அன்பு ! அறிவு ! அழகு !

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பரிவு, அறிவு, பொலிவு மூன்றும்
ஓருடல் தாங்காத
மும்மூர்த்திகள் !
எந்தக் காலத்திலும்
சொந்தக் கூட்டிலும்
தோளோடு தோளாய் மூவரும்
வாழ்வது
அபூர்வம் ! அபூர்வம் ! அபூர்வம் !
தோழியர் இருவர் வாழ்வதும்
கேள்விக் குரியதே !
ஓரிடத்தில் மூவர் கூடின்
குருச்சேத்திரம் !
ஒருதலை மட்டும் தனித்து நிற்கும் !

அன்புக் கில்லை தாழ்ப்பாள் !
அறிவுக் கில்லை மதில்கள் !
அழகுக் கில்லை கதவு !
அன்புக் கடிமை உன் காதலி !
அன்பு பிணைக்கும் பேருலகை !
அன்புச் கயிற்றால்
மத யானையைக் கட்டலாம் !
அன்புக் கடலில் சுனாமியும்
அடித்தெழும் !

அன்பிலாப் பெண்டிர் அரக்கியர்
வம்சம் !
அன்பிலா ஆடவர் அசுரரின்
வாரிசு!
அறிவிலா மாந்தர் கற்றிடப்
போகலாம் !
அழகிலா மானிடர் பெற்றிட
ஏங்கலாம் !

அழகில் மயங்குவோர்
ஏமாற்றப் படுவார் ! ஆனால்
அழகைத் தொழுவோர்
உன்னதக் கலைஞர் !
அழகைச் சிதைப்பவர்
பஞ்சமா பாதகர் !
அழகை வரைவோர்
ஓவியச் சிற்பிகள் !

உளவிடும் அறிவில்லை அன்புக்கு !
களவில்லை காதல் அன்புக்கு !
கசப்பில்லை கரும்பு அன்புக்கு !
கண்ணில்லை நிழலாம் அன்புக்கு !
நிறமில்லை ஒளியாம் அன்புக்கு !
அன்பின் சிகரத்தில்
விரட்டப் படுவது அறிவு !

வளரும் அறிவுக்கோர் அளவில்லை !
இறங்கிச் செல்லும் இரக்கம்
அறிவுக் கோபுரத்தின் அடியில் !
நிரந்தர அன்பில்லை அறிவுக்கு !
புன்னகை யோடு உலகில் உலாவரும்
உன்னத அழகியின்
பொன்னொளிக் கிரீடத்தில்
அன்பில்லை ! அன்பில்லை ! அன்பில்லை !
நெஞ்சின் அழகுக்கு நிகரேது ?

அன்புக்கு ஆணிவேர் பண்பு !
அறிவுக்கு அடித்தளம் அன்பு !
அழகுக்கு உட்கரு அறிவு !
அன்பே அறிவு !
அறிவே அழகு !
அழகே அன்பு !
முத்தலை அரசிகள் அந்த நியதியில்
சித்தம் தெளிந்தால்
நிற்கும்
ஒற்றை உடலில் !

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 16, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா