அப்பாவி சிறுவன்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

டினோ புஸாட்டி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


[டினோ புஸாட்டி ( Dino Buzzati) 1906-1972: சிறுகதை, நாவல், நாடகம், கவிதையென்று படைப்பின் பலவடிவங்களிலும் ஆர்வம்கொண்ட இத்தாலிய எழுத்தாளர். சட்டம் பயின்ற பின்னர் எதிர்பாராமல் இதழியல் துறைக்கு அவர் வரநேர்ந்தது. பிறகு இறுதிக்காலம் வரை மிலான் நகரிலிருந்து பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த தினசரியொன்றில் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். The Tartar Steppe மிக முக்கியமானதொரு நாவல். அப்பாவி சிறுவன் என்ற சிறுகதை, Il colombre (1966) தொகுப்பில் இருக்கிறது. சிக்கல்மிகுந்த மானுடத்தை எதிர்கொள்ள திராணியற்றிருந்த கா·ப்காவின் தாக்கம் இவர் எழுத்தில் உண்டென்பதைப்போலவே இருத்தலியல்வாதியான சார்த்துரு, மிகைஎதார்த்தவாதியான ஆந்த்ரே பிரெத்தோன் இவர்களது பாதிப்பும் உண்டென்பது இலக்கிய விமர்சர்களின் கணிப்பு ]

நேரம் கிட்டத்தட்ட பிற்பகல் மூன்று மணி. அன்றைக்கும் வழக்கம்போல மதாம் கிளாரா தமது ஐந்து வயது மக¨னை ஆற்றங்கரையோரமாகவிருந்த பொதுப்பூங்காவிற்கு அழைத்துவந்திருந்தாள். காலநிலை தேவலாம் என்பதுபோலவிருந்தது. சூரியன் கண்னாமுச்சி விளையாடிக்கொண்டிருந்தான். திடீர் திடீரென்று வீசியக் காற்று நதியைத் தடவிச் சென்றது.

அழகானப் பையனென்று அவனை ஒருவரும் சொல்லிவிடமுடியாது, அதற்கு நேரெதிராக இருந்தான். சொல்லப்போனால் பலருக்கும் இளக்காரமாக, சவலையாக, நோஞ்சானாக, அவனது சகவயதுப் பையன்களால் சாலட்கீரை(lettuce) என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு கேலிப்பொருளாகியிருந்தான். பொதுவாக இப்படி சவம்போல இருக்கிறபிள்ளைகளுக்குக் குறையை சரிசெய்வதுபோல கண்கள் கறேலென்று பெரிதாக அமைந்து முகத்திற்கு ஒளியூட்டும். பார்க்கும் எவரையும் அக்கண்கள் வசீகரிக்கும். ஆனால் டொ·ல்பிக்கு அதுவுமில்லை: இருகண்களும் பார்க்கப் பரிதாபமானவை. பார்வையைக் குறித்தும் பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை.

அன்றைய தினம் சாலட்கீரை என்று சகதோழர்களால் அழைக்கப்பட்டவன் கையில், புத்தம்புது துப்பாக்கியொன்று இருந்தது. அதில் அவ்வப்போது தோட்டக்களை நிரப்பி சுடவும் செய்தான். அவனது ஆயுதத்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்திடாதென்றபோதிலும் பிள்ளைகளைப் பொறுத்தவரை அது துப்பாக்கி. பிற சிறுவர்களோடு விளையாட இவன் விரும்பினாலும் அவர்கள் கேலி செய்தார்கள், எனவே விளையாட முடியாமற்போனாலும் பரவாயில்லையென தனியாக இருந்தான். விலங்குகளுக்குத் தனிமைதரும் துயரம்குறித்து கவலைகளில்லையென்பதால் பிற உயிர்களிடமிருந்து விலகி மகிழ்ச்சியாக அவைகளால் வாழ முடிகிறது. ஆனால் மனிதர்களுக்கு அது கடினம், எனவே சாலட்கீரையையும் துயரம் சூழ்ந்தது. ஆனாலும் பையன்கள் இவனைக் கடந்துபோகிறபோதெல்லாம் தோளில் துப்பாக்கியை தாங்கிப்பிடித்தபடி டுடுடுடு….என சுடுவதுபோல பாவலா பண்ணினான். அவர்களை மிரட்டவேண்டும் என்கிற எண்ணத்தில் அவன் அதைச் செய்யவில்லை,மாறாக:

” இங்கே பாருங்க, எங்கிட்டேயும் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எதற்காக உங்க விளையாட்டில் என்னைச் சேர்க்கமாட்டறீங்க?” என்பது அதற்குப் பொருள்.

அது மிக மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும் பொம்மைத் துப்பாக்கியென்று பையன்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் புதிய பொருளுக்கேயுரிய மினுமினுப்புடனும், தங்கள் துப்பாக்கிபோல அல்லாமல் அது வேறொன்றாக இருந்ததும் டொல்பியின் துப்பாக்கியைக் கிட்டத்தில் பார்க்கவேண்டுமென்ற ஆசையைப் பையன்களிடத்தில் உண்டாக்கியது. அவர்களில் ஒருவன்:

” சாலட்கீரை கையிலிருக்கிற இருக்கிற துப்பாக்கியை பார்த்தீங்களா?”

“நம்மோட சேர்ந்து விளையாடவென்று அவன் துப்பாக்கியைக் கொண்டுவரலை. அவன் துப்பாக்கி வச்சிறுக்கிறதை நமக்கு காட்டணுமில்லையா அதற்குத்தான் வந்திருக்கான். அந்த பன்றிக்குத் தனியாக விளையாடக்கூட போதாது. பிறகு அதெல்லாம் ஒரு துப்பாக்கியா?” -மற்றவன்.

“நம்மைக்கண்டால் பயம். அதனால் தனியேகூட விளையாட மாட்டான்”- மூன்றாமவன்

முதல் பையன்:

” ஆமாம். அதுதான் உண்மை. அவன் எதுவேண்டுமானாலும் வச்சிருக்கட்டும். எனக்கென்னவோ அவனை பிடிக்கலை.”

மதாம் கிளாரா பூங்கா இருக்கையொன்றில் அமர்ந்தபடி கம்பளி நூல்கொண்டு மும்முரமாகப் பின்னிக்கொண்டிருந்தாள். அவள் தலைக்குமேலே சூரியக் கதிரொளி ஏற்படுத்திய வட்டம். சிறுவனுக்குப் பாதையில் இறங்கினால் எங்கே கைவசமிருக்கும் துப்பாக்கியை பறிகொடுக்கவேண்டியிருக்குமோ என்கிறபயம். எனவே துப்பாக்கியை மாற்றி மாற்றி பிடித்தபடி தாயுடன் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். இன்னும் மணி நான்காகியிருக்க வாய்ப்பில்லை. அருகிலிருந்த மரங்களில் பறவைகள் எழுப்பிய பலவிதமான சத்தம், அந்தி சாயவிருப்பதை கோடிட்டுக் காட்டியது.

” டொல்பி போடா ராஜா! எல்லோரும் விளையாடறாங்க பாரு!”- மதாம் கிளாரா தமது பின்னல் வேலையிலிருந்து பார்வையைத் திருப்ப விருப்பமில்லாதவள்போல மகனுக்கு ஆணையிட்டாள்.

“யார்கூட விளையாட சொல்ற?”

“வேற யார்கிட்டே, உன்னுடடைய சிநேகிதர்கள்கூட விளையாடுண்ணுத்தான் சொல்றேன். அங்கே விளையாடறவங்கல்லாம் உன்னுடைய நண்பர்கள்தானே?”

“இல்லை! அவங்கெல்லாம் எனக்கு நண்பர்களில்லை. அவர்களெல்லாம் என்னைக் கிண்டல் செய்யறாங்க.”

“எல்லோரும் உன்னை சாலட் கீரைண்ணு கூப்பிடறதை வச்சு அப்படிச்சொல்ற இல்லையா?”

“சாலட் கீரைண்ணு என்னை கூப்பிடறதை நான் விரும்பலை”

“சொன்னா சொல்லிப்போறாங்க. சாலட் கீரை ஓண்ணும் தப்பானதில்லை. நல்லதுதான். இந்த அற்ப விஷத்துக்கெல்லாம் கோபிச்சுக்கக்கூடாது.”

“சாலட்கீரைண்ணு என்னைக் கூப்பிடுவதை நான் விரும்பலை.”- பிடிவாதத்துடன் மறுத்தான்.

பிள்ளைகள் பூங்காவிற்கு வருகிறபோதெல்லாம் யுத்த விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அன்றையதினம் அவர்கள் விளையாடியதும் அதுதான். அவர்களோடு விளையாடவென்று ஒருமுறை டொல்பி போனான். உடனே அவர்கள் இவனை சாலட்கீரையென்று அழைத்து கைகொட்டி சிரித்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் தலைமுடி தேன் நிறம் இவனுக்கு அது பழுப்பு நிறத்திலிருந்தது. அதிற் கொஞ்சம் முன் நெற்றியில் அரைப்புள்ளிபோல விழுந்து பார்க்கக் அசிங்கமாக இருந்தது. மற்றவர்கள் கால்களெல்லாம் தடிமனாக இருந்தன. மாறாக இவனுடைய கால்கள் புல்லாங்குழல்போல அத்தனை ஒல்லி. மற்ற பையன்கள் ஓடும்போதும், பாய்ந்து குதிக்கிறபோதும் அவர்களைப் பார்க்க முயல்போலவிருந்தது. ஆனால் இவனே விரும்பினாலும்ங்கூட அவர்களுடன் போட்டிபோடமுடியவில்லை. அவர்களிடம் துப்பாக்கி, வாள், கவண், வில், ஊதுகுழல், தலைக்கவசம் அவ்வளவுமிருந்தன. பொறியாளர் வைஸ் மகன் குதிரைவீரர்கள் அணிகிற மார்புக் கவசங்கூட வைத்திருந்தான். அவர்களுக்கும் இவன் வயதுதானென்றாலும் சர்வசாதாரணமாக கெட்டவார்த்தைகளைச் சொன்னார்கள். கண்டபடி ஏசுகிறார்கள். இவனுக்கு அதுபோன்ற துணிச்சலில்லை. அவர்கள் பலசாலிகள், இவன் பலவீனமானவன்.

ஆனால் இந்தமுறை இவனிடமும் துப்பாக்கி இருக்கிறது. பையன்களெல்லாம் ஒன்றாகக்கூடி குசுகுசுவென்று என்னவோ பேசி முடிவெடுத்தபின்னர் இவனிடம் வந்தார்கள்

“உன்னுடைய துப்பாக்கி ரொம்ப நல்லா இருக்குது, எங்கே காட்டு பார்க்கலாம்”, பொறியாளர் வைஸ் மகன் மாக்ஸ் இவனிடம் நெருங்கி உறவு கொண்டாடினான்.

டொல்பி துப்பாக்கியை இறுக்ககப் பிடித்தபடி அவர்களைப் பார்க்க அனுமதித்தான்.

“பரவாயில்லை, நல்லாதான் இருக்குது!- ஏதோ துப்பாக்கி விஷயத்தில் எல்லாம் தெரிந்தவன்போல மாக்ஸ் அபிப்ராயம் தெரிவித்தான். டொ¡ல்பிக்கு அவனது புகழ்ச்சியான வார்த்தைகளைக்கேட்க மகிழ்ச்சி. இத்தனைக்கும் மாக்ஸிடம் இவனது துப்பாக்கியைக்காட்டிலும் இருபதுமடங்கு விலைகூடிய உயர்ரக துப்பாக்கியொன்றிருந்தது.

” இந்தத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நீகூடத்தான் யுத்தம் செய்யலாம்”, சொன்னவன் வால்ட்டர் என்றபையன். சொல்லும்போது அவனுடைய பார்வை சரியில்லை.

டொல்·பிக்கு உண்மையில் மிகவும் ஆனந்தம். இதுவரை நடந்த உரையாடலில் எந்தப் பையனும் சாலட் கீரையென்று இவனை அழைக்கவில்லை. முதன் முறையாக அவர்களுடன் சேர்ந்து விளையாடவேண்டுமென்ற ஆர்வம் வந்தது.

நடக்கவிருக்கிற யுத்தம்பற்றி அவனிடம் விளக்கிச்சொன்னார்கள். இரண்டு படைகள். ஒரு படைப்பிரிவினர் மலையை ஆக்ரமித்திருப்பார்கள், அவர்களை வழிநடத்தும் ஜெனரலாக மாக்ஸ். மற்றபடையினர் அவர்களைக் கடந்து முன்னேறவேண்டும். அப்பிரிவினருக்கு வால்ட்டர் என்பவன் ஜெனரல். மலைகள் என்பது வேறொன்றுமல்ல புற்களும் காட்டுச்செடிகளுமாகக்கிடந்த இரண்டு புதர்கள். முன்னேறிச்செல்லவேண்டிய பாதை என்பது ஒரு சிறிய சரிவான பாதை. வால்ட்டர் படையில் டொல்பியைச் சேர்த்துக்கொண்டு அவனுக்கு கேப்டன் உத்தியோகம் கொடுக்கப்பட்டது. பையன்கள் இருபிரிவினராகப் பிரிந்துசென்று யுத்தத்திற்கான ரகசியத் திட்டங்களைக் கூடிப்பேசினார்கள்.

முதன்முதலாக டொல்·பி பையன்களிடம் நம்பிக்கைவைத்து தீவிரமாக இறங்கினான். படையை முன்னின்று நடத்திச்செல்லும் முக்கியமான பணியை வால்ட்டர் டொல்பிக்குக் கொடுத்திருந்தான். அவனுக்குத் துணையாக பார்வையில் விஷமமும், கைகளில் கவண்களுமாக இருபையன்கள். வால்ட்டர் கட்டளையின் கீழ் படையை அவர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். வால்ட்டரும் மற்றவர்களும் சிநேகபாவத்துடன் இவனிடத்தில் புன்னகைத்தபோதிலும், கொஞ்சம் செயற்கைத்தனம் கலந்திருந்தது.

டொல்·பி திட்டமிட்டபடி சரிவாக இருந்த சிறிய பாதையை நோக்கிச் சென்றான். இருபுறமும் புதர்கள் மண்டிக்கிடந்தன. மாக்ஸ் தலமையிலான படையினர் மரத்தின் பின்னோ புதர்களிலோ மறைந்து எந்த நேரத்திலும் இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாமென்பது வெளிப்படை. ஆனால் அப்படியேதும் நடப்பதற்கான அறிகுறிகளின்றி அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது.

“கேப்டன்! எதிரிகள் யாரும் இன்னும் தயாராகவில்லையென்று நினைக்கிறேன். நாம் பயமில்லாமல் முன்னேறலாம்! சரிவில் முன்னேறி வேகமாக இலக்கை அடைத்ததும் உதவிக்கு நாங்கள் ஓடி வருவோம், அவர்கள் தாக்குதலிருந்து உன்னைக் காப்பாற்ற தக்க சமயத்தில் உதவிக்குவருவோம். எனவே ஓடு..வேகமாக ஓடு எதுவேண்டுமானாலும் நடக்கும் நாம் முந்தவேண்டும்” – வால்ட்டர் நம்பிக்கையோடு கட்டளையிட்டான்.

டொல்பி திரும்பினான். வால்ட்டரினும்பார்க்க அவனுக்குத் துணையாக நிற்கவேண்டியர்களின் விளங்கிக்கொள்ளமுடியாத முறுவலைக்கண்டு ஒரு சில நொடிகள் தயங்கி நின்றான்.

“உங்கள் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” -டொல்பி.

“கேப்டன்! பேசிக்கொண்டிருக்க இது நேரமில்லை. நம்ம படை முன்னேறவேண்டும். ஆகட்டும்!”. வால்ட்டர் தூண்டினான். அச்சமயம் பார்த்து ஆற்றுக்கு மறுகரையில். ஒரு ராணுவ பேண்டுவாத்திய குழு போனது. கொம்பூதியின் நாதம், ஒரு ஜீவனாக டொல்·பியின் இதயத்தில் இறங்கியது. தனது சல்லிக்காசு பெருமதி ஆகாத துப்பாக்கியை ஒருவிதபெருமிதத்துடன் இறுகப் பற்றினான். புகழும் பெருமையும் அவனது அடுத்த செயல்பாட்டுக்குக் காத்திருப்பதுபோல உணர்ந்தான்.

“இதுதான் தகுந்த நேரம், காரியத்தில் இறங்குவோம்”, உணர்ச்சிப்பெருக்குடன் முழக்கமிட்டான்.

முதன்முறையாகஅசாதரண துணிச்சல் அவனிடம் வந்திருந்தது. சரிவுப்பாதையில் இறங்கி ஓடினான். அதே நேரம் கொல்லென்று ஒரு சிரிப்பு, அவனுக்குப் பின்புறமிருந்து புறப்பட்டு வந்தது. அவற்றிலெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை. முழுமையாக யுத்தத்திற்குத் தன்னை ஒப்படைத்து ஓடிக்கொண்டிருந்தவேளை சட்டென்று எதோஒன்று காலைத்தடுக்கியது. தடுமாறினான். தரையிலிருந்து பத்து செ.மீ.உயரத்தில் மெல்லிய கயிறு பாதையின் குறுக்கே கட்டப்பட்டிருந்தது.

நிலைகுலைந்து மல்லாந்து விழுந்தான். மூக்கில் நல்ல அடி. உடம்பு முழுக்கத் தரையில் கிடந்தது. பிடித்திருந்த துப்பாக்கி கைநழுவிப்போனது. பேண்டுவாத்தியக்குழுவினரின் உரத்து ஒலித்த இசையை முந்திக்கொண்டு கூச்சல், நாலாபக்கமிருந்து திபுதிபுவென்று சத்தம். பையன் எழுந்திருக்க முயற்சித்தான். புதரிலிருந்து வெளிப்பட்ட எதிரிகள் களிமண் குண்டுகளை எறிகிறார்கள். அவற்றில் ஒன்று நேராகவந்து காதைத் தாக்கியது. மீண்டும் தடுமாறி மண்ணில் விழுந்தான். அவர்களுக்கு வசதியாகப் போயிற்று அவன் மீது பாய்ந்தார்கள். ஏறி மிதித்தார்கள். அவனது படைப்பிரிவுக்கு ஜெனரலாக அறிவிக்கப்பட்ட வால்ட்டரும் எதிரிப்படையுடன் சேர்ந்துகொண்டு இவனைத் தாக்கினான்.

” இந்தா வாங்கிக்கோ, கேப்டன் சாலட்கீரை!”

அடுத்த சில நொடிகளில் பையன்கள் அனைவரும் காணாமற்போனார்கள். மறுகரையில் கேட்ட பேண்டுவாத்திய இசைகூட அடங்கிப்போயிருந்தது. எதிர்பாராத தாக்குதலில் உடலில் வேதனை, தாங்கொணாத வலி, உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தூப்பாக்கியைத் தேடி கண்களை ஓடவிட்டான். தரையிற் கிடந்ததை கையில் எடுத்துக்கொண்டான். சற்று முன்பிருந்த வடிவத்தில் இல்லை. இப்போது அது உடைந்தும் நசுக்கியுமிருந்த ஓர் உலோகத்துண்டு. வேண்டுமென்றே அதன்மீது ஏறி மிதித்து உடைத்திருக்கவேண்டும். இனி அதனை உபயோகிக்க வாய்ப்பே இல்லை.

உடைந்த துப்பாக்கியைக் கையில் வாரிக்கொண்டு, மூக்கில் இரத்தம் கொட்ட, வீங்கிய முழந்தாள்களும் தலைமுதல் கால்வரை மண்ணிற் புரண்ட உடலுமாக, தன் தாயைத் தேடி வந்தான்.

” அய்யோ கடவுளே! டொல்·பி என்ன செஞ்ச? ஏன் இப்படி? ”

