அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை

This entry is part [part not set] of 7 in the series 20000905_Issue

ஆசை ஆசைத்தம்பி


இட்லி என்னடா தோசை என்னடா அவசரமான உலகத்திலே

மெக்டானல்ட்ஸ் போகிறார் வாங்கித் தின்கிறார் ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே

ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே

தாயும் தந்தையும் ராவும் பகலுமாய் ஓடி உழைக்கிறார் பாரடா

இவர் பெற்ற பிள்ளைகள் தனித்து வீட்டிலே இருக்கும் சேதியும் கேளடா

இருக்கும் சேதியும் கேளடா

தனித்து வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார் பாரடா

அவர் நிண்ட்டிண்டோவிலும் இண்டெர்நெட்டிலும் பொழுதைக் கழிக்கிறார் பாராடா

பொழுதைக் கழிக்கிறார் பாராடா

செல்வம் சேர்க்கவே இங்கு வந்ததாய் என்றும் சொல்கிறார் கேளடா

இவர் மார்ட்டுகேஜையும் காரு லோனையும் அடைப்பது எந்த நாளடா

அடைப்பது எந்த நாளடா

கொலஸ்டராலையும் கேலரீயையும் எண்ணிப் பார்க்கிறார் பாரடா

இவர் கருணைக் கிழங்கையும் முருங்கைக் காயையும் பார்த்து எத்தனை நாளடா

பார்த்து எத்தனை நாளடா

பத்து மைல்களோ நூறு மைல்களோ பார்ட்டி என்றதும் பாரடா

இவர் ஒட்டு மொத்தமாய் குடும்பத்தாருடன் ஓட்டிச் செல்கிறார் காரடா

காரோட்டிச் செல்கிறார் பாரடா

ஆண்டுக்கொரு முறை வீட்டு ஞாபகம் வந்து விட்டதும் பாரடா

இவர் மூட்டை முடிச்சுடன் இரண்டு வாரங்கள் இந்தியாவில் இருப்பாரடா

சொந்த ஊரில் இருப்பாரடா

பெற்ற தாயையும் சுற்றத்தாரையும் பிரிந்து வந்தவர் தானடா

இவர் பெற்ற பிள்ளைகள் பிரிந்து போகையில் வருத்தப் படுகிறார் ஏனடா

வருத்தப் படுகிறார் ஏனடா

குழந்தை வளர்ப்பிலே தமிழுக்கிடமின்றி ஆகிப் போனது ஏனடா

அட அமெரிக்காவிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை இது தானடா

வாழ்க்கை முறை இது தானடா

 

 

  Thinnai 2000 September 5

திண்ணை

Series Navigation

ஆசை ஆசைத்தம்பி

ஆசை ஆசைத்தம்பி