அமெரிக்காவில் ஜெயகாந்தன் – 2

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

(தாம்பாவில் சூலை 3ம் தேதி நிகழ்ந்த உரையாடலிலிருந்து)


கேள்வி : எப்படி எழுத ஆரம்பித்தீர்கள் ? என்ன இன்ஸ்பிரேஷன் ?

ஜெயகாந்தன் : இந்தக் கேள்விக்குப் பல முறை பல விதமாக நான் விடை தந்திருக்கிறேன். ஆனாலும் சில கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் . அதற்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் படித்து விட்டு எழுத வருவார்கள். நான் எழுத ஆரம்பித்தவுடன் தான் படிக்க ஆரம்பித்தேன். எனக்கும் எழுத்துக்கும் ஏற்பட்ட சம்பந்தம் : அச்சகத்தில் எழுத்துக் கோர்க்கும் பணியில் முதலில் நான் சேர்ந்தேன். அந்தப் பணி ரொம்பச் சிரமமானது. விரல் நுனியெல்லாம் எரியும். அப்பொழுது நான் இருந்த சூழ்நிலையை உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்னைச் சுற்றிலும் அறிஞர்களும், சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் போராட்ட வீரர்களாகச் சூழ்ந்திருந்தனர். அவர்களில் ஒருவனாக என்னையும் அங்கீகரித்துக் கொண்டிருந்தனர். எனவே என்னுடைய எண்ணங்களையும், என்னுடைய சிந்தனைகளையும் நான் உருவாக்கிக் கொள்வதற்கு , நான் கம்போஸ் செய்த அவர்களின் எழுத்துக்கள் தான் உந்து சக்தியாய் இருந்தது. அந்தத் தோழர்கள் தான் எனக்கு ஊக்கம் தந்தார்கள். எழுதுமாறு ஆசிரியன் மாணவனுக்குக் கட்டளையிடுவது போல் என்னை எழுதப் பணித்தார்கள். அவர்கள் அங்கீகாரத்தையும் ,அவர்களுடைய ஆசிகளையும் பெறுவதற்காக ஆரம்பத்தில் எழுதத் துவங்கினேன். அவர்கள் தான் என்னை எழுதுவதற்குத் தூண்டினார்கள். இது தான் நான் எழுத வந்ததற்கான பொதுவான உந்து சக்தி என்று சொல்ல வேண்டும்.

கேள்வி : அக்கினிப் பிரவேசம் கதையை இப்போது எழுதினால் எப்படி முடித்திருப்பீர்கள் ?

ஜெயகாந்தன்: இப்போது எழுதினாலும் அந்தக் கதை அப்படித் தான் இருக்கும்.

கேள்வி : ஏன் இப்போது அதிகம் எழுதவில்லை ?

ஜெயகாந்தன் : ஏன் இன்னமும் எழுதிகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்காமல் , ஏன் எழுதவில்லை என்று உங்களைக் கேட்க வைத்திருப்பது என் வெற்றி.

கேள்வி : கதை கட்டுரை நாவல் குறுநாவல் இவற்றில் எது உங்களுக்கு அதிகத் திருப்தி அளிக்கிறது ?

ஜெயகாந்தன் : சிறுகதை .

கேள்வி: நீங்கள் பொதுவுடைமைக் கருத்துகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். பொதுவுடைமை தோல்வி கண்டு விட்டது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?

ஜெயகாந்தன் : நான் எப்போதும் பொதுவுடைமையில் நம்பிக்கை உள்ளவன். பொதுவுடைமைக்கு எதிராக நான் ஏதும் எழுதியதில்லை. அது தோற்றதற்குக் காரணம் அதைக் கையாண்டவர்களின் பலவீனமே தவிர தத்துவத்தின் பலவீனமோ குறைபாடோ அல்ல.

கேள்வி : மொட்டாக அமெரிக்காவில் இருக்கும் சில எழுத்தாளர்கள் உங்களிடம் இந்தியாவிற்கு வந்து மலர வாய்ப்பு இருக்கிறதா ?

ஜெயகாந்தன் : மொட்டு என்றால் மலரும்.

கேள்வி : எழுத்தாளரான உங்களுடைய கருத்து இலங்கைப் பிரசினை பற்றி என்ன ?

ஜெயகாந்தன் : அங்கே அமைதியும் நல்வாழ்க்கையும் தமிழர்களுக்கு அமைய வேண்டும் என்று இந்தியா முழுமையும் விரும்புகிறது. என் விருப்பமும் அது தான்.

கேள்வி : இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன ?

ஜெயகாந்தன் : நான் இளைஞர்களுக்கு எதுவும் சொல்ல விரும்புவதில்லை. அவர்கள் கேட்க மாட்டார்கள். நான் கூட இளைஞனாக இருந்த போது பெரியவர்கள் சொன்னதைக் கேட்டதில்லை. எனவே அந்த வீண் முயற்சியில் நான் இறங்காமல், இளைஞர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை அக்கறையோடும், அன்போடும் கவனித்துக் கொண்டு வருகிறேன்.

கேள்வி : சாகித்ய அகாடமி விருதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.. சாகித்ய அகாடமி விருது பெற்றவுடன் உங்கள் மன நிலை எப்படி இருந்தது ?

ஜெயகாந்தன் : சாகித்ய அகாடமி விருது ஆகட்டும். எந்த விருதாகட்டும் அதன் மூலம் எழுத்தாளனையோ படைப்பாளனையோ அடையாளம் கண்டு கொள்ள முயலாதீர்கள்.

கேள்வி : சரித்திரத்தில் நீங்கள் இடம் பெற்று விட்டார்கள். இருப்பினும்மிஇந்த முதுமையை மன அமைதியோடு சந்திக்கிறீர்களா ?

ஜெயகாந்தன் : முதுமை முற்றியே இடம் பெறும் . அதை நான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்.

கேள்வி : அமெரிக்காவில் படிக்கும் பழக்கம் நிறைய இருக்கிறது. பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. இந்தியாவில் வாசிப்புப் பழக்கம் குறைவாய் இருக்கிறது..

ஜெயகாந்தன்: நல்ல நூல்கள் வருகிறபோது நல்ல வாசகர்கள் வருவார்கள். இன்றைக்கு வாசகர்கள் இல்லையோ என்று வருந்த வேண்டாம். நல்ல நூல்கள் வந்தால் நல்ல வாசகர்கள் வருவார்கள்.

கேள்வி : பள்ளிக்கூடத்தில் இதற்கு அழுத்தம் கொடுத்தால் .. .

ஜெயகாந்தன் : எனக்கும் பள்ளிக் கூடத்திற்கும் சம்பந்தமே இல்லை.

பள்ளிக்கூடம் எப்படி நடக்கிறது என்று நான் பார்த்ததே இல்லை.

கேள்வி : நீங்கள் படைத்த பாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார் ?

ஜெயகாந்தன் : ஆண்களில் ஹென்றி. பெண்களில் கங்கா.

கேள்வி : நீங்கள் பேசவே மாட்டேன் என்கிறீர்கள்

ஜெயகாந்தன் : கேட்பது எனக்கு இன்பமாய் இருக்கிறது. நான் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வந்தேன். அதற்கு நிறைய கிடைத்திருக்கிறது.

கேள்வி : அந்த இன்பம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா ?

ஜெயகாந்தன் : நான் உழுது விதைத்து இன்று அறுவடை செய்துகொண்டிருக்கிறேன். ஏன் இப்போது உழவில்லை, விதைக்கவில்லை என்று கேட்பது போலிருக்கிறது.

கேள்வி: சில பாத்திரங்களை மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். பெண்களைப் பற்றி நீங்கள் எழுதித் தான் எனக்குத் தெரியும். நீங்கள் அந்தக் கதாபாத்திரங்களைப் படைத்தது எப்படி என்று விரிவாகச் சொன்னால் பயனுள்ளதாய் இருக்கும்.

ஜெயகாந்தன் : மகற்குத் தாயள் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லெனில் சொல்லுமாறு என்னடி ?

Series Navigation

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்