அப்பாச்சி

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


தொலைபேசியை வைத்தவளுக்குப் பதற்றமாகிவிட்டது. அடுத்தகிழமை அவளை நிச்சயிக்க திலகன் வீட்டிலிருந்து வர இருக்கிறார்கள். இப்போதைய பதற்றத்துக்குக் காரணம் அதுவல்ல. வீட்டுவாசலில் போய் நின்றாள். நண்பகலுக்கு முன்னதான வெளிச்சத்தோடு வெப்பத்தையும் சுமந்திருந்த வெயில் அகன்ற முற்றத்தில் அகலப் படுத்திருந்தது. வீதியில் மீன்காரன் போவது தெரிந்தது. வெயிலை எதிர்க்கத் தலையிலொரு தொப்பி.சைக்கிளின் பின்பகுதியில் தராசால் மூடியபடி மீன் பெட்டி. மீன்காரனைக் கண்டால் நிறுத்தும்படி அம்மா சொல்லியிருந்தாள்.

அவளது வீட்டுக்கும் வீதியோரத்தோடு ஒட்டியிருந்த கேட்டுக்கும் இடையில் பாய் போட்டு ஒரு ஊருக்குச் சாப்பாடு போடலாம்.அவ்வளவு பெரிது. இவள் கூப்பிடுவாளென எதிர்பார்த்தோ என்னவோ, அவன் வேக வேகமாகத் தன் சைக்கிளை மிதித்து அடுத்த தெருவுக்குப் போய்விட்டிருந்தான். யாருக்கும் இவளோடு பேரம் பேசி முடிக்கமுடியாது. அதுவும் மீன்காரனோடு பேரம் பேசப்போனால் மீனைத் துப்புரவாக்கும் போது ஒதுக்கப்படும் பகுதிகளுக்காகக் காத்திருக்கும் பூனை கூட ‘மீனும் வேண்டாம், அதன் வாலும் வேண்டாம்’ என ஓடிப்போகும்.

‘தப்பிவிட்டான்’ என மனதிற்குள் கறுவிக்கொண்டவள் சமையலறைக்குள் போனாள். அம்மா அரிசி கழுவிக் கொண்டிருந்தாள்.

” அந்தப் பழைய தட்டைக் கொண்டு போ ”

” எதுக்கு? எங்க? ”

” உன்ர மாமியார் வீட்டுக்கே கொண்டு போகச் சொன்னனான் ? மீன் துண்டுகளைப் போடத்தான். இல்லையெண்டால் புதுத்தட்டெல்லாம் மீன் வாசமடிக்கும் ”

” அவன் நிக்காமப் போயிட்டான். நீங்கள் மீன் துண்டு கேக்குறீங்கள். இண்டைக்கு வேற ஏதாவது செய்யுங்கோ.”

” வேற ஏதாவது செய்யுறதோ..? உன்ர அப்பாக்கிட்ட மீன் சமைச்சு வைக்குறன். பகலைக்கு வாங்கோ எண்டு சொல்லியிருக்கிறன். அந்த மனுஷன் விழுந்தடிச்சுக் கொண்டு ஓடி வரும்.புளியைக் கூடக் கரைச்சு வச்சிட்டன். மீனெண்டால் அவருக்கு உசிரெண்டு உனக்குத் தெரியும் தானே ?”

“அப்ப பேசாம கடலுக்குள்ள போய் இருக்கச் சொல்லுங்கோ. மீன்காரன் நிக்காமப் போயிட்டான்.நானே இங்க உடம்பு பதறிக் கொண்டு நிக்குறன் ”

சொல்லிவிட்டு ஃபிரிட்ஜிலிருந்து ஒரு போத்தல் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை மேல் உட்கார்ந்துகொண்டாள்.

” ஏண்டியம்மா? அவன் நிக்காமப் போயிட்டான் எண்டால் நீ எதுக்குப் பதற வேணும் ? ”

” பதறுறதே ? எதுக்குப் பதறுறேன் எண்டு தெரிஞ்சுக் கொண்டால் நீங்களும் ஆடிப் போவியள் ”

அம்மா அரிசியை அப்படியே வைத்துவிட்டு சங்கீதாவின் அருகில் வந்தாள். சங்கீதாவின் அம்மா ஒரு வாயில்லா ஜீவன். அப்பாவி. அடுத்தவீட்டுக் குழந்தைக்கு அம்மை ஊசி போட்டார்கள் என்றால் கூடக் கேட்டுக் கண்கலங்குகிற மனசு.

” என்னடி ?அடுத்த கிழமை நிச்சயத்தை வச்சுக் கொண்டு என்னைப் பதற விடுறாய் ? அப்பாவுக்கு விஷயந்தெரிஞ்சால் என்னாகும்?”

” அப்பாவுக்கு எப்படியும் தெரியத்தானே வேணும்…இண்டைக்குப் பகல் சாப்பாட்டுக்கு வர்றப்ப நானே அவரிட்டச் சொல்லப் போறன்..கேட்டு ஆடிப்போகப் போறார் பாருங்கோ. ”

அம்மாவின் கண்கள் அதற்குள் கலங்கத் தொடங்கிவிட்டது. இடுப்பில் சொருகியிருந்த புடைவை முந்தானையெடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

“அம்மா, நீங்கள் எதுக்கு இப்ப அழுறீங்கள் ? ”

” நீதான் ..அடுத்த கிழமை நிச்சயத்தை வச்சுக் கொண்டு இப்ப உனக்கும் மீன்காரனுக்கும் ஏதோ…”

“அடச்சீ..அம்மா..வாயை மூடுங்கோ முதல்ல..நான் சொல்லவந்தது அதில்ல… சித்தப்பா கோல் பண்ணியிருந்தவர் ”

அம்மாவிற்கு தனது கணிப்பு தப்பாகிப் போனதில் வெட்கமாகப் போய்விட்டது சங்கீதாவின் தோளில் செல்லமாகத் தட்டி “என்ன சொன்னவர்? ” எனக் கேட்டாள்.

” அப்பாச்சி என்னோட நிச்சயத்துக்கு இங்க இருக்கவேணுமெண்டு விரும்புறாவாம். சித்தப்பாவுக்குக் கால்ல ஏதோ வருத்தமாம்.நடக்க ஏலாதாம். முடிஞ்சால் அப்பாவுக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்து அப்பாச்சியக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் ”

சங்கீதாவைப் பீடித்திருந்த பதற்றம் இப்பொழுது அம்மாவையும் பிடித்துக் கொண்டது. சட்டென்று அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாச்சி என அழைக்கப்படுபவர் சங்கீதாவுடைய அப்பாவின் அம்மா. அவளது அதிரடி மாமியார். ‘சூட்டுக் கிழவி’ என அவள் மனதிற்குள் மட்டும் அடிக்கடி திட்டிக் கொள்வாள். அந்தளவுக்கு அவரது சொல்லும் செயலும் பெரும் புயலைக் கிளப்பும். அப்பாச்சி ஐந்து வருடத்திற்கு முன்னால் வந்து ஒரு கிழமை இருந்துவிட்டுப்போன போது நடந்த கூத்துக்கள் சொல்லிமாளாது.

போனமுறை சித்தப்பாவே அவரைக் கூட்டிவந்தார். இரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து நேராக வீட்டு கேட்டருகில் வந்து இறங்கினர். சங்கீதாவுக்கு அப்பொழுது பத்தொன்பது வயது. அழகுக்கலை பற்றிப் படித்துக் கொண்டிருந்தாள். படித்ததைச் செய்துபார்க்கத் தங்கையோடு சேர்ந்து தன் நீளத் தலைமுடியை நேர்படுத்தி, அயர்ன் பண்ணிக் கொஞ்சம் செம்பட்டை நிறத்தில் சாயமும் அடித்திருந்தாள். அன்றைக்கு அவளுக்குச் சனி உச்சத்தில் இருந்திருக்கவேண்டும். வீட்டு கேட்டருகில் வந்துநின்ற ஆட்டோவை அவள்தான் முதலில் கவனித்தாள்.

வாசலிலிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து கேட்டைத் திறந்துவிட்டாள். எண்பது வயதில் சாதாரண தோற்றத்திலிருந்த ஆச்சி முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. அந்த வயதான ரௌத்ரத்தைக் கவனிக்காத இவள் ” வாங்கோ ஆச்சி, வாங்கோ சித்தப்பா” என்று ஆச்சி கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஆச்சி வாறது இருக்கட்டும்..குமருப்பிள்ள தானே நீ..? இப்படி ஓடி வாறாய்? இப்படியே உன்னை உன்ர அம்மா வளர்த்திருக்குது ? என்ர காலத்துலயும் இருந்தோமே. முத்தத்துல ஒரு ஈ,காக்கை அசைஞ்சாக் கூட வெட்டைக்கு இறங்கேலாது. அவ்வளவு ஒழுக்கமா வளர்ந்தோம். உன்னையும் வளர்த்திருக்குது பார் உன்ர அம்மா ”

சங்கீதாவுக்குத் திகைப்பாகிப் போய்விட்டது. சித்தப்பாவைப் பார்த்தாள். ‘இது எதையும் கண்டுகொள்ளாதே’ என்பது போலக் கண்களால் சாடை செய்தார். பின்னர் அவள் கையில் ஆச்சியின் பயணப்பையைக் கொடுத்துவிட்டு முன் கடையில் வாழைப்பழம் வாங்கிவருவதாகச் சொல்லி ஆச்சிக்குக் களவாக சிகரெட் குடிக்கப் போனார். வாய் சவ சவ எனச் சிகரெட் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்கு. ஆச்சி முன்னால் அதெல்லாம்… ம்ஹூம்..மூச்.

” என்ன நீ ? சாமத்துல ஊர் சுத்துற மோகினிப் பேயாட்டம் தலையை இப்படி விரிச்சுப் போட்டுக் கொண்டு இருக்கிறாய் ? ஒரு நூல்துண்டாவது கிடைக்கேல்லியே நல்லாச் சடை பின்னிக் கட்டுறதுக்கு ? ”

” ஆச்சி முதல்ல உள்ளே வாங்கோவன், கதைப்பம் ”

” ஓம் கதைப்பம் கதைப்பம்.” என்ற ஆச்சி அவள் தலைமுடியைப் பிடித்து உற்றுப் பார்த்து,

“அடக் கடவுளே..இங்கே பாரடி..உன்ர தலைமயிரெல்லாம் வெள்ளக் காரச்சியாட்டம் செம்பட்டைக் கலராகிப் போய்க்கிடக்கு . எங்கேடி உன்ரை அம்மா? நல்லா எண்ணைய் வச்சு, வழிச்சுக் கோதிக் கட்டிவிடாம உன்னை இப்படித் திரியவிட்டிருக்கிறாள். அப்படியென்ன செய்து கிழிக்கிறாள் வீட்ட ? நீ இப்படித் திரிஞ்சியெண்டால் உன்னை ஆரு கட்டுவினம் ?” என்றவாறு வாசல்வரை வந்த அப்பாச்சி, முற்றத்தைத் திரும்பவும் பார்த்து வீட்டின் திண்ணையிலிறங்கி வலது கோடிக்குப் போனார். பின்னாலேயே சங்கீதாவும் அவரைத் தொடர்ந்தாள்.

” எங்கேயடி இங்க இருந்த பெரிய மாங்காய் மரம் ? ” ஆச்சியின் கண்களில் சினம் தெறித்தது.

” காய் நிறைஞ்சு கூரை மேல விழுந்து ஓடெல்லாம் உடையுதெண்டு அப்பாதான் வெட்டினவர் ” என்று குரல் நடுங்கச் சொன்னாள்.

” உன்ர அப்பாவின்ர கல்யாணத்தப்ப என்ர கையால நாட்டிக் கொடுத்த மரம். அதப் போய் வெட்டியிருக்கானே. உன்ர அம்மாதான் வெட்டச் சொல்லியிருப்பாள். எனக்குத் தெரியாதெண்டு நெனச்சியே ? ”

ஆச்சிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. சங்கீதா அவர் தோளைப் பிடித்து அணைத்து மெதுவாகச் சொன்னாள்.

” ஆச்சி, இப்ப நீங்கள் களைச்சுப்போய் வந்திருக்கிறியள். முதல்ல உள்ள வாங்கோ. ஒரு தேத்தண்ணியக் குடிச்சுப் போட்டு தோட்டத்துக்குப் போகலாம். ஏழெட்டு மணித்தியாலப்பயணமெண்டால் லேசே ? ”

இப்பொழுது ஆச்சி கொஞ்சம் சமாதானமானார். அவளது கையை விட்டுவிட்டு விடுவிடுவென்று வீட்டுத் தலைவாசல் வரை வந்தார். ஆனால் உள்ளே போகவில்லை. வைராக்கியம். மருமகள் வந்து தன் வாயால் கூப்பிடும் வரை உள்ளே செல்வதில்லையென்ற வைராக்கியம். சங்கீதாவுக்குப் புரிந்தது.

“அம்மா..அம்மோவ்”

” ஏணடியம்மா இப்படித் தலவாசல்ல நின்றுகொண்டு கூப்பாடு போடுறாய்? நான் உன்ர சாமத்தியச் சடங்குக்கு வந்தப்ப மூங்கில் கேட்டல்லோ இருந்தது. இப்ப என்ன இரும்புக்கு மாறியிருக்குது ? ”

” ஓம் ஆச்சி..அது பழசாகிப் போச்சுதெண்டு அப்பாதான் இதைச் செஞ்சு போட்டவர். ”

” என்னது பழசாகிப் போச்சுதே ? அதை ஆறுமாசத்துக்கொருதரம் புதுப்பிச்சுக் கட்ட வேணும். அதைக் கூடச் செய்ய ஏலாமல் உன்ர அப்பா சோம்பேறியாகிப் போய்ட்டாரே? உன்ர அம்மாவுக்குச் சொல்றதுக்கென்ன ?. இது ஆஸ்பத்திரி கேட் மாதிரியல்லோ கிடக்கு ? ”

” வாங்கோ மாமி..வாசல்லையே நிண்டு கொண்டிருக்கிறியள் ? பின்கட்டுல உடுப்புக் காயப்போட்டுக் கொண்டிருந்தனான். அதுதான் நீங்கள் வந்த சத்தமே கேக்கல்ல..உள்ளுக்கு வாங்கோ ” என்றவாறு உள்ளிருந்து அம்மா வந்தாள்.

” வாறன் வாறன்.என்ன இந்த அந்தி பட்ட நேரத்துல உடுப்புக் கழுவுற பழக்கம்? காலையிலேயே கழுவிப் போட ஏலாதே ?..என்ன எல்லாமே மாறிக்கிடக்கு ? நீ இதையெல்லாம் கவனிக்கிறதில்லையோ? இவளிண்ட கொண்டையைப் பார். சேவல் கருமலாட்டம் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு நிறத்துல கிடக்கு. அடி ..முந்தானையை ஒழுங்காப் போடடி” எனச் சங்கீதாவின் தோளில் நொடித்தார். அவள் சிணுங்கியவாறு அம்மாவை முறைத்தாள்.

” நானெல்லாம் இவளிண்ட வயசுல கையில ரெண்டு, இடுப்பில ரெண்டெண்டு நாலு புள்ளயச் சொமந்தவள். இவளுக்கு இன்னும் மாப்பிளை பார்க்கலையோ ?”

” பார்த்துக் கொண்டிருக்கிறம் மாமி.. முதல்ல இந்த ரூமுல போய் உடுப்பை மாற்றிக் கொள்ளுங்கோவன். உவர் சித்தப்பா வந்தவரல்லோ ? எங்கே காணோம் ? ”

அம்மா சித்தப்பாவைத் தேடி முற்றத்துக்குப் போனார். சங்கீதா ஆச்சியின் பின்னால் அவர் பயணப்பையை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குப் போனாள். ஆச்சி அறைக்குள் நுழைந்த அடுத்தகணம் அலறியடித்து, சங்கீதாவையும் தள்ளிக்கொண்டு வீட்டு வாசலுக்கு ஓடி வந்து மூச்சிரைத்தார்.

” என்னாச்சுது மாமி என்னாச்சுது? ” எனக் கத்திக் கொண்டு முற்றத்திலிருந்த அம்மா உள்ளே ஓடிவந்தார். சித்தப்பா பின்னால் ஓடி வந்து ஆச்சியைத் தாங்கிக் கூடத்திலிருந்த கதிரையில் உட்காரவைத்தார்.

” மகள்..ஒரு கிளாஸ் தண்ணி கொண்டுவாங்கோ ” என்றார்.

சங்கீதா ஓடிப்போய்த் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள். ஆச்சி அதை வாங்கி ஒரே மூச்சில் அவ்வளவையும் குடித்தார். பொக்கை வாயில் வழிந்த தண்ணீர் அவர் நெஞ்சையும் நனைத்தது.

” என்ன அம்மா என்ன ஆச்சுது? ”

” உவள் காமாட்சி இருந்தாளே…எங்கட ஊர்க் கோயில் புளியமரத்துல தூக்குப் போட்டுச் செத்தவள்.”

ஆச்சி இளைத்து இளைத்துச் சொல்லத்தொடங்கினார். சித்தப்பாவும், அம்மாவும், சங்கீதாவும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

” ஓம் அம்மா. அவளுக்கென்ன இப்ப. அவள் செத்து இப்ப கன நாளாச்சுல்லே..? ஆறுமாசத்துக்கும் மேல ஆகியிருக்கும் ”

” உவள் சாகுறதுக்கு கொஞ்சநாள் முன்னாடி எங்கட தோட்டத்துல தென்னமோலை பொறுக்க வந்தாள். அப்ப நான் நல்லா ஏசி அனுப்பிட்டன். இப்ப … இப்ப.. ”

” இப்ப என்ன மாமி ? ”

” உவள் பேயாகி நான் போற இடமெல்லாம் வந்து பழி வாங்கக் காத்துக்கொண்டிருக்கிறாள்.”

இப்பொழுது சங்கீதாவின் அம்மா நன்றாகப் பயந்துபோனாள். சங்கீதாவின் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

” என்ன மாமி சொல்றியள்? ”

சித்தப்பா எதுவும் பேசாமல் ஆச்சி போய்ப்பார்த்துப் பயந்து ஓடி வந்த அறைக்குள் போனார். இருட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்தவராக அவரும் விரைந்து திரும்பி வந்தார்.

“மகள்..எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வாங்கோ ” என்றார்.

சித்தப்பாவுக்குத் தண்ணீர் எடுக்கச் சமையலறைக்குள் வந்த சங்கீதாவுக்கு அப்பொழுதுதான் அந்த ஞாபகம் வந்தது. அவசரமாகத் தண்ணீரைக் கொண்டுபோய்ச் சித்தப்பாவிடம் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் பார்த்துப்பயந்த அந்த அறைக்குள் போனாள். வெள்ளைப் புடைவையில் போர்த்தப்பட்ட உருவம் அசைவுகளேதுமின்றி முகம் முழுதும் சுண்ணாம்படித்த வெள்ளையோடு , வட்ட வட்டமான கண்களை மூடிப் படுத்திருந்தது. அவள் சிறிதும் அஞ்சவில்லை.

அவள் எப்படிப்பயப்படுவாள்? எல்லாம் அவளது கைங்கர்யம் தானே? நேற்று அழகுக் கலை வகுப்பில் படித்த ஃபேஷியல் முறையைப் பரீட்சித்துப் பார்க்க தங்கையின் முகத்திலும், கழுத்திலும் ஏதோ ஒரு வெள்ளைக் கலவையைப் பூசிப் படுக்கவைத்திருந்தாள். வீட்டுச் சமையலுக்குக் கொண்டுவந்திருந்த வெள்ளரிக்காயை வெட்டிக் கண்களை மூடிவிட்டிருந்தாள். தங்கையும் நடந்துகொண்டிருக்கும் அமளி துமளி எதுவும் தெரியாமல் ‘கிடைத்ததடா ஓய்வு’ என வெள்ளைப் போர்வையால் உடலைப்போர்த்தி நன்றாகத் தூங்கிவிட்டிருந்தாள்.

சங்கீதா அரை இருட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் தோளில் தட்டி எழுப்பினாள். கண்களை மூடியிருந்த வெள்ளரிக்காய்த் துண்டுகளை எடுத்து அறையின் மூலைக்கு வீசியெறிந்தாள். ஆங்கிலப் பேய்ப்படங்களில் வரும் பிசாசினைப் போல இருந்த சவீதா கண்விழித்து நேரம் காலம் தெரியாமல் சோம்பல் முறித்து ” விடிஞ்சுட்டுதே அக்கா ? ” என்றாள்.

“ஓம். உனக்கிப்போ நல்லா விடியும் அப்பாச்சிக்கிட்ட இருந்து. முதல்ல எழும்பிப் போய் முகம் கழுவு ”

” இவ்வளவு நேரம் வச்சிருந்தது போதுமோ அக்கா? நான் வடிவாகியிருப்பேனே ? ” என்றவாறு கட்டிலிலிருந்து எழும்பி நின்றாள்.

சங்கீதா பதில் சொல்லாமல் போர்வையைச் சுருட்டி அவள் முதுகில் அடித்து அவளை குளியலறைக்கு விரட்டிவிட்டாள். பெரியாச்சியின் ஓயாத வாய்க்குப் பூட்டுப் போட்டாயிற்று. அவர் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஓதித் தன் நெஞ்சுக்குள் ஊதிக் கொண்டார். சங்கீதா கூடத்துக்கு வந்து சித்தப்பாவை மட்டும் சாடை செய்து கூப்பிட்டாள். பலி கொடுக்க அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போல மருண்ட பார்வையோடு அவர் அவளை நோக்கி வந்தார். சமையலறைப் பக்கமாகக் கூட்டிப் போய் விஷயத்தைச் சொன்னாள்.

அவருக்குச் சிரிப்புத் தாளவில்லை. அப்பாச்சியிடம் சொன்னால் நன்றாக எல்லோரும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டி வருமெனச் சொல்லி விஷயம் அவர்களுக்குள்ளேயே மூடி மறைக்கப்பட்டது. அம்மாவையும் அழைத்து விஷயத்தைச் சொல்லியாயிற்று. அவள் பயத்தில் தான் கோயிலுக்குக் கோழி கொடுப்பதாக நேர்ச்சை வைத்ததைச் சொன்ன போது சிரிப்புப் பலமடங்காகியது. எல்லோரும் சத்தம் வெளியே கேட்காமல் வாயைப் பொத்திச் சிரித்தனர். அப்பொழுதுதான் முகம் கழுவிவந்த சவீதா தன்னைத் தான் பார்த்துச் சிரிக்கிறார்கள் என நினைத்து ஓடிப் போய்க் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

எல்லோரும் கூடத்துக்கு வந்தனர். அப்பாச்சி இன்னும் கண்ணை மூடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். சித்தப்பா “அம்மா ” என்றார்.

” ஓமடா… ஒரு தென்னமோலைக்காக ஊர் விட்டு ஊர் வந்து இப்படிப் பேயாய் அலைவாளெண்டு நான் இண்டைக்குத் தான் தெரிஞ்சு கொண்டன்.இனியெண்டால் நான் எல்லோருக்கும் தென்னமோலை சும்மா கொடுப்பன். அவளுக்குச் சொல்லடா..இனியும் என்ர பின்னால பேயாய் வந்து துரத்தாதையெண்டு ” என்றார்.

பின்னர் சித்தப்பாவும் மற்றவர்களும் எவ்வளவு சொல்லியும் அந்த அறைக்குப் போகவே மாட்டேன் என்றார். சரியெனச் சொல்லி அம்மாவின் அறைக்குக் கூட்டிக் கொண்டுபோய் ஆடை மாற்றச் சொன்னார்கள். அவர் கையோடு கொண்டுவந்திருந்த பழைய ஆடைக்குத் தன்னை மாற்றிக் கொள்ளும் வரையில் அம்மாவும் அவருடனே இருக்க வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குப்பின்னர் ஆரம்பித்தது வம்பு. அப்பாச்சி எங்கே போனாலும் அவரது கைத்தடி போல யாராவது துணைக்குப் போகவேண்டியிருந்தது. அம்மா, சங்கீதாவிடம் அப்பாச்சியைப்பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எல்லோருக்கும் இஞ்சி தட்டிப் போட்டுத் தேநீர் ஊற்றிக்கொடுத்தாள்.

அப்பா வந்ததும் இந்த வீட்டில் பேயிருக்கிறதெனச் சொல்லி அப்பாச்சி அப்பாவையும், அம்மாவையும் ஒரு பிடிபிடித்தார். அப்பா ஒன்றும் புரியாமல் அம்மாவைப் பார்த்து விழித்தார். அம்மா வாய்க்குள் சிரிப்பதைப் பார்த்து முறைத்தார். சித்தப்பா வெளியே கூட்டிக் கொண்டு போய் விடயத்தை விபரித்தபின்னர் அப்பாவும் இரண்டு குரும்பட்டிகளை வாய்க்குள் போட்டு அதக்கியதைப் போலக் கன்னங்கள் விரிய வெகுநேரம் சிரித்தார்.வீடு முழுக்க எல்லோரும் வந்து சேர்ந்ததும் அப்பாச்சியின் அதிகாரம் திரும்பவும் ஆரம்பித்தது.

எவ்வளவு சாப்பிட்டாலும் சதை ஒட்டாத உடம்பு சவீதாவிற்கு. பதினாலு வயது நடந்துகொண்டிருந்தது. ஒட்டடைக் குச்சிக்கு உடுப்புப் போட்டு விட்டது போல வீடு, பள்ளிக்கூடமென வளைய வந்துகொண்டிருந்தாள். அவளுக்குச் சதை பிடிக்க வேண்டுமென அம்மா ஒரு நேர்ச்சையும் வைத்திருந்தாள். ஆச்சியின் பார்வை இப்பொழுது அவள் மேல் படிந்தது. கூப்பிட்டு அருகில் அமர்த்திக் கொண்டாள்.

” ஏண்டியம்மா? இவளுக்கு நீ சாப்பாடு கொடுக்குறியோ இல்லையோ ? இவளைப்பார்த்தால் இவளுக்குக் கொடுக்காமல் எல்லாத்தையும் நீயே விழுங்குற மாதிரியல்லோ கிடக்குது ” என்று அம்மாவைச் சாடத் தொடங்கினார்.

” இந்த வீட்டுல இல்லாத சாப்பாடோ மாமி? அதெல்லாம் நல்லாத்தான் கொடுக்கிறன். இவள் தான் ஒழுங்காச் சாப்பிட மாட்டாள் ”

” உன்ர சமையலின்ர தரம் எனக்குத் தெரியாதே..பச்சத் தண்ணிக்கு உப்புப் போட்டு அதை ரசம் எண்டு சொல்லுவாய் நீ ”

அப்பாச்சி சொன்னதும் அம்மாவின் முகம் வாடிப்போனது. மனதுக்குள் “சூட்டுக் கிழவி, சூட்டுக் கிழவி” எனத் திட்டிக் கொண்டாள். உண்மையிலேயே அம்மாவின் சமையல் வெகுசுவையாக இருக்கும். புளியெல்லாம் கரைத்துப் போட்டு , மசாலா எல்லாம் அரைத்துப் போட்டு அவள் மீன்கறி செய்தாளானால் அந்த வாசனை எட்டி அப்பா ஆபிஸிலிருந்தே மோப்பம் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவார்.அம்மா எதுவும் பேசாமல் சமையலறைக்குள் போய் இரவுச் சாப்பாட்டைத் தயார் பண்ண ஆரம்பித்தாள்.

அப்பாச்சி, சவீதாவைக் கூட்டிக்கொண்டு அங்கேயும் வந்துவிட்டார். ஆச்சியின் கண்கள் விறகடுப்பைத் தேடியது. சமையலறையின் மூலையிலிருந்த விறகடுப்பை எப்போதோ அகற்றி கேஸ் அடுப்பில்தான் சமைத்துக்கொண்டிருந்தனர். விறகடுப்பு சம்பந்தமான ஆச்சியின் கேள்விகளுக்கு அம்மாவால் விளக்கம் கொடுக்கமுடியாமல் அப்பாதான் வந்து விளக்கவேண்டியிருந்தது. திடீரென ” என்ர அம்மியையும், குளவியையும் எங்கேயடி காணோம்? ” என்றார்.

“அதை வெளியில போட்டிருக்கிறம் அப்பாச்சி. ” என்றாள் சவீதா.

“வெளியிலயோ..? என்ர அம்மா, எனக்குச் சீதனமாத் தந்தது. அதை உனக்குத் தந்தால் நீ வெளியில வீசுடுவியே..? ” என்று காட்டமாக அப்பாவை முறைத்து ” இவள் தான். எல்லாம் இவளோட வேலைதான். நினைச்சுக் கொண்டிருப்பாள். ஒருநாளைக்கு என்னையும் இப்படி வெளியில தூக்கிப் போட ” என்று அம்மாவையும் சாடி ” எனக்கிப்பவே என்ர அம்மியைப் பார்க்கவேணும் ” என்று அடம்பிடித்தார்.

“அம்மா, இப்ப இருட்டாகிப் போச்சுது. விடியற்காலையில பார்ப்போம்..வெளியிலயெண்டால் ஸ்டோர் ரூமில வச்சிருக்கிறோம்” என்று பேயை நினைவுறுத்திப் பயமுறுத்தி,ஒருவாறு சமாதானப்படுத்தி விட்டார் அப்பா. ஆச்சி அவரது ஒல்லிக் குச்சிக் கைத்தடி போல சவீதாவைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பேய் அறையைத் தவிர்த்து வீடு முழுக்க வலம் வந்தார்.

சித்தப்பா டீவியின் முன் தேமே என்று உட்கார்ந்துவிட்டார். அவரது கிராமத்துவீட்டுக்கு இன்னும் டீவி வந்திருக்கவில்லை. டீவியை விட்டு மின்சாரமே இல்லை. தன்வீட்டில் வழமையாக இரவு எட்டு மணிக்கே கும்பகர்ணனுக்குத் தம்பி போலக் குறட்டை விட்டுத் தூங்கி விடுபவர் அன்று டீவியின் முன் உட்கார்ந்துவிட்டார். அசைவதாக இல்லை. கண்ணைக் கூடச் சிமிட்டுவதாக இல்லை.

Series Navigation