அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

டாக்டர் முக்தேதார் கான்


(டாக்டர் முக்தேதார் கான் மிசிகனில் உள்ள ஆட்ரியன் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத்தில் துணைப் பேராசிரியர். ‘இஸ்லாமும் ஜனநாயகமும் பற்றிய ஆய்வு மைய ‘த்தின் நிர்வாக உறுப்பினர். )

அல்லாவின் கருணையால் நீங்கள் அனைவரும் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அமெரிக்க முஸ்லீம் சமூகத்தின் சுய விமர்சனத்திற்கும், சிந்தனைக்கும், மறு ஆய்வுக்கும் இது வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதம் எழுதுகிறேன்.

இஸ்லாமின் சரிதத்தின் மீதும் , மனிதகுலச் சரிதத்தின் மீதும் செப்டம்பர் 11-ம் தேதி நியூ யார்க், வாஷிங்டன் மீதான தாக்குதல் ஒரு பயங்கர வடுவாக நிலைத்திருக்கும். எவ்வளவு தான் நாம் இந்தச் செய்லகளைக் கண்டனம் செய்தாலும், குரான் மற்றும் சுன்னாவைச் சுட்டிக் காட்டி , சாமானியர்களைக் கொல்வதை எப்படி இஸ்லாம் கண்டனம் செய்கிறது என்று கூறினாலும், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றங்களை இழைத்தவர்கள் இஸ்லாமிய மதிப்பீடுளை ஒட்டித் தான் தம் செயல்கள் அமைந்தன என்று கூறுகிறார்கள்.

இப்போதும் கூட பல முஸ்லிம் அறிஞர்களும், ஆயிரக் கணக்கான முஸ்லிம்களும் இந்தக் குற்றம் இழைத்தவர்கள் இஸ்லாமிற்கு எதிரானவர்கள் அல்ல என்று கூறுகிறார்கள். இது ஒரு பெரும் அவலம்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் முஸ்லிம் மக்களின் எதிரிகள் என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும், அவர்களுடைய அணுகுண்டுகளை முஸ்லீம்கள் மீது வீசி, லட்சக் கணக்கான முஸ்லிம் மக்களைக் கொன்று போடாமல் இருப்பது ஏன் என்று நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். நியூ யார்க சம்பவங்களுக்கு இன்னமும் உங்கள் ஆதரவு உண்டென்றால், முகம்மது நபியவர்கள் இப்படிப்பட்ட ஒரு செயலை அங்கீகரித்திருப்பாரா என்று கேள்வி எழுப்புங்கள்.

அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் போரிட வேண்டும் என்று கோரும் போதே புனிதக் குரான் மிகக் கடுமையான கட்டுப் பாடுகளையும் விதிக்கிறது. (குரான் 4:135). ஒரு சாமனியரைக் கொல்வது என்பது மனித குலத்தையே கொல்வதற்கு சமானம் என்கிறது குரான் . (குரான் 5:32). தமக்கு அநீதி இழைத்தாலும் கூட யூதர்களையும் , கிறுஸ்தவர்களையும் மன்னிக்க வேண்டும் என்பது இன்னொரு வசனம். (குரான் : 2:109, 3:159, 5:85)

அமெரிக்க முஸ்லிம்களும் சரி, உலகத்து முஸ்லிம்களும் சரி மிகுந்த போலித்தனம் கொண்டுள்ளனர். இஸ்ரேல் செலுத்தும் அநீதிகளைக் கண்டனம் செய்யும் போது, முஸ்லீம் நாடுகளின்நிகழும் அநீதிகள் பற்றி இவர்கள் மெளனம் சாதிக்கிறார்கள். வளை குடா நாடுகளில் சம்பளமும், சட்டமும் முஸ்லிம்களுக்கு ஒன்றும் மற்றவர்களுக்கு ஒன்றும் என்று உள்ளது. இது அப்பட்டமான இனவாதம். இது பற்றி முஸ்லீம்கள் எந்த உலக அவையிலும் மறுப்புத் தெரிவித்ததில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீன் நாட்டை ஆக்கிரமித்தது தான் மேலை நாடுகள் மீது முஸ்லீம்களுக்கு உள்ள கோபத்தின் மிக முக்கியமான காரணம். ஆனால் இஸ்ரேலில் உள்ள பத்து லட்சம் அரபு மக்கள் , அரேபிய நாடுகளில் உள்ள அரபு மக்களைக் காட்டிலும் மிகுந்த மதிப்புடனும், உரிமைகளுடன் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்று பாலஸ்தீனிய அகதிகள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இங்கே வசிக்க முடியும். ஆனால்,குரானில் சொல்லப்பட்டிருப்பினும் கூட (குரான் 24:22), ஜோர்டான் தவிர – வேறெந்த வெற்றுப் பேச்சுப் பேசும் அரபு நாடும் பாலஸ்தீனிய அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் அநீதியைக் கண்டிக்கும் நாம் , முஸ்லீம் அரசுகள் முஸ்லீம்களைக் கொன்று குவிப்பது பற்றியோ, முஸ்லீம்களின் உரிமைகளை மறுப்பது பற்றியோ மெளனம் வகிக்கிறோம். சத்தாம் தன் மக்கள் மீதே – குர்து இன மக்கள் – ரசாயன ஆயுதங்களைப் பிரயோகம் செய்தது நினைவிருக்கிறதா ? பாகிஸ்தான் ராணுவம் வங்காள முஸ்லீம்களைக் கொன்று குவித்தது நினைவிருக்கிறதா ? ஆஃப்கானிஸ்தானில் ஒரு குழு இன்னொரு குழுவை வெட்டிச் சாய்த்தது நினைவிருக்கிறதா ? நம்மில் யாரேனும் இதையெல்லாம் கண்டனம் செய்தோமா ? இவர்களுக்கு எதிராக நாம் உலக அமைப்புகளில் குரல் கொடுத்திருக்கிறோமா ? இவர்களுக்கு எதிராக உலகம் அணி திரள வேண்டும் என்று கேட்டிருக்கிறோமா ? சவூதி அரேபியாவில் ஷியா முஸ்லிம்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் தெரியுமா ? அவர்கள் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுத்தோமா ? ஆனால் இஸ்ரேலைக் கண்டனம் செய்ய மட்டும் மிக ஆர்வமாய் இருக்கிறோம் – காரணம் பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காகவும் நல்வாழ்விற்குமான நம் அன்பு அல்ல. இஸ்ரேல் மீதுள்ள வெறுப்புத் தான் காரணம்.

முஸ்லீம்கள் அமெரிக்காவில் வசிக்க மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அமெரிக்காவை வெறுக்கவும் செய்கிறார்கள். அமெரிக்கா பயங்கர வாதா நாடு என்று சொல்லிக் கொண்டே அதில் தொடர்ந்து வசிக்கவும் செய்கிறார்கள். அவர்கள் இங்கே வாழ்வதே , மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் இங்கே அவர்கள் வசிக்க விரும்புவதன் சாட்சியம். இந்திய முஸ்லீம் என்ற முறையில் , அமெரிக்காவில் எனக்குக் கிடைத்துள்ள மரியாதையும், கெளரவமும் , இந்தியா உட்பட , வேறெந்த நாட்டிலும் எனக்குக் கிடைத்திராது என்பதை நான் உறுதியாய் அறிவேன். அமெரிக்கா என்னை நடத்திய அளவு முஸ்லீம் நாடும் என்னை நடத்தியிராது. செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியைப் போல இந்தியாவில் நடந்திருக்குமானால், ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே, வகுப்புக் கலவரங்களில் கொல்லப் பட்டிருப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் தலைவர்களும் சரி, ஊடகங்களும் சரி கவனமாய்ச் செயல்பட்டு , இப்படிப் பட்ட வெறுப்பைத் தவிர்த்திருக்கின்றன. பல இடங்களில் மசூதிகளைச் சுற்றி உள்ளூர் அமெரிக்கர்கள் மனிதச் சங்கிலி அமைத்துப் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். பல நகரங்களில் கிறுஸ்தவ ஆலயங்களில் முஸ்லீம் பெண்கள் போல் பர்தா அணிந்து , முஸ்லீம்களுடன் தங்கள் ஒற்றுமையைக் காட்டியிருக்கிறார்கள். அமைதி காத்து, சகிப்புத்தன்மையுடன் சாமானிய அமெரிக்கர்கள் தங்கள் உன்னத மனிதாபிமானத்தை நிரூபித்திருக்கிறார்கள். வெறும் மேம்போக்கான முஸ்லீம் ஒற்றுமையைக் காட்டிலும், அமெரிக்காவில் நமக்குக் கிடைக்கும் சுதந்திரம் விரும்பத் தக்கது என்று நாம் உரக்கப் பிரகடனம் செய்ய வேண்டும். இது உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், உடனே உங்களுக்குப் பிடித்தமான முஸ்லீம் நாட்டிற்கு பெட்டி படுக்கைகளுன் சென்று, குடியேறி உங்கள் கருத்தை நிரூபிக்க வேண்டும். நான் இங்கே தான் வாழ்வேன் , ஆனால் இந்த உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றால் அது கடைந்தெடுத்த போலித்தனம் ஆகும்.

இப்படிப் பட்ட போலித்தனங்களை நாம் கடந்து போக வேண்டும். அமெரிக்க முஸ்லீம் தலைவர்கள் , போலித்தனத்தைக் களைந்து, முஸ்லீம்களைத் தூய்மைப் படுத்தப் போராட வேண்டும்.

பல்லாண்டுகளாக , இஸ்லாமின் பெயரால் முஸ்லீம்கள் , முஸ்லீம்கள் மீதும் மற்றவர்கள் மீதும் வன்முறை செலுத்தி வந்திருக்கின்றனர். இஸ்லாமிய மதிப்பீடுகளுக்கும் , இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் இடையே உள்ள இந்தப் பெரும் பிளவினை, நாம் முஸ்லீம்கள் மீது மற்றவர்கள் செய்யும் அநீதியைச் சுட்டிக் காட்டி நியாயப் படுத்தி வந்திருக்கிறோம். நாம் கருத வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் இஸ்லாமிய மதிப்பீடுகளைப் பின்பற்றுவது என்பதும், இஸ்லாம் மீதான நம்பிக்கை என்பதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எப்படி நடந்து கொள்கிறது என்பதைச் சார்ந்து இருக்க முடியாது. இஸ்லாமின் பெயரால், இப்படிப்பட்ட அர்த்தமற்ற வன்முறையையும், இரக்கமற்ற படுகொலைகளையும் நியாயப் படுத்த முடியுமா ?

முஸ்லீம் பயங்கரவாதிகளின், இந்த வெறுப்பு நிரம்பிய அரசியல் போக்கிற்குப் பலியாகிறவர்கள் உலகெல்லாம் உள்ள முஸ்லீம்களே. வெறுப்பு என்பது சகிப்பின்மையின் உச்சகட்டம். வெறுப்புக்கு ஆளானவர்கள் எந்த ஆக்க பூர்வமான செயலையும் செய்ய மாட்டார்கள். தாலிபான் போன்ற அமைப்புகள் , மேலை நாடுகளின் மீதான வெறுப்பை வளர்த்துக் கொண்டு அதிலேயே அமிழ்ந்து போனதால், தம்முடைய மக்களின் நலனிற்கு எதுவுமே செய்ய இயலாமல், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிறார்கள். இதன் பலன் முஸ்லீம் உலகிலும் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் படுவார்கள். ஏற்கனவே ஐந்து லட்சம் ஆஃப்கான் மக்கள் வீடிழந்து அகதிகளாய்ப் பரிதவிக்கிறார்கள். யுத்தம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. இன்னும் மோசமாகத் தான் ஆகும் இந்த நிலைமை.

ஹமாஸ் , இஸ்லாமிய ஜிகாத் போன்ற அமைப்புகள் சில யூதர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், தற்கொலைப் படையினால் சொல்லலாம். யூதர்களைப் பழி வாங்கிவிட்ட திருப்தியை அடையலாம். ஆனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தான் இந்தச் செயலுக்கு பலியாகிறார்கள்.

வெறுப்பும் படுகொலைகளும், முஸ்லீம் சமூகத்தின் அடிப்படையைத் தகர்த்தவாறு உள்ளன. மற்றவர்கள் மீது நம் கவனத்தைக் குவித்ததனால், அல்லாவின் முன் நம் கடமை என்ன என்பதையும் நாம் மறந்துவிட்டோம். ஒரு கீழான ஜிகாத்திற்காக, ஒரு மேம்பட்ட ஜிகாதைப் பலி கொடுத்து விட்டோம். இஸ்லாமிய மறுமலர்ச்சி, நீதியும் ஒழுக்கமும் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டி யெழுப்புவதற்குப் பதில், படுகொலை மற்றும் கலவரங்களை நோக்கி இவர்களால் இழுத்துச் செல்லப் பட்டு விட்டது. பின் லேடன் ஒரு தனி மனிதன் எனில் எந்தப் பிரசினையும் இல்லை. ஆனால் பின் லேடன் ஒரு கருத்துருவமாக, நம் இளைய சமூகத்தின் நெறிகளைப் பீடித்துள்ள புற்று நோயாக , எதிர்காலத்தின் ஆன்மீக நலனைப் புதைத்து விடக்கூடிய முறையில் எழுந்துள்ளது.

இந்தக் கிறுக்குத் தனம் மேலாண்மை பெற்று நம் இஸ்லாமிய மறுமலர்ச்சியைப் பின்னடைவு செய்யப் பண்ணி விட்டது. ஆமாம், அமெரிக்கா பின் லேடனை வளர்த்து விட்டது உண்மை தான், ஆனால் நாம் தான் இந்தக் கருத்துகள் வளர இடம் அளித்தோம். இஸ்லாமின் பெயரைப் பயன்படுத்தி இப்படிப் பட்ட செயல்கள் செய்வதைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் நடந்தேயிராத வண்ணம் நாம் செயல்பட்டிருக்கத் தவறி விட்டோம்.

அமெரிக்க யூதர்களின் செல்வாக்கைப் பற்றிக் கவலைப் படுவதைக் காட்டிலும் நமக்கு வேறு கடமைகள் உள்ளன என்ற விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். இஸ்லாம் என்பது யூதர்களைத் தோற்கடிப்பதோ, ஜெருசலேம் மீது வெற்றி பெறுவதோ அல்ல. இஸ்லாம் என்பது இரக்கம், தியாகம், கடமை. ஒழுக்க நெறிகளைச் சீரமைப்பதே இஸ்லாமின் மேன்மையான கடமை. ஒன்றுமறியாத மக்களைக் கொன்று குவிப்பது ஒழுக்கமே அல்ல.

நாம் நம் வாழ்க்கையையும், நம் அமைப்புகளையும் அமைதி தேடலிலும் , சகிப்புத்தன்மையை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும். நாம் இந்தக் குணங்களில் மற்றவர்களை விட மேம்பட்டு விளங்க வேண்டும். அநீதியைப் பொறுப்பது அநீதி இழைப்பதைவிட மேலானது. இஸ்லாமின் புனிதக் கடமை இது தான். நெறிமுறைகளில் மற்றவர்களைக் காட்டிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும் மன்னிப்பு மனப்பான்மையும், தியாக மனப்பான்மையும் கொண்டு திகழ வேண்டும். நம் நெறிகளின் உண்மையை உலகுக்கு உணர்த்த அது ஒன்றே வழி.

நம்முள் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். முகம்மது அவர்களின் கருணை போதனை எப்படி பயங்கரவாதமாகவும், அச்சுறுத்தலாகவும் மாறியது ? இந்தத் தீமையை ஒழிப்பதும் நம் பொறுப்பே. இது நம் கடமை, நமது வாய்ப்பு.

Series Navigation

டாக்டர் முக்தேதார் கான்

டாக்டர் முக்தேதார் கான்