தாயகத்தைக் கண்டு பிடிக்கின்றன என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். வீடு திரும்பும் பிரயாண காலத்தில் உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றன. பிறப்பிடம் திரும்பிய பெண் மீன்கள் உடன் வந்த ஆண்மீன்கள் உதவியுடன் கரு தரிக்கின்றன. ஆயிரக் கணக்கான முட்டைகளைப் பிரசவிக்கின்றன. பிரசவ காலம் முடிந்ததும் ஜன்ம சாபல்யமடைந்ததென இறந்து விடுகின்றன. மீன் பண்ணைச் சிப்பந்திகள் மீன் முட்டைகளைச் சேகரித்து தொட்டிகளில் பராமரிக்கிறார்கள் மறுபடியும் ஸால்மன் வாழ்க்கைச் சரித்திரம் தொடர்கிறது.

இவ்வதிசயப் பண்ணையைப் பார்த்து விட்டுக் கப்பலுக்குத் திரும்பினோம்.

(தொடரும்)


devarajanvenkata@hotmail.com

Series Navigation

தேவராஜன்

தேவராஜன்