அறிவியல் துளிகள்-22

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


காய்ச்சல் வந்தவர்களுக்கு உணவின் சுவையுணர்வு மாறுபட்டு இருப்பது ஏன் ?

புலன்களின் உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும் அவற்றின் சில செயல்பாடுகள் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவற்றுள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மாறுபட்ட சுவையுணர்வும் ஒன்றாகும். இதற்கான காரணம் இன்னும் சரியாக விளங்கவில்லை; எனினும் சுவையுணர்வு பற்றி இதுவரை அறிந்தவற்றின் அடிப்படையில் சில யூகங்களை மேற்கொள்ளலாம். நாக்கில் சுவைமுகிழ்ப் பகுதிகள் (Taste buds) உள்ளன; இவற்றின் அடிப்பகுதியில் சுவை நரம்புகள் (Taste nerves) உண்டு; நமது உடலின் சாதாரண வெப்ப அளவு நிலையில் (Temperature) இந்நரம்புகள் மிகவும் உணர்திறன் (Sensitivity) கொண்டதாக இருக்கும். மாறாக இயல்பு வெப்ப நிலையிலிருந்து மிக அதிகமாகவோ அல்லது மிகவும் குறைந்தோ வெப்ப அளவு இருப்பின் அந்நிலையில் சுவை நரம்புகளின் உணர்திறன் குறைந்துவிடும். காய்ச்சல் அடிப்பவரின் உடல் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு மிகுதியாக இருப்பது, உணவின் சுவையுணர்வு மாறுபட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

புல்வெட்டு கருவியை (Lawn-Mower) இழுப்பது எளிதாகவும் தள்ளுவது கடினமாகவும் இருப்பது ஏன் ?

ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் பல்வேறு விசைகளின் உள்வினையைப் (Interaction) பொறுத்தே அப்பொருளை இயக்குவது எளிமையானதா அல்லது கடினமானதா என்று உணரப்படும். தள்ளுவிசை அல்லது இழுவிசையில் இரு பகுதிகள்/கூறுகள் உண்டு. ஒன்று கிடையாகவும் (Horizontally), மற்றொன்று செங்குத்தாகவும் (vertically) வினை புரியும். ஒரு பொருளைத் தள்ளும்போது, விசையின் செங்குத்துப் பகுதி கீழ்ப்புறம் செலுத்தப்படும்; இது பொருளின் எடையுடன் சேர்ந்து கீழ்ப்புறம் அழுத்துகிறது. அப்போது அப்பொருளை இயக்குவதற்கு/தள்ளுவதற்குக் கிடைப்பகுதியில் அதிகமான விசையைச் செலுத்த வேண்டியதாகிறது. மாறாக அப்பொருளை இழுக்கும்போது, அப்பொருளின் செங்குத்துப் பகுதி மேல்நோக்கி வினை புரியும்; அப்போது கீழ் நோக்கி இழுக்கும் எடையின் ஒரு பகுதி நீக்கப்படுகிறது. எனவே புல்வெட்டுக் கருவியை இழுப்பது எளிதாக உள்ளது.

விரைந்து செல்லும் வாகனத்தை ஒளிப்படம் (Photograph) எடுத்தால் சில சமயம் அது தெளிவற்று இருப்பது ஏன் ?

ஓர் ஒளிப்படம் தெளிவாக இருப்பதும், தெளிவற்று இருப்பதும் ஒளிப்படக் கருவியில் (Camera) உள்ள மூடியை (Shutter) எவ்வளவு விரைவாக விடுவிக்கிறோம் என்பதைப் பொறுத்ததாகும். வாகனம் விரைந்து செல்லும்போது அதனைப் படலத்தில் (Film) பதிவு செய்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவாக இருக்குமானால், அந்நிலையில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். அவ்வாறின்றி விரைந்து செல்லும் ஒரு பொருளைப் படம் எடுக்கையில் ஒளிப்படக் கருவியின் மூடியைத் திறந்து விடுவிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், அந்நிலையில் பதிவாகும் ஒளிப்படம் தெளிவற்று இருக்கும். மேலும் படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவி அசைந்துவிட்டாலும் கூட, எடுக்கப்படும் ஒளிப் படம் தெளிவின்றி பதிவாகும் வாய்ப்புண்டு. தெளிவான, பளிங்கு போன்ற ஒளிப்படங்களை எடுப்பதற்கு மூடியை விடுவிக்கும் நேரம் மிக மிகக் குறைவாக, அதாவது ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு இருப்பதும் சிறந்ததே.

மருத்துவ வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள பாதரசத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர, அதனை நன்றாக உதறுவது ஏன் ?

மனித உடலின் வெப்பநிலையை அளவிடுவதற்கு மருத்துவ வெப்பமானியைப் பயன் படுத்துகிறோம். இவ்வெப்பமானியின் குமிழ்ப் பகுதிக்குச் சற்றுமேலே இடுக்கான (Constricted) சிறு பகுதி இருப்பதைக் காணலாம். வெப்பநிலை உயரும்போது பாதரசம் விரிவடைந்து குமிழ்ப் பகுதியிலிருந்து இடுக்கு வழியாக குழாயினுள் செல்லும். வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் வெளியே எடுக்கும்போது பாதரசக் கம்பம் இடுக்குப் பகுதியில் பிளவுற்று, தடைப்படுகிறது. இதனால் இயல்பான வெப்பநிலையில் குழாயினுள் இருக்கும் பாதரசம் குமிழ்ப்பகுதிக்குச் செல்லாமல் முன்பிருந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது. மேலும் பாதரசத்தை வலிந்து செலுத்துவதற்கான விசை எதுவுமில்லாததும், குழாயில் பாதரசத்தின் நிலை மாறாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக உள்ளதெனலாம். இந்நிலையில் வெப்ப மானியை நன்றாக உதறும்போது அதிர்வின் காரணமாக குழாயினுள் இருக்கும் பாதரசம் இடுக்கு வழியாக குமிழ்ப் பகுதியைச் சென்றடையும். சாதாரண வெப்பமானிகளில் மேற்கூறிய இடுக்குப் பகுதி இல்லாததால், வெப்பத்தின் உயர்வு தாழ்வுக்கு ஏற்ப பாதரசக் கம்பத்தின் உயரம் ஏறுவதும் இறங்குவதும் தடையேதுமின்றி இயல்பாக நிகழ்கிறது.

***

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

Email ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர