அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

முகமூடி


அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்

தில்லைக்கோயிலுக்குள் புலவர் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழ்ப்பதிகம் (திருவாசகம் என்கிறது தட்ஸ்தமிழ், சிவபுராணம் என்கிறது தினமணி) பாட முற்பட்டு தடுக்கப்பட்டதை எதிர்பார்த்தபடியே தமிழ் பாதுகாப்பு இயக்கங்கள் கையில் எடுத்திருக்கின்றன… சமீப அரசியல் நிகழ்வுகளால் சோர்ந்து போயிருந்த அரசியல்வாதி(களு)க்கு இது அடுத்த போராட்ட களமாக ஆகியிருக்கிறது… இந்த நேரத்தில் எல்லாரும் கருத்து கந்தசாமியாகி திருவாய் மலர சிதம்பரத்தில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிய ‘தகுதி’யில் நாமும் நம் பங்குக்கு ஒண்ணு ரெண்டு கருத்து சொல்லவில்லை எனில் எப்படி?

சிதம்பரம் கோயிலில் நடராஜரும் சிவகாமியும் சிதம்பர ரகசியமும் இருக்கும் கருவறை சித்சபை எனப்படும். அதை சுற்றி இருப்பது கனகசபை. இதுவே ஆதித்தன் மற்றும் பராந்தகனால் பொற்கூரை வேயப்பட்டது. இதனை சுற்றி பிரகாரமும் அதில் சிவலிங்கங்களும் சில சன்னதிகளும் கோயில் கிணறும் இரு காண்டா மணிகளும் உண்டு. எல்லா சிவன் கோயிலிலும் நடப்பது போன்று இங்கு சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெறுவது இல்லை. பதஞ்சலி முனிவர் வகுத்த விதிகளின் படி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பொது தீஷிதர்கள் என்பவர்கள் பூஜைகளையும் கோயில் நிர்வாகத்தையும் நடத்துகிறார்கள்.

அது ஏன் தீஷிதர்கள் மட்டும் இதை நடத்த வேண்டும் என்று கேட்கும் வெள்ளைப்பூண்டுகளுக்கு என்னிடம் பதில் இல்லை.. அதற்கு சரித்திரத்தைதான் நாடவேண்டும். மாற்றம் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி, தமிழ் பாதுகாப்பு இயக்கம் அல்லது தமிழக அரசு அறநிலையத்துறை.

தீஷிதர்கள் பிராமண குலத்தில் சோழியர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இவர்கள் கொண்டை போடுவது வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே சோழியன் குடுமி பழமொழி… சோழியன் என்பது சோழ நாட்டுக்காரர்கள் என்பதை குறிக்க. பல சோழர்களுக்கு நடராஜர்தான் இதய (காவல்) தெய்வம். சிதம்பரம் கோயிலிலிருந்து தஞ்சாவூர் அரண்மனைக்கு சுரங்கம் உண்டு என்பது போன்ற கதைகள் பல கேட்டிருக்கிறேன். இங்கு பூஜை நடந்து காண்டா மணி ஒலிக்க அந்த சத்தம் சுரங்கம் வழியாக அரண்மனையில் கேட்டபின்பே ராஜராஜன் உணவருந்துவான் என்பது போன்ற சுவாரசிய சங்கதிகள் அந்த கதையில் அடக்கம்.

சிதம்பரம் மக்களுக்கு பழகிப்போய்விட்ட தீஷிதர் இன மக்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்… சிதம்பரம் கோயிலை சுற்றியிருக்கும் தேரோடும் அந்த நாலு வீதிகளிலேயே அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்து முடிந்துகொண்டிருந்தது, போன தலைமுறை வரை… சிதம்பரம் கோயிலில் ஊழியம் புரிவதை தவிர வேறெதும் செய்யாத, பழமைவாதத்தில் ஊறிப்போன தீஷிதர் இனத்தில் இருந்து முதன் முதலில் ஒரு தீஷிதர் வெளியில் வேறு வேலைக்கு போனது அதிசயமாகவும் புரட்சியாகவும் அப்போது பேசப்பட்டது…

இப்போது தீஷிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் ::

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு ‘பிடுங்குவது’ :: நிதி உதவி பெறும் வழிபாட்டு தலங்கள் தவிர்த்து பார்த்தால் உலகத்தின் எந்த வழிபாட்டு தலத்திலுமே உலக நியதியான ‘பணக்காரனுக்கு கூடுதல் மரியாதை’ வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது வழிபடும் வரிசை சுருங்குவது ஆகட்டும், மந்திரங்கள் ஓதும் தன்மையில் ஆகட்டும், பணம் இருந்தால் பத்தும் பக்காவாக நடக்கும்… சிதம்பரம் கோயிலுக்கு அரசு நிதி உதவி எதுவும் கிடையாது. “கடவுள தொட்டு சேவை செய்ய புண்ணியமில்லா செஞ்சிருக்கணும்” என்ற கருத்தோடு கற்பூரம் காண்பிக்கப்படுவதை கண்டு பரவசமாக நிற்கும் பக்தன் அதுதான் தீஷிதரின் ‘தொழில்’ என்பதையும் அதன் மூலம்தான் அவரின் குடும்பத்திற்கு சோறு என்பதையும் உணருவதில்லை. இந்த கோயிலின் நடைமுறை தெரியாத பக்தனுக்கு, மற்ற இடங்களில் சாதாரணமாக நடக்கும் அர்ச்சனை ஆராதனை போன்றவற்றுக்கு கூட இங்கே காசு எதிர்பார்க்கிறார்களே என்ற சமதர்ம எண்ணம் வருகிறது… ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமே சாமியை “பார்க்க” மட்டுமே என்று கோயிலுக்கு போனால் தீஷிதர்களால் தொந்தரவு இருக்க முடியாது என்பதே என் அனுபவம். அதை தவிர்த்து ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும் என்றெல்லாம் எண்ணிப்போனால் சேவைக்கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டியதுதான். என்ன இங்கு மார்க்கெட்டிங்கும் சேவைக்கட்டணமும் சற்று வித்தியாசமாக இருக்கும்.. சாமி பார்க்க வரும் பெரும்பாலானவர்களிடம் தீஷிதர்கள் மாதாந்திர அபிஷேக அர்ச்சனை என்று ஒன்றை ஆரம்பிப்பர்… பகதர் முன்கூட்டியே பணமும் முகவரியும் தந்தால் மாதாமாதம் அவர்கள் நட்சத்திரம் அன்று அவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.. என்னிடம் அதுகுறித்த பேச்சு ஆரம்பிக்கப்பட்டாலே “நான் லோக்கல்” என்ற ஒரே வார்த்தையில் விஷயம் முடிவுக்கு வரும்.. ஆனால் பல பக்தர்கள் ஆம்வேகாரர்களிடம் மறுக்க கூச்சப்படுவது போலவே இவர்களிடமும் கூச்சப்பட்டு பணத்தை செலுத்திவிட்டு புலம்புவது வாடிக்கையாக நடக்கும் விஷயம். ஆனால் மாதாமாதம் ஒழுங்காக பிரசாதத்தை அனுப்பி வைப்பதில் மோசடி நடந்ததாக இதுவரை புகார் இல்லை. (எல்லா இடங்களையும் போலவே) இங்கும் பணமும் பகட்டும் காண்பிப்பவர்களுக்கு கொஞ்சம் மரியாதை அதிகமாகத்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்து கோயிலுக்கு போனால் எந்த ப்ரச்னையும் இல்லை…

நடராஜரை புகைப்படம் எடுப்பது :: கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 2004 தேர் வைபவத்தின் போது ஏதோ ஒரு லாட்ஜில் இருந்து தேரும் நடராஜரும் புகைப்படம் எடுக்கப்பட்டு தினமலரில் வெளிவந்தது… அன்று முழுவதும் தீஷிதர்கள் கோபமாக அலைந்தனர்… அன்று மாலை எதேச்சையாக சிதம்பரத்தில் இருந்த நான், சரி சாமியைத்தானே எடுக்கக்கூடாது, அலங்கரிக்கப்பட்ட கலைநயமிக்க தேரையும் ஆனந்தத்தில் குழுமியிருக்கும் கூட்டத்தையும் வீடியோ எடுப்போம் என்று முயல தேரின் மேலிருந்து என்னை நோக்கி கோபமாக வசவு வார்த்தைகள் வந்து விழுந்தன… பக்கத்தில் இருந்த தமிழக காவல்துறை “தம்பி வந்தானுங்கன்னா வீடியோ கேமிராவ உடைச்சி நொறுக்கிறுவானுங்க, உள்ள வச்சிடுங்க” என்றார்.. “என்ன விளையாடுறானுங்களா, கோயிலுக்குள்ள எடுக்ககூடாதுன்னு சொன்னா சரி… பொது இடத்துல இவனுங்க என்ன சட்டம் பேசறது… நீங்க என்னடான்னா போலீஸா இருந்துகிட்டு இப்படி சொல்றீங்க… என்றேன்… “இது ஸ்டேஷன் இல்ல தம்பி.. அவனுங்க இடம். தினமலர்காரன் மேல இருக்கிற கோவத்த எங்கடா காட்லாம்னு அலையிறானுங்க.. இந்த கூட்டத்துல எங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. பேசாம உள்ள வப்பீங்கலா?” என்றார். பக்கத்தில் வேடிக்கை பார்த்த பொதுஜனம் ஒருவர் மிகவும் மெதுவாக சொன்னார் :: “தயிர் சாதம் சாப்டறவனுங்களுக்கே என்ன தெனாவட்டு பாத்தீங்களா.. இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநா எதுலனா மாட்டாமலா போயிடுவானுங்க.. அன்னிக்கி காமிப்பம் கறிசோறு பலத்த…” அன்று “தினமலர் உபயத்தில்” தீஷிதர்களின் ஈகோவால் தேரில் இருந்த நடராஜருக்கு நடந்த பூஜைகள் வெளிச்சம் பாய்ச்சாமல் இருட்டிலேயே நடந்தன… கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நியதியை மதிக்கும் நான் பொதுவிலும் இப்படியான சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றுவதை அநியாயம் என்று கருதி துண்டை சுற்றிக்கொண்டு ஹாண்டிகாமை மறைத்து ஒரு சில நிகழ்வுகளை வீடியோ எடுத்தேன். ஆனால் இந்த வருடம் அமெரிக்காவில் பொது இடத்தில், அதாவது வானில் நடந்த ஜூலை 4 வாணவேடிக்கையை பார்க்க டிக்கெட் வாங்கி ஸ்டேடியத்தின் உள்ளே நுழையும் போது வீடியோ எடுக்கக்கூடாது என்ற அவர்கள் சட்டத்தை மதித்து கேமிராவை உபயோகிக்காமல் நடந்துகொண்ட நான் அன்று மட்டும் அப்படி செய்ததில் உள்ள சில பூர்த்தியாகாத கட்டங்களை குறித்து யோசித்து பார்க்கிறேன்.

குழந்தை திருமணங்கள் :: என்றால் குழந்தையை வயதில் பெரியவருக்கு கல்யாணம் செய்வது என்ற அர்த்தத்தில் இல்லை… குழந்தையை குழந்தைக்கு கட்டிவைப்பது.. ‘வெளி’யில் கொடுக்கம் வாங்கல் இல்லாமல் தீஷிதர் இனத்துக்குள்ளேயே திருமணங்கள் நடக்கும்… அதுவும் சின்ன வயதிலேயே…. கல்யாணம் ஆன தீஷிதர் இன ஆண்தான் சிதம்பரம் கோயிலில் பூஜை செய்ய உரிமை உள்ளவர் என்பது முக்கிய காரணம்… ஆனால் கடுமையான சட்டங்கள் தரும் பயம் காரணமாக இப்போதெல்லாம் வெளிப்படையாக திருமணங்கள் நடைபெறுவது இல்லை, என்றாலும் வேறு வருமானம் இல்லாத குடும்பங்களில் ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு… இதில் கற்பனையே செய்ய முடியாத ஒரு கொடுமையும் நடக்கும். குழந்தை திருமணம் நடந்தால் பருவமெய்தும் வரை தாய்வீட்டில் இருக்கும் அந்த சிறுமிகளின் கணவர்கள் – சிறுவர்கள் – ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால் பழமைவாத ஆணாதிக்கம் நிறைந்த தீஷிதர் இனத்தின் கட்டுப்பாடுக்குள் இருக்கும் அந்த கணவனை இழந்த சிறுமிகளின் உள, புற போராட்டங்கள்… இது கண்டிப்பாக சீர்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது…

கோயில் பராமரிப்பு :: அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலை எடுத்தால் சிதிலமடைந்திருக்கும் சில இடங்களும் பொலிவடைந்து கோயிலின் நிலை சிறப்பாக மாறும் என்று நம் அறிவுக்கொழுந்துகள் நம்புவது போன்ற நகைச்சுவை வேறெதும் இல்லை… அரசு பராமரிப்பில் உள்ள ஏகப்பட்ட – சிதம்பரம் கோயில் போன்று அளவில் பெரியதாக கூட இருக்க வேண்டாம் – சிறிய ஆனால் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க, பல அரிய ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற பொக்கிஷங்களை தன் வசத்தில் கொண்டிருக்கும் கோயில்களின் இன்றைய நிலை பற்றி யாருக்காவது தெரியுமா? சிதம்பரம் கோயில் அளவு பெரிய கோயில்களின் நிலையை அரசு பராமரிக்கும் லட்சணம் தெரியுமா? மிகச்சமீபத்தில் நான் கண்ட உதாரணம் திருவையாறு… சிதம்பரம் கோயில் போலவே அளவில் பெரிய திருவையாறு கோயிலில் சாமியே இருக்க பயப்படும் அளவு கும்மிருட்டு… அதனோடு ஒப்பிட்டால் அரசு வருமான இல்லாத இந்த கோவிலின் பராமரிப்பு எவ்வளவோ மேம்பட்டது… இந்த கோவிலுக்கு பராமரிப்பு தேவைதான், ஆனால் ஒப்பீட்டு அளவில் சிறப்பாகவே உள்ளது. ஆகவே பராமரிப்பு பற்றியெல்லாம் தற்போதைக்கு கவலைப்பட தேவையில்லை…

இப்பொழுது முக்கிய விஷயமான கோயிலுக்குள் தமிழ் மறுப்பு விவகாரத்துக்கு வருவோம்.

நடராஜர் சன்னதிக்கு எதிரே பெருமாள் சன்னதி குறுக்கிடும் இடத்தில் பூக்கட்டுபவர்களுக்கு பின்புறம் அமர்ந்து சாமான்யர்கள் பூஜை வேளை தவிர்த்த நேரங்களில் பாடல்கள் பாடுவதும், இசை வாத்தியங்கள் ஒலிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.
ஆகவே ஜாதி காரணமாக தீஷிதர்கள் அல்லாதவர்கள் சத்தமாக பாட தடை என்பது கேள்விக்குறியது…

சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் ‘டாண் டாண்’ என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் ‘கிலுகிலு’ என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்… திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்… அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்… பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்… இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்… தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ தெரியாது… ஆனால் தமிழ்… ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால் கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும் இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)…
ஆகவே தமிழ் பதிகங்களை பாட முற்படுவதாலேயே கோயிலுக்குள் தடையென்று வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கையில்லை…

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும்போதும் தமிழ் பதிகங்கள் பாடக்கேட்டிருக்கிறேன். (இந்த ஊர்வலத்தின் போது இந்து மதத்தின் அனைத்து புனித பிம்பங்களும் கலந்துகொள்வார்கள் என்பது நம்பிக்கை.. அப்போது வாசிக்கப்படும் மிருதங்கம் பார்க்கவும் அதன் ஒலி கேட்க வித்தியாசமாக இருக்கும். அது தும்புருவோ நாரதரோ யாரோ உபயோகித்த மிருதங்கத்தின் மாதிரி என்று சொல்லக்கேள்வி. இந்த பூஜையை கண்டு 12 வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் தக் தக் தகும், தக் தக் தகும், தக் தக் தகும், தகும் தகும்… என்று அந்த மிருந்தங்கத்தின் ரிதம் மனதுக்குள் தங்கியிருக்கிறது)

மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜ்ரை காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்… திருவெம்பாவை தமிழ்தான்… தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்… இது சிதம்பர ரகசியம் அல்ல… வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு… தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்… ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார் என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை…

கோவிலுக்குள் தமிழ் பதிகங்களை ஓதுவார்கள் அல்லது தீஷிதர்கள் மட்டும்தான் பாட முடியும், வெளியாட்கள் பாடமுடியாது என்று தடை போடுகிறார்கள் என்று வரும் செய்தி உண்மையெனில் அதை வன்மையாக கண்டிப்பதில் முதல் ஆளாக இருக்க விரும்புகிறேன்… ஆனால் தினமணி செய்தியோ புலவர் ஆறுமுகச்சாமி நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவபுராணம் பாட சென்றார் என்கிறது… திருச்சிற்றம்பல மேடை என்று எதை சொல்கிறார்கள் என்று புரியவில்லை… அது கனகசபை அல்லது அதை ஒட்டிய இடங்கள் எனில் ஏற்கனவே வாங்கப்பட்ட தடையுத்தரவை ஒட்டி அவரை கைது செய்ததில் எந்த தப்பும் இல்லை…

இங்கே ப்ரச்னை ஆறுமுகச்சாமி தமிழை பாட விரும்பியதா, அல்லது அவர் பாட விரும்பிய இடமா?

ஆறுமுகச்சாமி சமஸ்கிருதத்தில் பாட முற்பட்டிருந்தால் அவர் மேல் நடவடிக்கை இருந்திருக்காது என்று தமிழ் போராட்டக்குழு நம்புகிறதா?

ஏற்கனவே கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்றது, சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் புலவர் என்று சொல்லப்படுகிறது… கோவில் கொடிமரம் அருகே நூற்றுக்கணக்கானவர்கள் தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிடுவது, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவது போன்றவற்றை தினமும் பார்க்கலாம். சிவ சிவா என்பது கோவிலில் எப்போதும் கேட்கும் மந்திரம். இதை செய்ததற்காக ஆறுமுகச்சாமி மாத்திரம் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை கொஞ்சம் யோசித்தல் நலம்… பல முறை கண்டிக்கப்பட்டு, கைதும் செய்யப்பட்ட புலவர் ஆறுமுகச்சாமியின் பின்புலம் என்ன, அவரின் நோக்கம் என்ன என்பதை பற்றியெல்லாம் எந்த செய்தியும் வரவில்லை..

எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த விவகாரம் விதவிதமான வேஷங்களை அடைந்து மக்களின் படைப்பிலக்கிய கற்பனைத்திறனை வெளிக்கொணர்கிறது… புலவர் ஆறுமுகச்சாமி விரும்பியோ விரும்பாமலோ நந்தனார் ஆக்கப்படுகிறார்… வழக்கம் போலவே அரசியல்வாதியின் தமிழ்ப்பற்று அறிக்கையை கண்டவுடன் கார்த்திக்ரமாஸ் உட்பட்ட பதிவர்கள் தீஷிதர்கள் தெருப்பொறுக்கிகள், அவர்கள் தொழில் விபச்சாரம் என்று நாகரீகமான வார்த்தைகள் (செந்தமிழ்?!) கொண்டு கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்… சிவன் சொத்து அபகரிக்கப்படுகிறது என்கிறார் ராகவன்… உண்மையிலேயே சிவன் பாதத்தில் இருந்து சதங்கையில் இருந்த வைரம் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது… அதுதான் சிவன் சொத்து அபகரித்தல்.. இந்த விவகாரம் எப்படி சிவன் சொத்து “அபகரிப்பு” என்பது அவருக்கே வெளிச்சம்… பெரியாரிஸ்டுகள் காலத்தின் கட்டாயத்தில் தமிழை மதிக்காத கோயிலில் தமிழ்ர்கள் புக மறுப்போம் என்று போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். வெறும் வாயை மென்று கொண்டிருந்த வெள்ளப்பூண்டு கோஷ்டிகளும் தன் பங்குக்கு தமிழக அரசுக்கு கோயில் சுவீகாரம், பிரஹஸ்பதிகளை நாடுகடத்துதல் என்று பலவாறு யோசனைகள் சொல்லி அவல் கருத்துகள் மெல்ல ஆரம்பித்தாயிற்று.

இது உண்மையிலே “தமிழ் பாடுதல் vs தமிழ் பாடும் இடம்” ப்ரச்னையா அல்லது “தயிர் சாதம் vs கறி சோறு” ப்ரச்னையா என்பது தில்லையம்பலத்தானுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம்

————————————————————–

Series Navigation

முகமூடி

முகமூடி