அறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


எட்வர்ட் ஜென்னெர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர்; பெரியம்மைத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பினால் உலக்ப்புகழ் பெற்றவர். 1749 ஆம் ஆண்டு மே திங்கள் 17 ஆம் நாள் பிரிட்டனில் உள்ள பெர்க்லி (Berkley) என்னும் இடத்தில் ஜென்னெர் தோன்றினார்; அவரது தந்தை ஒரு கிறித்துவ மதகுரு. ஜென்னெர் தனது பள்ளிபடிப்பை உள்ளூரிலுள்ள துவக்கப் பள்ளியில் தொடங்கினார்; அப்போதே மருத்துவத் துறையில் தனக்கிருந்த ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார். அக்காலத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வது என்பது மிகவும் கடினம்; அறுவை சிக்கிச்சையில் தேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் முதலில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்; பின்னர் இரண்டு ஆண்டுகள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து கற்க வேண்டும். இங்கிலாந்தில் பிரிஸ்டல் (Bristol) என்ற ஊருக்கு அருகிலிருந்த செட்பரி (sedbury) என்ற சிறு கிராமத்தில், திறமை மிக்க அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவரிடம் ஜென்னர் முதலில் தனது பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் தனது 21 ஆம் வயதில் லண்டன் தூய ஜார்ஜ் (St.George) மருத்துவமனையில் சேர்ந்து தனது மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். மருத்துவப் பட்டம் பெற்றபின் தனது சொந்த ஊருக்குச் சென்று மருத்துவத் தொழிலை ஜென்னர் தொடங்கினார்.

ஜென்னர் மருத்துவப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும்போது, பால் விற்கும் பெண் ஒருத்தி மாட்டம்மை (cow pox) நோய் சிகிச்சைக்காகப் பயிற்சி மருத்துவரிடம் வந்தாள். இந்நோய் பெரும்பாலும் மாடு மேய்க்கும் இடையர்களிடம் அப்போது மிகுதியாகக் காணப்பட்டது. மாட்டம்மை நோய் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என, அப்பெண்ணைக் கண்டவுடன் ஜென்னர் தீர்மானித்தார். பயிற்சி முடிந்து, தன் சொந்த ஊர் திரும்பி, மருத்துவத் தொழிலை மேற்கொண்ட பின், இவ்வாராய்ச்சியில் மிகுதியாக ஈடுபட்டு உழைத்தார். இருப்பினும் போதுமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில் பெரியம்மை நோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக அவரது மருத்துவமனைக்குப் பலர் வந்தனர்; எனவே இந்நோய் பற்றிய ஆய்விலும் ஜென்னர் ஈடுபட்டார். பெரியம்மை பற்றிய ஆய்வை 27 நோயாளிகளிடம் மேற்கொண்டு தனது கண்டுபிடிப்புகளை 1796 ஆம் ஆண்டு வெளியிட்டார். மாட்டம்மை நோய் பீடித்தவர்களுக்கு, அந்த மாட்டம்மைக் கிருமிகள் கொண்ட திரவத்தை ஊசி மூலம் செலுத்தினால், அவர்களுக்கு பெரியம்மை நோய் வராமலிருப்பதை ஜென்னர் கண்டறிந்தார். இவ்வாய்வுக்காக 8 வயதுச் சிறுவன் ஜிம்மி பிப்ஸ் (Jimmy Phipps) என்ற சிறுவனிடம் மிகவும் துணிச்சலான ஆய்வை அவர் மேற்கொள்ள நேர்ந்தது. மாட்டம்மையால் பீடிக்கப்பட்டிருந்த பால் விற்கும் பெண்ணின் விரலிலிருந்து மாட்டம்மைக் கிருமியை எடுத்து மேற்கூறிய சிறுவனுக்குச் செலுத்த அவனுக்கும் மாட்டம்மை நோய் பரவியது; சுமார் ஏழு வாரங்கள் கழித்து, பெரியம்மையால் தாக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரிடமிருந்து அக்கிருமியை எடுத்து மேற்சொன்ன அதே சிறுவனுக்குச் செலுத்த அவனுக்குப் பெரியம்மை நோய் வராமலிருப்பதை ஜென்னர் கண்டார். பின்னர் பெரியம்மை நோய்க்கிருமியை நல்ல ஆரோக்கியமான ஒருவருக்குச் செலுத்த அவரை பெரியம்மை நோய் தாக்கியதையும் கண்டார். எனவே மாட்டம்மை நோய் தாக்கிய ஒருவரைப் பெரியம்மை நோய்க்கிருமிகள் தாக்குவதில்லை என்பதை ஐயத்துக்கிடமின்றி ஜென்னர் நிரூபித்தார்.

பெரியம்மையால் ஒருமுறை தாக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அந்நோய் வருவதில்லை என்ற தவறான கருத்து அக்காலத்தில் மக்களிடையே நிலவி வந்தது. மேலும் மாட்டம்மை, பெரியம்மை இரண்டும் வேறுபட்ட தொற்று நோய்கள் எனவும் மக்கள் கருதினர். ஆனால் மாட்டம்மைக் கிருமிகளை மென்மைப் படுத்திச் செலுத்தினால் பெரியம்மை நோயை வராமல் தடுக்கலாம் என்பதை ஜென்னர் நிரூபித்தார். பெரியம்மை வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி வழிமுறையைக் காண்பதில் ஜென்னர் மென்மேலும் ஆய்வு செய்து வெற்றி கண்டார். அவருடைய அம்மை தடுப்பூசி பழக்கத்திற்கு வருவதற்கு முன்னர், பெரியம்மை தாக்கி பலர் இரந்தனர்; பலருக்குக் கண்பார்வை இழப்பு ஏற்பட்டது; பலருடைய உடம்பிலும் முகத்திலும் அம்மைத் தழும்புகள் ஏற்பட்டு வடுக்களாக நிலை பெற்றன. ஜென்னர் கண்டுபிடித்த அம்மை மருந்து தடுப்பூசியினால் பெரியம்மை நோய் ஏறக்குறைய அறவே நீக்கப்பட்டது எனலாம்.

ஜென்னரின் மகத்தான இக்கண்டுபிடிப்பை உலகமே போற்றி வரவேற்றது; அவருக்குப் பாராட்டும், புகழும் குவிந்தன. இங்கிலாந்து நாடாளுமன்றம் அவரது கண்டுபிடிப்பைப் போற்றிப் பாராட்டியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. ரஷ்ய நாட்டு ஜார் மன்னர் மோதிரம் அளித்துக் கெளரவித்தார். பிரான்ஸு, ஹாலந்து, சுவிஸ் நாட்டு மக்களெல்லாம் தாமே முன்வந்து அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பெரியம்மை எனும் கொடுமையான தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறையைக் காண்பதில் ஜென்னர் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். அவரது சேவை உலக மக்கள் அனைவர் உள்ளத்திலும் நன்றியுடன் நினைக்கப்படுகிறது. 1823 ஜனவரி 26 ஆம் நாள் அவர் பருவுடல் மறைந்தது.

***

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மொழிக் கல்வித்துறை (தமிழ்) வட்டாரக் கல்வியியல் நிறுவனம் மைசூர் 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர