அன்பே…

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue

அ.லெ.ராஜராஜன்


பேசினாய் பேசினாய் பேசினாய்

பேசிக்கொண்டேயிருந்தாய்.

பேசவில்லையெனில் பேட்டியெடுத்தாய்.

கடைசியில் நடுங்கும் கரங்கொண்டு

என் கரம் பற்றி கேட்டாய்

‘எப்படி வேண்டும் ‘

‘எது ‘

‘மென்மையாகவா, இல்லை முரடாகவா ‘.

கவிதைகள் படித்து

கெட்டுப்போன கூட்டத்தில்

நீயும் ஒருவனா.

நீயென்ன பலகாரக்கடை சிப்பந்தியா

பரிமாறுமுன்னே பக்குவம் கேட்பதற்கு.

சொல்கிறேன் கேட்டுக்கொள்

எப்போதும் மென்மையாய் இருந்து

போரடித்துவிடாதே.

எப்போதும் முரடாய் இருந்து

பயமுறுத்திவிடாதே.

மற்றொருமுறை அபிப்பிராயம் கேட்டு

என் பெண்மையை

அசிங்கப்படுத்திவிடாதே.

மாறாய்

என் கரம் பற்றும்போதே

என் நாடித்துடிப்பு கண்டு தெரிந்துகொள்

எனக்கு எப்படிவேண்டுமென்று

உன் மார்மோதும் என் மூச்சுக்காற்றின்

உஷ்ணம் அளந்து அறிந்துகொள்

எனக்கு எப்படிவேண்டுமென்று.

என் கரம் உன் தோள்பற்றும்

அழுத்தம் பார்த்து புரிந்துகொள்

எனக்கு எப்படிவேண்டுமென்று.

வீணையடி நீயெனக்கு என்றாய்

இல்லை

நான் ஒன்றும் வீணையில்லை,

நீ சும்மா மீட்டிவிட்டு போவதற்கு

நான் மனுஷி,

ரத்தமும் சதையுமான மனுஷி.

புரிந்துகொள்

என் ப்ரிய கணவா.

Series Navigation

அ.லெ.ராஜராஜன்

அ.லெ.ராஜராஜன்