மதாம் கிளாராவை பொறுத்தவரை. இது மற்றபையன்களால் ஏற்பட்டதல்ல. டொல்·பி தானே தேடிக்கொள்வது. உடனடியாக அவளுக்கு எரிச்சலூட்டிய விஷயம் அணிந்திருந்த சட்டையை இப்படி கிழித்துக்கொண்டு வந்திருப்பது. அடுத்து மகன் அவமானபட்டு நிற்பதும் ஒரு நல்ல தாய்க்கு மகிழ்ச்சிதருவதல்ல. வளர்ந்து பெரியவனானால் பையனுடைய கதியென்ன? எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன சங்கடங்கள் காத்திருக்கிறதோ, யார்கண்டது. ஊரிலுள்ள பிள்ளைகளைப்போல தேன்நிற தலைமுடியும், கொழுகொழு உடலுமாக பூங்காவில் ஓடி விளையாடும் பிள்ளையொன்றினை இவளால் பெறமுடியாமல் போனதெப்படி? உயரத்திலும் வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லை. முகத்திலும் உடலிலும் எந்நேரமும் சவக்களை? ஏன் ஒருத்தருக்கும் இவன் மேல் பிரியம் வரமாட்டேன் என்கிறது. இரத்தமற்று போனவன்போல நடந்துகொள்கிறான். எதையும் முன்னின்று செய்ய ஆர்வமில்லை. எப்போதும் யாரேனும் வழிநடத்த வேண்டுமென்கிறான். அடுத்த பதினைந்து இருபது ஆண்டுகளுக்குப்பிறகு தமது மகனைப்பற்றிய கற்பனையில் மூழ்கினாள்: ராணுவ உடையில் மிகப்பெரியதொரு குதிரைபடைக்குத் தலைமை தாங்குகிறான். இளமையும் அழகுங்கொண்ட பெண்ணொருத்தியை மணக்கிறான். பெரிய நிறுவனம் ஒன்றிற்கு முதலாளியாக இருக்கிறான் இல்லையில்லை கடற்படையில் மிகப்பெரிய அதிகாரியாக இருக்கிறான். கற்பனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிஜம் வேறுவடிவில் அச்சுறுத்துகிறது அதில் பள்ளி, வீடு, தூசுமண்டிய அலுவலகமென்று எங்கும் ஒரே காட்சி அதன்படி ஒருகையில் பேனாவும் மறுகையில் நோட்டுமாக கூன்வளைந்து இருக்கிறான். களைத்து வீடு திரும்பும் குள்ளமான அலுவலக ஊழியன். வாழ்க்கையில் அடிபட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்.

“ஐயோ பாவம், பிள்ளைக்கு என்ன ஆச்சு! அவ்வழியாக நடந்துவந்த நாகரீகமான பெண்ணொருத்தி பையன் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்டாள். சோர்ந்திருந்த அவன் முகத்தை வாஞ்சையுடன் தடவினாள்.

பெண்மணியின் கரிசனத்தை ஏற்றுக்கொள்பவன்போல தலையை உயர்த்தினான், ஒருவகையான ஒளியொன்று அவன் முகத்தில் தோன்றி கணத்தில் மறைந்தது. வலிமையற்றவன். வெகுளி. தன்னை தற்காத்துக்கொள்ளும் சாமர்த்தியமற்று, கேலிக்கு ஆளாகி அவதிப்படுபவன். அவனிடம் நிரந்தரமாகிப்போன கசப்பிற்கு ஆறுதல் தேடியது மனம். வலிகள்கொண்ட நியாயமான ஆசை. அதனை விவரிப்பது அத்தனை சுலபமல்ல. நல்லவனாக இருக்கிறான், எவர் வம்புக்கும் போவதுமில்லை, இருந்தும் தனது துயர நிலை கண்டு உலகம் இரக்கங்கொள்ளாத காரணமேன் எனபது அவனுக்கு விளங்கவில்லை.

மதாம் கிளாரா எழுந்துகொண்டாள்.

” சரி சரி கிளம்பு. வீட்டிற்க்கு போய் சட்டையை மாற்றலாம்” பரபரவென்று அவனை இழுத்துக்கொண்டு கோபத்துடன் நடந்தாள். சற்றுமுன்பிருந்த கொஞ்ச நஞ்ச சோபையையும் அவன் முகம் இழந்தது. உதட்டை மடித்து சுருக்கினான், பின்னர் உடைந்து அழுதான்.

நடந்தது அனைத்தையும் அருகிலமர்ந்து பார்த்த பெண்மணியொருத்தி எழுந்தவள் கசப்புடன் புலம்பினாள்.

“மதாம் ஹிட்லர், பசங்களென்றால் இப்படித்தான். ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்துவார்கள். பிறகு சந்திப்போம். வரட்டுமா?” –

—————————————

—————————————————————

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா